ராஜதந்திர விளையாட்டு---2

 முந்தைய பாகத்தின் தொடர்ச்சி ......

அமெரிக்காவுக்கு இரண்டு முகங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ரகசியமான முகம். அந்த முகத்தை வைத்துக்கொண்டு அமெரிக்கா உலக அளவில் செயற்படுத்திய ரகசிய திட்டங்கள் ஏராளம். அப்படியான திட்டங்களை வெவ்வேறு காலப்பகுதிகளில் வெவ்வேறு அதிகாரிகள் வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். அவற்றில், மிகவும் தந்திரமான திட்டங்களில் ஒன்று, ஈரானுக்கு ரகசியமாக ஆயுத சப்ளை செய்த திட்டம்.
இந்த திட்டத்தை வகுத்து கொடுத்ததால்தான் ராபர்ட் மக்பார்லேன், அமெரிக்காவின் தலைசிறந்த ராஜதந்திர திட்டமிடலாளர்களில் ஒருவராக இன்றுவரை பிரமிப்புடன் பார்க்கப்படுகிறார்.
மக்பார்லேனின் ‘மிரள வைக்கும்’ திட்டத்தின் விபரம் இதோ:
இது நடந்த காலத்துக்கு முன், ஈரானுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆயுதங்களை ரகசியமாக இஸ்ரேல் கொடுத்துக்கொண்டு இருந்தது பற்றி அமெரிக்காவுக்கு தெரியும் (அது பற்றி ஏற்கனவே எழுதியிருந்தோம்). அந்த ஆயுதங்கள் ஒரேயடியாக கொடுக்கப்படவில்லை என்பதும் அமெரிக்காவுக்கு தெரியும். சுமார் மூன்று வருடகாலப் பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்கப்பட்ட ஆயுதங்களின் அளவு எவ்வளவு என்பதையும், சி.ஐ.ஏ. மூலம் அமெரிக்கா தெரிந்து வைத்திருந்தது.
மக்பார்லேனின் திட்டத்தின்படி, சுமார் மூன்று வருடகாலப் பகுதியில் இஸ்ரேல் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்த ஆயுதங்களை விட இரண்டு மடங்கு அதிக ஆயுதங்களை அமெரிக்கா ஈரானுக்குக் கொடுக்கும்.
இதை ஈரானுக்கு டேவிட் கிம்சீ அழுத்திச் சொல்ல வேண்டும். ஈரான் கனவில்கூட நினைக்கமுடியாத ஆயுத சப்ளை இது என்பதை அவர்களுக்கு டேவிட் புரிய வைக்க வேண்டும்.
அதற்காக ஈரான் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும். இப்படியொரு ஆயுத சப்ளை இலவசமாக கிடைக்கும்போது, ஈரானிய அரசு தனது தீவிரவாத இயக்கத்திடம் உள்ள தமது முழு செல்வாக்கையும் பயன்படுத்தி, பணயக் கைதிகளை விடுவிக்கும் என்பது, மக்பார்லேனின் திட்டத்தின் அடிப்படை நம்பிக்கை.
ஆயுதங்களை வாங்கியபின் ஈரானால் பணயக் கைதிகளை விடுவிக்க முடியாவிட்டால்?
மக்பார்லேனின் திட்டத்தில் அதற்கும் வழி இருக்கிறது.
கொடுப்பதாகக் கூறப்படும் ஆயுதங்கள் முழுவதும் ஒரேயடியாகக் கொடுக்கப்பட மாட்டாது. முதலில் ஒருபகுதி ஆயுதங்கள் ஈரான்வரை சென்று சேரும். அந்த ஆயுதங்கள் கிடைத்தவுடன் ஈரான் நிர்ப்பந்தம் செய்து குறைந்தது ஒரு பணயக் கைதியையாவது விடுதலை செய்யவைத்து காட்ட வேண்டும்.
அதன் பின்னர் மேலும் ஒரு பகுதி ஆயுதங்கள் கொடுக்கப்படும். மற்றும் ஒரு செட் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். அதன்பின் அடுத்த பகுதி ஆயுதங்கள் ஈரானில் போய் இறங்கும்.
இது வரைக்கும் சரி. இப்போது அடுத்த சந்தேகம். ஏதோ ஒரு காலத்தில் அமெரிக்கா ஆயுதம் கொடுத்ததை ஈரான் பகிரங்கப்படுத்தி விட்டால் என்ன செய்வது?
இந்தக் கேள்விக்கும் மக்பார்லேனின் திட்டத்தில் பதில் இருந்தது. அதுதான், இந்த திட்டமிடலின் உச்சம்.
ஈரானுக்குக் கொடுக்கப்படும் ஆயுதங்கள் எதுவுமே அமெரிக்கத் தயாரிப்பு ஆயுதங்களாக இருக்காது. இஸ்ரேலியத் தயாரிப்பு ஆயுதங்கள். அவற்றை இஸ்ரேலிய அரசிடம் இருந்து விலைக்கு வாங்கி ஈரானுக்குக் கொடுப்பதுதான் திட்டம்.
ஆயுதங்களுக்கான விலையை அமெரிக்கா, கொடுத்துவிடும். இப்படியான வேலைகளுக்காக அமெரிக்காவிடம் ரகசிய பட்ஜெட் ஒன்று உள்ளது. அதில் செலவு செய்யப்படும் பணம் பற்றிய விபரங்களை அமெரிக்க செனட்டுன்னு தெரியப்படுத்தி, அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.
இஸ்ரேலிடம் இருந்து வாங்கப்படும் ஆயுதங்கள், அமெரிக்கா வரை வரத் தேவையில்லை. இஸ்ரேலியரான டேவிட் கிம்சீ, மூன்றாவது நபர் ஒருவர் ஊடாக ஆயுதங்களை ரகசியமாக ஈரானுக்குள் கொண்டுபோக வேண்டும். மூன்றாவது பார்ட்டிக்கு, ஆயுதப் பெறுமதியின் 10 சதவிகிதம் கமிஷனாகக் கொடுக்கப்படும்.
எப்படி திட்டமிடல்?
இந்த திட்டத்தில் உள்ள இரு கிளை விஷயங்கள்:
ஒரு விஷயம். நாளைக்கே இந்த ரகசிய டீல் வெளியே தெரியவந்தால், அலகில் ஆயுத தயாரிப்பில் நம்பர்-1 ஸ்தானத்தில் உள்ள அமெரிக்கா, இஸ்ரேலிடம் இருந்து ஆயுதம் வாங்கியதை யாரும் நம்ப மாட்டார்கள். இரண்டாவது விஷயம், அமெரிக்காவுக்கு உதவும் இஸ்ரேலுக்கு செய்யப்படும் கைமாறாக, அதுவரை இஸ்ரேலின் ஆயுத கஸ்டமராக இல்லாத அமெரிக்காவிடம் இருந்து பெரிய தொகைக்கான ஆர்டர் ஒன்று கிடைக்கும்

