கப்பல் விளையாட்டு

இந்த நிழலான சமாச்சாரத்தை ஆங்கிலத்தில் FOC  (Flag of Convenience) என்று அழைப்பார்கள். அதை சுமாராக தமிழ்ப்படுத்தினால், ‘வசதிக்கேற்றபடி நாடுகளின் கொடிகளை உபயோகித்துக் கொள்வது’ என்பது போன்ற ஒரு அர்த்தம் வரும்.
அட… இது ஏதோ ‘கொடி’ச் சமாச்சாரம்தானே என்று நினைத்துவிடாதீர்கள். இது அதைவிடப் பெரிய விஷயம். காரணம் இங்கு கூறப்படும் கொடிகள் பயன்படுத்தப்படும் இடம் எது தெரியுமா? கப்பல்கள்!

கப்பல் சம்மந்தப்பட்ட தில்லுமுல்லுகள் முழுவதும் நடைபெறுவது இந்த வகையில்தான். இதில் புழங்கும் மில்லியன் கணக்கான பணம் மலைப்பை ஏற்படுத்தக் கூடியது. கடத்தல் செய்யும் கப்பல்களிடம் சில நாடுகள் பணம் வாங்கிக் கொண்டு, தமது நாட்டுக் கொடிகளைப் பறக்கவிட அனுமதி கொடுக்கும் விவகாரமும் இதுதான்!
இதில் மற்றுமோர் வேடிக்கை என்னவென்றால், சில நாடுகளில் ரிஜிஸ்தர் செய்யப்பட்டு, அந்த நாடுகளின் கொடிகளுடன் நடமாடும் சில கப்பல்கள், ரிஜிஸ்தர் செய்யப்பட்ட நாட்டின் எந்தவொரு துறைமுகத்துக்குமே போயிராத சம்பவங்களும் உண்டு.
அதாவது, கப்பலின் உரிமையாளர் அந்த நாட்டவரல்ல. மாலுமிகள் அந்த நாட்டவர்களல்ல. கப்பல் இயக்கப்படுவதும் அந்த நாட்டில் இருந்தல்ல. அதில் அனுப்பப்படும் பொருட்கள் போவதும் அந்த நாட்டுக்கல்ல. ஆனால் அந்த நாட்டின் கொடி, கப்பலில் பறக்கும்! சட்டரீதியாக!!
இதை சின்ன நாடுகள் ஏன் செய்கின்றன என்றால், முதலில் இதன் மூலம் கிடைக்கும் பணம். இரண்டாவது அரசியல் காரணங்கள்.
இரண்டுக்குமே அருமையான உதாரணம் வேண்டுமா? கம்போடிய கப்பல் கார்ப்பரேஷனை எடுத்துக் கொள்ளலாம். ஒரு காலத்தில் கம்போடியாவில் கப்பல் பதிவுகளை கையாண்ட அமைப்பு இதுதான்!
கம்போடியா ஏன்? காரணம் இருக்கிறது. உலகிலேயே மிகவும் நிழலான சமாச்சாரங்களை கொண்டு செல்லும் கப்பல்கள் பலவற்றில் பறப்பது கம்போடிய நாட்டுக் கொடி. சொல்வது நாங்கள் அல்ல. சி.ஐ.ஏ.யின் அறிக்கை ஒன்று சொல்கிறது.
கம்போடிய ரிஜிஸ்ட்ரேஷனில் மற்றுமோர் வசதியும் உண்டு. கப்பல் பதிவு செய்வதற்காக கம்போடியா வரை போகக்கூடத் தேவையில்லை. ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். 24 மணி நேரத்துக்குள் பதிவு முடிந்து, லைசன்ஸ் வந்துவிடும்!
FOC மூலம் காசு சம்பாதிக்கலாம் என்பதைப் புரிந்துகொண்டு, கம்போடியா அரசு தமது கப்பல் கார்ப்பரேஷனை ஊருவாக்கியது 1994ம் ஆண்டில். இந்த நிறுவனத்தின் பிரதான அலுவலகம் கம்போடியாவின் தலைநகரில் இருந்திருக்கும் என்று எதிர்பார்ப்பீர்கள் இல்லையா?
அதுதான் இல்லை. பிரதான அலுவலகம் அமைந்திருந்தது சிங்கப்பூரில்.
