தசாவதாரம்--Dasavatharam------1

மச்சாவதாரம்



Name:  TN_144807000000.jpg
Views: 397
Size:  24.7 KB


உலகத்தில் தருமம் அழிந்து அதர்மம் ஓங்குகிற சமயம் நான் உலகத்தில் அவதாரம் எடுக்கின்றேன் என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொல்லுகிறார். வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்கும் பரம்பொருள் திருமால். பூலோகத்தைக் காப்பதற்காக பல சமயங்களில் பல்வேறு அவதாரங்கள் எடுத்தார். அவருடைய அவதாரங்களைச் சிறப்பாக தசாவதாரம் என்று குறிப்டுவர். பெருமாள் எடுத்த பத்து அவதாரங்களைப் பற்றி சுகர், பரீட்சித்து மகாராஜனுக்கு உபதேசம் செய்தார். சுகரைப் பார்த்து பரீட்சித்து மகராஜா ஒரு கேள்வி கேட்டார். ஹே! ரிஷிவேந்தே! எதற்காக ஹரிபகவான் ஒரு சாதாரண கர்மவசியனான புருஷனைப் போல, உலகத்தாரால் நிந்திக்கப்படக் கூடியதாகவும், தாமசப் பிரகிருதியாகவும், சகிக்கக் கூடாததாகவும் இருக்கிற மச்சரூபம் தாங்கி அவதாரம் செய்தார். அதற்கு சுகபிரம்மர் மகாவிஷ்ணு எடுத்த முதல் அவதாரம் இது. மச்சாவதாரத்தை மத்ஸ்யாவதாரம் என்றும் கூறுவார்கள். இந்த அவதாரம் வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த சோமுகாசுரனைக் கொன்றது. வேதங்களை மீட்டது. இந்த அவதாரத்திலேயே மகாப் பிரளயம் வர ஏழாவது மனுவும், சப்த ரிஷிகளும் மீன் உருக்கொண்டு தம் உயிர் பிழைத்திருக்க, மற்ற எல்லா உலகங்களும் அழிந்து ஒழிந்தன. பொங்கிப் பெருகும் கடலில் மூன்று உலகங்களும் மூழ்கின. ஹயக்கிரீவன் என்ற அசுரன் அங்கே வந்தான். அவனுக்கு கழுத்திற்கு மேல் குதிரை உருவம். அதனால் அப்பெயர் அவனுக்கு வந்தது.


பிரம்மா சோர்ந்து தூங்கும் போது அவர் வாயிலிருந்து வேதங்கள் தாமே வெளிவந்து கொண்டிருந்தன. இதைப் பார்த்த ஹயக்ரீவன் தனது யோக சித்தியினால் அந்த வேதங்களைத் திருடிக் கொண்டு போய் விட்டான். பிறகு அதை ஒளித்து மறைத்து விட்டான். வேதங்கள் இருந்தாலன்றிப் பிரும்ம சிருஷ்டி இயங்காது. உலகத்தில் அறம் ஒழுங்காக நிறைவேற வேதத்தின் துணை அவசியம். எனவே ஹயக்ரீவனால் திருடி மறைக்கப்பட்ட வேதங்களை மீட்பதற்காக பரந்தாமன் மீனாக அவதரித்தான். ஸ்ரீமந் நாராயணன் எடுத்த மச்சாவதாரத்தில் சத்யவிரதன் என்ற பெயருடைய ராஜரிஷி இருந்தான். அவன் நாராயணன் மீது அளவிலா பக்தி கொண்டவன். அந்த ஹரிபக்தன் வேறு உணவு எதுவும் அருந்தாமல் தண்ணீரை மட்டும் உட்கொண்டு ஒரு நோன்பு நோற்று வந்தான். இப்போது நடக்கும் கல்பத்தில் மனுவாக விளங்கும் விவஸ்வரன் இவனே. அந்தக் காலத்தில் அவன் திராவிடத் திருநாட்டின் தேசாதிபதியாக இருந்தான். அவன் ஒருநாள் கிருதமாலா என்ற ஆற்றங்கரையில் அமர்ந்து தன் மூதாதையர்களுக்குத் தண்ணீர் இறைத்து அர்க்கியம் கொடுத்துக் கொண்டு இருந்தான். அர்க்கியம் செய்யும் பொழுது இரு கைகளிலும் தண்ணீரை எடுத்தான். அங்கே கைக்குள் தேங்கிய நீரில் ஒரு குஞ்சு மீன் அழகுற நீந்திக் கிடப்பதைப் பார்த்தான். பேரழகுமிக்க அந்த மீன் பேசியது: ஹே ராஜனே என்னை மீண்டும் தண்ணீரில் தள்ளிவிடாதீர்கள். குட்டி மீனான என்னைப் பெரிய மீன்கள் விழுங்கி விடும். அச்சம் என்னை பிடுங்கித் தின்கின்றது, என்றது.


இதைக் கேட்டு அகமகிழ்ந்து அந்த மச்சத்தின் வேண்டுகோளை நிறைவேற்ற நினைத்தான். ஆற்றுக்குத் தன்னுடன் எடுத்து வந்த கமண்டலத்திற்குள் மீனைப் போட்டான். அதைத் தன் வழிபாட்டு ஆஸ்ரமத்திற்கு எடுத்துப் போனான். அன்று இரவே அந்த மச்சம் கிடுகிடுவென்று வளர்ந்து கமண்டலம் முழுவதும் பரவியது. அரசே இந்த இடம் எனக்கு வசிக்கப் போதாது என்றது மச்சம். சத்தியவிரதன் மீனைக் கமண்டலத்தில் இருந்து எடுத்து நீர் நிறைந்த வேறு ஒரு பாத்திரத்தில் போட்டான். இந்தப் பாத்திரமும் எனக்கு வசிக்கப் போதவில்லையே என்று திரும்பவும் கெஞ்சியது. மன்னவன் உடனே மீனை அங்கிருந்து எடுத்து ஒரு குளத்தில் விட்டான். அது வெகு சீக்கிரமாக வளர்ந்து அந்தக் குளத்தை நீக்கமற அடைத்து நின்றது. அடுத்து அந்த மீனை ஆழமானதும் விரிந்து பரந்ததுமான மடுக்களிலும், ஏரிகளிலும் போட்டான். அங்கும் அது பெரிதாக வளர்ந்து தனக்கு வாழ இடம் போதவில்லை என்று சொல்லியது. கடைசியாக அதை சமுத்திரத்தில் கொண்டு போடும் போது அந்த மச்சம் சொன்னது: ராஜரிஷியே! இந்தப் பெரிய கடலில் திமிங்கலம் போன்ற பெரிய ஜந்துக்களின் நடமாட்டம் இருக்கிறது. ஆகவே என்னை நீ இங்கே விட்டு விட்டுப் போய் விடாதே என்று அலறியது. உடனே சத்யவிரதன் அந்த மீனைக் கரம் கூப்பித் தொழுது, பரம்பொருளே! ஒரு சாதாரண மீனாகத் தாங்கள் என்னிடம் வந்து மயங்க வைக்கிற மாயம் எனக்கு என்ன என்று தெரிந்து கொள்ள முடியவில்லையே? இப்படி தேவரீர் என்னை விடாமல் பிடித்து வைத்துக் கொண்டிருப்பதன் காரணம் என்ன? நீர் வளர வளர நிச்சயம் ஸ்ரீ ஹரியேதான் தாங்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். ஆகவே பெருமானாகிய தாங்கள் இந்த உருவத்தோடு இங்கு வந்த காரணத்தைத் தங்கள் தொண்டனாகிய எனக்குத் தெரிவிக்கும்படி பிரார்த்திக்கிறேன் என மச்சாவதார மூர்த்தியை வீழ்ந்து வணங்கிக் கேட்டான்.