இந்த திட்டத்தின் ஒவ்வொரு பகுதியும், அதனால் ஏற்படும் பலனும் மக்பார்லேனால் தெளிவாக விளக்கப்பட, திட்டத்துக்கு ஜனாதிபதி ரீகனின் ‘கோ-அஹெட்’ கிடைத்தது.
அன்று மாலையே டேவிட் கிம்சீ இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார். அமெரிக்கா கேட்குமளவு ஆயுதங்களை இஸ்ரேல் விற்பதற்கு தயாரா என்று இஸ்ரேலியப் பிரதமரிடம் கேட்கும்படி கோரப்பட்டிருந்தார்.
ஆயுதங்களுக்கான விலையை அமெரிக்கா பேரம் பேசாமல் ‘லிஸ்ட் பரைஸூக்கே’ கொடுக்கச் சம்மதித்திருப்பதால், ஆயுதங்களை விற்பதற்கு இஸ்ரேலியப் பிரதமருக்கு எந்தவித ஆட்சேபனையும் இருக்கவில்லை.
திட்டத்தின் ஆரம்பக் கட்ட அஸ்திவாரம் தயார். இனி, ஆயுதங்களை ரகசியமாக ஈரானுக்கு கொடுக்கவேண்டும். ஈரானிய அரசிடம் சில உறுதிமொழிகளும் பெறப்படவேண்டும்.
இதற்கு சரியான நபர் ஒருவர் தேவை. அவருக்கு சர்வதேச அளவில் செல்வாக்கு இருக்கவேண்டம். டேவிட் கிம்சீ இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சில் இருப்பதால், அவர் நேரடியாக இந்த அலுவலைச் செய்ய முடியாது. எந்த அரசு பதவியிலும் இல்லாத மூன்றாவது நபர் ஒருவர்தான் இதைச் செய்து கொடுக்கவேண்டும்.
செய்யப்போகும் மூன்றாவது நபருக்கு ஆயுதங்களின் பெறுமதியில் 10 சதவிகிதம் கமிஷனாக இருப்பதால் (கமிஷன் மாத்திரம் மில்லியன் கணக்கில் கிடைக்கும்) இதைச் செய்து கொடுக்க யாரும் முன்வருவார்கள்.
டேவிட் கிம்சீ அதை வேறு விதமாகத் திட்டமிட்டார். திட்டத்தின் இந்தப் பகுதியில் மாற்றம் ஒன்றை செய்தார்.
அமெரிக்கத் திட்டத்தில் ‘மூன்றாவது நபர்’ என்று இருந்ததை, ‘மூன்றாவது நபர்கள்’ என்று மாற்றிக்கொண்டார்.
ஒரு நபரை நம்பி இறங்கி ஏதாவது சிக்கல் வந்தால் என்ன செய்வது என்று யோசித்து, ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் ஒரு நபரின் தலைமையில் செயற்பட வேண்டும். டேவிட் கிம்சீ வெளியே இருந்து இந்த குழுவினரின் நடவடிக்கையைக் கண்காணித்துக் கொண்டிருப்பார்.
மூன்றாவது நபர்களின் குழுவுக்குத் தலைவராக இருப்பதற்கு டேவிட் கிம்சீ தேர்ந்தெடுத்த நபர் யார் தெரியுமா? அட்னான் கஷோகி!
அட்னான் கஷோகி ஒரு சவுதி அரேபிய கோடீஸ்வரர். வெளிப்படையாகச் செய்வது பெற்ரோலியத்துடன் சம்மந்தப்பட்ட வியாபாரங்கள். ஆனால் மறைமுகமாக சில நிழலான டீல்களிலும் சம்மந்தப்படும் ஆள். மொசாத்துக்காக கடந்த காலத்தில் சில ஆயுத டீல்களை முடித்து கொடுத்தவர்.
சர்வதேச பிசினெஸ் விஷயங்களை நீங்கள் விரும்பி படிக்கும் வாசகராக இருந்தால், நாங்கள் குறிப்பிடும் இந்த சவுதி கோடீஸ்வரர் பற்றியும், எப்போதும் கலர்புல்லாக நடமாடும் அவரது குணாதிசயங்கள் பற்றியும், மத்திய கிழக்கிலிருந்து வெளியாகும் பிசினெஸ் சஞ்சிகைகளில் படித்திருக்கலாம்.
படிக்கவில்லையா?

சர்வதேச பிசினெஸ் விஷயங்களை விரும்பி படிக்கும் வாசகராக நீங்கள் இருந்தால், அட்னான் கஷோகி என்ற பெயருடைய சவுதி கோடீஸ்வரர் பற்றியும், எப்போதும் கலர்புல்லாக நடமாடும் அவரது குணாதிசயங்கள் பற்றியும், மத்திய கிழக்கிலிருந்து வெளியாகும் பிசினெஸ் சஞ்சிகைகளில் படித்திருக்கலாம் என்று கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
கஷோகி, தன்னைப் பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளியாவதை விரும்பும் நபர். விமானங்களின் பிசினெஸ், அல்லது பர்ஸ்ட் கிளாஸிலும், கிளாஸ் ரெஸ்ட்டாரென்ட்களிலும் பரிமாறப்படும் மிகவும் விலையுயர்ந்த Caviarஐ (ஒருவகை மீன் முட்டை) கிலோ கணக்கில் சாப்பிடும் கஷோகி, தன்னைச் சுற்றி எப்போதும் கவர்ச்சிகரமான நங்கைகள் சிலரை வைத்திருப்பார்.
இந்த நங்கைகள் வெறும் பொம்மைகள் அல்ல. கஷோகி தமது ரகசிய டீல்களில் ஈடுபடுத்துவது, இந்த பெண்களைத்தான். தனது உளவாளிகளாக இவர் வைத்திருப்பதும் மாடல் அழகிகளைத்தான்.
சவுதி, மக்காவில் பிறந்த கஷோகியின் தந்தை மொஹமெட் கஷோகி, சவுதி மன்னர் அப்துல் அசீஸ் அல்-சவுத்தின் பிரத்தியேக டாக்டர். அந்த வகையில் இவர் பிறக்கும்போதே, ‘தொடர்புகள்’ உள்ள குடும்பத்தில் பிறந்தவர்.
சவுதி மன்னரின் கனெக்ஷனை விட்டுவிட்டு, வேறு விதமாக கஷோகியை அறிமுகப்படுத்தவும் முடியும். அப்படி அறிமுகப்படுத்தினால்தான், இவரது மேலை நாட்டு கனெக்ஷன் என்ன என்று புரியும்.
இந்த அட்னான் கஷோகியின் சகோதரியின் பெயர், சமீரா கஷோகி. இவர்தான், மொஹமெட் அல்-பாயத்தின் மனைவி. டோடி அல்-பாயத்தின் தாய்.
ஆம், பிரிட்டிஷ் இளவரசி டயானாவுடன் கார் விபத்தில் மரணமடைந்த டோடி அல்-பாயத்தின் தாய்மாமன்தான், நாம் குறிப்பிடும் இந்த அட்னான் கஷோகி. (இவரது மற்றொரு சகோதரி மிக பிரபல அரபு எழுத்தாளரான சோஹிர் கஷோகி)
அமெரிக்கா, ஈரானுக்கு ரகசிய ஆயுத சப்ளை செய்வதற்கு பொருத்தமான நபராக இருப்பார் என டேவிட் கிம்சீ தேர்ந்தெடுத்தது, இப்படியான பின்னணி கொண்ட அட்னான் கஷோகியைதான்!
இவர் நேரடியாக எந்த அரசு பதவியிலும் இல்லாதவர். ஆனால், எந்த அரசு தலைவருடனும் நேரில் பேசக்கூடியவர். வெளியுலகத்தின் கண்களுக்கு அரபு நாட்டவரும், இஸ்ரேலியர்களும் விரோதிகள். ஆனால், அரபுக்காரரான இந்த அட்னான் கஷோகி (இவரது தந்தைக்கு துருக்கி பின்னணி உண்டு) இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்துக்கு தனது அரபு செல்வாக்குகள் மூலமாக சில காரியங்களை சாதித்துக் கொடுத்தவர்.
அந்த வகையில்தான் இவருக்கு டேவிட் கிம்சீயுடன் பரிச்சயம்.
அட்னான் கஷோகியை “மிக முக்கிய விஷயம் ஒன்றுக்காக” சந்திக்க வேண்டும் என்று டேவிட் கிம்சீ தகவல் கொடுத்தவுடன், இந்த சந்திப்பு ஐரோப்பிய நகரம் ஒன்றில் நடந்தால் நல்லது என கஷோகி சொன்னார். அதையடுத்து இவர்கள் இருவரும் இத்தாலியில் சந்திப்பதாக முடிவாகியது.
கஷோகியுடன் டேவிட் கிம்சீ ரோம் நகரிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சந்தித்து அமெரிக்காவின் ரகசிய ஆயுத சப்ளை டீல் பற்றிப் பேசினார். இந்த ரகசிய ஆபரேஷனில் ஒரு குழு இயங்க வேண்டிய அவசியம் பற்றி டேவிட் சொன்னார். இஸ்ரேலிய அரசுக்கும், கஷோகிக்கும் இணக்கமான நபர்கள் அந்த குழுவில் இடம்பெற வேண்டும் என முடிவாகியது.
இருவருமாக ரோம் நகர ஹோட்டலில் ஆலோசனை நடத்தி, இந்த குழுவில் யார்யாரையெல்லாம் சேர்க்கலாம் என  முடிவெடுத்தனர்.
அப்படியாக இந்த மூன்றாவது நபர் குழுவுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றயவர்கள்-
(1) மனாச்சர் தொர்பானிபர். ஈரான் ஷா மன்னரின் ஆட்சியில் இருந்த காலத்தில் மன்னர் ஷாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் ஒரு உளவுத்துறை இயங்கியது. அதன் பெயர் SAVAK. இவர் அதில் ஒரு பெரிய புள்ளியாக இருந்தவர்.
(2) யாகொவ் நிம்ரோடி. இவர் ஜோர்தான் நாட்டுக்காக உளவு வேலைபார்க்கும் நபர். ஆனால் ஜோர்தான் நாட்டு உளவுத்துறையின் அதிகாரி அல்ல. தனிப்பட்ட ரீதியில் உளவு பார்க்கும் நிறுவனம் ஒன்றை நடத்தியவர். ஈரானில் மன்னர் ஷா ஆட்சியில் இருந்தபோது, இஸ்ரேலின் உளவாளியாக தலைநகர் தெஹ்ரானில் இருந்தவர் இவர்தான்.
(3) அல்-ஷ்விம்மர். இஸ்ரேலியர். இலேசில் வாய்திறக்காத அழுத்தக்காரர். Israel Aircraft Industries நிறுவனத்தின் ஸ்தாபகர். இஸ்ரேலிய அரசு நிறுவனம் இது. ராணுவ வான் சாதனங்களை தயாரிக்கும் நிறுவனம்.
ரோம் நகர ஹோட்டலில் இருந்தே இந்த மூன்று பேரையும் தொடர்பு கொண்டு, இந்த ஆபரேஷனில் ஈடுபட சம்மதம் வாங்கினார்கள் டேவிட் கிம்சீயும்,கஷோகியும். ஐந்துபேரும் நேரில் சந்தித்து பேசுவதாக முடிவாகியது. அதையும், ஐரோப்பாவில் செய்வது நல்லது என்றார், கஷோகி