1994ல் அலுவலகம் திறக்கப்பட்டவுடன் வியாபாரம் ஓகோ என்று இருக்கவில்லை. முதலாவது வருடத்தில் வெறும் 16 கப்பல்களே கம்போடியாவில் ரிஜிஸ்தார் பண்ணப்பட்டன. பல கப்பல் நிறுவனங்களுக்கு கம்போடிய ரிஜிஸ்ட்ரேஷன் என்பது கொஞ்சம் சந்தேகத்துக்குரிய விஷயமாகவே இருந்தது.
இருந்தாலும். நிழலான காரியங்களைச் செய்யும் கப்பல் நிறுவனங்கள், கம்போடியா என்னதான் செய்கின்றது என்பதைக் கவனித்துக் கொண்டிருந்தன .
இப்படியான நிலையில் கம்போடியாவின் அன்றைய போக்குவரத்து அமைச்சர் அஹ்மட் யாயா, கம்போடியாவில் ரெஜிஸ்தார் பண்ணப்படும் கப்பல்கள் பற்றி பேட்டி ஒன்று கொடுத்தார். அதைக்கேட்ட பின்னர்தான் பல நிறுவனங்கள் கம்போடியாவை நோக்கித் திரும்பின.
“கம்போடியாவில் பதிவு செய்யப்படும் கப்பல்களின் நிஜமான உரிமையாளர்கள் யார் என்பது எங்களுக்கு (கம்போடிய அரசுக்கு) தெரியாது. தெரிந்து கொள்வதில் எங்களுக்கு அக்கறையும் இல்லை. கம்போடியக் கொடியுடன் செல்லும் கப்பல்கள் செய்வது ‘வெள்ளை’ வியாபாரமா, ‘கறுப்பு’ வியாபாரமா என்பதில் எங்களுக்கு கவலையும் இல்லை. அவர்கள் என்ன வியாபாரம் வேண்டுமானாலும் செய்யலாம் – கம்போடிய நாட்டுக் கொடியுடன்” என்பதுதான் பேட்டியின் சாராம்சம்.
இங்கு ‘கறுப்பு’ வியாபாரம் (Black Business) என்பது, கப்பல் பரிபாஷையில் கடத்தலுக்கு கௌரவமான ஒரு பெயர்!
பேட்டி வெளியாகிய பின்னர் பல கப்பல் நிறுவனங்கள் கம்போடியா பக்கம் பார்வையைச் செலுத்தின.
இந்த நிலையில்தான், 2001ம் ஆண்டு செப்டெம்பர் 11ல் அமெரிக்கா மீதான தாக்குதலை அல்-காய்தா நடாத்தியது. அந்த தாக்குதலுடன், தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்புகள் மீதான கண்காணிப்பை இறுக்கியது அமெரிக்கா.
தீவிரவாத நடவடிக்கைகளுக்கான ஆயுதங்களில் பெரும்பாலானவை கப்பல்கள் மூலமாகவே செல்வது சி.ஐ.ஏ.க்கு நன்றாகவே தெரியும். இதனால், நிழலான கப்பல் நடமாட்டங்களில் அதிக கவனம் செலுத்த தொடங்கியது அமெரிக்கா.
2002ம் ஆண்டு, “எங்களது நாட்டில் பதிவாகியுள்ள கப்பல்களின் எண்ணிக்கை சுமார் 600” என்றது கம்போடியா. சி.ஐ.ஏ., “கம்போடியாவில் இந்த எண்ணிக்கையின் இரண்டு மடங்கு கப்பல்கள் பதிவாகியிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம்” என்று அறிவித்தது.
சி.ஐ.ஏ. சந்தேகம் கிளப்பியபின், தமது நாட்டில் எத்தனை கப்பல்கள் பதிவாகின்றன என்ற எண்ணிக்கையை இன்றுவரை கம்போடியா வெளியிடுவதில்லை.
சுமார் 2000 கப்பல்கள் கம்போடியக் கொடியுடன் உலகம் முழுவதிலும் இயங்கிக் கொண்டிருக்கலாம் என்கின்றது லாயிட்ஸ் கப்பல் அமைப்பு. இதுகூட ஒரு குத்துமதிப்பான கணக்குதான்!
