லவகுசா - Lava Kusa 1

லவகுசா பகுதி-1



லவகுசா - Lava Kusa Story in Tamil-tn_173138000000.jpg


மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருந்தது அயோத்தி.மக்களெல்லாம் வண்ண வண்ண உடைகளில் தெருக்களில் பவனி வந்து கொண்டிருந்த காட்சி, விண்மீன்கள் கண்சிமிட்டும் வானத்தை ஒத்திருந்தது.எங்கள் ராமபிரான் பதவியேற்று விட்டார். இனி என்றும் எங்களுக்கு இன்பமே, என்று மக்கள் ஆரவாரமாகப் பேசிக்கொண்டிருந்தனர். ராமபிரானை தரிசிக்க காத்திருந்த மக்களை ஒழுங்குபடுத்துவதற்கு காவலர்களுக்கு அவசியமில்லாமல் போயிற்று. ஏனெனில், ராமராஜ்யம் தொடங்கி விட்டதல்லவா! ராமன் என்றாலே ஒழுக்கம் என்பது தானே பொருள். மக்கள் தாங்களே வரிசையை வகுத்துக்கொண்டு ஒழுங்குபட நின்றனர். வெளியே இப்படி என்றால், அரண்மனைக்குள் இன்னும் கோலாகலம். பட்டாபிஷேகம் காண வந்திருந்த பெண்கள் பயமின்றி நடமாடினர். சகோதரி! ராமராஜ்யம் துவங்கி விட்டது. இனி இரவு, பகல் என்ற வித்தியாசம் இங்கில்லை. நாம் எப்போது வேண்டுமானாலும், சிங்கங்கள் நிறைந்த காட்டிற்குள் கூட போகலாம். நம்மை ஏறிட்டு பார்க்கக்கூட ஆண்கள் தயங்குவார்கள். ஏனெனில், ராமராஜ்யத்தில் பண்பாடு என்பது ஊறிப்போனதாக ஆகிவிடும், என மகிழ்ச்சி பொங்க, ஒரு பெண், இன்னொருத்தியிடம் சொன்னாள். ஆம்...இயற்கை தானே! ராமபிரானின் தம்பி லட்சுமணன், தன் அண்ணனுக்கு திருமணமாகி இந்த நிமிடம் வரை, அண்ணியாரின் முகத்தை ஏறிட்டு பார்த்ததில்லை. இப்போதும், அவன் பட்டாபிராமன் முன்னால், கைகட்டி பவ்வியமாகத் தான் நின்று கொண்டிருந்தான். கோபக்காரன் தான்...மற்றவர்கள் முன்பு. அண்ணனையோ, அண்ணியாரின் திருப்பாதத்தையோ பார்த்துவிட்டால் பசுவைப் போல் ஒடுங்கி விடுவான். கோபமுள்ள இடத்தில் தானே குணம் இருக்கும்! அப்படிப்பட்ட தம்பியைப் போலவே தான் அயோத்தி வாழ் மக்களும், பெண்கள் விஷயத்தில் மிகுந்த அடக்கத்துடன் நடந்து கொண்டார்கள். மாமுனிவர், தமிழ்க்கடல் அகத்தியர் அங்கே வந்தார். ஸ்ரீராமனின் வெற்றிக்கு போர்க்களத்துக்கே வந்து அருளாசி செய்த மகான் அவர். ராமா! ராவணனை வெல்வோமா மாட்டோமா என சந்தேகம் கொள்ளாதே. இந்த உலகில் வெற்றி தரும் சூரிய மந்திரம் ஒன்று உள்ளது. அதை நான் உனக்குச் சொல்லித் தருகிறேன். அதைச் சொல், வெற்றி உன்பக்கம் தான், என்றவர் ஆதித்ய ஹ்ருதயம் எனப்படும் அந்த மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார். ராமன் சொன்னார், வென்றார்.


அந்த மரியாதைக்குரியவர் வந்ததும், அவையே அவையடக்கத்துடன் எழுந்து நின்று அவரை தலைபணிந்து தாழ் பணிந்து வரவேற்றது. ராமபிரானும், சீதாதேவியாரும் அந்த மாமுனிக்கு பாதஸ்நானம் செய்து, அந்த தீர்த்தத்தை தங்கள் தலையில் தெளித்து வரவேற்றனர். தங்க சிம்மாசனத்தில் அகத்தியர் அமர்ந்தார். ராமபிரான் அவரிடம், மாமுனியே! நான் பல அரக்கர்களை வனவாசத்தின் போது வென்றேன். அவர்களெல்லாம் யார்? அவர்களின் பிறப்பு என்ன? என்று கேட்டார். அகத்தியர் விலாவாரியாக அவற்றிற்கு விளக்கமளித்தார். ராமன் தன் அருகில் நின்ற அனுமானை அழைத்தார். முனிவரே! என் சீதாவை காட்டில் துறந்த வேளையில், எனக்காக வானரவீரர்கள் நாற்திசைகளிலும் சென்று தேடினர். தெற்கே சென்ற இந்த அனுமான் என்னைக் காப்பாற்றும் வகையிலான நற்செய்தி கொண்டு வந்தான். இறந்து போன வீரர்களை எழுப்ப மருந்துமாமலையைக் கொண்டு வா என்றால், வடக்கேயிருந்து அதை எடுத்து வர இவன் எடுத்துக்கொண்ட நேரம் ஒரு நாழிகை (24 நிமிடம்) தான். இது இவனால் எப்படி சாத்தியமாயிற்று? என்று கேட்டார். ராமா! மிகச்சரியானதொரு கேள்வி கேட்டாய். இந்த அனுமனின் சரித்திரம் அற்புதமானது. இவனது வரலாறு கேட்டாலே பாவங்கள் நசிந்து போகும். தன் சக்தியின் பெருமை இன்னதென அறியாதவன் இந்த ஆஞ்சநேயன். செருக்கற்றவன்; பிறர் நலம் விரும்புபவன்; கருணையும், சாந்தமும் இவனிடம் ஊறிப்போனவை. கருணை எங்கிருக்கிறதோ, அங்கே தான் வீரலட்சுமி குடியிருப்பாள். இவனது வீரம் அளவிட முடியாதது. சொல்கிறேன் கேள், என்றவர் அனுமானின் கதையை ஆரம்பித்தார். ராமா! காற்றுக்கு அதிபதியான வருணபகவான், அஞ்சனை என்ற இவனது அன்னை மீது ஆசை கொண்டான். அந்த அஞ்சனையின் வயிற்றில் இந்த அனுமன் பிறந்தான். இவன் பிறந்ததுமே, இவனுக்குரிய ஆற்றல் அதீதமாக இருந்தது கண்டு பெற்றவர்கள் ஆச்சரியமடைந்தனர், இந்த வீரனால் அரக்கர் குலம் அழியும் என தேவர்கள் ஆனந்தம் கொண்டனர்.