அடுத்த இரு தினங்களில் இந்த ஐந்து பேரும் தனித்தனியாக பிரான்ஸ் சென்றார்கள். பாரீஸூக்கு வடக்கே உள்ள பண்ணை வீடு ஒன்றில் ரகசியமாகச் சந்தித்தார்கள். அதன் பின்னர் கஷோகி ஈரானிய தலைநகர் தெஹ்ரானுக்குப் புறப்பட்டுப் போனார். அங்கே அரசு உயர் மட்டத்தில் சிலரைச் சந்தித்தார்.
ஆரம்பத்தில் ஈரானிய அரசு உயர்மட்டம் சிறிது தயங்கினாலும், பின்னர் சம்மதித்தார்கள். காரணம், இந்த ஒற்றை ஆபரேஷனுக்காக ஈரானுக்கு கிடைக்கும் ஆயுதங்களின் எண்ணிக்கை பற்றியும், அப்படியான அளவில் ஆயுதங்களை பெறுவதற்கு ஈரான் அரசு நினைத்தாலும் முடியாது என்பதை, அமெரிக்கா கொடுத்த ஆயுத பட்டியலை காட்டி தெளிவாக புரிய வைத்தார் கஷோகி.
தீவிரவாத இயக்கத்துக்கு அழுத்தம் கொடுத்து பணயக் கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டது ஈரான். ஆனால், அதற்கு மற்றொரு நிபந்தனை போட்டார்கள் அவர்கள்.
அமெரிக்கா தயாரித்துக் கொடுத்திருந்த லிஸ்ட்டிலுள்ள ஆயுதங்கள் அனைத்தையும் ஒரேயடியாக, முழுமையாக கொடுக்க வேண்டும் என்பதே அவர்களது நிபந்தனை. “நீங்கள் ஆயுதங்களை முழுமையாக கொடுங்கள். அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிப்பது எங்களது பொறுப்பு. பகுதி பகுதியாக ஆயுதம் கொடுப்பது எங்களுக்கு பிடிக்கவில்லை”
ஈரானின் நிபந்தனை விபரத்துடன் தெஹ்ரானில் இருந்து திரும்பினார் கஷோகி. இந்த விபரம் வாஷிங்டனுக்கு டேவிட் கிம்சீயால் சொல்லப்பட்டது. உடனடியாகவே ஈரானின் இந்த நிபந்தனை அமெரிக்காவால் நிராகரிக்கப்பட்டது.
தந்திரசாலியான டேவிட் கிம்சீ, வாஷிங்டனின் இந்த நிராகரிப்பை தெஹ்ரானுக்கு தெரிவிக்கவில்லை.
பல வருடங்களின்பின் இந்த விவகாரம் பற்றி பேட்டியளித்த கிம்சீ, அதை இவ்வாறு குறிப்பிடுகிறார்: “வாஷிங்டன் நிராகரித்த விஷயத்தை சொன்னால், முல்லாக்களுக்கு (ஈரானிய தலைமை) கடும் கோபம் ஏற்படும் என்பது எனக்கு தெரியும். அந்த கோபத்தில், “பணயக் கைதிகளில் நாலு பேரை கொன்றுவிடுங்கள்” என்று தீவிரவாத இயக்கத்துக்கு சிக்னல் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே இதை வேறு விதமாக ஹேன்டில் பண்ண வேண்டும என ஆலோசித்தோம்”
டேவிட் கிம்சீயும் மற்றயவர்களும் ஐரோப்பிய நகரங்களில் மீண்டும் மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனைகளின் பின் புதிதாக ஒரு பிளான் போடப்பட்டது.
புதிய திட்டத்துடன் தெஹ்ரான் போய் இறங்கினார் கஷோகி.
“அமெரிக்காவால் கொடுக்கப்பட்ட லிஸ்டிலுள்ள ஆயுதங்கள் அனைத்தும் முழுமையாகக் கொடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை ஒரு நாடு கொடுக்குமென்றால், ஆயுதங்களை பகுதி பகுதியாக பெறுவதற்கு ஈரான் சம்மதிக்குமா?” என்று கேட்கப்பட்டது.
ஈரான் அதற்குச் சம்மதிக்கவே, ஆயுதங்கள் முழுமையாகக் கொடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை (அமெரிக்காவின் சார்பில்) இஸ்ரேல் கொடுத்தது.
அதே நேரத்தில் முதலாவது செட் ஆயுதங்கள் ஈரானின் கைகளில் கிடைத்தபின் குறைந்தபட்சம் ஒரு பணயக் கைதியாவது விடுவிக்கப்படுவார் என்ற உத்தரவாதத்ததை ஈரான் கொடுத்தது.
ஆயுதங்கள் இஸ்ரேலில் இருந்து தெஹ்ரானுக்கு விமானம் மூலம் அனுப்பப்படும் என்று முடிவாகியது.
அமெரிக்கா கொடுத்த லிஸ்ட்டில் இருந்த ஆயுதங்கள் அனைத்தையும் இஸ்ரேல் தயார் செய்தது. அதற்கான பில் வாஷிங்டனுக்கு கொடுக்கப்பட்டு, பணமும் இஸ்ரேலுக்கு வந்து சேர்ந்தது.
ஆனால், அந்த ஆயுதங்களில் இஸ்ரேல் சின்னதாக ஒரு தில்லுமுல்லு செய்திருந்ததை வாஷிங்டன் அப்போது அறிந்திருக்கவில்லை. இப்போது நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமா? அடுத்த பாகத்தை நாளை அப்டேட் செய்கிறோம்..

