ஒரு உத்தம தினம் -III



மண்டபத்தின் அருகில் மர அடர்த்தியின் கரும் பச்சை நிழலில் ஒரு பெஞ்ச் காலியாக இருக்க, அதில் அவள் உட்கார்ந்துகொள்ள அவள் மடி மேல் தலைவைத்து,
”ஜென்னி கிஸ்ட் மீ படிக்கட்டுமா?”
”படிங்க.”
”ஜென்னி என்னை முத்தமிட்டாள் சட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்து வந்து! காலம் என்னும் கள்ளனே! உன் பட்டியலில் எத்தனையோ இனிய விஷயங்களைச் சேர்த்துக்கொள்ள விரும்புகிறாயே, இதையும் சேர்த்துக்கொள். நான் களைத்திருக்கிறேன் என்று சொல். நான் சோகமாக இருக்கிறேன் என்று சொல். ஏழை என்று சொல். உடல் நலமில்லை என்று சொல். வயசாகிக் கொண்டிருக்கிறேன் என்று சொல். ஆனால், ஜென்னி என்னை முத்தமிட்டாள் என்பதையும் சொல்.”
பிற்பகலின் அமைதியில் தூரத்தில் நகரத்தின் சந்தடி கேட்க மடி மேல் கணவனை அமைதியாக அழுத்திக்கொண்டு அவன் முகத்தையே ஒரு மணி நேரம் பார்த்துக்கொண்டு இருந்தாள். நிச்சயம் இன்றைக்குத்தான் நிகழ்ந்திருக்கிறது!
இரண்டு நாளுக்காக மெத்தென்ற பெட்டியில் அவன் சூட், வெள்ளை வெளேர் சட்டைகள், அவன் மாத்திரைகள், ஷேவிங் சாதனங்கள், ஆஃப்டர் ஷேவ் லோஷன், தங்க விளிம்பிட்ட சீப்பு, ஆண் பிள்ளை கர்ச்சீப், அவன் ஃபைல்கள் எல்லாவற்றையும் அடுக்கிவைக்கையில், குறும்பாகத் தன்னுடைய ‘ப்ரா’ ஒன்றையும் இடையில் செருகி மூடினாள்.
பம்பாய் ஃப்ளைட் எட்டரைக்குத்தான் கிளம்பும் என்றார்கள். பேப்பர் கப்பில் சத்தீஷுடன் காபி சாப்பிட்டுவிட்டு இருவரும் புத்தகம் பார்த்தார்கள். ஏர்போர்ட் ஜனங்களை வேடிக்கை பார்த்தார்கள். குல்லாயும், தொப்பியும், குங்குமமும், இடது பக்கம் ஸாரியும், அரசியலும், சூட்டும் கோட்டும், வெற்றியும், சவரம் செய்த பச்சை முகங்களும், நாசூக்கான அழுகைகளும்…
”நான் களைத்திருக்கிறேன் என்று சொல், ஏழை என்று சொல், உடல் நலமில்லை என்று சொல், வயசாகிக்கொண்டிருக்கிறேன் என்று சொல், சத்தீஷ் என்னை முத்தமிட்டான் என்பதையும் சொல்.”
செக்யூரிட்டி கேட்டில் நுழையுமுன் சத்தீஷ் திரும்பிக் காற்றில் ‘கேஸி’ என்று வரைந்துகாட்ட, அதன் அந்தரங்க அர்த்தம் அவள் கன்னங்களில் ரத்தம் பாய, கண்ணாடிக்குப் பின்னாலிருந்து சின்னதாக நாலு விரல் டாட்டா காட்டிவிட்டு மறைந்தான்.
மாருதியை பேஸ்மென்ட்டில் நிறுத்திவிட்டு, கதவைத் தன் சாவியால் திறந்து உள்ளே வந்து உடை மாற்றி, படுக்கையறைக்குச் சென்று, பசியின்றி ஒரு சாண்ட்விச் தயாரித்து, ‘விசிஆரை’ இணைத்து, கல்யாண கேஸட்டை நுழைத்து, ரிமோட் கன்ட்ரோலை எடுத்து, மூன்று தலையணைகள் அமைத்து, விளக்கைத் தணித்துவிட்டு, ‘ப்ளே’ பொத்தானை அழுத்தினாள்.
எதிரே டெலிவிஷன் திரையில் மறுபடி சத்தீஷைக் கல்யாணம் செய்துகொள்ள ஆரம்பித்தாள். சத்தீஷ் சின்னப் பையன் போல கன்னத்தில் மை, நெற்றியில் அலையும் தலைமயிர், மஞ்சள் சரிகை வேட்டியில் பஞ்சகச்சம், அசௌகரியத்தில் வாத்தியாரைக் கனவுக் கண்களுடன் பார்த்துக்கொண்டே, அவ்வப்போது சாஸ்திரத்துக்கு மந்திரம் சொல்ல, கண்கள் மையிட்ட கண்கள் அலைய சத்தீஷ் எவ்வளவு அழகாக இருக்கிறான்.
நெற்றியில் அம்மா அவனுக்குப் பொட்டு இடுகிறாள். அத்தை, சித்தி, தாரணி, பேபி அம்மா எல்லாரும் மஞ்சள் நீரை இறைத்துக்கொண்டே சுற்றிச் சுற்றி வருகிறார்கள். கால் அலம்பிப் பாய் மேல் வைக்கிறார்கள். சத்தீஷ் கட்டை விரலைப் பிடித்துப் படிப் படியாகச் சம்பந்தாசம்பந்தமில்லாமல் பேசுகிறான். என்னைவிட சத்தீஷ்தான் நெர்வஸ்.
கர்னலின் மடியில் உட்கார்ந்திருக்க என்னை நெற்றியில் எங்கோ பார்க்கிறான். தாலி கட்டிய பின் அம்மாவின் கண்களில் கண்ணீர். எல்லோருமே கட்டிப் பிடித்துக்கொண்டு, கை குலுக்கிக்கொண்டு, இது என்ன புது வழக்கம்?
ரிசப்ஷனில் ஜெயராமன் கச்சேரியில் சிமென்ட் கலர் சூட்டு போட்டு நிற்க, மத்தியானத்திலிருந்து ப்யூட்டீஷியன் எனக்குச் செய்த அலங்காரம் எனக்குப் பிடிக்கவே இல்லை. ஏதோ விக்ரமாதித்தன் பதுமை மாதிரி, அலுங்காமல் ஆயில் மேக் அப் என்று எண்ணெய் வழிந்துகொண்டு…
வீடியோ முடிந்து கீற்றல் வந்த பின்னும் சற்று நேரம் திரையையே பார்த்துக்கொண்டு இருந்தாள். பின் அணைத்தாள்.
”அன்புள்ள கடவுளே, நான் உனக்கு எப்படி இந்த மகத்தான, உத்தமமான தினத்துக்கு வந்தனம் சொல்ல வேண்டும்? ஏன் இத்தனை சந்தோஷம்? ஏன் இத்தனை வெளிச்சம்? ஏன் இத்தனை உற்சா கம்? ஏன் இப்படி ஒரு ஸ்படிக சுத்தமான தினம்? தயவுசெய்து இதற்கு மேல் சந்தோஷம் தராதே. தாங்காது. எனக்கு இது போதும். இது போதும்!”
கஸ்தூரி தூங்கிப் போய்ப் பத்து நிமிஷத்தில் டெலிபோன் ஒலித்தது! 

Comments

Popular posts from this blog

Working Torrent Trackers list updated Oct 2016...

C Language ---(E)Programming Interview Questions----3

Xender for PC Windows Download : Fast File Transfers