அவன் தன் இளம்பிராயத்தில், தன் தாயிடம், அம்மா! எனக்குரிய இனிய உணவு எது? என்று கேட்டான். மகனே! இந்த குளிர்ந்த சோலையில் எந்தக் கனியெல்லாம் சிவந்து போயிருக்கிறதோ, அதுவெல்லாம் உனக்குரியது தான் என்று சொல்லிவிட்டு இவனுக்காக பழம் பறிக்க வெளியே சென்று விட்டாள். அப்போது, வான்வெளியில் சூரியன் உதயமாக, அதை பழமெனக் கருதி இவன் மேலே பாய்ந்தான். வாயுவின் மகன் என்பதால், இவனுக்கு காற்றில் பறக்கும் சக்தி இயற்கையிலேயே வாய்த்தது. இப்படி சூரியனையே பழமாக நினைத்தவனுக்கு, இலங்கை ஒன்றும் பெரியகாரியமாக படவில்லை, என்றார் அகத்தியர். பின்னர் விபீஷணன், சுக்ரீவன், அனுமான், அங்கதன், சேது அணை கட்டிய நளன் உள்ளிட்ட பலருக்கும் பரிசுகளை வழங்கினார் ராமன். அனைவரும் ராமனைப் பிரிய மனமின்றி கண்ணீருடன் அவரவர் ஊர் திரும்பினர். அனுமான் ரொம்பவே கண்ணீர் வடித்து விட்டான். சுக்ரீவனின் நிலைமை கருதி, அவனுடேயே தங்கியிருக்க வேண்டும் என உத்தரவிட்ட ராமன், அனுமானை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். பின்னர் சீதாதேவியுடன் அந்தப்புரத்துக்குள் நுழைந்தார். அவருக்கு திருமணம் நடந்த போது வயது 12. சீதாவுக்கு 6 வயது. 18 வயதில், 12 வயது சீதாவுடன் காட்டுக்குப் போய் விட்டார். 32 வயதில் திரும்பியிருக்கிறார். சீதாவுக்கு இப்போது 26 வயது. இவர்கள் தங்கள் இளமையை காட்டில் கழித்து விட்டனர். அரண்மனை சுகத்தை அனுபவிக்க இப்போது தான் நேரம் வாய்த்திருக்கிறது. இன்ப வானில் அந்த தம்பதிகள் சிறகடித்துப் பறந்தனர். ஆனால், விதி என்னும் விரோதி அந்த இன்பத்தை நீண்டநாள் நீடிக்க விடவில்லை.


லவகுசா பகுதி-2


லவகுசா - Lava Kusa Story in Tamil-tn_173236000000.jpg


அன்று சீதாதேவி, ஸ்ரீராமனின் பேரழகை ரசித்துக்கொண்டிருந்தாள். கணவனின் அழகை ரசிப்பதில் பெண்களுக்கு பேரானந்தம் உண்டு. இத்தனைக்கும் ராமன் சியாமளவண்ணன். கரிய நிறமென்று சொல்வதற்கில்லை. கருமையிலும் ஒரு நீலம். இந்தக்காலத்தில் என்றால், பெண்கள் மாப்பிள்ளை கருப்பா என்று புள்ளி வைப்பார்கள். சீதாதேவி, ராமனுக்காகவே பிறந்தவள். அவளது தந்தை அவளுக்கு மாப்பிள்ளையாக ராமபிரானைக் கொண்டு வந்து நிறுத்திய போது, அவள் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நமது கம்பர் தான், நம் தமிழ்க்காதலின் சுவை கருதி, அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் என்று இருவருமே திருமணத்துக்கு முன் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டதாக அனுபவித்து எழுதியிருக்கிறார். ஆனால், வால்மீகி அப்படி சொல்லவில்லை. அவன் கால் பாதம் தான் அவளுக்குத் தெரியும். அந்த நீலவண்ணப் பாதங்களில் செந்தூரத்தால் போட்ட கோலம் தெரியும். திருமணமாகி அயோத்திக்கு வந்த பின்னர் தான் அவனது முகம் பார்த்து வெட்கத்தால் சிவந்தாளாம் அந்த சிவப்பழகி. இன்றைக்கும் கூட நமது கிராமங்களில் சிகப்பி என்று பெண்களுக்கு பெயர் வைப்பார்கள். அது வேறு யாருமல்ல. நம் சீதாதேவி தான். பூமாதேவியின் அம்சமான அவள், அத்தனை சிவப்பழகு, பேரழகு படைத்தவள். கொடிகள் அவளது இடையைக் கண்டு வெட்கப்பட்டு, முகம் நாணி, தலை குனிந்து, கொம்புகளுக்குள் வளைந்து வெட்கப்பட்டு கிடக்கும். சிவப்பழகு கொண்ட பெண்கள், கருத்த மாப்பிள்ளைகளை ஒதுக்கக்கூடாது. மனம் வெள்ளையாக இருக்கிறதா என்பதை விசாரித்து தெரிந்து கொண்டால் போதும் என்பது சீதாதேவி பெண்களுக்கு கற்றுத்தரும் பாடம். அவரருகே வந்தவள், ஸ்ரீராமா... என்று ஆரம்பித்து விட்டு நிறுத்தினாள். அவர் அவளது கைகளைப் பற்றி நெஞ்சத்தில் புதைத்து, அவளை தழுவியபடி, என்ன தேவி! சொல், என்றார்.