1985-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாத இறுதிப் பகுதியில் முதலாவது செட் ஆயுதங்கள் ஈரானிய தலைநகர் தெஹ்ரான்வரை போய் சேர்ந்தன. இஸ்ரேலின் நெகெவ் பாலைவன, ஹெட்செய்ம் விமானத் தளத்தில் (மேலே போட்டோ பார்க்கவும்) இருந்து வந்த தனியார் கார்கோ விமானங்களில் வந்து இறங்கின அந்த ஆயுதங்கள்.
பணயக் கைதிகள், அதுவும் அமெரிக்க பணயக் கைதிகள் தொடர்புடைய விவகாரம் என்பதால், அமெரிக்கா இந்த ஆயுத சப்ளையில் தில்லுமுல்லு எதுவும் செய்யாமல், சொன்னது போலவே ஜென்டில்மேனாக நடந்துகொண்டது.
மொத்தமாக ஈரானுக்குக் கொடுப்பதாக அமெரிக்கா ஒப்புக்கொண்ட ஆயுதங்களின் அளவு மிகப்பெரியது. அந்தளவுக்கு ஆயுதங்களைக் கொடுப்பதாக ஆசை காட்டினால்தான் ஈரான் சுறுசுறுப்பாக அலுவல் பார்க்கும் என்பதால் ஈரானால் கனவில்கூட நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவில் ஆயுதங்களைக் கொடுக்க அமெரிக்கா முன்வந்திருந்தது.
ஈரானுக்கு கொடுக்கப்பட்ட லிஸ்டில் இருந்தவற்றில், இஸ்ரேல் ‘விற்ற’ ஆயுதங்களின் லிஸ்ட்டை பாருங்கள்: 128 டாங்கிகள், இரண்டு லட்சம் கட்ய்ஷா ராக்கெட்டுகள், 10,000 டன் (10 மில்லியன் கிலோ) ஆட்டிலரி ஷெல்கள், 3,000 ஆயிரம் வானிலிருந்து வானுக்கு ஏவப்படக்கூடிய ஏவுகணைகள் (AAM – Air-to-Air Missile ), 4,000 ரைபிள்கள் மற்றும் கிட்டத்தட்ட 50 மில்லியன் ரவுண்ட்ஸ் தோட்டாக்கள்.
இந்த ஆயுதங்கள் அனைத்தையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு பணம் கொடுத்து வாங்குவது என ஏற்கனவே முடிவாகியிருந்தது.
தமது கைவசம் இவ்வளவு ஆயுதங்களும் விற்பனைக்கு தயாராக இருப்பதாக கூறியது இஸ்ரேல். ஆனால், அந்த ஆயுதங்களில் இஸ்ரேல் சின்னதாக ஒரு தில்லுமுல்லு செய்திருந்ததை வாஷிங்டன் அப்போது அறிந்திருக்கவில்லை.
காரணம், அமெரிக்காவிடம் ‘புதிய ஆயுதங்கள்’ என்று பணம் பெற்றுக்கொண்டு, ஈரானுக்கு கொடுக்க தயாராக வைத்திருந்த ஆயுதங்களில் ஒரு பகுதி, இஸ்ரேலிய ஆயுத தொழிற்சாலையில் இருந்து புதிதாக வரவில்லை. ரகசிய ஆயுதக் களஞ்சியம் ஒன்றில் இருந்து வந்தன. அந்த ஒரு பகுதி ஆயுதங்களை இஸ்ரேல் பெற்றுக் கொண்டதே அரபு நாடுகளிடம் அடித்துப் பறித்துதான்.
உதாரணமாக இதில் கூறப்பட்ட இரண்டு லட்சம் கட்ய்ஷா ராக்கெட்டுகளில் பெரும்பகுதி, தெற்கு லெபனானில் இருந்து கைப்பற்றப்பட்டவை.
அவற்றையெல்லாம் சந்தடி சாக்கில காசாக்கிக் கொண்டது இஸ்ரேல்.
மேலே குறிப்பிட்டவை இஸ்ரேலிடம் இருந்து அமெரிக்காவால் பணம் கொடுத்து அனுப்பப்பட்ட ஆயுதங்கள் என்று கூறியிருந்தோம். ஈரானுக்கு தருவதாக ஒப்புக்கொண்ட ஆயுதங்களின் லிஸ்ட் அதைவிடப் பெரியது. இஸ்ரேலிடம் இவ்வளவு ஆயுதங்கள்தான் விற்பனைக்காக இருந்தன.
மீதி ஆயுதங்களில் ஒரு பகுதியை, ஆபத்துக்கு பாவமில்லை என்று அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்கு அனுப்பி, இஸ்ரேல் கொடுப்பதுபோலக் கொடுத்தார்கள்.
அரிசோனா மாகாணத்திலுள்ள மராமா விமானப் படைத் தளத்திலிருந்து 4000 TOW ஏவுகணைகள் இஸ்ரேலின் டெல்அவிவ் நகருக்கு அனுப்பப்பட்டன. இந்த ஏவுகணைகளை இஸ்ரேலுக்கு விற்பதாக கணக்கு காட்டினார்கள்.
ஏவுகணைகளுக்கான பணம், வாஷிங்டனில் இருந்த ஒரு வங்கி கணக்குக்கு, வாஷிங்டனில் உள்ள மற்றொரு வங்கிக் கணக்கில் இருந்து செட்டில் செய்யப்பட்டது.
பணம் கொடுத்ததும் அமெரிக்க அரசு. பெற்றுக் கொண்டதும் அமெரிக்க அரசு. ஆயுதங்கள் மட்டும் இஸ்ரேலுக்கு சென்றன.