மச்சம் பதில் சொல்லியது: ராஜரிஷியே! இன்று முதல் ஏழாம் நாள் அன்று இந்த பூமியும், விண்ணும், அதற்கிடைப்பட்ட வெளியும், பொங்கி எழுந்து வரும் கடலுக்கு இரையாகப் போகிறது. உலகங்கள் அழியும் நாள் வந்து விட்டது. அஞ்சாதே! நான் உனக்கு ஒரு பெரிய தோணியை அனுப்பி வைக்கின்றேன். நீ அந்தத் தோணியில் சமஸ்த ஒளஷதிகளையும் (மூலிகைகள்) பற்பல வித்துகளையும் ஏற்றிக்கொண்டு சப்த ரிஷிகளுடன் சர்வபலம் கொண்டவனாக அந்தகாரமான சமுத்திரத்தில் மகா தீரனாக சஞ்சரிக்கப் போகிறாய். வாயுவால் அலைக்கழிக்கப்பட இருக்கும் அந்தத் தோணி கவிழ்ந்து விடாமல் எனது கொம்பில் சேர்த்த கட்டிவிடு. அப்படிக் கட்டினால் நான் பிரம்மதேவனுடைய இராப்பொழுது தீரும்வரை அந்த ஓடத்தோடு சஞ்சரித்துக் கொண்டு இருப்பேன். அப்போது சப்தரிஷிகளும் ஒளிமயமாக இருந்து உனக்கு வழிகாட்டுவார்கள். என் உடல் அப்போது திமிங்கலம் போலக் காணப்படும். அந்தப் படகை என் கொம்பில் கட்டச் சொன்னேன் அல்லவா? அப்படிக் கட்டுவதற்கு உரிய கயிறு வாசுகி என்ற பாம்பு என்பதை மறந்துவிடாதே. அந்த பாம்பை எனது சிதளில் கட்டிவிடு. அதற்கப்புறம் நீ எனது பெருமையைத் தெரிந்து கொள்வாய். உனக்கு சர்வமங்களமும் உண்டாகட்டும் என்றார். தர்ப்பாசனத்தில் இருந்தபடி சத்தியவிரதன், உலகை அழிக்கப்போகும் பிரளயத்தை எதிர்நோக்கிக் கொண்டு இருந்தான். ஏழாம் நாள், ஆகாயம் அந்தகாரத்தில் மூழ்கியது. பெருமழை பெய்த வண்ணம் இருந்தது. கடல் கரைபுரண்டு வந்தது. பூமி இருக்கும் அடையாளமே தெரியவில்லை. எங்கும் ஒரே தண்ணீர்க்காடு. அந்தப் பொங்கும் நீர்ச்சுழிகளின் ஊடே பரந்தாமன் தங்கத் திமிங்கலத் தோற்றத்துடன் காணப்பட்டார். தகத்தகாயமாக ஜ்வலித்த அவர் உடம்பில் கொம்பு போல் ஒன்று நீண்டு இருந்தது.


சத்யவிரதன் அப்போது சப்தரிஷிகளுடன் மூலிகை விதைகள் சகிதம் ஏறி இருந்த ஓடத்தை பகவான் கூறியபடி அவரைத் தியானம் செய்தபடியே, தங்கத் திமிங்கிலக் கொம்பில் கட்டினான். அந்த அபூர்வ மச்சம் இவர்கள் ஏறிய படகைப் பற்றி இழுத்துக் கொண்டு வெள்ளத்தின் மத்தியில் பயமோ, அபாயமோ இன்றி அலைந்து கொண்டு இருந்தது. அந்த சமயம் பரந்தாமன் ராஜரிஷி சத்தியவிரதனுக்கு மச்சாவதார புராணத்தை உபதேசம் செய்தார். பிரம்மதேசன் நித்திரை காலம் முடிந்தது. உலகத்தை கவ்வி இருந்த அந்தகாரம் விலகி ஊடே ஊடே ஒளிப் படலங்கள் விரிசலிட்டன. ஓயாது பெய்த மழையும் நின்றது. பல்கிய, உலகில் பொங்கிப் பெருகிய தண்ணீர் வடிய ஆரம்பித்தது. மச்சமூர்த்தி ஓடத்தைக் கரை சேர்த்தார். சத்திய விரதன் அந்நேரம் பிரம்மனைக் குறித்து பிரார்த்தனை செய்தான். நித்திரையிலிருந்து மீண்ட பிரம்மதேவன் அவன் முன்பு பிரத்யட்சம் ஆனார். மீண்டும் அவர் தம் சிருஷ்டியைத் தொடங்க நினைத்தபோது தான் வேதங்கள் மறைந்த விபரம் அவருக்குத் தெரிந்தது. பிரம்மதேவர் ஸ்ரீ ஹரியை நோக்கி தியானம் செய்தார். அதுசமயம் மச்சமூர்த்தியாக இருந்த பகவான் வேதங்களை ஹயக்கிரீவன் ஒளித்து வைத்திருப்பதை அறிந்து வெள்ளத்திற்குள் புகுந்து போனார். ஹயக்கிரீவனை வெள்ளத்தில் கண்டு அவனுடன் போர் புரிந்தார். வேதங்களை மீண்டும் பிரம்மதேவரிடம் கொடுத்தார். மறுபடியும் சிருஷ்டியைத் தொடங்கும்படி சொன்னார். இப்படியாகப்பட்ட கல்பத்தில் சத்தியவிரதன் வைவசதமனு என்ற பெயருடன் ராஜ்ய பரிபாலனம் செய்து வரலானான்.


இந்த மச்சாவதார மூர்த்தியைப் பிரார்த்தனை செய்பவர்களுக்கும், அவர் சரித்திரத்தைப் பயபக்தியோடு சிந்தித்து அவரைத் தியானம் செய்பவர்களுக்கும் சகல சம்பத்தும் ஞான யோகமும் உண்டாகும்.