ஆரம்பத்தில் கம்போடியக் கொடியுடன் உலாவிய கப்பல்கள் சிகரெட் கடத்தல்களில் ஈடுபட்டன. அல்பானியா கடல் பகுதிகளில் இந்தக் கடத்தல்கள் அதிகமாக நடைபெற்றன.
அதன்பின், ஈராக் மீது எண்ணை ஏற்றுமதிக்கான தடை விதிக்கப்பட்டபோது, ஈராக்கில் இருந்து எண்ணைக் கடத்தலுக்கு உபயோகிக்கப்பட்ட கப்பல்களும், கம்போடியக் கொடியுடன் சென்ற கப்பல்கள்தான்.
அதன்பின் ஆட்கடத்தல். நூற்றுக்கணக்கான சீனர்களை ஏற்றிக் கொண்டு கனடா செல்லமுயன்ற கப்பல் ஒன்று ஜப்பானுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் அகப்பட்டது. அதில் பறந்ததுப் கம்போடியக் கொடிதான்.
அதன் பின்னர், போதைப் பொருள் கடத்தல். லண்டன் கார்டியன் பத்திரிகையில் வெளியாகிய கட்டுரை ஒன்றின்படி, போதைப் பொருள் கடத்தலுக்காக 45 கம்போடியக் கப்பல்கள் தடுத்து வைக்கப்பட்டன. 9 கம்போடியக் கப்பல்கள் ஐரோப்பியத் துறைமுகம் எதிலும் நங்கூரமிட முடியாது என்று தடை செய்யப்பட்டன.
“ஆனால், இந்த 9 கப்பல்களுமே இலகுவாக வேறு ஒரு பெயரில் பதிவு செய்யப்பட்டு, கப்பலில் எழுதப்பட்டுள்ள பெயரை மாற்றிவிட்டால் போதும். அதன் பிறகு அவர்களைத் தடுக்க முடியாது” என்கிறார், லாயிட்ஸ் கப்பல் அமைப்பின் உளவுத்துறை (ஆம்! அவர்களிடமும் ஒரு உளவுத்துறை இருக்கிறது – LSIS – Lloyds Shipping Intelligence Service என்ற பெயரில்) பேச்சாளர் ரிக் க்ளோசல்.
இதன்பின் கம்போடிய பதிவு கப்பல்கள் சில செய்யத் தொடங்கியதுதான், ஆயுதக் கடத்தல்.
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காக சர்வதேச சந்தையில் வாங்கப்பட்ட ஆயுதங்களின் சில ஷிப்மென்ட்கள் ஸ்ரீலங்கா வரை வந்து சேர்ந்ததில், கம்போடிய கொடி பறந்த கப்பல்களுக்கு முக்கிய பங்கு இருந்தது.
கம்போடிய கப்பல் கார்ப்பரேஷனில் பதிவு செய்யப்பட்ட ஆயுதக் கடத்தல்கள்தான், அமெரிக்கா உட்பட பெரிய நாடுகள் சிலவற்றை மிரள வைத்தது! இதை இப்படியே விட்டுவிட கூடாது என்ற முடிவு அமெரிக்காவால் எடுக்கப்பட்டது.
2002ன் இறுதியில், அமெரிக்காவும், தென்கொரியாவும், கம்போடிய கப்பல் கார்ப்பரேஷனை தமது உளவுத்துறைகளின் கண்காணிப்புக்குள் கொண்டுவந்தன.
கிட்டத்தட்ட இதே காலப்பகுதியில், விடுதலைப் புலிகள் அமைப்பு (யுத்த நிறுத்த காலத்தில்) ஆயுதங்களை வாங்கிக் கொண்டிருந்தது. ஆனால், சர்வதேச கப்பல் நடமாட்டங்கள் தொடர்பாக அமெரிக்க நிலைப்பாடு, 2001ம் ஆண்டு செப்டெம்பருடன் தலைகீழாக மாறுகின்றது என்ற விஷயத்தை சரியாக புரிந்து கொள்ளாமல், தமது ஆயுத சப்ளை செயினில் இருந்த அனுபவசாலிகளான பழைய ஆட்களை விலக்கி வைத்துவிட்டு, புதிய ஆட்களை வைத்து ஆயுத சப்ளையை தொடங்கியது.
