தொடர்ச்சி --மூன்று


Posted Image


நம் ஊர்களிலுள்ள சில பிரபலமான கோவில்களில் மட்டும் மக்கள் கூட்டம் குவிந்தபடி இருக்க, பல கோவில்கள் ஆள் அரவமற்று அமைதியுடன் இருக்கின்றன. ஆனால் ஏதோ ஒரு தருணத்தில், எங்கோ ஒரு கோவிலில் திடீரென, 'சாமி சிலை கண்களைத் திறந்தது' என்றோ, 'கண்ணீர் வடித்தது' என்றோ தகவல் வரும். அப்புறம் யாரும் கிட்ட நெருங்க முடியாதபடி அந்தக் கோவிலில் கூட்டம் அலையடிக்கும். படிப்படியாக அந்தக் கோவிலுள்ள கிராமத்தை நோக்கிப் பத்து, நூறு, பத்தாயிரம், இலட்சம் என மக்களும், வியாபாரிகளும், மீடியாக்களும் குவிய ஆரம்பிக்கும். இதைச் சரியாக நாம் உற்று நோக்கினால், அங்கு நடந்தது ஒரு அதிசயம் என்பதை விட, அந்த அதிசயத்தால் ஏற்படுத்தப்பட்ட கவனயீர்ப்பே முக்கிய பங்களிப்பது தெரிய வரும். அங்கே நடந்ததில் உள்ள உண்மைத்தன்மையை விட, அதில் உள்ள அசாதாரண நிகழ்வே நம்மைக் கவர்ந்திழுப்பது புரியும். அன்றாட வாழ்க்கையில் அலுத்துப் போய் இருக்கும் நமக்கு, 'மாற்றமாக ஏதும் நடை பெறாதா?' என்று உள்மனம் என்றும் ஏங்கிக் கொண்டே இருக்கிறது. சாதாரணமற்ற அபூர்வமான சம்பவங்களை அது எப்போதும் விரும்புகிறது. அதிகம் ஏன்? சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு வர இருந்த சுனாமியினால் ஏற்பட்டிருக்கக் கூடிய அழிவுகளைத் தாண்டி, அது வரவில்லையே என்ற குரூர ஏமாற்றம் நமக்கு இருந்ததை, நாம் மறுக்க முடியாது. இதற்கெல்லாம் காரணம், நம் மனம் எப்போதும் அசாதாரண மாற்றங்களை விரும்புவதுதான். அதிசயங்களும், மர்மங்களும் அதற்கு மிகவும் விருப்பமான ஒன்றாகிவிடுகிறது. 
இப்படியானதொரு அதிசயமாகவே பயிர் வட்டங்களும் உலகத்தில் வலம் வர ஆரம்பித்தன. வழமை போல, அவற்றை ஒரு மர்மமாகப் பார்ப்பதற்கே மக்கள் விரும்பினார்கள். ஆரம்பத்தில் இந்தப் பயிர் வட்டங்கள், அவை தோன்றிய ஊர்களில் மட்டும் அதிசயமாகப் பார்க்கப்பட்டன. கொஞ்சம் கொஞ்சமாக உலக அளவில் அவை பிரபலமாகியபோது, மேலே நான் சொல்லிய நம் ஊர்க் கோவில்கள் போல, உல்லாசப் பிரயாணிகளும், பார்வையாளர்களும், ஆராய்ச்சியாளர்களும், மீடியாக்களும் அவற்றை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தின் பின்னர் ஒவ்வொரு வருடங்களும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை வரவழைக்கும் காட்சிப் பொருளாக அவை ஆகிப் போயின. ஆனாலும் அனைவரிடமும் இறுதியாக எஞ்சி நின்றவை இரண்டே இரண்டு கேள்விகள்தான். "பயிர் வட்டங்கள் யாரால் உருவாக்கப்படுகின்றன?", "எதற்காக உருவாக்கப்படுகின்றன?" என்பவையே அந்த இரண்டு கேள்விகள். இதற்குப் பதில் சொல்லும் வகையில் ஹாலிவுட்டில் ஒரு படத்தை எடுத்து வெளியிட்டார் நம்மூர்க்காரரான மனோஜ் சியாமளன். 
மனோஜ் சியாமளன், ஏலியன்கள்தான் இந்தப் பயிர் வட்டங்களை உருவாக்கினர் என்று படம் எடுத்ததற்குக் காரணங்களும் இல்லாமல் இல்லை. சம்பந்தா சம்பந்தமில்லாமல், எழுந்தமானத்துக்கு ஏலியனை அவர் இந்த விசயத்துக்குள் புகுத்திவிடவில்லை. ஏலியன்கள் என்று சொல்லப்படும் வேற்றுக் கிரகவாசிகள் உண்டா இல்லையா என்ற கேள்விக்கே துல்லியமான விடைகள் கிடைக்காத சூழ்நிலையில், பயிர் வட்டங்களுடன் துணிச்சலாக ஏலியன்களை அவர் இணைத்தார் என்றால், அதற்கு மிகப் பெரியதொரு காரணம் இருக்கத்தான் செய்தது.
1970 களில் இலகுவான ஒரே ஒரு வட்ட அமைப்புகளைக் கொண்டு அமைக்கப்பட்ட பயிர் வட்டங்கள், படிப்படியாக பல வட்டங்களாக மாறி, பின்னர் சித்திரங்கள் போன்ற அழகான அமைப்புகளாக மாறி, பின்னர் சிக்கலான சித்திரங்களாக மாறி, பின்னர் உயர் கணித வரைவுகளாக மாறின.