கூர்ம அவதாரம்


Name:  TN_145110000000.jpg
Views: 397
Size:  20.6 KB


பெருமாளின் அவதாரங்களில் இது 2வது அவதாரமாகும்: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூர்மாவதாரம். மலையை அசையும் போது தம் களைப்பு தீர்ந்து பெருமாள் நன்கு தூங்கிக் களித்ததாகச் சொல்வர். பாற்கடலைக் கடைய மந்திர மலை மத்தாக வேண்டி இருந்தது. அது சமயம் மந்திரமலையைப் பெருமாள் தாங்க வேண்டியதாயிற்று. அடிக்கடி அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே யுத்தம் ஏற்பட்டது. தங்கள் தீவிர பக்தியின் காரணமாக அசுரர்களில் செத்தவர்கள் எழுந்தனர். மேலும் அசுரகுரு சுக்ராச்சாரியார் அமுதபானம் கொடுத்து இறந்த தம் சீடர்களை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தார். தேவர்களுக்கு அந்த சலுகை கிடைக்கவில்லை. இதனால் நிறைய தேவகணம் நஷ்டமாயிற்று. ஆகவே தேவர்களுக்கும் அமிர்தம் கிடைக்க வேண்டுமென ஸ்ரீஹரி விரும்பினார். போரில் தோல்வி பெற்றதோடன்றி இந்திரன் துர்வாச முனிவர் சாபத்திற்கும் ஆளாகி இருந்தான். ஒரு நாள் துர்வாச முனிவர் வைகுண்டத்திலிருந்து திரும்பி தேவலோகத்திற்கு வந்துகொண்டு இருந்தார். தேவலோகத்தில் அப்போது இந்திரனாக இருந்தவன் மந்தரத்துருமன் என்பவன். ஆப்பியாள் எனப்படுபவர்கள் தேவர்களாக இருந்தார்கள். அவிஷமானு, அரசுனி என்பவர் ரிஷிகள். வைராஜன் என்பவருடைய பத்தினி சம்பூதினியிடம் பகவான் அவதரித்தார். அப்போது அவருக்குப் பெயர் சுசிதர் என வழங்கலாயிற்று. அவர்தான் பாற்கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமிர்தம் அளித்தார். துர்வாசர் தேவலோகம் நோக்கி வரும்போது, அவர் கழுத்தில் பரமன் அளித்த மலர்மாலையை அணிந்திருந்தார். தேவேந்திரன் ஐராவதத்தின் மீது ஏறி எதிரே வருவதைத் துர்வாசர் பார்த்தார். முனிவர் தன் கழுத்தில் கிடந்த மாலையை இந்திரனுக்கு கொடுத்தார். செருக்கேறிக் கிடந்த இந்திரன் அந்த மாலையைத் தன் யானையாகிய ஐராவதத்தின் தலைமீது விட்டு எறிந்தான். யானையோ அதைத் துதிக்கையால் எடுத்து பூமியில் போட்டுக் காலால் மிதித்தது. துர்வாசருக்கு கோபம் வந்தது.


இந்த இந்திரனால் மூன்று உலகங்களும் அவனும் பாழாகப் போகட்டும் என்று சபித்தார். அது முதல் மூன்று உலகங்களும் களையிழந்து இருண்டு கிடந்தன. இந்திரனும் தேவாதியரும் பிரம்மனை அணுகி பிரார்த்தித்து அந்த இடரிலிருந்து காப்பாற்றும்படி வேண்டினர். இந்த கஷ்டத்தை ஸ்ரீமந்நாராயணன் ஒருவராலே தான் தீர்க்கமுடியும் என அனைவரும் வைகுண்டம் சென்று மஹாவிஷ்ணுவை வணங்கினர். உடனே விஷ்ணு தேவர்களே! உங்கள் நன்மைக்காக நான் கூறுகிறேன். நீங்கள் உங்களுக்கு நல்ல காலம் வரும் வரை காத்திருங்கள். இப்போது அசுரர்களுடன் சமாதானம் செய்து கொள்ளுங்கள். நாம் நாடும் பொருளை அடையும் பொருட்டு எதிரியையும் அணுக வேண்டியதாகிறது. இப்போது சாவை நீக்கும் அதர்மத்தை தேட வேண்டும். பாற்கடலில் பற்பல மூலிகைகளையும், பச்சிலைகளையும் கொண்டு போடுங்கள். மந்திரமலையை மத்தாகவும் வாசுகியைக் கயிறாகவும் வைத்து பாற்கடலைக் கடையுங்கள். நீங்கள் மட்டுமின்றி அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலைக் கடைய வேண்டும். நானும் உங்களுக்கு உதவுகிறேன். இதிலிருந்து வரும் அமிர்தத்தை உங்களுக்கு மட்டுமே கிடைக்கும்படி வழி செய்கிறேன். அதர்மமே குறிக்கோளாக இருக்கும் அசுரர்கள் அமிர்தபானம் உண்டால் இறப்பு ஒழிந்து உலகத்திற்கு மேன்மேலும் கஷ்டத்தைத் தந்து விடுவார்கள். அமிர்தம் பருகினால் அதிக பலம் பெற்று நீங்கள் மரணமில்லா நல்வாழ்வு பெறுவதுடன் தேவலோகமும் சுபிட்சமடைய நேரிடும், என்றார். இந்த யோசனைப்படி நான்முகனாகிய பிரம்மா தேவேந்திரனிடம், இந்திரனே நீ உடனே அசுரர்களை நெருங்கி அமிர்தம் கடையும் காரியத்தில் அவர்கள் துணை நிற்க வேண்டும் என்று கேட்டு அவர்களிடம் இணக்கம் பெற்று வா என்று சொல்லிவிட்டு அவர் அவருடைய சத்யலோகத்திற்குப் போனார். தேவேந்திரன் சில தேவர்களை அழைத்துக் கொண்டு மகேந்திரபுரி நோக்கி நடந்து போனான். எந்தவித ஆடம்பரமுமின்றி அரசருக்குரிய முறையில் டாம்பீகமான ஆடை அணிகலங்களின்றி மிகவும் எளிய தோற்றத்தில் வந்து நின்ற இந்திரனைப் பார்த்து அரக்கர் குலத்தினர் ஏளனம் செய்தனர். எனினும் அவன் வந்த காரியம் தம் குலத்திற்கு மிகவும் உயர்வழி காட்டும், சாவைப் போக்கும் அமிர்தம் கடையும் விஷயம் என்பது தெரிந்து அவனிடம் மகிழ்ச்சியுடன் நடந்து கொண்டனர். விரோசன குமாரனும், அசுர அரசனுமாகிய பலியும் இந்திரன் வந்த காரியத்திற்கு உதவ சம்மதித்தான்.


நாராயணன் இட்ட கட்டளைப்படி தேவர்களும், அசுரர்களும் மந்திரமலையைத் தூக்கிக் கொண்டு பாற்கடலை நோக்கி வந்தார்கள். வரும் வழியில் மலையின் பாரம் தாங்க முடியாமல் களைப்புற்ற இந்திரன், பலி முதலியோர் மந்திரமலையை பூமியில் வைத்து விட்டார்கள். கீழே விழுந்த மலை பலரைத் தாக்கிக் கொன்று விட்டது. இதை அறிந்த ஸ்ரீஹரி கருடன் மீது ஏறி அங்கு வந்தார். வந்து தன் கருணைக் கடாட்சத்தால் காயம் அடைந்தவர்களைக் குணப்படுத்தினார். மலையைக் கருடன் மீது விளையாட்டாக தூக்கி வைத்துக் கொண்டு பாற்கடல் நடுவே பறந்து சென்று மந்திர மலையைக் கீழே இறக்கினார். வாசுகி என்ற பாம்பிற்கு அமிர்தத்தில் பங்கு தருவதாக ஆசை காட்டினார்கள். தேவர், அசுரர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாம்பு மந்திரகிரியைக் கடையும் கயிறாக மந்திர மலையை சுற்றி வளைத்துக் கொண்டது. தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் கடையத் தொடங்கும் போது நாராயணன் பாம்பின் தலைப்பகுதியை பிடித்துக் கொண்டார். தேவர்களும் அவருடன் சேர்ந்து தலைப்புறமாக நின்றார்கள். இதைக் கண்ட அசுரத் தலைவர்கள் வாலைப் பிடிப்பது என்பது நம் நிலைக்கு இழுக்கு. அதனால் தாங்கள் தான் தலைப்பக்கம் நிற்போம் என்றனர். உடனே ஸ்ரீஹரியும் தேவர்களும் பாம்பின் வால்பக்கமும், அசுரர்கள் தலைப்பக்கமும் நின்று பாற்கடலைக் கடையத் தொடங்கினார்கள். மலையோ அதனுடைய பெரும் பாரத்தால் கடலுக்குள் மூழ்கியது. உடனே பகவான் ஆமையாக அவதாரம் எடுத்தார். மந்திரமலையைத் தன் முதுகால் தாங்கிக் கொண்டார். மறுபடியும் இருசாரர்களும் தங்களது பணியை செய்யத் தொடங்கினார்கள். இந்நிலையில் வாசுகி என்ற பாம்பின் முகம் மற்றும் கண்களிலிருந்து உஷ்ண ஜ்வாலைகள் வெளிவந்தன. ஆலகாலம் என்ற விஷத்தை கக்கியது. அந்த விஷத்தின் தன்மை எல்லாப் பக்கமும் பரவ ஆரம்பித்தது. அசுரர்கள் பாம்பை விட்டுவிட்டு தலைதெறிக்க நாலாபுறமும் ஓடிவிட்டார்கள். தேவர்கள் மீது மட்டும் மழை பொழிந்து கடல்காற்று வீசியது. எனினும் அமிர்தத்திற்கு பதில் கொடிய விஷமே பரவியது. இதனால் தேவர்களும், அசுரர்களும் மிகவும் சிரமப்பட்டனர். தேவர்களுடன் தேவேந்திரன் கைலாயத்திற்கு சென்று சிவபெருமானை பிரார்த்தித்தான். அம்பலத்தரசே! நாங்கள் பாற்கடல் கடைந்த சமயம் வாசுகியின் தாங்க முடியாத ஆலகால விஷம் நாலாப்புறமும் பொங்கித் ததும்பக் காண்கிறோமே ஒழிய அமிர்தம் வந்தபாடில்லை. ஆலகாலத்தின் விஷத்தைப் பொறுத்துக் கொண்டு எங்களால் அமிர்தம் கடைய முடியாது. எனவே தாங்கள் தான் எங்களைக் காத்தருளவேண்டும் என வேண்டினர். சிவபெருமான் தம் பிராட்டி உமாதேவியை அழைத்தார்.