அன்பரே! என் மனதிலுள்ள ஆசையை நிறைவேற்றுவீர்களா?ராமன் சிரித்தார்.நாடாளும் ராணி நீ. இந்த பட்டத்தரசி சொல்வதைக் கேட்கத்தானே இந்த பட்டத்தரசனும், இந்த தேசமும், உன் மாமியார்களும், மைத்துனர்களும் இருக்கிறோம். மனதிலுள்ளதை தயங்காமல் சொல். அதிலும் நீ கர்ப்ப ஸ்திரீயாக இருக்கிறாய். கர்ப்பவதிகள் மனதில் எதையும் வைத்துக் கொள்ளக்கூடாது. தங்கள் விருப்பத்தை கணவனிடம் சொல்ல வேண்டும். கணவன் அதை நிறைவேற்றி வைக்க வேண்டும். சொல் சீதா, என்றார். ஸ்ரீராமா! எனக்கு மீண்டும் மகரிஷிகளை தரிசிக்க வேண்டுமென என் மனம் ஆசைப்படுகிறது. தாங்கள் ராஜ்ய பரிபாலனத்தில் இப்போது தான் கவனம் செலுத்த துவங்கியிருக்கிறீர்கள். எனவே, நான் மட்டும் சென்று வருகிறேன். ஒரே ஒரு நாள் தரிசனம் தான். நான் சென்று வருவதற்குரிய அனுமதியையும், அதற்குரிய ஏற்பாட்டையும் செய்து தாருங்கள், என்றாள். ராமர் கலகலவென சிரித்தார். இவ்வளவுதானா! இதற்கா மனம் சஞ்சலப்படுகிறது என்றாய். மகரிஷிகளை தரிசிப்பது என்பது நல்ல விஷயம் தானே! அதிலும், நீ கர்ப்பவதியாய் இருக்கிறாய். இந்நேரத்தில், உன் வயிற்றில் இருக்கும் நம் செல்வம், மகரிஷிகள் கூறும் மந்திரங்கள், நல்வார்த்தைகளைக் கேட்டால், மிகச்சிறந்தவனாக, தர்மத்தைக் கடைபிடிப்பவனாக பிறப்பானே! இதைச் சொல்லவா இவ்வளவு தயக்கம்! காட்டிற்கு போகிறோமோ என கவலை கொள்ளாதே. உன் மைத்துனன் லட்சுமணன், எதற்கு இருக்கிறான்? கோபக்கார பயல். அவனை உன்னோடு அனுப்பி வைக்கிறேன். அவன் தன்னைப் பெற்ற சுமித்திரையை தாயாக நினைக்கிறானோ இல்லையோ! உன்னை தாயாக நினைக்கிறான், என்றதும் சீதாவின் கண்களில் கண்ணீர் அரும்பியது. ஆம்...சுவாமி! தாங்கள் மாரீச மானைப் பிடிக்கச் சென்றதும், அவனைக் கடும் மொழிகளால் பேசினேன். அவன் கோபிக்கவில்லை. மாறாக, கண்ணீர் வடித்தான். அந்நிலையிலும் அவன் கோடு போட்டு நிற்கச் சொன்னான். அதையும் நான் மதிக்கவில்லை. அயோத்தியில் காட்டிற்கு நாம் கிளம்பிய போது, அவன் நம்மோடு கிளம்பினான். அப்போது, தன் மனைவி ஊர்மிளாவிடம், விடை பெறச்சென்றான்.


அந்த மாதரசி எந்த தடையும் சொல்லவில்லை. ஊர் உலகில் நடக்கிற காரியமா இது? எந்த மனைவியாவது தன் கணவனை, அவனது அண்ணனுக்கும், அண்ணன் மனைவிக்கும் துணையாக காட்டுக்கு 14 வருஷம் அனுப்புவாளா? அவள் அனுப்பி வைத்தாள். அந்த உத்தம பத்தினியை மனைவியாகப் பெற்ற அவன், என்னோடு வருவது சாலவும் தகும். ஆனால்... என்று இழுத்தவளிடம், ராமபிரான், என்ன ஆனால்... என்றார். சுவாமி! ஊர்மிளாவும் இப்போது கர்ப்பவதியாக இருக்கிறாள். அவள் அருகே அவன் இருக்க வேண்டாமா? அவனை ஏற்கனவே 14 ஆண்டுகள் மனைவியை விட்டு பிரித்து விட்டோம். இப்போது, அந்த கர்ப்பஸ்திரீயிடமிருந்தும் பிரிக்க வேண்டுமா? என்ற சீதாவைப் பார்த்து சிரித்தார் ராமன். சீதா! ஊர்மிளா யார்? உன் தங்கை. உன்னைப் போலவே உத்தமி. நீ காட்டிற்கு போகிறாய் எனத்தெரிந்தால், அவள் உடனே தன் கணவனை அனுப்பி வைப்பாள். இதற்கெல்லாம் கலங்காதே. மேலும், நீ என்ன அங்கே நீண்டகாலம் தங்கவா போகிறாய்? ரிஷி தரிசனத்தை முடித்து விட்டு கிளம்பப் போகிறாய். அவனும் உன்னோடு வந்துவிடுவான், என்றார். அயோத்தியில் பட்டாபிஷேகம் முடிந்ததோடு ராமாயணமும் முடிந்தது, ஸ்ரீராமனின் நல்லாட்சியில் மக்கள் மகிழ்ந்து வாழப் போகின்றனர். ராமசகோதரர்கள் தங்கள் மனைவியருடன் இல்லறத்தில் திளைத்து, நன்மக்களை உலகுக்கு தரப்போகின்றனர். இனி இவ்வுலகில் எல்லாம் ÷க்ஷமமே என நினைத்திருந்த வால்மீகி மகரிஷி திடீரென நிஷ்டை கலைந்து எழுந்தார். சீடர்கள், அவர் திடுக்கிட்டு எழுந்ததைக் கண்டு ஓடோடி வந்தனர். குருவே! என்னாயிற்று! தாங்கள் இப்படி பதைபதைப்பு காட்டி நாங்கள் பார்த்ததே இல்லையே! தங்கள் கண்களிலிருந்து சரம் சரமாய் கண்ணீர் கொட்டுகிறதே! ராமன் ஆளும் பூமியில் அபவாதம் ஏதும் நிகழ வாய்ப்பில்லையே சுவாமி! பின் ஏன் இந்த கலக்கம்? என்றனர் படபடப்புடன். அவர் அமைதியாகச் சொன்னார்.ராமாயணம் முடியவில்லை.

லவகுசா பகுதி-3


லவகுசா - Lava Kusa Story in Tamil-tn_173329000000.jpg


சீடர்கள் குழப்பமடைந்தனர். குருவே! ராமாயணம் தொடர்கிறது என்றால், திவ்யமான ராமநாமத்தை நாங்கள் இன்னும் உங்கள் வாயால் தொடர்ந்து கேட்கப்போகிறோம் என்றுதானே பொருள். இதில் தாங்கள் வருத்தப்படுவது பற்றி தான் எங்களுக்கு புரியவில்லை, என்றனர். சீடர்களிடம் வால்மீகி பதிலேதும் சொல்லவில்லை. அவரது ஞானதிருஷ்டியில், காட்டிற்கு வரப்போகும் சீதைக்கு ஆகப்போகும் நிலை தெரிந்தது. உம்...விதி வழி வாழ்வு. அவள் பூமாதேவியின் புத்திரி ஆயினும், அனுபவிக்க வேண்டியதை அனுபவித்துதானே ஆக வேண்டும். பொதுவாகவே, பொறுமைசாலிகளுக்கு தான் பூமியில் அதிக துன்பமே விளைகிறது என தனக்குள் சொல்லிக்கொண்டார். இந்த பூலோகத்தில் பிறந்தவர்களில் பொறுமைசாலிகளுக்கு துன்பம் அதிகமாக வருகிறது என்று வால்மீகி நினைத்தது இன்றுவரை கண்கூடாகத்தான் தெரிகிறது. இவ்வளவு பொறுமையாய் இருந்தும், நமக்கு இவ்வளவு சோதனையா என சில பொறுமைசாலிகள் சலித்துக் கொள்ளவும் கூடும். ஆனால், காரணமில்லாமல் காரியமில்லை. இந்த லோகத்தில் நம் முன்வினைப் பயனையெல்லாம் அனுபவித்து, மேலும் மேலும் பொறுமை காத்தால், அவ்வுலகில் சுகமான வாழ்வு வாழலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சீதையிடம் ராமன், சீதா! நீ நாளையே புறப்படலாம். உரிய ஏற்பாடுகளைச் செய்து விடுகிறேன், எனச்சொல்லி விட்டு, அரசவைக்குச் சென்றார். அவருக்கு வீட்டை விட நாட்டைப் பற்றிய கவலை அதிகம். மக்களுக்கு ஒரு சிறு கஷ்டம் கூட வந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். இதற்காக, பல ஒற்றர்களை நியமித்திருந்தார். மக்கள் என்ன பேசுகிறார்கள். அவர்களது தேவையென்ன, யாராவது வெறுப்பு கலந்த குரலில் பேசுகிறார்களா...இவை ஒற்றர்களிடம் அவரது அன்றாடக்கேள்விகள். ஒற்றர்கள் இதற்குரிய பதிலைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். விஜயன், பத்திரன், தந்தவக்கிரன், சுமகாதன், சுராஞ்சி, காளியன் ஆகியோர் ராமபிரானின் ஒற்றர்கள். நகைச்சுவை ததும்ப பேசுவதிலும் இவர்கள் கில்லாடிகள். இவர்கள் சொன்ன நகைச்சுவை கதைகளைக் கேட்டு ராமன் கலகலவென சிரித்துக் கொண்டிருந்தார்.