அப்படியும், அமெரிக்கா கொடுத்த பட்டியலில் இருந்து ஆயுதங்கள் முழுமையடையவில்லை. எனவே, வேறு சில ஆயுத வியாபாரிகளின் மூலமாக வெளிச் சந்தையில் இருந்தும் ஆயுதங்கள் வாங்கி டெல்-அவிவ் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இவற்றை அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட ஆயுத தரகர்கள் வாங்கினார்கள்.
போலந்து நாட்டிலும் பல்கேரியாவிலும் இருந்து 8,000 SAM-7 (Surface-to-Air Missile-7) ஏவுகணைகள் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டன. சீனாவிலிருந்து ஒரு லட்சம் AK-47 துப்பாக்கிகளும் நூற்றுக்கணக்கான கடலிலிருந்து கடலுக்கு ஏவப்படும் Silkworm Sea-to-Sea ஏவுகணைகள் வாங்கப்பட்டன.
சுவீடனிலிருந்து இஸ்ரேலுக்குச் சென்றவை 105-mm ஆட்டிலரி பீரங்கிகளுக்கான ஷெல்கள். பெல்ஜியத்திலிருந்து சென்றன மேலதிக வானிலிருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணைகள்.
இந்த ஆயுதங்கள் அனைத்துமே, இஸ்ரேலிய ராணுவத்துக்கு என்று கூறப்பட்டே வாங்கப்பட்டன. அவற்றை ஏற்றுமதி செய்யும்போது அவற்றுக்கான ஆயுத வழங்கல் ஒப்பந்தத்தில், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சக அதிகாரி கையொப்பமிட்டார்.
இந்த ஆயுதங்களுக்கான அதிகாரபூர்வமாக கொடுக்கப்பட்ட ‘இறுதிப் பாவனையாளர் சான்றிதழ்களில்’  (EUC – End-user certificate), அவற்றின் இறுதி சேருமிடம் இஸ்ரேல் என்றே குறிப்பிடப்பட்டிருந்தன.
ஆயுத வியாபாரிகள் ஊடாக வாங்கப்பட்ட இந்த ஆயுதங்களை விற்ற நாடுகளுக்குக்கூட, ஆயுதங்கள், இறுதியில் போய்ச்சேரப்போகும் இடம் ஈரான் என்பதோ, ஆயுதங்களுக்கான பணத்தை செட்டில் செய்தது அமெரிக்கா என்பதோ தெரிந்திருக்கவில்லை.
டேவிட் கிம்சீயினால் அமைக்கப்பட்ட மூன்றாவது நபர்கள் அடங்கிய குழுதான் ஆயுதம் வாங்கும் ஏற்பாடுகள் அனைத்தையும் செய்தனர். டெல்அவிவ் நகருக்கு இந்த ஆயுதங்கள் ஒவ்வொரு ஷிப்மென்ட்டாக வரவர, உடனே ஆயுதப் பெட்டிகளை திறந்துகூட பார்க்காமல், நெகெவ் பாலைவனத்திலுள்ள IDF விமானத் தளத்துக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
நெகெவ் பாலைவன IDF விமானத் தளத்திலிருந்துதான் (ஹெட்செய்ம் விமானத்தளம்) தனியார் கார்கோ விமானங்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டு, முதலாவது செட் ஆயுதங்கள் ஆகஸ்ட் மாத இறுதியில் ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் போய் இறங்கின.
முதல் செட் ஆயுதங்கள் ஈரானின் கைகளுக்குப் போய் பத்திரமாகச் சேர்த்த விபரம் அமெரிக்காவுக்கு கிடைத்தது. ஆனல் பணயக் கைதிகள் பற்றி எந்தவிதமான நகர்வும் இருக்கவில்லை. பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பான எந்தவொரு சிக்னலும் தீவிரவாத அமைப்பிடமிருந்து கிடைக்கவில்லை.
ஏன்? என்னாச்சு?
வாஷிங்டன் டேவிட் கிம்சீயைத தொடர்பு கொண்டு கேட்டுப் பார்த்தது. டேவிட் கிம்சீயும் தனது ஈரானியத் தொடர்புகள் மூலமாக ஈரானிய அரசுக்குத் தகவலை அனுப்பினர்.
எதுவும் நடைபெறவில்லை.
ஈரானிய அரசிடமிருந்தும் தகவல் எதுவுமில்லை. தீவிரவாத அமைப்பிடமிருந்தும் எந்தவொரு தகவலும் இல்லை.
அமெரிக்க ஜனாதிபதி ரீகன் பொறுமை இழக்கத் தொடங்கினார். சி.ஐ.ஏ.வை காட்சிக்குள் கொண்டுவரலாமா என்று வாஷிங்டனில் ஆலோசிக்கப்பட்டது.
முதல் செட் ஆயுதங்கள் போய் சேர்ந்த பின்னரும், ஈரானிய அரசிடமிருந்தும் தகவல் எதுவுமில்லை. பணயக் கைதிகளை பிடித்து வைத்திருந்த தீவிரவாத அமைப்பிடமிருந்தும் எந்தவொரு தகவலும் இல்லை. அமெரிக்க ஜனாதிபதி ரீகன் பொறுமை இழக்கத் தொடங்கினார். சி.ஐ.ஏ.வை காட்சிக்குள் கொண்டுவரலாமா என்று வாஷிங்டனில் ஆலோசிக்கப்பட்டது என்று கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
ஆனால் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மக்பார்லேன் அந்த யோசனைக்கு எதிராக நின்றார். “சி.ஐ.ஏ. இதற்குள் இப்போது வரவேண்டாம். நாங்கள் வேறு விதமாக அணுகிப்பார்க்கலாம்” என்றார். (என்ன காரணம்? இன்றுவரை தெரியாது.)
மீண்டும் டேவிட் கிம்சீ இஸ்ரேலில் இருந்து வாஷிங்டனுக்கு அழைக்கப்பட்டார். மீண்டும் ஆலோசனை.
அதன்பின் வேறு ஒரு முடிவு செய்யப்பட்டது. டேவிட் கிம்சீயினால் அமைக்கப்பட்டிருந்த குழுவில் மேலும் இருவரைச் சேர்ப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. ஈரானிய அரசுக்கு தனிப்பட்ட ரீதியில் நெருக்கடி கொடுக்கக் கூடிய நபர்களாக அந்த புதிய ஆட்கள் இருக்கவேண்டும். அதே நேரத்தில் ரகசியத்தையும் கடுமையாக பாதுகாக்கக்கூடிய ஆட்களாகவும் அவர்கள் இருக்கவேண்டும்.
இந்தப் புதிய ஆட்களை தேர்ந்தெடுக்கும் வேலையை டேவிட் கிம்சீ பொறுப்பேற்றுக் கொண்டார்.
டேவிட் கிம்சீ தனது தொடர்புகள் மூலம் தேர்ந்தெடுத்த முதலாவது நபரே, ஒரு மிக ஆச்சரியமான தேர்வாக இருந்தது.
அவரின் பெயர் மைல்ஸ் கோப்லேன்ட் (மேலே போட்டோ பார்க்கவும்). உங்களுக்கு சர்வதேச அளவில் ‘திரைமறைவு டீல்களில்’ பரிச்சயம் இருந்தால், இந்த பெயரும் உங்களுக்கு பரிச்சயமாக இருக்கும். அப்படி இல்லையென்றால், இவரைப் பற்றியும் கொஞ்சம் சொல்லி விடலாம்.
இந்த மைல்ஸ் கோப்லேன்ட்டுக்கு இரண்டு முகங்கள் உண்டு. வெளிப்படையாக அறியப்பட்ட முகத்தில் இவர் ஒரு அமெரிக்க இசைக் கலைஞர், பிசினெஸ்மேன்.
இவரது இரண்டாவது முகம், முன்னாள் சி.ஐ.ஏ. உளவாளி. சி.ஐ.ஏ.வில் இவரது பின்னணி, பெரியது. மிடில் ஈஸ்ட் விவகாரங்களில் கில்லாடி.
இவரது உளவுத்துறை விளையாட்டுகள் 1940களின் இறுதியில் இருந்து உள்ளன. சி.ஐ.ஏ.வில் இவர் மிகவும் சீனியர் உளவாளி. அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. உருவாக்கப்பட்டது, செப்டெம்பர் 18, 1947-ம் ஆண்டு. அதே ஆண்டு, அதே மாதத்தில், சி.ஐ.ஏ.வில் இணைத்துக் கொள்ளப்பட்ட உளவாளி இவர்.
அதாவது, சி.ஐ.ஏ.வின் முதல் பேட்ச் உளவாளிகளில் இந்த மைல்ஸ் கோப்லேன்ட் ஒருவர் (ஓய்வுபெற்று, 1991-ம் ஆண்டு ஜனவரி 14-ல், தமது 74 வயதில் மரணமடைந்தார்)
சி.ஐ.ஏ. உருவான ஆண்டே, இவரது முதல் போஸ்ட்டிங் எங்கே தெரியுமா? சிரியா!
1949-ம் ஆண்டு மார்ச்சில் சிரியாவில் ஆட்சிக்கு ஏற்பட்ட புரட்சிக்கு பின்னால் திரைமறைவில் வேலை செய்தவர்களில் இவரும் ஒருவர். அப்போது, சிரியாவில் இவருடன் பணிபுரிந்த மற்றொரு சி.ஐ.ஏ. உளவாளி ஆர்சிபால்டு ரூஸ்வெல்ட். ஆம். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி தியோடோர் ரூஸ்வெல்ட்டின் மகன்!
அதன் பின்னரும் நீண்டகாலம் மிடில்-ஈஸ்ட்டிலே வேறு வேறு நாடுகளில் சி.ஐ.ஏ. உளவாளியாக செயல்பட்டவர் இவர். அங்கெல்லாம் இவர் சுற்றியது, ஒரு இசைக் கலைஞர் என்ற போர்வையில்! 1953-ல் ஈரானில் அப்போதைய பிரதமர் மொஹமெட் மொசாதிக் அரசுக்கு எதிராக சி.ஐ.ஏ. நடத்திய ‘ஆபரேஷன் ஏஜாக்ஸ்’, இவருடைய கைவண்ணம்தான்.
1968-ல் பெய்ரூட்டில் குடும்பத்துடன் வசித்ததுதான் இவரது மிடில்-ஈஸ்ட் கேரியரின் கடைசிக் கட்டம். அதன்பின் அமெரிக்கா திரும்பி, வெளியார் பார்வைக்கு பிசினெஸ்மேனாக வர்த்தகத்தில் ஈடுபட்டார். மறைமுகமாக சி.ஐ.ஏ.வின் அன்டர்-கவர் ஆபரேட்டிவ்வாகவும் இயங்கினார்.
1970களின் இறுதியில், (சில முரண்பாடுகள் காரணமாக) உளவுத்துறையில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.
இப்போது புரிகிறதா இவரது பின்னணி?
1970களில் உளவு வேலைகளில் இருந்து ஒதுங்கிக் கொண்ட முன்னாள் சி.ஐ.ஏ. உளவாளியான இவரைத்தான், 1985-ம் ஆண்டு ஈரானுக்கு ரகசிய ஆயுத சப்ளை செய்த ஆபரேஷனுக்குள் கொண்டுவந்தார், இஸ்ரேலியரான டேவிட் கிம்சீ