அம்பிகையே! பாற்கடலைக் கடைய ஆலகால விஷம் தடையாக உள்ளது. தேவேந்திரனும் நம்மிடம் சரணடைந்து விட்டான். ஆகவே நான் இப்பொழுதே சென்று அதை உட்கொள்ளப் போகிறேன். அதனால் அனைவரும் நன்மை பெறட்டும் என்றார். அம்பிகையும் அதற்கு ஆமோதித்தாள். அக்கணமே பாற்கடலை அடைந்து விஷத்தைப் பருகினார் சிவபெருமான். உடனே உமாதேவி, ஆலகாலமே! பெருமானுடைய கண்டத்தளவிலேயே நில் என்று கூறியபடி பெருமானுடைய கழுத்தை அழுத்திப் பிடிக்க விஷம் அவர் கழுத்திலேயே நின்றது. பின்னர் தேவர்கள் அனைவரும் சிவபெருமானை நீலகண்டன் எனப் போற்றி துதித்தனர்.தேவர்களும், அசுரர்களும் மீண்டும் பாற்கடலைக் கடைந்தார்கள். அதிலிருந்து காமதேனு, வெள்ளைக் குதிரை, சிவப்பு மணி, ஐராவதம், பாரிஜாத மரம் போன்ற எண்ணற்ற பொருள்கள் வெளிவந்து தேவலோகத்தை அடைந்தன. மேலும் அதிலிருந்து வெளிவந்த திருமகளாகிய லட்சுமி தேவி, ஸ்ரீஹரியை அடைந்தாள். அதற்கு அடுத்தாற்போல் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீஹரியின் அம்சமான தன்வந்திரி பகவான் அமிர்தம் ததும்பும் தங்க கலசத்துடன் வெளிவந்தார். இதைக் கண்ட அசுரர்கள் அந்த அமிர்த கலசத்தைப் பறித்துக் கொண்டு மின்னலென ஓடி மறைந்தனர். தேவர்கள் அனைவரும் தாங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் வீணாகி விட்டதே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். இதற்கிடையில் சற்றே தூரத்தில் அசுரர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு கலவரத்தில் ஈடுபட்டனர். அச்சமயம் ஸ்ரீஹரி ஆடவரின் சிந்தையை இழக்கச் செய்யும் சீரிய அழகுடைய பெண் வடிவில் ஜெகன் மோகினியாக அவர்கள் முன் தோன்றினார். அதுவரை தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த அசுரர்கள் வாயடைத்து நின்றனர். இவ்வளவு அழகுடைய பெண்ணை தாங்கள் கண்டதே இல்லை, பிரம்மன் தங்களுக்காகவே இவளை படைத்திருக்கிறான் என்று வியந்தனர். அழகியே! அனைவருக்கும் சொந்தமான ஒரு பொருளுக்கு நாங்கள் சுயநலத்தால் சண்டைப் போட்டுக் கொள்கிறோம். கஸ்யபர் மைந்தர்களான எங்களுக்கு பாரபட்சமின்றி சமஅளவில் பங்கிட்டுத் தா என்றனர். கஸ்யபர் புத்திரர்களே! நீங்களோ பக்திமான்கள். ஓயாத ஆசையுடன் திரியும் ஓநாய் கூடப் பெண் அன்பிற்கு ஆளாகாது என்கிற உலகத்தில் புதிதாக வந்த என்னை எவ்வாறு நம்பினீர்கள், என வினவினாள். இவ்வாறு அவள் வினவியது மேலும் அவள் மேல் நம்பிக்கையை உண்டாக்கியது.


அமுதகலசத்தை மோகினியிடம் அசுரர்கள் ஒப்படைத்தனர். நான் தான் பங்கிடுவேன். நான் எது செய்தாலும் எப்படி செய்தாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். என்ன சொல்கிறீர்கள்? என்று மோகினி கேட்க, அத்தனை அசுரர்களும் ஒப்புக் கொண்டனர். அன்று உண்ணா நோன்பு நோற்று புனித நீராடினர். ஹோமங்கள் நடத்தி தானங்கள் செய்தனர். ஸ்ரீஹரியாகிய மோகினி தேவர்களை ஒரு பந்தியாகவும், அசுரர்களை ஒரு பந்தியாகவும் அமர்த்தினாள். அனைவரும் தர்ப்பாசனத்தில் அமர்ந்திருந்தனர். அசுரர்கள் கிழக்கு முகமாகவும், தேவர்கள் மேற்கு முகமாகவும் அமர்ந்து அமுதத்தை அருந்த தயாரானார்கள். அசுரர்கள் அனைவரும் மோகினியின் அழகில் மயங்கி இருந்தனர். அசுரர்களுக்கு அமிர்தம் தருவது, பாம்பிற்கு பால் வார்ப்பது போல் என்றெண்ணிய மோகினி தேவர்களுக்கு மட்டும் அமிர்தம் கிடைக்கும்படி செய்து கொண்டிருந்தாள். அசுரர்கள் அனைவரும் மயக்கத்தில் இருந்ததால் அவர்களுக்கு இந்த சூழ்ச்சி தெரியவில்லை. ஆனால் அசுரர்களில் ராகு என்பவன் மட்டும் இந்த சூழ்ச்சியை தெரிந்து கொண்டான். தேவர்கள் போல் உருமாறி சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் அமர்ந்து கொண்டு அமிர்தத்தை அருந்தி விட்டான். இந்த விஷயத்தை அறிந்த மகாவிஷ்ணு தனது சுதர்சனத்தால் ராகுவின் தலையை வெட்டி எறிந்தார். அமுது உண்டதால் தலையும் அழியவில்லை, உடலும் அழியவில்லை. இதைப் பார்த்த பிரம்மன் துண்டிக்கப்பட்ட தலையோடு ஒரு சர்ப்ப உடலை பொருத்தினார். துண்டிக்கப்பட்ட உடலோடு ஒரு பாம்பின் தலையைப் பொருத்தி இணைத்தார். அவை இரண்டும் ராகு, கேது என்ற பெயருடன் கிரக பதவி பெற்றனர். பின்பு தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கடுமையான போர் நடந்தது. அமுத பானம் உண்ட தேவர்களை அசுரர்களால் அழிக்கமுடியவில்லை. தேவர்கள் அசுரர்களை பாதாள லோகத்திற்குத் துரத்தினார்கள்.