நகைச்சுவை வாழ்க்கைக்கு ஒரு நல்ல மருந்து. சிரிக்க சிரிக்க பேசத்தெரியவில்லையே என வருத்தப்படுபவர்கள் அதிகம். ஆனால், சிரிப்பதற்கு பழக்கம் தேவையில்லை. சிரிக்க சிரிக்க பேசுபவர்கள் அதிகம் இருந்தாலே போதும்! சிரிப்பு மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்குகிறது. மகிழ்ச்சியான மனநிலை சுறுசுறுப்பை உண்டாக்குகிறது. நகைச்சுவை புத்தகங்களைப் படிப்பது, சொற்பொழிவுகளைக் கேட்பது ஆகியவை நல்ல மருந்து. அதே நேரம் கேலியும், கேளிக்கையுமே வாழ்க்கையாகி விடக்கூடாது என்பதிலும் ராமன் கவனமாக இருந்தார். ஒற்றர்களே! இந்த பரிகாசக்கதைகள் ஒருபுறம் கிடக்கட்டும். நாட்டு மக்கள் என்ன சொல்கின்றனர்? அதை முதலில் சொல்லுங்கள். நாடாள்பவனுக்கு முதலில் மக்கள். அதன்பிறகு தன்னைப் பற்றி சிந்திக்க வேண்டும். சொல்லுங்கள், என்று துரிதப்படுத்தினார். அவர்கள் ராமனிடம், அண்ணலே! தங்கள் ஆட்சியில் என்ன குறை இருக்கிறது? கடலின் நடுவில் இருக்கும் இலங்கை மாநகரை தாங்கள் வெற்றி கொண்டதைப் பற்றி மக்கள் வியப்புடன் பேசுகிறார்கள். அசுரர்களை அழித்ததைப் பற்றி வீரம்பொங்க உரையாடுகிறார்கள். தேவர்களின் தலைவனான இந்திரனின் கொடும் பகைவனான இந்திரஜித்தைக் கொன்றது பற்றியும், அதிசயத்தின் வடிவமான பத்து தலைகளைக் கொண்ட ராவணனை அழித்தது பற்றி பேசுகிறார்கள். எங்கள் ராமனை வெல்வார் யார் என்று மார்தட்டி பேசுகிறார்கள், என்றனர். ராமன் அவர்கள் பேசுவதை கையசைத்து நிறுத்தினார். ஒற்றர்களே! நீங்கள் நிறைகளை மட்டுமே சொல்கிறீர்கள். தனது ஆட்சியின் நிறைகளைக் கேட்டு சந்தோஷம் கொள்வது மட்டும் அரசனின் பணியல்ல. அதன் குறைகளைக் கேட்டு, அதனை நீக்கி, நன்மை செய்பவனே அரசன். எனவே, நீங்கள் கேட்ட குறைகளையும், மனம் கூசாமல், அதைரியம் கொள்ளாமல் சொல்லுங்கள், என்று வற்புறுத்தினார். அந்நிலையில் அவர்கள் தாங்கள் கேட்ட ஒரு இழிசொல்லை ராமனிடம் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.ஸ்ரீராமா! ஆருயிர் மன்னவரே! நாங்கள் கேட்ட ஒரு விஷயத்தைச் சொல்கிறோம். அதுகேட்டு தாங்கள் வருத்தம் கொள்ள வேண்டாம். புத்தியற்றவர்கள் பேசும் பேச்சு அது, என்றதும், ராமன் உஷாராகி விட்டார்.


உம்...அதை விரைந்து சொல்லுங்கள், என்றார். ராமா! எங்கள் அன்னை சீதாதேவியார், இலங்கையில் ராவணனின் இடத்தில் ஒரு வருடகாலம் இருந்தார். இப்படி தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவளை, அவன் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாமே! இது தெரிந்தும், நாடாளும் மன்னன் ஒருவன் அவளுடன் வாழலாமா? குடிமக்களுக்கு ஒழுக்கத்தை கற்பித்து முன்மாதிரியாக இருக்க வேண்டிய மன்னன் ஒருவனே இப்படி இருந்தால், அது எவ்வகையில் நியாயம்? என கேட்கிறார்கள், என்றனர். இத்தனை நேரமும் பரிகாசக்கதைகளைக் கேட்டு சிரித்துக் கொண்டிருந்த ராமனின் கரிய முகம் சிவந்து விட்டது. அது கோபத்தின் வெளிப்பாடா, வெட்கத்தின் பிரதிபலிப்பா...ஒற்றர்கள் குழம்பினர். மனதில் வேல்போன்று தைத்த இந்த கடும் சொற்களைத் தாங்க முடியாத ராமபிரான், சைகையாலேயே ஒற்றர்களை அனுப்பிவிட்டு, தம்பியர்கள் இருக்குமிடம் சென்றார். தம்பியரே! என் உயிர் நீங்கள். என் பலமும் நீங்கள் தான். நண்பர்களும் நீங்களே! நீதி, தவம், சகோதரர்கள், அரசாங்கம், இன்பம் எல்லாமே நீங்கள்! இப்படி எல்லாமே எனக்கு நீங்கள் தான் என்றாகி விட்ட பிறகு உங்களிடம் மறைப்பதற்கு என்ன இருக்கிறது? ஏனெனில், எனக்கு புகழ் கிடைத்தால் அதுவே உங்கள் புகழ். என் மீது பழிவந்தால் அது உங்களுக்கும் பழிதானே. எனவே, நான் கேள்விப்பட்ட ஒன்றை வெளிப்படையாகச் சொல்கிறேன், கேளுங்கள், என்றார். அண்ணனின் முகபாவம், பீடிகை ஆகியவை அவர் ஏதோ சொல்லக்கூடாததைச் சொல்லப் போகிறார் என்பதை தம்பிகளுக்கு உணர்த்தி விட்டது. என்ன அண்ணா? என்றனர் அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன். உங்கள் அண்ணியார், எல்லா தேவர்களுக்கும் எனக்கும் தூயவளாகவே இருந்தாள். இலங்கையிலேயே தீக்குளித்து தன் கற்பின் வலிமையை நிரூபித்தாள். ஆனால், உலகத்தார் அதை ஏற்க மறுக்கின்றனர். அவள் மீதும், என்மீதும் சொல்லப்படும் பழிச்சொல் என் இதயத்தை வாட்டுகிறது, என்றவர் நடந்ததைச் சொன்னார். சகோதரர்கள் இதுகேட்டு மிக துன்பமடைந்தனர். கைகேயி, ராமபிரானை நாட்டை விட்டு அனுப்பியதை விட, அவர்களுக்கு இந்த தகவல் மிகக்கொடுமையாக இருந்தது



