லவகுசா பகுதி-7 எதற்கும் கலங்காத அந்த மாவீரன் லட்சுமணன், அப்போதும் குனிந்த தலை நிமிரவில்லை. அண்ணியாரே! தாங்கள் களங்கமில்லா மதிமுகம் கொண்ட என் சகோதரனின் மனைவி. உங்கள் முகம் பார்த்து பேசும் தகுதி எனக்கில்லை. எனக்கு வார்த்தைகளும் வரவில்லை. நான் செய்த பாவத்தின் பலனாக, தங்கள் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்கும் துர்பாக்கியவான் ஆனேன், என்றவன், அவளது திருவடியை வணங்கிவிட்டு, கங்கையைக் கடந்து அயோத்திக்கு விரைந்தான். அவனது தேர் மறைந்தது கண்டு, சீதை கதறினாள். ஐயோ! எனக்கு இதற்கு முன் காட்டில் பாதுகாப்பாக இருந்த இந்த இளையவனும் போய்விட்டானே! நான் பாதுகாப்பற்ற பதுமை ஆகிவிட்டேனே, என அரற்றினாள். ஏ விதியே! இலங்கையில் கொடிய ராவணனின் சிறையில் அடைபட்டுக் கிடந்தது போதாதென்று, இப்போது பெரும்பழியை என் மீது சுமத்தி, இங்கே கொண்டு வந்து சேர்த்தாயோ? இந்த துயரத்திற்கு என்று தான் விடிவு? இந்தப் பிறவியில் உன்னைத் தவிர வேறு யாரையும் தொடமாட்டேன் என எனக்கு சத்தியம் செய்த ராமனே, என் மீது களங்கம் சுமத்தி கானகத்தில் விடச் செய்தாயே! இன்னும் ஏதாவது செய்ய பாக்கி வைத்திருக்கிறாயா? தேவர்களாலு...