இந்த கூர்மஅவதார மூர்த்தியைப் பிரார்த்தனை செய்பவர்களுக்கும், அவர் சரித்திரத்தைப் பயபக்தியோடு சிந்தித்து அவரைத் தியானம் செய்பவர்களுக்கும் சகல சம்பத்தும், தீர்க்க ஆயுளும் உண்டாகும்.


வராக அவதாரம்


Name:  TN_150105000000.jpg
Views: 356
Size:  24.4 KB


பெருமாளின் அவதாரங்களில் இது 3வது அவதாரமாகும்: பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். ஆலிலையில் அறிதுயிலில் இருந்த திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றதோடு, அப்பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தார். சிருஷ்டி என்பது இருவகைப்படும். முதலில் இறைவன் தாமாகவே மாயையின் பலத்தினால் மகத்தில் இருந்து பஞ்சபூதங்களும், ஐம்புலன்களும் உண்டாகப் படைத்தார். இதற்குப்பின் தான் பிரமன் தோன்றினார். பரமனின் ஆணைப்படி தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள், தேவர்கள் என அனைத்தையும் பிரமன் படைத்தார். சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற முனிவர்களைப் படைத்து சிருஷ்டித் தொழிலை மேற்கொள்ளும்படி பணித்தார். பிரமன் புருவங்களின் நடுவிலிருந்து ருத்திரன் தோன்றினான். அதன்பின் மர்சி, அத்ரி, ஆங்கீரசர், புலஸ்தர், புலகர், க்ருது, பிருகு, வசிஸ்டர், தக்ஷர், நாரதர், இதன்பின் வேதங்கள், சத்வகுணங்கள், காயத்ரி, பிரணவம் இத்யாதி ஆகியவற்றைப் படைத்தார். என்ன படைத்தும் பிரம்ம குலம் பெருகவில்லை. இதனால் பிரம்மா மிகவும் மனம் உடைந்து போனார். அதன் காரணமாக அவருடைய உடல் இரண்டாகப் பிரிந்தது. அவை ஆண், பெண் உருவங்களாக மாறின. அந்த ஆண் சுவாயம்புவமனு என்றும், அந்த பெண் சத்ரூபா என்றும் அழைக்கப்பட்டனர். சுவாயம்புவமனு பிரம்மாவைப் பார்த்துக் கேட்டார்: பிரபோ! நானும் என் மனைவியும் தற்சமயம் என்ன பணி செய்வது? உங்களைப் போன்ற மக்களைப் பெற்று பூமியை ஆட்சி செய்து பல யக்ஞங்களைச் செய்து ஸ்ரீ ஹரியை சந்தோஷப்படுத்துக என்று பிரமன் கட்டளையிட்டார். உங்கள் சொல்லை நான் தட்டமாட்டேன். ஆயினும் பூமியில் நான் வசிக்க இடமில்லையே! பூமி கடலின் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறதே! என்றான் மனு.


பூமியில் மானிடர்களைப் படைக்க வேண்டும் என்று நான் எண்ணிய சமயத்தில் பிரளயம் வந்துவிட்டதே என்று கவலையில் ஆழ்ந்தார் பிரம்மா. உடனே ஸ்ரீஹரியை நோக்கி தியானம் செய்தார். மனத்தில் ஸ்ரீஹரியை சிந்தித்துக் கொண்டே நான் எந்தப் பரந்தாமனுடைய கிருபையால் உருவானேனோ, அதே பிரபு இதோ இங்கே ஜலசமுத்திரத்தில் அமிழ்ந்து கிடக்கும் உலகத்தை வெளிக்கொண்டு வந்து நிலைக்கச் செய்யட்டும் என்று தியானித்தார். அப்போது அவருடைய நாசியில் இருந்து ஒரு கட்டை விரல் அளவேயான ஒரு வராகம் வெளிப்பட்டது. ஸ்ரீமந்நாராயணன், பிரம்மாவின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யவே அந்த பன்றி (வராக) ரூபத்தை எடுத்தார். எல்லோரும் பார்த்துக் கொண்டு இருக்கும்பொழுதே அந்தச் சிறிய பன்றி உருவம் பூதாகரமாக யானை அளவு வளர்ந்தது. அதைப் பார்த்து பிரம்மா மெய்சிலிர்த்து புளகாங்கிதம் அடைந்தார். என் எண்ணத்தை நிறைவேற்றவே நாராயணன் இவ்வாறு அவதாரம் எடுத்திருக்கிறார் என்று மகிழ்ந்து வேதபாராயண ஸ்தோத்திரங்களைச் சொன்னார். அதனால் சந்தோஷம் அடைந்த மூர்த்தி கர்ஜனை செய்தார். அந்த பிரமாண்ட ஒலி ஜனலோகம், தபோலோகம், சத்யலோகம் மூன்றிலும் கேட்டது. இதைக்கேட்ட மகிரிஷிகள் மகிழ்ந்தார்கள். அச்சமயம் தவத்தில் சிறந்தவரான கஸ்யப முனிவருக்கும், திதிக்கும் திருமணம் நடைபெற்றது. கஸ்யபர் தன் ஆசிரமத்தில் பகவானைக் குறித்து வேள்வி செய்து கொண்டிருந்தார். அந்நேரம் வேள்வி சாலைக்கு வந்த திதி, தன் விருப்பத்தை நிறைவேற்றுமாறு கணவரிடம் கூறினாள். அதற்கு அவர் இது பூதங்கள் மட்டுமே சஞ்சாரம் செய்யும் சந்தியா வந்தன நேரம், ஒரு முகூர்த்த காலம் மட்டும் நீ பொறுத்துக் கொள் என்று கூறினார். அதற்கு திதி மறுக்கவே தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றினார் கஸ்யபர். பின் மீண்டும் பகவானை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த திதி, சுவாமி! என்னை மன்னித்தருளுங்கள், தங்களின் சொற்களைக் கேளாமல் இவ்வாறு தவறாக நடந்து கொண்டேன் என்றாள். உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார் கஸ்யபர். என் கருவிலிருக்கும் சிசுவுக்கு எந்தவித ஆபத்தும் வராமல் இருக்க தாங்கள் தயவு காட்ட வேண்டும் எனக் கேட்டாள். திதியே! நான் எத்தனையோ முறை கூறியும் நீ காதில் போட்டுக் கொள்ளவில்லை.