லவகுசா பகுதி-4


லவகுசா - Lava Kusa Story in Tamil-tn_173511000000.jpg
உங்கள் அண்ணியார், எல்லா தேவர்களுக்கும் எனக்கும் தூயவளாகவே இருந்தாள். இலங்கையிலேயே தீக்குளித்து தன் கற்பின் வலிமையை நிரூபித்தாள். ஆனால், உலகத்தார் அதை ஏற்க மறுக்கின்றனர். அவள் மீதும், என்மீதும் சொல்லப்படும் பழிச்சொல் என் இதயத்தை வாட்டுகிறது, என்ற ராமன் அரசவையில் ஒற்றர்கள் தன்னிடம் சொன்ன தகவலைக் கூறினார். சகோதரர்கள் இதுகேட்டு மிக துன்பமடைந்தனர். கைகேயி, ராமபிரானை நாட்டை விட்டு அனுப்பியதை விட, அவர்களுக்கு இந்த செய்தி மிகக்கொடுமையாக இருந்தது. அவர்களால், ராமனிடம் ஏதும் பேச முடியவில்லை. அண்ணன் சொல் கேட்டு நடக்கும் அவர்கள், இதனால் தங்கள் அண்ணியாருக்கு என்னாகப் போகிறதோ என்றே மனதுக்குள் கலங்கி நின்றனர். ராமன் தொடர்ந்தார். லட்சுமணா! உலகம் மூன்றையும் கலக்கு என்று சொன்னாலும் கூட கணப்பொழுதில் அதை செய்து முடித்திடும் மனோபலம் பெற்றவன் நீ. உன் அண்ணியை தவமுனிவர்கள் வாசம் செய்யும் காட்டில் சென்று விட்டு வா, என்றார். லட்சுமணன் வாய் பொத்தி நின்றான். ஏதும் பேசினால் பயனேதும் இருக்காது என்பதை அவன் அறிவான். விஷயம் அமைச்சர் சுமந்திரருக்கு தெரிய வந்தது. அவர் தசரதரின் அரசாங்கத்தில் இருந்தே முதல் அமைச்சராக இருப்பவர். கைகேயி உள்ளிட்ட பட்டத்து ராணிகளையே எதிர்த்து வாதிடுபவர். திறமைசாலி. அவருக்கும் தெரியும். ராமன் ஒரு வார்த்தையை சொன்னால் சொன்னது தான் என்பது. மனஉறுதியில் ராமன் கைகேயிக்கு சமமானவர். ஆம்....ராமனைப் பிரிந்தால் தசரதரின் உயிர்போகும் என்று தெரிந்திருந்தும் பிடிவாதம் பிடித்தவள் அல்லவா! எல்லோரும் யோசித்துக் கொண்டு நிற்பதை உணர்ந்த ராமன், இதில் யோசிக்க ஏதுமில்லை. நான், சீதைக்கு ஒன்றும் கேடு செய்யவில்லை. அவள் ஏற்கனவே என்னிடம் காட்டுக்குச் சென்று ரிஷிகளைத் தரிசிக்க வேண்டும் என்றாள்.


நானும் சரியென ஒப்புக்கொண்டேன். இப்போது, அவள் சொன்னதைத்தான் செய்கிறேன். எனவே லட்சுமணா! உம்...புறப்படு, உன் அண்ணியுடன். வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தின் அருகில் அவளை விட்டுவிட்டு நீ வந்துவிட வேண்டும், என்றார் அதட்டலுடன். பரந்து விரிந்த முடியையுடைய வெள்ளைப்புரவிகள் பூட்டிய தேர் அரண்மனை வாசலில் வந்து நின்றது. மாமியார் கவுசல்யா, மருமகளை வழியனுப்ப வந்தாள். மகளே! பத்திரமாக சென்று வா. நாளை நீ திரும்பி விட வேண்டும். வயிற்றில் அயோத்தியின் வாரிசை சுமக்கும் நீ மிகுந்த கவனத்துடன் காட்டிற்குள் செல். அது சரி...உன் மைத்துனன் அருகில் இருக்கும்போது, உனக்கேதும் ஆபத்து ஏற்படாது என்பதை அறிவேன், என்று புன்னகையுடன் சொன்னாள், நடந்து கொண்டிருக்கும் விபரீதத்தை அறியாமலே! சீதையை அழைக்க அவள் தங்கியிருந்த மாளிகைக்குச் சென்றான் லட்சுமணன். ஒளிவீசும் ரத்தினமாலை பளபளக்க காத்திருந்த அவள், வா லட்சுமணா! பயணத்துக்கு தயார் ஆகிவிட்டேன். புறப்படலாமா? என்றாள். அவளது கமலத் திருப்பாதங்களில் விழுந்து வணங்கிய லட்சுமணன், புறப்படலாம் அன்னையே என்றார். அவள் தேரில் ஏறி அமர்ந்தாள். அப்போது, சீதையின் வலக்கண் துடித்தது. பெண்களுக்கு, வலதுகண் துடிப்பது கெட்ட சகுனத்திற்கு அறிகுறி. அதேநேரம் வயிற்றில் ஏதோ எரிச்சல் ஏற்பட்டது. உடலில் ஏதோ ஒரு நடுக்கம் தெரிந்தது. ஊருக்குப் புறப்படும் வேளையில், பூஜை குறுக்கே போய்விட்டாலே, நம் உள்ளம் நடுங்கி விடும். சீதாதேவிக்கு இத்தனை கெட்ட அறிகுறிகளும் தெரிந்ததால், அவள் ரொம்பவே கலங்கி, லட்சுமணா!கிளம்பும் போதே, கெட்ட சகுனங்கள் தோன்றுகின்றன. எனக்கு ஏற்பட்ட இந்த தீய சகுனங்கள், என்னென்ன விளைவைத் தரப்போகிறதோ தெரியவில்லை. அதற்காக என்ன செய்ய முடியும்? விதி மிகவும் வலிமையான ஒரு வஸ்து.