புலிகளின் புதிய ஆட்கள், சர்வதேச கப்பல் இன்டஸ்ட்ரியுடன் நெருங்கிய தொடர்பு அற்றவர்கள். தந்திரமாகச் செய்யப்பட வேண்டிய கப்பல் டீலிங்குகள் பற்றி, In-N-Out தெரியாக கத்துக்குட்டிகள்.
இப்படியான ஆட்கள் இன்டஸ்ட்ரிக்குள் வந்தது, ஆயுதக் கடத்தல் பற்றி ஆராயத் தொடங்கியிருந்த வெளிநாட்டு உளவுத் துறைகளுக்கு வசதியாகப் போனது. காரணம், இவர்கள் டீல் பண்ணிய இடமெல்லாம், அனுபவம் இன்மையால் தடயங்களை விட்டுக்கொண்டே போனார்கள். சுலபமாக அகப்பட்டார்கள்.
இவர்கள் அகப்பட்டதன் காரணம், கிட்டத்தட்ட அதே காலப்பகுதியில்தான், கடல்வழி ஆயுதக் கடத்தல் தொடர்பான உளவு திரட்டலில் தமது பெரிய ஆபரேஷனை ஆரம்பித்திருந்தது சி.ஐ.ஏ.
“பல வடகொரியக் கப்பல்கள் கம்போடியக் கொடியுடன் நடமாடத் தொடங்கியபோதுதான், சி.ஐ.ஏ.யும் தென்கொரிய உளவுத்துறையும் விழித்துக் கொண்டன. தென்கிழக்காசியக் கடற்பிராந்தியத்தில் ஒரே மாதத்தில் குறைந்த பட்சம் 12 வடகொரியக் கப்பல்கள் தங்களது கொடிகளை கம்போடியக் கொடிகளுக்கு மாற்றிக் கொண்டன” என்கிறார் மைக்கல் ரிச்சட்சன். இவர், ‘உலக வர்த்தகத்தின் டைம்பாம்’ என்ற பிரபல நூலின் ஆசிரியர்.
கம்போடிய அரசகுடும்பத்தினர், வடகொரியத் தலைமையுடன் நெருங்கிட தொடர்பு வைத்திருந்தது ஒன்றும் பரம ரகசியமல்ல. இப்போதுகூட தொடர்பு வைத்திருக்கிறார்கள். கம்போடிய மன்னர் நொரொடொம் சினமொனி, வடகொரியாவின் தீவிர அனுதாபியாக இருந்தவர்.
கம்போடிய அரச குடும்பத்துக்கு எதிரான கிளர்ச்சி கம்போடியாவில் ஏற்பட்டபோது, அரச குடும்பத்தை பத்திரமாக கம்போடியாவைவிட்டு அப்புறப்படுத்தியது வடகொரிய ராணுவம்தான். அப்போது வடகொரிய படைப்பிரிவு ஒன்று வந்து கம்போடிய அரச குடும்பத்தை பத்திரமாக வடகொரியாவுக்கு அழைத்து சென்றார்கள்.
வடகொரியத் தலைநகர் யொங் யாங்குக்கு அருகே, 60 அறைகளையுடைய மாளிகை ஒன்றை கம்போடிய அரசகுடும்பத்துக்காக அமைத்துக் கொடுத்தார் வடகொரியத் தலைவர் கிம் II சங்.
கிளர்ச்சி ஒடுக்கப்பட்டு, கம்போடிய அரசகுடும்பம் நாடு திரும்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது, கம்போடிய அரச குடும்பத்தினருடன் அவர்களது பாதுகாப்புக்காக வடகொரிய படைப்பிரிவு ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டது.
வடகொரிய மெய்ப்பாதுகாவலர்கள் கம்போடிய மன்னருக்கு நியமிக்கப்பட்டார்கள். அத்துடன் கம்போடிய மன்னருக்கு அரசியல் ஆலோசனை தெரிவிக்க, வடகொரிய ராஜதந்திரிகளும் கம்போடியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இந்த நடவடிக்கைகளில் எல்லாம், அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. ஒரு கண் வைத்திருந்தது. ஆனால், இவை அரசியல் விளையாட்டுகள். கப்பல் விளையாட்டு அல்ல.