டேவிட் கிம்சீ ஒரு முன்னாள் மொசாத் அதிகாரி. அவரால் இதற்குள் கொண்டுவரப்படும் ஆட்களுக்கு மொசாத் தொடர்புகளோ இஸ்ரேலியத் தொடர்புகளோதான் இருக்கும் என்று வாஷிங்டன் எதிர்பார்த்தது. அதேநேரத்தில், இந்த விவகாரத்துக்குள் சி.ஐ.ஏ. தொடர்புபடுவதை வாஷிங்டன் விரும்பவில்லை என்பதும் டேவிட் கிம்சீக்கு சொல்லப்பட்டிருந்தது.
அப்படியிருந்தும் டேவிட் கிம்சீ இதற்குள் முன்னால் சி.ஐ.ஏ. அதிகாரியான மைல்ஸ் கோப்பலேன்டைக் கொண்டு வந்திருந்தார்.
டேவிட் கிம்சீ இந்த மைல்ஸ் கோப்பலேன்டை ரகசிய ஆயுத ஆபரேஷனுக்கு உள்ளே கொண்டுவந்த காரணம் என்ன? பின்னாட்களில் உளவு வட்டாரங்களில், நான்கைந்து விதமான கதைகள் அடிபட்டன.
அதில் ஒரு கதை சுவாரசியமானது. – மைல்ஸ் கோப்பலேன்டை ரகசிய ஆயுத ஆபரேஷனுக்கு உள்ளே கொண்டு வந்து, வாஷிங்டனுக்கு வெறுப்பேற்றி, அவர்களாகவே தன்னை இதிலிருந்து கழட்டிவிடட்டும் என்று டேவிட் கிம்சீ யோசித்தாராம்! (ஆனால், அமெரிக்கா கிம்சீயை கழட்டி விடவில்லை)
நிஜ கதை எப்படியோ, டேவிட் கிம்சீ கொண்டுவந்த இந்த முன்னாள் சி.ஐ.ஏ. உளவாளிக்கு ஈரானில் பல ‘வில்லங்கமான’ ஆட்களுடன் தொடர்புகள் இருந்தது என்பதை மறுக்க முடியாது. வில்லங்கமான ஆட்கள் என்றால் எப்படி?
மன்னர் ஷா இருந்த காலத்தில் ஈரானில் இருந்த சி.ஐ.ஏ. ஆபரேஷனுக்கு மைல்ஸ் கோப்பலேன்ட்தான் பீல்ட் அதிகாரியாக இருந்தார்.
மன்னர் ஷாவின் ஆட்சிக்கு எதிராகப் புரட்சிகள் திட்டமிடப்படுகின்றன. எந்தநேரத்திலும் அவரது ஆட்சி கவிழ்ந்து போகலாம் என்பதை சி.ஐ.ஏ. ஏற்கனவே அறிந்து வைத்திருந்தது. மன்னர் ஷா அமெரிக்காவின் ஆள் என்பதால் அதுபற்றி அவருக்கும் எச்சரித்திருந்தது சி.ஐ.ஏ.
இருந்தபோதிலும், காரியம் கைமீறிப் போகத் தொடங்கியது. புரட்சியாளர்களின் கை நாளுக்குநாள் ஓங்கியது. அமெரிக்கா முடிந்தவரை மன்னர் ஷாவை ஆட்சியில் வைத்திருக்க விரும்பியது.
அதற்காக சி.ஐ.ஏ. யின் தலைமையகத்தால் களத்தில் இறக்கிவிடப்பட்டவர் இந்த மைல்ஸ் கோப்பலேன்ட்தான்.
மன்னர் ஷா ஆட்சியிலிருந்து துரத்தியடிக்கப்படுவதற்கு முதல்நாள் இரவு, கோப்பலேன்ட் விசித்திரமான காரியம் ஒன்றை செய்தார்.
அன்றிரவு, சி.ஐ.ஏ.வுக்குக் கிடைத்த உளவுத் தகவல்களின்படி, நிலைமை மிக மிக மோசம் என்பது கோப்பலேன்ட்டுக்கும் புரிந்து போயிருந்தது. ஷாவின் ஆட்சிக்காலம் அடுத்த சில மணி நேரங்களில்கூட முடிந்துபோகலாம் என்பதைப் புரிந்துகொண்ட அவர் விநோதமான காரியம் ஒன்றைச் செய்தார்.
ஈரானில் இருந்த சி.ஐ.ஏ.வின் ஏஜென்ட்டுகள், தகவல் கொடுக்கும் லோக்கல் ஆட்கள் எல்லோரையும், இரவு 8 மணிக்கு ஒரு இடத்துக்கு வரச்சொன்னார். அந்த இடத்தில் சாக்குப் பைகளில் அமெரிக்க டாலர்கள் நூறு நூறு டாலர் நோட்டுக் கட்டுகளாக இருந்தன.
ஒவ்வொரு ஏஜன்ட்டிடமும் ஒவ்வொரு சாக்குப்பை பணத்தைக் கொடுத்து தெஹ்ரான் நகர வீதிகளுக்கு அனுப்பினார். எந்தவொரு ஈரானிய பிரஜை “மன்னர் ஷா வாழ்க” என்று கோஷமிடுகிறாரோ, அவருக்கு 100 டாலர் நோட்டு வழங்கப்பட்டது.
ஆனால் சிலமணி நேரத்தில், அதிகாலையில் புரட்சி வெடித்து மன்னா ஷா ஈரானைவிட்டே தப்பியோடியது வேறு விஷயம்.
இப்படி விசித்திரமான நடவடிக்கையுடைய கோப்பலேன்ட்டை.. அதுவும் மன்னர் ஷாவின் ஆட்சியை கடைசி நேரத்தில் காப்பாற்ற முயற்சித்த முன்னாள் சி.ஐ.ஏ. உளவாளியை.. மன்னர் ஷாவைத் துரத்திவிட்டு ஆட்சி செய்யும் ஈரானிய அரசுடன் டீல் பண்ண டேவிட் கிம்சீ ஏற்பாடு செய்தபோது, அந்த லாஜிக் யாருக்கும் புரியவில்லை.
இவரைவிட வேறு ஒருவரையும் இந்த ரகசிய ஆயுத ஆபரேஷன் குழுவுக்குள் கொண்டுவந்தார் டேவிட் கிம்சீ.
அவரது அடையாளம் பற்றிய குழப்பமான தகவல்களே இருக்கின்றன. அவர் ஒரு முன்னாள் பிரிட்டிஷ் விமானப்படை அதிகாரி என்றும், பதவியிலிருந்து விலகி லண்டனில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார் என்றும் கூறப்படுகின்றது. அதைவிட வேறு விபரங்கள் தெரியவில்லை. அந்த நபர் தன்னுடைய அடையாளங்களை வெளிக்காட்ட விரும்பாமல் இருக்கலாம் என்பது ஒரு ஊகம்.
மற்றுமோர் ஊகமும் இருக்கிறது. வில்லங்கமான அந்த அந்த இரண்டாவது ஊகம் என்ன தெரியுமா?
அப்படியொரு நபரே இல்லை. ஆனால், இருப்பதுபோல காட்டப்பட்டார், ஒரு காரணத்துக்காக!
உளவுத்துறைகளின் திரைமறைவு விளையாட்டுகளில்தான் இப்படியான விசித்திர சம்பவங்கள் நடக்கும். இந்த விவகாரத்தை அடுத்த பகுதியில் – அதுதான் தொடரின் இறுதிப் பகுதி