அது என்ன நாடகம் நடத்தப்போகிறது என்பதை யாரும் அறியமாட்டார்கள். அதை அனுபவித்து தானே ஆக வேண்டும். இந்த விதி தன் கொடுமையான கரங்களை நீட்டி, என்னை என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால், என் கணவருக்கோ, என் கொழுந்தர்களான உங்களுக்கோ, உங்கள் மனைவியருக்கோ, எனது மாமியார்களுக்கோ, என் தாய் சுனைநாவுக்கோ, தந்தை ஜனகருக்கோ, பிற உறவினர்களுக்கோ, இதற்கெல்லாம் மேலாக, என் மேல் அன்பைப்பொழியும் அயோத்தி வாழ் மக்களுக்கோ துன்பம் வந்து விடக்கூடாது, என்றவள், தெய்வமே! இந்த சகுனங்களால் அவர்களுக்கு எந்த தீங்கும் வந்து விடக்கூடாது, என்று கடவுளையும் வணங்கிக் கொண்டாள். எவ்வளவு உயர்ந்த பண்பு பாருங்கள்! ராமாயணத்தை படி படி என்கிறார்களே! அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்பவர்கள் சீதாதேவியின் இந்த உயரிய குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாமியார், கொழுந்தனார்களுக்கு ஆதரவாக இன்றைக்கு உலகில் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள்? எங்கும் சண்டையும் சச்சரவும் தானே நடக்கிறது. சீதாதேவி பட்டபாடுகளைப் படித்தால், பெண்களுக்கு பொறுமை குணம் வளரும். சிறந்த பண்புகளெல்லாம் வந்து ஒட்டிக்கொள்ளும். லட்சுமணன் அவளது வார்த்தை கேட்டு திகைப்பும், மகிழ்ச்சியும் ஒருசேர தாக்க, இப்படி ஒரு உத்தமியை தன் அண்ணியாகப் பெற்றதற்காக பெருமை பொங்க அவளது திருவடி நோக்கி மீண்டும் ஒருமுறை வணங்கி, அன்னையே! நீங்கள் சொன்னது போல, நம் சுற்றத்தாருக்கும், நாட்டு மக்களுக்கும் எந்த ஆபத்தும் வராது. அவர்கள் சுகமாக வாழ்வார்கள், என்று சொல்லி விட்டு, குதிரைகளை விரட்டினான். அந்த பெரிய தேர் காட்டை நோக்கிச் சென்றது.

லவகுசா பகுதி-5


லவகுசா - Lava Kusa Story in Tamil-tn_173623000000.jpg


அந்த தேரில் அமைச்சர் சுமந்திரரும் சென்றார். தேர், கங்கைக்கரையை அடைந்தது. தேர் அங்கு சென்றதோ இல்லையோ, குனிந்த தலை நிமிராத லட்சுமணனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. சீதை பதைபதைத்து போனாள். லட்சுமணா! எதற்காக வருத்தப்படுகிறாய்? உன் கண்கள் கண்ணீர் சிந்துகிறது என்றால், ஏதோ கெடுதலின் அறிகுறியாகத்தான் இருக்கும். மறைக்காமல் சொல், என்றாள். என்ன சொல்வான் லட்சுமணன். அண்ணி, உங்களை அண்ணன் காட்டில் தனியாக விட்டு வரச்சொன்னான் என்பதை எப்படி அவளிடம் சொல்வான்! அழுகை முட்டியதில், வார்த்தைகள் வர மறுத்தன.லட்சுமணா! தூய்மையின் வடிவமானவனே! அழகான இந்தக் கங்கை நதியைக் கண்டவர்கள் கையெடுத்து வணங்குவார்கள். தங்கள் பாவம் தீர மனம் மகிழ்ந்து நீராடுவார்கள். அப்படியிருக்க, நீயோ, இந்த நதியைப் பார்த்து அழுகிறாயே! மேலும், நீ கவலைப்படும் அளவுக்கு, உனக்கு துன்பம் செய்யக்கூடியவர்களும் இந்த உலகத்தில் பிறக்கவில்லையே, என்றாள்.அண்ணியாரே! வேறொன்றுமில்லை. நான் பிறந்த நாளில் இருந்து நேற்று வரை என் அண்ணனைப் பிரிந்ததே இல்லை. இப்போது தான் முதன்முறையாகப் பிரிந்து தங்களுடன் வருகிறேன். அண்ணனை நினைத்துக் கொண்டேன். அதனால் அழுகை வந்து விட்டது, என்றான். லட்சுமணா! இதற்கா சிறுபிள்ளை போல் அழுவது! இவ்வுலகில் அறம் தழைக்க பாடுபடுபவர்கள் முனிவர்கள். அவர்களின் திருவடிகளைப் பணிந்தால் புண்ணியம் கிடைக்கும். அந்தப் புண்ணியம் தீவினைகளை அறுத்துவிடும். மேலும், நாம் முன்பு இங்கு இந்த கானகத்தில் தங்கியிருந்த போது, எனக்கு உதவிசெய்த முனிபத்தினியர், அவர்களின் மகள்களுக்கு புடவை, ஆபரணம் முதலானவற்றைக் கொடுக்க வேண்டிய கடமை எனக்கிருக்கிறது. அவற்றையெல்லாம் இந்த தேரில் கொண்டு வருவதை நீயும் அறிவாய். அவற்றைக் கொடுத்துவிட்டு, முனிவர்ளை வணங்கிவிட்டு, ஒரே நாளில் திரும்பி விடப் போகிறோம். இதற்காக கலங்காதே, என்றாள். உடனே தேரில் இருந்து இறங்கிய லட்சுமணன், அண்ணியை வலம் வந்து வணங்கி, தேவி! ஏழுலகையும் ஆட்சி செய்ய உரிமையுடையவளே! நான் சொல்வதைக் கேட்பீர்களா? என்றதும், அவனது வித்தியாசமான நடவடிக்கையைக் கண்ட சீதை, எதுவானாலும் தயங்காமல் சொல் லட்சுமணா, என்றாள்.