கப்பல் விளையாட்டு மீது சி.ஐ.ஏ. க்கு சந்தேகம் ஏற்பட்டது எப்போதென்றால், லிம்-இன்-யொங் என்பவர் கம்போடிய கப்பல் கார்ப்பரேஷனின் பிரதான பங்குதாரராக நியமிக்கப்பட்டபோதுதான்! காரணம், இந்த லிம்-இன்-பொங், கம்போடியாவில் உள்ள வடகொரியத் தூதரகத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிந்த ராஜதந்திரி.
“இவர் கம்போடிய கப்பல் கூட்டுத்தாபனத்தில் தனிப்பட்ட நபராகவே சேர்க்கப்பட்டிருக்கிறார். வடகொரியப் பிரதிநிதியாக அல்ல” என்ற அறிவிப்பு கம்போடிய அரசினால் செய்யப்பட்டது.
அதை சி.ஐ.ஏ. நம்பத் தயாராக இல்லை.
சி.ஐ.ஏ. தம்மை நெருக்கமாக கண்காணிப்பதை புரிந்து கொண்ட கம்போடிய அரசு, சி.ஐ.ஏ.யை திசை திருப்ப ஒரு தந்திரம் செய்தது.
‘வின்னர்’ என்ற கிரேக்க கப்பல், கம்போடியாவில் பதிவு செய்து, கம்போடியக் கொடியுடன் கடலில் நடமாடி கொண்டிருந்தது. இந்தக்கப்பல் போதைப் பொருள் கடத்தும் கப்பல் என்பது கம்போடிய அரசுக்கும் ஏற்கனவே தெரிந்திருந்தது.
2002ம் ஆண்டில் மேற்படி கப்பல் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டபோது, அந்தத் தகவலை பிரான்சின் உளவுத்துறைக்குக் கசியவிட்டது கம்போடியா.
பிரான்சின் கடற்படை ‘வின்னர்’ கப்பலை நடுக்கடலில் வழிமறித்தது. பலவந்தமாக அருகிலுள்ள துறைமுகம் ஒன்றுக்கு கொண்டு போனது. பிரான்சின் வெளியுறவு அமைச்சு, “வின்னர் கப்பலை பிரென்ச் அதிகாரிகள் சோதனை செய்ய அனுமதிக்க வேண்டும்” என்று கம்போடிய அரசுக்கு அவசரத் தகவல் ஒன்றை அனுப்பியது.
இந்த அவசர வேண்டுகோளுக்கு, ஆச்சரியகரமாக உடனே பதில் வந்தது.
“எமது நாட்டு கொடியுடன் செல்லும் ‘வின்னர்’ கப்பலை, பிரென்ச் அதிகாரிகள் தாராளமாகச் சோதனையிடலாம் ” என்ற அனுமதி கம்போடியப் பிரதமர் ஹூன்-சென்னின் கையொப்பத்துடன் வந்து சேர்ந்தது.
‘வின்னர்’ கப்பலில் சோதனை நடாத்தப்பட்டது. பெருமளவு போதைப் பொருட்கள் அகப்பட்டன.
இதன் மூலம், கடத்தலுக்கு கம்போடிய கப்பல் கார்ப்பரேஷன் துணைபோவதில்லை என்று வெளியுலகுக்குக் காட்டிக்கொண்டது கம்போடியா. ஆனால் உள்ளே வேறு ஒரு திட்டம் இருந்தது.
அந்த திட்டம், ஒரு அறிவிப்பு வாயிலாக தொடங்கியது. “இனி வெளிநாட்டுக் கப்பல்களை கம்போடியாவில் பதிவு செய்வதில்லை” என்பதுதான் அந்த அறிவிப்பு.
இதில் ஒரு முக்கிய விஷயம், இந்த நடைமுறை புதிய கப்பல்களுக்குத்தான்! ஏற்கனவே கம்போடியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல்களை இந்த அறிவிப்பு பாதிக்காது. மேலும், புதிதாகப் பதிவு செய்யப்படும் கப்பல்கள் பற்றிய விபரங்களை கம்போடியா முன்வந்து வெளியே தெரிவித்தால்தான் வெளியுலகுக்குத் தெரியவரும்.