சந்தியா காலத்தில் உன் உதிரத்தில் சேர்ந்த கருவிலிருந்து இரண்டு பிள்ளைகள் பிறப்பார்கள். அவர்கள் அரக்க குணம் உடையவர்களாக தர்ம விரோதமான காரியங்களில் ஈடுபட்டு மூவுலகையும், தேவர்களையும் துன்புறுத்துவார்கள். அப்போது பெருமாள் அவதாரம் எடுத்து அவர்களை வதம் செய்வார் என்றார் கஸ்யபர். சுதர்சனத்தை கையில் ஏந்திய பரந்தாமன் கையில் என் பிள்ளைகள் மரணமாவதில் எனக்கு ஒரு குறையும் இல்லை, எனினும் அந்தணராகிய உங்கள் சாபத்துக்கே நான் அஞ்சினேன் என்று அழுதாள். பிரியே! கவலை வேண்டாம், இப்போது நீ பரந்தாமனிடத்தும், சிவபெருமானிடத்தும், என்னிடத்திலும் கொண்ட பக்தியால் உன் பிள்ளைகளில் ஒருவனுக்குப் பிறக்கும் பையன் ஹரி பக்தியில் சிறந்தவனாக இருப்பான். அவன் மேலானவர்களுக்கும் மேலானவனாக இருந்து புகழ் பெறுவான் என்றார். இதைக் கேட்ட திதி தன் பிள்ளைவழிப் பேரனாவது ஹரி பக்தனாக இருக்கிறானே என சந்தோஷமடைந்தாள். கரு உருவாகி வளர்ந்தது. பிள்ளைகள் பிறந்தால் தேவர்களுக்கு இடையூறு ஏற்படுமே என்றெண்ணிய திதி அப்பிள்ளைகளை நூறு வருடங்கள் வயிற்றில் சுமந்தாள். அதனால் அந்தக் கருவின் ஒளி எங்கும் பறந்து விரிந்து சூரிய சந்திரனின் ஒளியை மங்க வைத்தது. நாலாத் திசையும் இருண்டன. இதைக் கண்ட தேவர்கள் பிரம்மனிடம் முறையிட்டனர்.பிரம்மன் அவர்களிடம் தேவர்களே! ஒரு நாள் என் மனத்தினால் தோற்றுவிக்கப்பட்ட என் புதல்வர்களான சனகாதி முனிவர்கள் நாராயணனை தரிசிக்கச் சென்றனர். அப்போது அவர் வாயிற்காப்பாளர்களாக ஜெய, விஜயர் இருந்தனர். நாராயணனை தரிசிக்க விடாமல் தடுத்த காரணத்திற்காக முனிவர்களின் சாபத்திற்கு ஆளாகினர். தங்கள் தவறை உணர்ந்த ஜெய, விஜயர்கள் நாங்கள் தண்டனை அனுபவிக்கும் காலத்திலும் ஸ்ரீமந் நாராயணனையே நினைக்க வேண்டும் என்று வேண்டினர். இதை அனைத்தும் கவனித்துக் கொண்டிருந்த நாராயணன் முனிவர்கள் முன் தோன்றினார். முனிவர்களே! பக்தர்களாகிய உங்களுக்குச் செய்த அபசாரம் கண்டிக்கத்தக்கது.


அது மட்டுமல்ல. என் ஊழியர்கள் அறியாமல் செய்த பிழைக்கு நான் பொறுப்பேற்கிறேன், அவர்கள் அதி சீக்கிரமே பூமியில் ஜனித்து சாபம் நீங்கி என் திருவடிகளை சரணடைய வேண்டும் என்றார். உடனே முனிவர்கள் இவர்கள் இருவரும் வெகுசீக்கிரமே அரக்கர்களாக பிறந்து உன்னை அடைவார்கள் என்றார். இவர்கள் தான் இப்போது திதியின் கருவில் இருக்கும் ஜெய, விஜயர்கள் என்று சொல்லி முடித்தார். திதி நூறு வருடங்கள் சென்றதும் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றாள். அவர்கள் பூமியில் ஜனனம் ஆகும் போது பல கெட்ட சகுனங்கள் பூமியின் தோன்றின. முதலில் பிறந்தவன் ஹிரணிய கசிவு என்றும், இரண்டாவது பிறந்தவன் ஹிரண்யாட்சன் என்றும் பெயரிடப்பட்டனர். விரைவிலேயே அவர்கள் பூதாகாரமாக மலை என வளர்ந்து நின்றனர். அவர்கள் செய்த அட்டூழியங்களைக் கண்டு மூன்று உலகமும் நடுங்கியது. இதற்கு காரணம் பிரம்மாவிடம் யாருக்கும் இல்லாத பராக்கிரமத்தைக் கேட்டுப் பெற்ற வரத்தின் விளைவே ஆகும். ஹிரண்யாட்சன் தேவர்களை ஓட ஓட விரட்டினான். மிகவும் துன்புறுத்தினான். இதனால் தேவர்கள் அனைவரும் காணாமல் போயினர். இவன் அவர்களைத் தேடி பாதாள லோகத்திற்கு செல்ல சமுத்திரத்தில் மூழ்கினான். சமுத்திர ராஜனான வருணனை யுத்தத்திற்கு அழைத்தான். ஹிரண்யாட்சனிடம் யுத்தம் செய்து பலன் எதுவும் இல்லை, பிரம்ம வரத்தால் பராக்கிரமம் கொண்ட இவனை ஜெயிக்க முடியாது என்பதை வருணன் உணர்ந்தான். அசுர முதல்வனே! உன் பராக்கிரமத்தை நான் பாராட்டுகிறேன். தினவு எடுக்கும் உன் தோள்களுக்கு சிறந்த விருந்து தர ஸ்ரீ ஹரி ஒருவராலே முடியும். நீ அவரைத் தேடிச் சென்று உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள் என்று தந்திரமாக பதில் கூறினான். வருணன் இவ்வாறு சொன்னதும் ஹிரண்யாட்சன் கதையை சுழற்றிக் கொண்டு கர்ஜனை செய்த வண்ணம் ஹரியைத் தேடி புறப்பட்டான். அவன் வைகுண்டத்தை நோக்கிப் போகும் சமயம் அவனை நாரதர் தடுத்தார். அசுர தலைவனே! உன்னிடம் கொண்ட அச்சத்தால் தேவர்கள் எங்கோ ஓடி ஒளிந்தார்களே, நீ இப்போது எங்கே போகிறாய், என்றார்.


