இசை'வாக இருவர்!

நகரில் இசை நிகழ்ச்சி ஒன்று நடப்பதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியைக் காண ஆசைப்பட்டான் ஒருவன். ஆனால், நுழைவுச்சீட்டு இல்லை!
கலக்கத்துடன் இருந்தவனுக்கு, பிரபல பத்திரிகை ஒன்றில் ஓவியராகப் பணிபுரியும் நண்பன் ஒருவன் உதவ முன்வந்தான். ''எங்கள் அலுவலகத்தில், ஓவியருக்கென நுழைவுச் சீட்டு ஒன்று உண்டு. அதை உனக்குத் தருகிறேன்'' என்று நண்பன் சொன்னதும் நம்மவனுக்கு உற்சாகம் கரைபுரண்டது.
இசை நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று, நண்பன் தந்த நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு இசையரங்கத்துக்குச் சென்றான். அங்கே, நுழைவாயிலில் நின்றவர், இவனை சந்தேகத்துடன் பார்த்தார்.
''நீங்க... அந்தப் பத்திரிகையின் ஓவியர்தானா?'' என்று கேட்டார்.
''ஆமாம்...'' என்றான் தயங்கியபடி.
உடனே அவர், ''அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் இப்பத்தான் உள்ளே போனார். வாங்க அவரைப் பார்க்கலாம்'' என்று கூற, ஆடிப்போய் விட்டான் நம்ம ஆள்!
'இனி, பின்வாங்க முடியாது... என்ன நடக்கப் போகிறதோ? தான் ஓவியர் இல்லை என்ற உண்மை தெரிந்துவிட்டால், வெளியே அனுப்பி விடுவார்களோ? இசை நிகழ்ச்சியைப் பார்க்க முடியாதே' - தயக்கமும் குழப்பமுமாக அவரைப் பின்தொடர்ந்தான்.
அவர்... முதல் வரிசை நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரிடம் மிகவும் பவ்யமாக, ''ஐயா! ஒரு சந்தேகம்...'' என்றார் இவனை அழைத்துச் சென்றவர்.
'என்ன?' என்பது போல் பார்த்தார் அவர்!
''இவரை உங்களுக்குத் தெரியுமா?''
உடனே, நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த நபர், நம்ம ஆளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ''ஏன், எதுக்குக் கேட்கறீங்க?'' என்றார் அழைத்து வந்தவரிடம்!
''இல்ல... இவர், உங்க பத்திரிகையின் ஓவியரான்னு தெரிஞ்சுக்கணும்?''
''ஆமாம்... இல்லேன்னு யார் சொன்னது?'' - கோபத்துடன் பதில் சொன்னார் அவர்!
அவ்வளவுதான்... நம்ம ஆளை சந்தேகப்பட்டவர், இருவரிடமும் மாறி மாறி மன்னிப்பு கேட்டு விட்டு, ''உங்க ஆசிரியர் பக்கத்துலேயே நீங்களும் உட்கார்ந்துக்கோங்க'' என்று இவனிடம் கூறிவிட்டு வாசலுக்கு நகர்ந்தார்.
நம்ம ஆளுக்கு போன உயிர் திரும்பி வந்தது.
மெள்ள ஆசிரியரின் பக்கம் திரும்பி, ''ஐயா... என் மானத்தைக் காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றி!'' என்றான் நெகிழ்ச்சியுடன்.
உடனே அவர், ''இதுக்கு எதுக்கு தம்பி நன்றி? ஒருத்தருக் கொருத்தர் செய்ற உதவிதானே இது!'' என்றார்.
இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவரே தொடர்ந்தார்: ''என்ன புரியலையா? நானும் பத்திரிகை ஆசிரியர் இல்லப்பா. உன்னைப் போல ஓசி டிக்கெட் வாங்கிட்டு வந்தவன்தான்!'' என்றார் சிரித்தபடி.
நண்பர்களே! இன்றைய ஆன்மிக உலகமும் இப்படித்தான் உள்ளது. சீடர்களாக வேடம் தரித்தவர்கள், குருவாக வேடம் தரித்தவர்களிடம் சென்று ஆசி வாங்குகிறார்கள். வேடம் கலைய வேண்டும்; வெளிச்சம் தெரிய வேண்டும்.
அப்போதுதான் உண்மையை அடையாளம் காண முடியும்.

Comments

Popular posts from this blog

Working Torrent Trackers list updated Oct 2016...

Language C++----Templates in C++----Part 3

Xender for PC Windows Download : Fast File Transfers