லட்சுமணனின் நாக்கு வறண்டது. உடல் சோர்ந்தது. முகம் களையிழந்தது. மனம் நடுங்கியது. தட்டுத்தடுமாறி வார்த்தைகளை உதிர்த்தான். உத்தமியே! உலகத்தின் தாயே! தூயவராகிய ஜனகரின் வேள்வித்தீயில் பிறந்தவளே! என் அண்ணன் என்னிடம் சொல்லி அனுப்பிய விஷயத்தை உங்களுக்கு சொல்கிறேன். இந்த உலகம் இல்லாத ஒன்றை இருக்கிறது என்று சொன்னால், எல்லோருமே அதை நம்பி, ஆமாம்...இருக்கிறது என்றே சொல்வார்கள். இருக்கும் ஒன்றை இல்லை என்று உலகம் சொன்னால், நிச்சயம் அது இல்லை என்றாகி விடுகிறது. உலகம் இருக்கிறது என்று சொல்லும் விஷயத்தை, யாரோ ஒருவன் இல்லை என்று சொன்னால், அவனை பேயைப் பார்ப்பது போல பார்ப்பார்கள். அண்ணியாரே! தங்கள் விஷயத்திலும் அப்படியே நடந்து விட்டது. தங்களை ராவணன் கவர்ந்து சென்றான். அண்ணன் உங்களை மீட்டார். நீங்கள் நெருப்பில் குதித்து உங்களைத் தூயவர் என்று நிரூபித்தும் விட்டீர்கள். ஆனால், இதையெல்லாம் அயோத்தியில் உள்ளவர்கள் பார்க்கவில்லையே! அப்படி பார்க்காத யாரோ சிலர், தங்களைப் பற்றி குற்றம் சொல்லி பேசியிருக்கிறார்கள். மோகத்தின் காரணமாக, மாற்றானுடன் தங்கியிருந்தவளுடன், இந்த ராமன் வாழ்வதை விட செத்து விடலாமே என்பதே பேச்சின் சாரம். இதை ஒற்றர்கள் மூலம் அறிந்த அண்ணன் கொதித்து விட்டார். மக்களுக்கு விருப்பமில்லாத ஒருத்தியுடன் இணைந்து அரசாள முடியாது. எனவே, வால்மீகி முனிவரின் ஆசிரமம் அருகில் உங்களை நிரந்தரமாக விட்டு வரச்சொன்னார், என்றான். இதைக் கேட்டாளே இல்லையோ, சீதாதேவியின் காதுகளில் பழுக்கக் காய்ச்சிய இரும்புக்கோலை நுழைத்தது போல் இருந்தது. தேரில் இருந்து சரிந்து கீழே விழுந்து விட்டாள். வாய்களில் இருந்து வார்த்தைகள் வர மறுத்தது. அவள் தரையில் இருந்து எழ முயற்சித்தாள். நிற்க முடியவில்லை. சரிந்து சாய்ந்தாள்.


இந்த உலகத்திலேயே சீதாதேவிக்கு ஏற்பட்டது போன்ற துன்பம் யாருக்கும் ஏற்பட்டது இல்லை. யாராவது ஒரு பெண், என்னைப் போல் பாவம் செய்த ஒரு ஜீவனுண்டா? என்று சொல்லிக் கொள்ளவே முடியாது. ஏனெனில், சீதா திருமணம் முடிந்து புகுந்த வீடு வந்தாள். சில காலம் தான் மாமியார் வீட்டில் தங்கியிருந்தாள். உடனே காட்டுக்கு புறப்பட்டாயிற்று. அங்கும் சோதனை. கொடியவன் ராவணனிடம் சிக்கிக் கொண்டாள். ராவணனோ, அவளை இச்சைக்கு அழைத்தான். ஒருவனுக்கு துணைவியாக இருக்கும் நிலையில், இன்னொருவன் கூப்பிடுகிறான் என்றால், ஒரு பெண்ணின் மனநிலையைச் சொல்லவும் வேண்டுமோ? சதாசர்வகாலமும், ராமனின் திருநாமம் விழ வேண்டிய செவிகளில், அரக்கியரோ, ராவணனுடன் போய் வாழ் என்று வற்புறுத்தும் இழிவான சொற்களைப் பேசினர். அதைத் தாங்கிக்கொண்டாள். காட்டில் இருந்து மீண்டாள். கட்டிய புருஷனே அவளைத் தீக்குளிக்கச் சொன்னான். சொன்னது அவனளவில் நியாயம் என்றாலும், எந்தக் குற்றமும் செய்யாத சீதா, கணவன் தன் மீது சந்தேகப்பட்டானே என்று துடித்துப் போனாள். தீ கூட அவளைச் சுடவில்லை. ஆனால், வார்த்தைகள் சுட்டன. வீட்டுக்கு வந்தாள். பட்டாபிஷேகம் முடிந்து சில காலம் கணவனுடன் சுகவாழ்வு. இப்போது அவள் கர்ப்பிணி. அயோத்தியின் வாரிசுகளை சுமந்து கொண்டிருக்கும் அவளை, உலகம் சந்தேகிக்கிறதே என்பதற்காக நிரந்தரமாக ஒதுக்கி வைக்கிறான் ராமன். என்ன கொடுமையப்பா இது! அடியே சீதா! உன்னை நினைத்தால், எங்கள் கண்கள் அருவியைத் தானேடி கொட்டுகிறது! என்று நாமும் அவளோடு சேர்ந்து புலம்புவதைத் தவிர வேறென்ன சொல்வது!


லவகுசா பகுதி-6


லவகுசா - Lava Kusa Story in Tamil-tn_174436000000.jpg


சீதைக்கு என்ன செய்கிறோம் என்பதே புரியவில்லை. திடீரென எழுவாள். தன் இரு கைகளாலும் வயிற்றில் ஓங்கி ஓங்கி அடிப்பாள். ஐயோ! இதென்ன கொடுமை என்றபடியே மயங்கிச் சாய்வாள். ஒரு கட்டத்தில், அவள் அசைவற்றுக் கிடந்தாள். இந்த துயரத்தை விண்ணுலகில் இருந்து கண்ட தேவர்கள், அவள் இறந்து விட்டாள் என்றே முடிவு கட்டி கண் கலங்கினார்கள். அண்ணியார் இப்படி துவண்டு விழுந்தது கண்டு, லட்சுமணன் அலறினான். அவனும் கீழே புரண்டு புலம்பினான். சிறிதுநேரத்தில் சீதாதேவி கண் விழித்தாள். அம்மா, அப்பா, என் உயிர் போன்ற சிநேகிதிகளே! கேட்டீர்களா கதையை! தனக்கு தானே நிகர் என்ற பெருமையுடைய தசரத சக்கரவர்த்தியின் குமாரர் ராமபிரான், எனக்கு செய்த இந்தக் கொடுமையை நீங்கள் கேள்விப்பட்டால் துவண்டு போவீர்களே! என்ன செய்வேன்! ராமனின் ஆட்சி என்றாலே நல்லாட்சி என்று தான் பொருள். அந்த நல்லாட்சி நடத்துபவரின் மனைவியான எனக்கு மட்டும் ஏன் இந்த வனவாசத் தண்டனை? எதற்காக எனக்கு இந்தத் துன்பங்கள் வந்தன? என் மாமியார்களுக்கு இந்த விஷயம் தெரிந்தால், அவர்கள் கணமும் உயிர் வாழ மாட்டார்களே! என வருந்தி அழுதாள். மாமியார்- மருமகள் உறவுக்கு உதாரணம் நம் சீதாதேவி தான். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதே இல்லை. நம்மூர் பெண்கள் ஒரு மாமியாரை வைத்துக் கொண்டே, சமாளிக்க கஷ்டப்படுவார்கள். ஆனால், நம் சீதாதேவி மூன்று மாமியார்களை சமாளித்தவள். மூவரையும், அனுசரித்து நற்பெயர் பெற்றவள். மாமியார் இல்லாவிட்டால் மருமகள் சந்தோஷப்படுவாள். ஆனால், மருமகள் இல்லாவிட்டால் மாமியார்கள் உயிர் துறந்து விடுவார் என்றால், அது நம் சீதாதேவி இல்லத்தில் மட்டுமே நடக்கிற ஒரு விஷயம். இந்த நிகழ்வின் மூலம், மாமியார்- மருமகள்கள் வீட்டில் சண்டை போடாமல் ஒருவரை ஒருவர் அனுசரித்து வாழ வேண்டுமென்பதை பெண்களுக்கு சீதாதேவி உணர்த்துகிறாள். இப்படி தவித்த அண்ணியாருக்கு லட்சுமணன் ஆறுதல் சொன்னான்.