நான் ஹரியைத் தேடி வைகுண்டம் போகிறேன். அங்கே போனால் தான் தினவு எடுக்கும் என் தோள்களுக்குத் தகுந்த தீனி கிடைக்கும் என நினைக்கிறேன்! என்றான். நல்ல காரியம் செய்யப் போகிறாய், ஆனால் நீ தேடிப் போகும் ஹரி வைகுண்டத்தில் இல்லை. பாதாளத்தின் கீழ் அழுந்திக் கிடக்கும் பூமியை வெளிப்படுத்த சென்றிருக்கிறார். அப்படியா? இதோ பாதாள லோகத்திற்குப் போகிறேன் என்று சொல்லி விட்டு பாதாளத்திற்குள் புகுந்தான். அங்கே ஹரி பகவான் வராக மூர்த்தியாக எழுந்தருளி தண்ணீருக்குள் ஆழ்ந்து கிடக்கும் பூமியைத் தமது கோரப்பற்களால் தாங்கி மேலேற்றிக் கொண்டு இருந்தார். இந்தக் காட்சியைக் கண்ட ஹிரண்யாட்சன் சிரித்தான். பன்றி வடிவில் இருந்த பகவானைக் கேலி செய்தான். பகவான் அவனுடன் யுத்தம் செய்ய ஆயத்தமானார். இரண்டு மலைகள் மோதுவது போல மோதிக் கொண்டனர். யுத்தத்தை நேரில் காண பாதாள லோகத்திற்கு தேவர்களுடன், பிரம்மா வந்து சேர்ந்தார். அண்ட சராசரங்களும் அப்போது கிடுகிடுத்தன. ஹிரண்யாட்சன் தன் கதையை எடுத்து ஹரியை நோக்கி வீசினான். அதை ஹரிபகவான் தன் சக்கராயுதத்தால் தடுத்தார். பின் ஹிரண்யாட்சனின் மாய லீலைகளால் லட்சக்கணக்கான அசுர கணங்கள் ஆயுதங்களோடு தோன்றின. தன் சுதர்சன சக்கரத்தால் அத்தனையையும் அழித்தார் ஹரி பகவான். பிரம்மா அந்நேரம் ஹரியைப் பார்த்து, சந்தியா காலம் நெருங்குவதற்குள் அவனை அழித்து விடுமாறு கூறினார். ஹரியும் அவ்வாறே ஹிரண்யாட்சனின் காதோரம் லேசாக ஒரு தட்டு தட்டினார். அவன் விழிகள் பிதுங்கி மரம் போலச் சாய்ந்தான். அந்நேரம் தேவர்கள் ஹரியைப் போற்றி துதித்துப் பாடினர். பாதாளத்தில் அழுந்து கிடந்த பூமியை வெளிக்கொணர்ந்து நிலை நிறுத்தினார். அவனுடன் யுத்தம் செய்ததால் அவர் உடல் முழுவதும் உதயசூரியனைப் போல் சிவந்து காணப்பட்டது. பிரமாதியர் அப்பொழுதும் இடைவிடாது வேத தோத்திரங்கள் செய்தனர். அதைக் கேட்டு ஆனந்தம் அடைந்த பகவான் அகமகிழ்ந்து சாந்தமாகி அந்தர்த்தானம் ஆனார். பிரம்மன் சுவாயம்புமனுவை அழைத்தார். நீ உன் பிரஜைகளுடன் பூமண்டலத்தை அடைந்து ஆட்சி செய்து வாழ்வாயாக! என்று அனுக்கிரகித்தார். பின்னர் சுவாயம்புமனுவும், சத்ரூபாவும் கணவன் மனைவியாக வாழ்ந்து பிரியவரதர், உத்தானபாதர் என இரண்டு ஆண் குழந்தைகளும், ஆஹுதி, தேவஹுதி, ப்ரசூதி என்ற மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தனர். இவர்களும் இவர்கள் வழி வந்தவர்களுமே ஆதிமனிதர்கள் ஆவர்.


இந்த வராகஅவதார மூர்த்தியைப் பிரார்த்தனை செய்பவர்களுக்கும், அவர் சரித்திரத்தைப் பயபக்தியோடு சிந்தித்து அவரைத் தியானம் செய்பவர்களுக்கும் சகல சம்பத்தும், தீர்க்க ஆயுளும் உண்டாகும்.



நரசிம்ம அவதாரம்


Name:  TN_150550000000.jpg
Views: 357
Size:  26.7 KB


பெருமாளின் அவதாரங்களில் இது 4 வது அவதாரமாகும்: அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார். ஸ்ரீஹரி எடுத்த வராக அவதாரத்தில் தன்னுடைய உடன்பிறப்பாகிய ஹிரண்யாட்சனைக் கொன்று விட்டார் என்று கேட்டதும் இரண்யகசிபு துயரம் அடைந்தான். அதனால் அவனுக்குப் பரந்தாமன் மீது சொல்ல முடியாத கோபம் ஏற்பட்டது. உடனே சூலத்தைத் தன் கையில் எடுத்தான். தன் அரக்கர் குலக் கூட்டத்தைக் கூட்டி அவர்களிடம், அரக்கர் குலக் கொழுந்துகளே! நீங்கள் என் கட்டளைக்கு கீழ்ப்படிந்து உடனே செயலாற்றுங்கள். எனது தமையனின் இறப்பிற்கு காரணமான ஸ்ரீஹரியையும், தேவர்கள் அனைவரையும் அழிக்க வேண்டும். நீங்கள் உடனே புறப்பட்டுப்போய் அந்தணர்கள், தேவர்கள், பசுக்கள் முதலியவற்றை துன்புறுத்தி கொல்லுங்கள் என்றான். இரண்யகசிபுவின் கட்டளையை ஏற்ற அரக்கர்கள் நோன்பு, விரம் நோற்ற பெரியோர்களையும், அந்தணர்களையும் கொன்று குவித்தனர். யாராலும் வெல்வதற்கரிய வீரத்தைத் தான் பெற்றால் அன்றி ஸ்ரீஹரியை ஒழிக்க முடியாது என உணர்ந்தான். அழியாத ஆயுளையும் மூன்று உலகங்களையும் அடக்கி ஆளும் வல்லமையையும் வேண்டி பரமனை நோக்கித் தவம் செய்யப் புறப்பட்டான். மந்திரமலைச் சாரலுக்கு வந்தான். கால் கட்டை விரலைத் தரையிலே ஊன்றினான். கைகளை மேலே தூக்கினான். விண்ணுலகை நோக்கி நின்றான். ஊழிக்காலத்தில் காணும் சூரியனுடைய ஒளிக்கிரணங்களைப் போல செஞ்சடை விரியக் காட்சி அளித்தான்.


உக்கிரமான தவத்தில் பிரம்மதேவனை நோக்கி ஏகாக்ரசித்தத்துடன் ஆழ்ந்தான். நாட்கள் நகர்ந்தன. வருடங்கள் பல ஓடின. இவனுடைய தவத்தால் எழுந்த யோகாக்னியின் தகிப்பை தாங்கமுடியாமல் சகல ஜீவராசிகளும் வருந்தின. தலையிலிருந்து மேகக்கூட்டம் போன்ற புகைமண்டலம் எழுந்தது. மூன்று உலகத்தையும் அது சூழ்ந்தது. ஆறுகளும், சமுத்திரங்களும் கொந்தளித்தன. திசைகள் எங்கும் ஒரே தீப்பொறி கக்கி அனல் எரிந்தது. தேவர்கள் அவனுடைய தவபலத்தினால் தாங்கள் பஸ்பமாகி விடுவோமோ என பயந்தனர். தேவர்கள் உடனே பிரம்மாவிடம் முறையிடச் சென்றனர். பிரம்மாவிடம், தேவ தேவே! உங்கள் பதவிக்கே ஆபத்து தரும் வகையில் இரண்யகசிபு தவம் மேற்கொண்டு இருக்கிறான். அவனது தவத்தால் உண்டாகும் அக்னியை எங்களால் தாங்கமுடியவில்லை. உடனே அவனது தவத்தை நிறுத்த ஏதாவது செய்யுங்கள் என்றனர். தேவர்கள் சொன்னதைக் கேட்ட பிரம்மா மந்திரமலைச் சாரலுக்கு வந்தார். அங்கே இரண்யகசிபு இருந்த இடத்தில் புற்றும், புதர்களும் மூடிக்கிடந்தன. எறும்பு அரித்த தோலும் சதையும் மிஞ்சி எலும்புக் கூடாக இருந்தான். அவனை இந்நிலையில் பார்த்து, இரண்யா! உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்! என்றார். அவன் மீது தன் கமண்டல தீர்த்தத்தை தெளித்தார். கட்டையில் மூண்ட தீயெனக் கசிபு வெளி வந்தான். உருக்கி வார்த்த பொன்மேனியுடன் பிரம்ம தேவனை வணங்கினான். லோக பிதாவே! உங்களுடைய சிருஷ்டி எதனாலும் எனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாது. அதுமட்டுமல்ல, எனக்கு உள்ளும் புறமும், பகலிலும் இரவிலும், விண்ணிலும் பூமியிலும், மரணம் ஏற்படக்கூடாது. எந்தவித ஆயுதங்களாலும் பிராணிகள், மனிதர், தேவர், அசுரர்களாலும் எனக்கு சாவு வரக்கூடாது. தேவர்களாலும் ஜெயிக்க முடியாதபடி நல்ல வல்லமையை, வீரத்தை எனக்குத் தாங்கள் தந்தருள வேண்டும். எனக்கு நிகர் நானாகத்தான் இருக்க வேண்டும். மூவுலகத்தையும் நானே கட்டி ஆள வேண்டும். லோக பாலகருள் தேவரீராகிய தாங்கள் அனுபவிக்கும் பெருமையை நான் அடைய வேண்டும்.