Posted Image
இலகுவான வட்ட அமைப்புப் பயிர் வட்டம்

Posted Image
பலவட்ட அமைப்புப் பயிர் வட்டம்

Posted Image
சித்திர வகைப் பயிர் வட்டம்

Posted Image

உயர் கணித வரைவுப் பயிர் வட்டம்

பயிர் வட்டங்கள் வடிவ அமைப்புகளில் மாற்றங்களுடனும், அவற்றின் எண்ணிக்கையில் அதிகரிப்பையும் அடைந்து கொண்டிருக்கும்போது, உலகம் முழுவதும் இருந்து ஆராய்ச்சியாளர்களை அவை கவரத் தொடங்கின.   அவற்றை நோக்கி அவர்கள் ஓடிவரத் தொடங்கினர். ஒவ்வொன்றாக அந்தப் பயிர் வட்டங்கள் அனைத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக அவர்கள் ஆராயத் தொடங்கினர். அப்போது அவர்களுக்குக் கிடைத்த சில தகவல்கள், "என்ன முடிவுக்கு வருவது?" என்ற குழப்பத்தையே  ஏற்படுத்தின. எண்பதுக்கும் அதிகமான, வெவ்வேறு இடங்களில் வசிக்கும், மிகவும் கண்ணியமான நபர்கள் மூலமாகக் கிடைத்த ஒரு தகவல் அவர்களைத் தடுமாற வைத்தது. சொல்லி வைத்தது போல அந்த எண்பது சாட்சிகளும் கூறியது என்ன தெரியுமா? தங்கள் கண்களின் முன்னாலேயே, ஒரு உதைபந்து அளவுள்ள வெளிச்சப் பந்துகள் (Balls of Light) பயிர் வட்டங்களின் மேலே பறந்து திரிவதைக் கண்டிருக்கிறார்கள். சிலர் தங்கள் முன்னாலேயே அவை பயிர் வட்டங்களை உருவாக்கியதைக் கண்ணால் கண்டதாக அடித்துச் சத்தியம் செய்கிறார்கள். அவற்றை வீடியோக் காமெரா மூலமாகப் படம் பிடித்தும் வைத்த்திருக்கின்றனர். 