தாயே! நீங்கள் முற்பிறவியில் செய்த நல்வினையால் என் சகோதரனை கணவனாக அடைந்தீர்கள். இப்பிறப்பில் என்ன தீவினை செய்தீர்களோ அவரைப் பிரிந்து விட்டீர்கள். நல்வினை, தீவினை இரண்டுமே ஏதோ ஒரு பலனைத் தருகிறது. நல்வினையால் நல்லதும், தீவினையால் தீயதும் என்று நடக்காமல் இருக்கிறதோ, அந்நாளே மனித வாழ்வில் பொன்னாள். அப்படி ஏதும் நடக்காத ஒரு நிலையை மனிதகுலம் அடைய வேண்டுமானால், அதற்கு தவமே கண்கண்ட மருந்து. ஆம்...நீங்கள் இறை வழிபாட்டில் ஆழ்ந்து விடுங்கள். தவக்கோலம் பூணுங்கள். பெருந்தவ முனிவர்கள் பலர் இந்தக் காட்டில் வாழ்கின்றனர். அவர்களுக்கு நீங்கள் சேவை செய்ய வேண்டும். உன் கணவனை மனதில் நினைத்து உயர்ந்த தவமிருக்க வேண்டும், என்றான். சீதை அவனிடம், லட்சுமணா! ஒரு பெண்ணின் நிலையைப் புரிந்து கொள்ளாமல் பேசாதே. இதற்கு முன் உன் அண்ணனுடன் நான் காட்டில் இருந்த போது, எத்தனையோ முனிவர்களைத் தரிசித்து ஆசி பெற்றோம். இப்போது, அவர்களை நான் தனித்துப் பார்த்தால், ஏனடி உன் கணவன் உன்னைப் பிரிந்தான்? என்று கேட்டால், நான் அவர்களிடம் என்ன பதில் சொல்வேனேடா? சரி போகட்டும். நீ நாடு திரும்பு. உன் அண்ணனிடம், என்னைச் (சீதா) சொல்லிக் குற்றமில்லை, உங்களைச் சொல்லியும் குற்றமில்லை, எல்லாம் என் விதி. அது மட்டுமல்ல! உலகம் ஒரு பழியைச் சொன்னது என்பதற்காக, அதையும் ஏற்று என்னைப் பிரிந்தாரே உன் அண்ணன்! இப்படி பழிக்கு அஞ்சுகிற உன் அண்ணனுடன் வாழ்வதை விட அவரை பிரிந்திருப்பதே மேல் என நான் சொன்னதாகச் சொல் என்று கோபத்தோடு சொன்னாள். ஒரு பெண் பொறுமையாக இருக்கலாம். பொறுமையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், அவளது கற்பின் மீது களங்கம் சுமத்தப்படுகிறது என்றால் அவள் கொதித்து எழுந்து விட வேண்டும் என்பதற்கு சான்றாக, பொறுமையின் இலக்கணமான பூமாதேவியின் புத்திரி சீதாதேவி இவ்விடத்தில் பெண்ணினத்துக்கு தகுந்த புத்திமதி சொல்கிறாள்.


அத்துடன் அவள் நிறுத்தவில்லை. லட்சுமணன் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு வார்த்தையை உதிர்த்தாள். ராமாயணத்தின் உத்தர காண்டத்திலேயே உணர்ச்சி மிக்க கட்டம் இதுதான். ஏ லட்சுமணா! நான் எப்படிப்பட்டவள் என உனக்குத் தெரியும். நான் கர்ப்பமாகி நான்கு மாதங்கள் தான் ஆகின்றன. எங்கே என்னைப் பார். கர்ப்பவதியான என் மேனி வருந்தாத வகையில் அந்தப் பார்வை இருக்கட்டும், என்றாள் ஆவேசமாக. அண்ணியாரின் திருவடியை மட்டுமே லட்சுமணன் அறிவான். அவள் முகத்தை அவன் பார்த்ததே இல்லை. அப்படி ஒரு மரியாதை. உலகில் எந்த ஒரு அண்ணிக்கும், எந்த ஒரு கொழுந்தனும் கொடுக்காத ஒரு பாக்கியம். அப்படிப்பட்ட சௌபாக்கியவதியான சீதாதேவி, தன் கொழுந்தனிடம் இப்படி கேட்கிறாள். ஏன் கேட்டாள் தெரியுமா? இந்த களங்கற்ற முகமா இப்படி ஒரு தவறைச் செய்திருக்கும் என்று அவனாவது தெரிந்து கொள்ளட்டும். அதற்காக வருந்தட்டும் என்று தான். இதைக் கேட்டானோ இல்லையோ, லட்சுமணன் கண்ணீர் வடித்தான். தரையில் விழுந்து தலையில் அடித்துக் கொண்டு புலம்பினான். தாயே! இப்படி ஒரு கொடிய சொல்லை உங்கள் வாயால் கேட்க, நான் என்ன பாவம் செய்தேனோ? இதுவரை இப்படிப்பட்ட வார்த்தைகள் உங்கள் வாயில் இருந்து வந்ததும் இல்லையே! இன்று ஏன் வந்தன? என் சகோதரன் உங்கள் கைத்தலம் பற்றிய நாளில் இருந்து இன்று வரை உன் முகம் பார்த்தறியாதவன் நான். உங்கள் திருவடிகள் மட்டுமே எனக்குத் தெரியும். அப்படிப்பட்ட எனக்கு உங்கள் திருமேனியைப் பார்க்கும் துணிச்சல் எப்படி வரும்? யோசித்து தான் பேசினீர்களா? என்றான் கண்ணீர் ஆறாய்ப் பெருக. பின்பு சிரமப்பட்டு எழுந்தான். தலை குனிந்தபடியே அண்ணியார் அருகில் சென்றான். அண்ணியை அவன் பார்த்தானா?



Comments

Popular posts from this blog

[RG] Horror movies

107.John Wayne GACY Jr.

30. SERIAL KILLERS AND ASTROLOGY