கடவுளை விடவும் மேலானது கடவுள் நம்பிக்கை!
‘‘என்ன... இப்படி சோர்ந்து போய் நடந்து வந்துக்கிட்டு இருக்கே?’’
‘‘நடக்கவே முடியலை... அவ்வளவு சோர்வு. உடம்பில் ஏதோ கோளாறு... டாக்டர்கிட்டே போகணும்!’’ ‘‘அதுக்கும் முன்னாடி கடற்கரைப் பக்கம் போகலாம் வா!’’ ‘‘அங்கே எதுக்கு?’’ ‘‘அங்கே ஒருத்தன் ‘சுறுசுறுப்பு டானிக்’ விற்கிறான். தினமும் காலையிலேயே ஒரு ‘ஸ்பூன்’ சாப்பிட்டா போதும். நாள்பூரா உற்சாகமா இருக்கும். சுறுசுறுப்பு தானா வந்துடும்.!’’ ‘‘அப்படியா சொல்றே?’’ ‘‘ஆமாம்... நான் கூட வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்தேன். நல்ல பலன் இருக்கு... நிறைய பேர் தினம் வந்து வாங்கிட்டுப் போறாங்க!’’ ‘‘அப்படின்னா சரி... வா போகலாம்!’’ இருவரும் கடற்கரை நோக்கி நடந்தார்கள். அங்கே அவன் அந்த மருந்தை (டானிக்!) விற்றுக் கொண்டிருந்தான். அது அமோகமாக விற்பனை ஆகிக் கொண்டிருந்தது. இவனும் போய் ஒரு பாட்டில் மருந்து வாங்கிக் கொண்டான். அதன் பிறகு அந்த மருந்தைத் தொடர்ந்து சாப்பிட ஆரம்பித்தான். என்ன ஆச்சரியம்! சோர்வாக இருந்த உடம்புக்குள் சுறுசுறுப்பு தெரிய ஆரம்பித்தது. உற்சாகமாக நடக்க ஆரம்பித்தான். நண்பனைத் தேடிப் போய் நன்றி சொன்னான், ஒரு நல்ல மருந்தை அறிமுகம் செய்து வைத்ததற்காக! கொஞ்ச காலம் கழிந்தது. கைவசம் இருந்த மருந்து தீர்ந்து போனது. மறுபடியும் வாங்க வேண்டும். கடற்கரைக்குப் போனான். அங்கே அவனைக் காணவில்லை. மருந்து விற்பவன் என்ன ஆனான்? வேறு ஊருக்கு போயிருப்பானோ? பல ஊர்களிலும் தேடிப் பார்த்தார்கள். பலன் இல்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு நாள்& இவர்கள் கடற்கரைக்குப் போனபோது அங்கே அவன் இருந்தான். இப்போது அவன் மருந்து விற்பனை செய்யவில்லை. பலூன் விற்றுக் கொண்டிருந்தான். ‘‘என்ன ஆச்சு உனக்கு... எங்கேயெல்லாம் உன்னைத் தேடுறது? அந்த ‘சுறுசுறுப்பு டானிக்’ இன்னும் கொஞ்சம் வேணுமே? அதுசரி... இவ்வளவு நாள் எங்கே இருந்தே?’’ ‘‘ஜெயில்லே இருந்தேன்...!’’ ‘‘ஜெயிலா? என்ன ஆச்சு?’’ ‘‘போலி மருந்து விற்பனை பண்ணினதுக்காக இரண்டு வருடம் சிறைத் தண்டனை!’’ ‘‘போலி மருந்தா... என்ன சொல்றே?’’ ‘‘ஆமாம்... நான் உங்ககிட்டே விற்பனை பண்ணினது உண்மையிலேயே சுறுசுறுப்பு டானிக் இல்லை!’’ ‘‘அப்படிச் சொல்லாதே! அதைச் சாப்பிட்டதும் எங்க உடம்பு சுறுசுறுப்பு ஏற்பட்டது உண்மை!’’ ‘‘இருக்கலாம். அதுக்குக் காரணம் மருந்து இல்லை... நம்பிக்கை!’’ ‘‘என்னப்பா சொல்றே?’’ ‘‘நான் உங்ககிட்டே வித்தது வெறும் தண்ணிதான். உப்பு, மிளகு, சீரகம், வெந்தயம் இதையெல்லாம் பொடி செய்து அதுலே கலந்திருந்தேன்... அவ்வளவுதான். இதைச் சாப்பிட்டதும் சுறுசுறுப்பு வந்துட்டதா நீங்க நினைச்சிட்டீங்க. உங்க நினைப்புதான் உங்களின் உந்து சக்தி!’’ இப்படி சொல்லிவிட்டு அந்த மனிதன் பலூன் விற்கப் போய்விட்டான். இவர்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள். ஒரு சிக்கலான கேள்விக்கு விடை கிடைத்தது. கேள்வி: நமக்கு முக்கியம் கடவுளா? கடவுள் நம்பிக்கையா? பதில்: கடவுளை விடவும் மேலானது கடவுள் நம்பிக்கை! |
||
|
Comments
Post a Comment