டேவிட் கிம்சீ, ரகசிய ஆயுத சப்ளை குழுவுக்குள் கொண்டுவந்த இரண்டாவது நபர் பற்றி கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். அந்த நபர் யார் என்பதில் பலத்த குழப்பம் எனவும் குறிப்பிட்டிருந்தோம்.
அவர் பற்றிய ரகசியங்கள் மறைக்கப்பட்டது ஏன்?
ஒரு ஊகம், நிஜமாகவே தமது அடையாளங்கள் வெளியே தெரியவருவது அவருக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம்.
இரண்டாவது மற்றொரு ஊகம் உண்டு. அதுதான் வில்லங்கமானது. அந்த இரண்டாவது ஊகம்-
அப்படியொரு நபரே இல்லை.
ஆம். பிரிட்டிஷ் விமானப்படையின் முன்னாள் அதிகாரி என்று இவர்களே ஒரு கற்பனை நபரை செட்டப் பண்ணியிருந்தார்கள் என்பதாகவும் ஒரு ஊகம் உளவு வட்டாரத்தில் உண்டு.
என்ன காரணம்? அது கொஞ்சம் விவகாரமான காரணம்தான்!
டேவிட் கிம்சீயினால் அமைக்கப்பட்ட இந்த குழுவின் உறுப்பினர்களுக்கு, ரகசிய ஆயுத விற்பனை டீல் சரியாக நடந்து முடிந்தால், ஆயுத பெறுமதியில் 10 சதவிகித கமிஷன் கொடுக்கப்படும் என்பதுதான் ஒப்பந்தம் என்று கூறியிருந்தோம் அல்லவா…
அந்த 10 சதவிகிதமும் போய்ச் சேரப்போவது டேவிட் கிம்சீயினால் நியமிக்கப்பட்ட ஆட்களுக்கே தவிர, அவர்களை நியமித்த டேவிட் கிம்சீக்கு அல்ல. அவருக்குக் கிடைக்கப்போவது வெறும் மாதச் சம்பளம்தான் – இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு வழங்கும் சம்பளம் மட்டுமே!
அதனால்தான் புதிதாக, ஒரு பிரிட்டிஷ்காரர் என்று ஒரு ‘கற்பனைப் பாத்திரத்தை’ உருவாக்கி, அந்த நபருக்கும் ஒரு பங்கு போவதாக செட்டப் செய்யப்பட்டது என்று ஊகிக்கப்படுகிறது. (இது சி.ஐ.ஏ.வின் ஆசீர்வாதத்துடன் நடந்ததாம். இஸ்ரேலிய அரசுக்கும் ஆட்சேபணை கிடையாதாம்)
எது எப்படியோ, இந்த நிழலான ஆட்களை கொண்ட குழுவை வைத்துக் கொண்டு ஈரானிய அரசுக்கு டேவிட் கிம்சீ நெருக்கடி கொடுத்தார் என்பது, இன்றுவரை உளவுத்துறை வரலாற்றில் ஆச்சரியமான நிகழ்வுதான். அதுவும், அன்றைய ஈரானிய அரசின் உயர்மட்ட பிரதிநிதிகளை நாட்டை விட்டு வெளியே வரவைத்து, ஐரோப்பிய நகரம் ஒன்றில், ஈரானிய அரசின் முன்னாள் எதிரியான மைல்ஸ் கோப்லேன்ட்டுடன் பேச வைத்ததே, பெரிய ஆச்சரியம்தான்.
முதல் ரவுண்ட் சந்திப்பில், ஈரானிய பிரதிநிதிகளும், மைல்ஸ் கோப்லேன்ட்டும் பேச, அடுத்த சந்திப்பில் டேவிட் கிம்சீ தாமே நேரடியாக (ரகசியமாக) சென்று கலந்து கொண்டார்.
டேவிட் கிம்சீ அமைத்த குழுவில் இருந்த மற்றையவர்கள், இந்த ரகசிய டீல் வெளியாகாதவாறு சில அரசியல் விளையாட்டுகளை செய்தார்கள். இந்த விவகாரத்தை மணந்துபிடித்த இரு அரபு நாட்டு உளவுத்துறைகளை வாய் திறக்க விடாது செய்தார்கள்.
‘நிழல்’ நபர்களை கொண்ட இந்த குழு, ஈரானுக்கு வெளியே இயங்கி செய்த திரைமறைவு வேலைகளால், ஆச்சரியமான சம்பவம் ஒன்று நடந்தது. செப்டெம்பர் மாதம் 14-ம் தேதி, பணயக் கைதிகளில் ஒருவரை விடுதலை செய்தது தீவிரவாத இயக்கம்.
ஈரானுக்கு முதல் லோட் ஆயுதங்கள் போய்ச் சேர்ந்து சுமார் 3 வாரகாலத்தில் முதலாவது பணயக் கைதி விடுவிக்கப்பட்டார்.
அப்படி விடுதலை செய்யப்பட்ட பணயக் கைதியின் பெயர் பென்ஜமின் வெய்ர்.
இவரது விடுதலைக்கு முன் தினம்கூட, அவரது விடுதலை நிச்சயமில்லாமல் இருந்தது. ஈரானிய அரசு தொடர்ந்து தயங்கியபடி இருந்தது. அப்போதுதான், டேவிட் கிம்சீயின் குழு, தமது ‘ட்ரம்ப் கார்டை’ மேஜையில் தூக்கிப் போட்டது என்கிறார்கள் உளவு வட்டாரத்தில்.
அதைப் பார்த்தபின், ஈரானிய அரசால் மறுக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.
அது என்ன ட்ரம்ப் கார்ட்? ‘பெய்ரூட் ட்ரம்ப்’ என்கிறார்கள், உளவு வட்டாரத்தில்