இதை வாசித்ததும், நீங்கள் வாய்விட்டுச் சிரிப்பது எனக்குப் புரிகிறது. "இது போன்ற எத்தனையோ 'கிராஃபிக்ஸ்' வேலைகளை நாம் கண்டு விட்டோம்" என்று நீங்கள் நினைப்பதும் புரிகிறது. சமீபத்தில் வெளியான ஒரு துறவியின் வீடியோவில், அப்பட்டமாக யாரென்று கண்டு பிடிக்கக் கூடிய வகையில் தெளிவாகப் படங்கள் இருந்தபோதும், 'அவை கிராஃபிக்ஸ் வேலை' என்று அந்தத் துறவி அடித்துச் சொல்லும் அளவிற்கு, கிராஃபிக்ஸ் பற்றிய அறிவு நமக்கு வளர்ந்திருக்கிறது. மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவனே கணினியில் உருவாக்கக் கூடிய ஒளிப் புள்ளிகளைக் காட்டி, ஏலியன் என்று நான் சொல்லும் போது, நீங்கள் சிரிப்பதில் ஒன்றும் தப்பே கிடையாது. பயிர் வட்ட ஆராய்ச்சியாளர்களும் அப்படித்தான் முதலில் நினைத்தார்கள். ஆனால் அந்த விசயத்தில் அவர்களுக்கு நெருடியது ஒன்றுதான். "அது எப்படி, வெவ்வேறு இடங்களில், ஒருவரை ஒருவர் சந்தித்தே இருக்காத வேறு வேறு மனிதர்கள், வேறு வேறு வயதையுடையவர்கள் ஒரே மாதிரியான பொய்யை இட்டுக்கட்டிக் கூற முடியும்? அதுவும் வீடியோக்களாகக் கூட எடுத்திருக்கின்றனர். அனைவரும் கிராஃபிக்ஸ் செய்தார்களா". அனைத்து வீடியோக்களையும் ஆராய்ந்த போது, அவற்றில் குறிப்பிட்ட சில வீடியோக்கள் தவிர்ந்து, வேறு எவையுமே எந்த கிராஃபிக்ஸும் செய்யப்படாதவையாகவே இருந்தன. 
இந்த வெளிச்சப் பந்துகள் விசயத்தில் ஊரே கூடி நின்று பொய் சொல்கின்றதோ எனச் சந்தேகப்பட்ட மீடியாவினர் சிலர், அவை தோன்றுவது உண்மைதானா என்று ஆராயத் தங்கள் வீடியோக் கேமராக்களை ஆயத்தம் செய்து இரவினில் காத்திருந்தார்கள். என்ன ஆச்சரியம் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, வெளிச்சப் பந்துகள் தோன்றி அலையத் தொடங்கின. இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்த வெளிச்சப் பந்துகள் இரவு, பகல் இரண்டு நேரங்களிலும் தோன்றுவதுதான். அதன் உச்ச கட்டமாக, அந்த வெளிச்சப் பந்துகள் தோன்றியதை அறிந்த இராணுவ ஹெலிகாப்டர்கள் அவற்றை நோக்கிப் பறந்து சென்று அணுகியபோது, அவை மறைந்து போனதும் நடந்தது. இந்த ஹெலிகாப்டர் சம்பவம் ஒரு முறையல்ல, பல முறைகள் நடந்தன. இவற்றையும் கூட வீடியோவாக மீடியாவினர் படமெடுத்திருக்கின்றனர். 
"சேச்சே! எல்லாமே பொய். இந்த பயிர் வட்டங்களே மனிதர்களால்தான் உருவாக்கப்படுகின்றன. வெளிச்சப் பந்துகள் உருவாவது உண்மைதான். ஆனால் அவை காற்றில் பறக்கும் பூக்கள் அல்லது வேறு பொருட்கள்" என்று அதை மறுப்பவர்களின் குரல்களும் இடையே ஒலிக்கத்தான் செய்கின்றன. மறுப்பவர்களும் தங்கள் சார்பாக, பலமான சாட்சியங்களை முன் வைத்து அவற்றைப் பொய் என்று மறுக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் நடந்து கொண்டிருப்பவற்றையெல்லாம் என்ன வகையில் எடுத்துக் கொள்வது என்று ஆராய்ச்சியாளர்கள் யோசித்த போதுதான், உலகமே பயிர் வட்டங்கள் சார்பாக அதிர்ச்சியடையும் வகையில் ஒரு சம்பவம் நடந்தேறியது. அதுவரை பயிர் வட்டங்களை ஒரு பேச்சுக்குக் கூடக் கவனத்தில் எடுக்காத மீடியாக்கள் உட்பட, உலகில் உள்ள அனைத்து மீடியாக்களும் அலறியடித்து அந்த இடம் நோக்கி ஓடி வந்தன. அந்த இடம் யாருமே நினைத்துப் பார்க்க முடியாத ஒரு இடமாக இருந்தது. 
தென்கிழக்கு இங்கிலாந்தில் இருக்கும் ஷில்போல்டன் (Chilbolton) என்னும் இடத்தில், இங்கிலாந்து அரசுக்குச் சொந்தமான 'ரேடியோ டெலஸ்கோப்' (Radio Telescope) அமைக்கப்பட்டிருக்கிறது. ரேடியோ டெலஸ்கோப் அமைந்த இடத்துக்கு மிக அருகில் 13.08.2000 அன்று ஒரு பயிர் வட்டச் சித்திரம் உருவாக்கப்பட்டது. சரியாக ஒரு வருடத்தின் பின்னர் 13.08.2001 அன்று மீண்டும் ஒரு சித்திரம் அதே இடத்தில் தோன்றியது. அவையிரண்டும் வழமை போல இல்லாமல் வித்தியாசமான ஒரு பயிர் வட்டமாக இருந்தது ஆச்சரியப்படுத்தியது. ஆனாலும், அவை என்ன அர்த்தங்களைச் குறிக்கின்றன என்று யாருக்கும் புரியவில்லை. ஆனால் சரியாக ஐந்து நாட்களின் பின்னர் (18.08.2001) அந்தச் சித்திரத்தின் அருகே இன்னுமொரு சித்திரம் உருவாக்கப்பட்டது. அந்தப் பிரமாண்டமான பயிர் வட்டச் சித்திரத்தைப் பார்த்துத்தான் உலகமே பதட்டப்பட்டது. அது பயிர் வட்டம் என்று சொல்லப்படும் வட்ட வகையைச் சாராமல், வேறு ஒரு வடிவத்தில் இருந்தது. அந்த வடிவம் என்ன தெரியுமா? ஒரு மனிதனின் முகம்......
 
நன்றி--அபராஜிதன் 

Comments

Popular posts from this blog

[RG] Horror movies

107.John Wayne GACY Jr.

30. SERIAL KILLERS AND ASTROLOGY