அதாவது, கம்போடியா நினைத்தால் ஓசைப்படாமல் புதிய கப்பல்களை, பழைய பெயர்களில் பதிவு செய்து விடலாம்!
இது நடைபெற்ற அடுத்த வருடம், 2003ல் வடகொரியக் கப்பலான பொங்-சூ வடகொரியாவில் இருந்து புறப்பட்டது. புறப்படும் போது கப்பலில் வடகொரியக் கொடி இருந்தது.
கப்பல் கடலில் சென்று கொண்டிருந்த போதே நடுக்கடலில் வைத்துப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புதிய பெயரான ‘குவுலு’ என்ற பெயர் கப்பலில் பெயின்ட் செய்யப்பட்டு, அதன்பின் சிங்கப்பூர் போய்ச் சேர்ந்தது. அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்வதுதான் கப்பலின் பாதை.
கப்பல் ஆஸ்திரேலிய கடல் எல்லையை அடைந்தபோது, சுங்க அதிகாரிகளிடம் அகப்பட்டுக் கொண்டது. கப்பல் சோதனையிடப்பட்டது. இதில் பெருமளவு போதைப் பொருட்கள் அகப்பட்டன.
சுமார் 1 வருடகாலமாக அமுங்கிப் போயிருந்த ‘கொடி மாற்றும்’ விளையாட்டு முழுமையாக முடிந்து போய்விட வில்லை என்பது இதன் மூலம் தெரிந்தது. சி.ஐ.ஏ. மீண்டும் வடகொரியக் கப்பல்களையும், கம்போடியப் பதிவுக் கப்பல்களையும் கண்காணிக்கத் தொடங்கியது.
இதற்கிடையே கம்போடியாவில் பதிவு செய்யப்பட்ட மற்றுமோர் வடகொரியக் கப்பலான சொங்-சாங் வடகொரியத் துறைமுகம் ஒன்றிலிருந்து கம்போடியக் கொடியுடன் புறப்பட்டது.
இந்தக் கப்பல்மீது அமெரிக்க உளவுத்துறைக்கு ஏற்கனவே சந்தேகம் ஏற்பட்டிருந்தது. அதனால் கப்பல் வடகொரியத் துறைமுகத்தில் இருந்து புறப்படும் போதே சட்டலைட் மூலமாக கப்பலை உளவு பார்க்கத் தொடங்கியது சி.ஐ.ஏ.
சட்டலைட் உளவு பார்த்தலைவிட மேலதிகமாக, தென்கிழக்காசியப் பிராந்தியத்தில் இருந்த அமெரிக்கக் கப்பல்களின் ராடார்கள் மூலமாகவும், சொங்-சாங் கப்பலின் நகர்வுகள் அவதானிக்கப்பட்டன. சொங்-சாங் கப்பல் நகர்ந்து இந்து சமுத்திரம் பிராந்தியத்துக்கு வந்தபோது, அமெரிக்க மற்றும் ஸ்பானிஷ் கடற்படையினர் கப்பலைச் சூழ்ந்து கொண்டார்கள்.
ஆனால் அவர்களுக்கு அங்கே ஒரு குழப்பம் காத்திருந்தது.
இவர்கள் பிடிக்கச் சென்ற கப்பல் சொங்-சாங் என்ற பெயருடன் வரவேண்டும். ஆனால் ராடார் மூலம் தெரியவந்த நகர்வுகளை வைத்து சுற்றி வழைக்கப்பட்ட கப்பலின் பெயர் சொ-சான்.
சர்வதேசப் பதிவு ரெஜிஸ்ட்ரி மூலமாக இந்தக் கப்பலும் கம்போடியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல் என்பதும், அதன் ஆவணங்களில் இருந்து இந்தக் கப்பல் ஏமான் நாட்டுக்கு சீமெந்து ஏற்றிச் செல்லும் கப்பல் என்றும் கப்பலைச் சூழ்ந்து கொண்ட அமெரிக்க, ஸ்பானிஷ் கடற்படை அதிகாரிகள் தெரிந்து கொண்டனர்.
அப்படியானால் சொங்-சாங் கப்பல் எங்கே?