முதலாவது பணயக்கைதி விடுவிக்கப்படுவதற்கு முதல் தினம், செப்டெம்பர் 13-ம் தேதி, மைல்ஸ் கோப்பலேன்ட் அவசரமாக பெய்ரூட் நகருக்கு புறப்பட்டு சென்றார். அங்கே ஹோட்டல் ஒன்றில் தங்கி, ஹோட்டல் ரூமை விட்டு வெளியே வராமல் உள்ளேயே இருந்துவிட்டு, மறுநாள் பெய்ரூட்டில் இருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.
கோப்பலேன்ட் எதற்காக பெய்ரூட் சென்றார் என்ற தகவல், இன்றுவரை வெளியாகவில்லை. சும்மா ஒரு ஹோட்டல் ரூமில் தங்குவதற்காக அவர் பெய்ரூட் வரை சென்றிருக்க முடியாது. அவரது ரூமுக்குள் யாரோ அவரை சந்தித்திருக்க வேண்டும்.
ஈரானிய அரசின் மிக முக்கிய நபர் ஒருவரையே அங்கு சந்தித்தார் என்பதே ஊகம்.
அவடன் மைல்ஸ் கோப்பலேன்ட் என்ன பேசினார், அல்லது ‘ஏதாவது உபயோகமான தகவலை’ ஈரானுக்குக் கொடுத்தாரா என்பதுபற்றி உறுதியான தகவல்கள் இல்லை.
ஆனால், உளவு வட்டாரங்களில் அதிலும் ஒரு ஊகம் செய்யப்படுகிறது.
மன்னர் ஷா நாட்டைவிட்டுத் தப்பிச் செல்லுமுன், பெருமளவு பணத்தை நாட்டுக்கு வெளியே அனுப்பிவிட்டுத்தான் தப்பிச் சென்றார். அது தெரிந்த விஷயம். ஆனால், தெரியாத விஷயம் என்னவென்றால், வெளியே போனது, மன்னர் ஷாவின் பணத்தின் ஒரு பகுதிதான். மற்றொரு பகுதி பணம், ஈரானிலேயே தங்கிவிட்டது.
அவசரகதியில் நாட்டைவிட்டு தப்பியோடியபோது, எடுத்துச் செல்ல முடியாத மீதி பணம், ஈரானில் ரகசிய இடம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது என்றும், அது மன்னர் ஷாவின் நம்பிக்கைக்குரிய நபர் ஒருவரின் மேற்பார்வையில் மறைத்து வைக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.
மன்னர் ஷா தப்பியோடிய பின்னர், புதிய ஈரானிய அரசு, ஷாவின் அரண்மனையையும் மற்ற அரசு பிலிடிங்குகளையும் துருவித்துருவிச் சோதனையிட்டுப் பார்த்தும், எதுவும் கிடைத்திருக்கவில்லை.
அந்தப் பணம் மறைத்து வைக்கப்பட்ட இடம் பற்றி மன்னர் ஷாவின் காலத்தில் தெஹ்ரானில் சி.ஐ.ஏ. ‘டாப் நபராக’ இருந்த கோப்லேன்ட்டுக்கு ஏதோ தெரிந்திருக்க வேண்டும் என்றும், அதையே அவர் ‘ட்ரம்ப் கார்ட்டாக’ பயன்படுத்தினார் என்றும் ஒரு கதை உண்டு.
அந்தக் கதை எந்தளவுக்கு உண்மையோ தெரியாது. ஆனால், பெய்ரூட்டில் இருந்து கோப்லேன்ட் விமானம் ஏறிய இரண்டு மணி நேரத்தில், முதலாவது பணயக்கைதி எந்தவித சிக்கலுமில்லாமல் விடுவிக்கப்பட்டார் என்பது உண்மை.
தொடர்ந்து ஆயுதங்கள் ரகசியமாக செட் செட்டாக இஸ்ரேலின் பாலைவன விமான தளத்தில் இருந்து வாடகை விமானங்கள் மூலம் தெஹ்ரான் போய்ச் சேரசேர, மீதி பணயக் தைகிகளும் விடுவிக்கப்பட்டார்கள்.
இந்த ரகசிய ஆபரேஷன் முழுமையாக முடிவடைய சில மாதங்கள் எடுத்தன. அதற்குள் டேவிட் கிம்சீ, இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சின் வேறு அலுவல்களை பார்க்க வேண்டும் என்று டெல்-அவிவ் சென்று, தமது இடத்துக்கு அமிராம் நிர் என்பவரை டிசம்பர் மாதத்தில் அனுப்பி வைத்தார்.
அனைத்து ஆயுதங்கள் போய் சேர்ந்ததையும், அனைத்து பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டதையும் உறுதி செய்யும்வரை, இந்த அமிராம் நிர் தொடர்பாளராக பணிபுரிந்தார்.
கடைசிவரை இந்த ரகசிய ஆபரேஷனில் அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. தொடர்பு படுத்தப்படவேயில்லை. இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தும் நேரடியாக தொடர்பு படவில்லை. ஆனால் காரியம் செய்தவர்கள் அனைவருமே அந்த இரு உளவுத்துறைகளின் முன்னாள் அதிகாரிகள்தான்.
எல்லாம் முடிவடைந்தபோது, டேவிட் கிம்சீயினால் நியமிக்கப்பட்ட குழுவில் இருந்தவர்களுக்கு 10 சதவிகித கமிஷனாக ஒவ்வொருவருக்கும் 7 மில்லியன் அமெரிக்க டாலர் தொகை கிடைத்ததாக கூறப்படுகின்றது. அந்த நாட்களில் அது பெரிய பணம்.
அமெரிக்கர்களுக்கு பணயக் கைதிகள் உயிருடன் கிடைத்தார்கள். ஈரானியர்களுக்கு ஆயுதங்கள் கிடைத்தன.
டேவிட் கிம்சீக்கும் 7 மில்லியன் அமெரிக்க டாலர், ‘கற்பனை பிரிட்டிஷ்காரர் கதாபாத்திரத்தின்’ பெயரில் கிடைத்ததாக காற்றுவாக்கில் ஒரு கதை உண்டு.
கிடைத்திருந்தால் என்ன தப்பு? கிம்சீயை தவிர வேறு யாராலும் இந்த ஆபரேஷனை செய்திருக்கவே முடியாது



முற்றும்  .....







Comments

Popular posts from this blog

Working Torrent Trackers list updated Oct 2016...

Language C++----Templates in C++----Part 3

Xender for PC Windows Download : Fast File Transfers