யோகம், சமாதி, தவம் முதலியவற்றால் ஏற்படும் சக்திகள் அனைத்தும் எனக்கு வரச்செய்ய வேண்டும் என்று வரம் கேட்டான். பிரம்மாவும் வேறு வழியின்றி அவன் கேட்ட வரத்தைக் கொடுத்து விட்டு மறைந்தார். இரண்யகசிபுவுக்கு இப்படி ஒரு வரத்தை பிரம்மா கொடுத்துவிட்டாரே என தேவர்கள் அனைவரும் வருந்தினர். வரத்தைப் பெற்றுத் திரும்பிய இரண்யகசிபு தன் எண்ணத்தை உடனே நிறைவேற்றிக் கொண்டான். தேவலோகம் சென்று தேவேந்திரனை விரட்டினான். சொர்க்க லோகத்தையும் தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தான். தேவேந்திர சிம்மாசனம் ஏறி அமராவதி பட்டினத்து அரண்மனையில் வாசம் செய்தான். வேள்விகள் மூலம் வரும் அவிர்பாகம் முழுவதையும் அவனே கிரகித்துக் கொண்டான். மூவுலகையும் பல்லாண்டுகள் கொடுங்கோல் ஆட்சி செய்தான். அவனால் இழைக்கப்பட்ட தீமைகள், கொடுமைகளை பெருமாளிடம் சென்று தேவர்கள் முறையிட்டார்கள். காலம் காலமாக அனுபவித்த தேவர்களுடைய தியானத்தினால் ஸ்ரீமந் நாராயணன், அவர்களுக்கு அனுக்கிரஹம் செய்தார். விரைவிலேயே அவனை வதைப்பதாக அவர்களுக்கு அசரீரி மூலம் அறிவித்தார். இந்த அரக்கர்களின் அரக்கனாகிய இரண்யகசிபுவின் கொடுங்கோலாட்சியை நான் அறிவேன். அதற்கு ஆவன செய்கிறேன். கொஞ்சம் பொறுத்திருங்கள். எவன் தேவர்கள், பசுக்கள், வேதங்கள், வேதியர் ஆகியோர் மீதும் என்னிடமும் பகைமை தலைதூக்குமோ, அப்போதே அவன் அழிந்து போவான். இந்த அரக்க ராஜன் தன் மகன் பிரகலாதனைத் துன்புறுத்துவான். அப்போது நான் அவனைக் கொல்லச் சித்தமாவேன் என்றார். இரண்யகசிபுவிற்கு கிலாதன், பிரகலாதன், அனுகிலாதன், சமகிலாதன் என நான்கு புதல்வர்கள் பிறந்தனர். அவர்களில் பிரகலாதன் மட்டும் சிறந்த விஷ்ணு பக்தனாக எப்பொழுதும் ஸ்ரீமந் நாராயணனின் பெயரையே உச்சரித்துக் கொண்டிருந்தான்.


அசுரகுரு சுக்ராச்சாரியாருக்கு சண்டன், அமர்க்கன் என இரண்டு பிள்ளைகள். இரண்யகசிபு அவர்களைத் தன் புதல்வர்களுக்கும் மற்றும் அரசியல் அதிகாரிகளுடைய குமாரர்களுக்கும் ஆசிரியராக இருந்து பணியாற்றச் செய்தான். ஒரு நாள் கசிபு தன் செல்வகுமாரனை மடியில் அமர்த்தி கொஞ்சி மகிழ்ந்தான். அது சமயம் குமாரா! நீ இத்தனை நாளும் என்ன கற்றாய்? அவற்றை எனக்குச் சொல் என்றான். அப்பா நான் கற்ற அனைத்தையும் எப்படிக் கூறுவது, ஏதாவது ஒரு கேள்வி கேளுங்கள் நான் பதில் கூறுகிறேன் என்றான். கசிபும் அவ்வாறே மனிதனுக்கு நலம் தருவது எது? என்று வினவினான். எவர் ஆசை, பற்று முதலியவைகளை அறவே விட்டு விட்டு அவைகள் எல்லாம் வெறும் மாயை, மாறாக ஸ்ரீஹரியே மெய்யான பொருள், அவர் திருவடியை சரணடைபவர்கள் பாக்கியம் பெற்றவர்கள் என்றான் பிரகலாதன். பரமவிரோதியான ஸ்ரீஹரியின் பெயரை உச்சரிக்கிறானே என சிறுவனை கடிந்து கொண்டு, அவனுக்கு பாடம் கற்பித்த ஆசிரியரை வரச்சொல்லுங்கள் என்றான். நாங்கள் பலமுறை என்ன சொல்லிக் கொடுத்தாலும் காதில் போட்டுக் கொள்ளாமல், எல்லாம் ஸ்ரீஹரியின் செயல் என்று எங்கள் வார்த்தைகளை உதாசீனம் செய்தான். இதைத் தங்களிடம் எப்படிக் கூறுவது என்றே இத்தனை காலம் நாங்கள் தயங்கினோம் என்றார்கள். ஏதோ அந்தணர்கள் இவனுக்கு தவறாக கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள். மற்றபடி சின்னஞ்சிறு பிராயத்தினனாகிய இவனுக்கு இது தெரிய நியாயமில்லை. ஆகவே யாரும் அணுகாதபடி, இனித் தனிமையில் அமர்த்தி பாடம் கற்பியுங்கள் என்று அவன் ஆணையிட்டான். பின்பு பிரகலாதனின் அறிவுக்கூர்மையை பார்த்து அவனிடம் ஆசிரியர்கள் கேட்டார்கள். அப்பனே பிரகலாதா! மற்றவர் யாருக்கும் இல்லாத இந்த மாறான புத்தியை உனக்கு யார் கற்பித்தது? இல்லை உனக்கு தானாக வந்ததா? உண்மையைச் சொல் என்றனர். நான் என்றும், நீ என்றும் பிரித்துப் பார்க்கும் புத்தி வெறும் மாயை. அவன் அருளால் பேதம் என்பது வெறும் பொய், அவனே மெய் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். எனக்குக் கற்பித்தவன், கற்ற பொருள், கற்றதின் பயன் எல்லாம் அந்த ஸ்ரீ ஹரியே அவரைத் தவிர வேறில்லை! என்றான் பிரகலாதன். பிறகு அறம், பொருள், இன்பம் பற்றிப் பாடம் சொல்லிக் கொடுத்து விட்டு அவனது தந்தையிடம் அழைத்துச் சென்றனர். மீண்டும் கசிபு, பிரகலாதனிடம் பிரகலாதா! நீ படித்ததில் மிகவும் சிறப்பான ஒன்றைச் சொல் கேட்கிறேன்! என்றான். அதற்கு பிரகலாதன் ஹரியின் கதைகளைக் கேட்க வேண்டும், அவன் லீலைகளை வாயாரப் பேச வேண்டும், ஹரி உருவத்தை நினைக்க வேண்டும், ஹரியின் சேவையே உத்தமம்.


Comments

Popular posts from this blog

[RG] Horror movies

107.John Wayne GACY Jr.

30. SERIAL KILLERS AND ASTROLOGY