இருந்த போதிலும், சொ-சான் கப்பலை சோதனை செய்வது என்று முடிவெடுத்த கடற்படையினர், கப்பலைச் சோதனையிட்ட போது, கப்பலில் நிஜமாகவே சீமெந்து இருப்பது தெரிந்தது. தொடர்ந்தும் தேடியபோதே அகப்பட்டது ‘புதையல்’
சீமெந்துக்குக் கீழே, 15 ஸ்கட் வகை ஏவுகனைகள், 15 வார்-ஹெட்கள், 23 பாரல்களில் நைட்சிக் அசிட் ரொக்கட் புரொப்பலன்ட், மற்றும் 85 ட்ரம்களில் வேறு ரசாயனப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பின்னர்தான் பெயர் மாறியது எப்படியென்ற விஷயம் புரியவந்தது.
கப்பல் புறப்பட்டபோது இருந்து SONG-SANG என்ற பெயரில் முதல் பகுதியில் உள்ள கடைசி இரண்டு எழுத்துக்களையும் கடைசிப் பகுதியிலுள்ள கடைசி எழுத்தையும் அழித்து SO-SAN என்று மாற்றியிருந்தார்கள்.
இந்தக் கப்பல் அகப்பட்ட விஷயம், கம்போடிய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி விட்டது. உடனே மற்றொரு காரியத்தைச் செய்தார்கள் அவர்கள்.
வெளிநாட்டுக் கப்பல்களை பதிவு செய்யும் அதிகாரத்தை கம்போடிய கப்பல் கார்ப்பரேஷனிடம் இருந்து அகற்றினார்கள். பதிவு செய்யும் அதிகாரத்தை கொடுப்பதற்காக புதிய அரசு அமைப்பு ஒன்றை உருவாக்கினார்கள்.
அந்த அமைப்புதான், ISRC (International Ship Registry of Cambodia)
இந்த அமைப்பின் அலுவலகங்கள் கம்போடியாவிலும், தென்கொரிய நகரமான பூசானிலும் (ஆம்! வட கொரியாவின் எதிரியான தென்கொரியாவில்!) இயங்குகின்றன. இதையடுத்து வடகொரியா புதிய கூட்டாளி ஒருவரைத் தேடவேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்த வகையில் வடகொரியா இப்போது ஓசைப்படாமல் பிடித்த கூட்டாளி மங்கோலியா. வட கொரியாவின் சில கப்பல்கள் மங்கோலியாவின் கொடியுடன் நடமாடத் தொடங்கின. வட கொரியா ரகசியமாக சப்ளை செய்த ஆயுதங்கள் மங்கோலிய கொடி பறந்த கப்பல்களில் கடத்தப்படத் தொடங்கின.
இந்தக் கடல் விளையாட்டில் அமெரிக்காவின் நடத்தைதான் வெவ்வேறு முகங்களைக் கொண்டது!
கொள்கையளவில் வடகொரிய ஆயுதங்கள் மற்றய நாடுகளுக்கு கடத்தப்படுவதை அமெரிக்கா எதிர்க்கிறது. ஆனால் அது கொள்கையளவில்தான். நடைமுறையில் கதை வேறு.
கடத்தப்படும் ஆயுதங்கள் போய்ச் சேருமிடம் தங்களுக்கு பிரச்சனையில்லாத இடம் என்றாலோ அல்லது, தங்களுக்கு வேண்டப்பட்ட இடமென்றாலோ அமெரிக்கா கண்டுகொள்ளாமல் விட்டுவிடும்.
உதாரணம் வேண்டுமா?
நாங்கள் ஏற்கனவே கூறிய சொங்-சாங் கப்பலில் ஸ்கட் ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் இருந்தன அல்லவா, அவை அமெரிக்காவின் மறைமுக ஆசி பெற்ற ஏமன் நாட்டுக்குப் போகின்றன என்பது தெரிய வந்தவுடன், அவற்றைப் பறிமுதல் செய்யாமல் கப்பலை போகவிட்டது அமெரிக்க கடற்படை.
வேறு சில கப்பல்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் போகின்றன என்பது தெரியவந்தவுடன், அமெரிக்கா என்ன செய்தது என்பது உங்களுக்கே தெரியும்.

Comments

Popular posts from this blog

[RG] Horror movies

107.John Wayne GACY Jr.

30. SERIAL KILLERS AND ASTROLOGY