இஸ்ரேல் உளவுத்துறையின் அதிரடிகள் -I

1980-ம் ஆண்டு, ஜனவரி மாதம். புதுவருடம் பிறந்து ஓரிரு நாட்கள்.
இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்துக்கு நம்பத்தகுந்த உளவுத் தகவல் ஒன்று கிடைத்தது. பிரான்ஸ் ரகசியமாக ஈராக்குக்கு அணுஆயுதத் தொழிற்சாலை ஒன்றை அமைக்க உதவுகிறது என்பதே அந்த உளவுத் தகவல்.
உதவியின் முதல் கட்டமாக தங்களிடம் இருந்த சக்தி வாய்ந்த அணுசக்தி ரியாக்டர் எந்திரம் ஒன்றையும், கொடுத்து அதை ஈராக்கில் நிறுவுவதற்காக தொழில்நுட்ப வல்லுனர்களையும் பிரான்சில் இருந்து அனுப்பி வைக்க போகிறார்கள் என்ற தகவல் மொசத்தின் தலைமையகத்தைச் சென்றடைந்தது.
தகவல் கிடைத்தவுடன் மொசாத் சுறுசுறுப்பாகியது.
மேலதிக உளவுத் தகவல்களைத் திரட்டுவதற்கு ஈராக்குக்கும் பிரான்ஸூக்கும் ஏஜன்ட்டுகளை அனுப்பி வைத்தது மொசாத். அப்படிச் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கிடைத்த விபரங்கள்-
- ஈராக்கில் அணு ஆயுதத் தயாரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வருவது நிஜம்தான்.
- அதற்காக பிரான்ஸ் தமது தொழில்நுட்ப வல்லுனர்கள் சிலரை ஈராக்குக்கு அனுப்பி வைத்திருக்கிறது என்ற தகவலும் நிஜம்தான்.
- பிரெஞ்ச் தொழில்நுட்ப வல்லுனர்கள் இன்னமும் ஈராக்கிலேயே தங்கியிருக்கிறார்கள்.
- பிரான்ஸால் அனுப்பிவைக்கப்பட்ட ரிபாக்டர் எந்திரம் ஈராக்குக்குள் வந்துவிட்டது. அணு ஆயுதத் தொழிற்சாலை அமையவிருக்கும் பில்டிங்குக்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டது.
- ஈராக்கில் இந்த பில்டிங் இருப்பது பக்தாத்துக்கு வடக்கேயுள்ள அல்-ருவெய்த்தா என்ற சிறு நகரத்தில்.
இவ்வளவு விபரங்களையும் தமது உளவாளிகள் மூலம் அறிந்து கொண்ட மொசாத், தகவல்களை இஸ்ரேலியப் பிரதமரின் பார்வைக்கு அனுப்பியது. இஸ்ரேலிய அரசு உயர்மட்டத்தில் ஆலோசனைகள் நடைபெற்றன. இறுதியில் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டது.
அந்தத் தீர்மானம் -
அல்-ருவெய்த்தாவிலுள்ள அணு ஆயுத தொழிற்சாலை மீது, விமானத் தாக்குதல் நடத்தி, முழுமையாக அழிப்பது!
இந்த தாக்குதலை மிக விரைவில் செய்ய விரும்பியது இஸ்ரேலிய அரசு. காரணம், ஈராக்கின் அணு ஆயுத தொழிற்சாலை அப்போதுதான் அமைக்கப்பட்டு வந்தது. பில்டிங்கில் ரியாக்டர் எந்திரம் இருந்தாலும் இன்னமும் தயாரிப்பு ஆரம்பமாகவில்லை. யுரேனியம் ரொட்கள் (uranium rods) இன்னமும் ஈராக்குக்குள் போய்ச் சேரவில்லை.
யுரேனியம் ரொட்கள் தொழிற்சாலைக்குள் போவதற்கு முன்பே தொழிற்சாலையையும் அதிலுள்ள ரியாக்டர் எந்திரத்தையும் தரைமட்டமாக்கி விடவேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் என்னாகும்? யுரேனியம் ரொட்கள் தொழிற்சாலைக்கு உள்ளே போய்ச் சேர்ந்தபின் தாக்குதல் நடத்தினால், அந்தப் பகுதி முழுவதும் அணுக் கதிர்வீச்சு ஏற்பட்டு விடும்.
அணுக் கதிர்வீச்சு பரவி இஸ்ரேல் வரை வந்தாலும் வரலாம்.
இஸ்ரேலிய அரசு இப்படியான தீர்மானம் ஒன்றுக்கு வந்து விட்டாலும், ஈராக்கின் தொழிற்சாலையை குண்டுவீசி அழிக்கும் யோசனையை ஒருவர் எதிர்த்தார்.
அவர்தான் யிட்சாக் கோஃபி. இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தின் அன்றைய தலைவர்.
எதிர்ப்புத் தெரிவித்ததற்கு அவர் கூறிய காரணம்: இந்த விமானக் குண்டுவீச்சு தாக்குதலை ரகசியமாகச் செய்ய முடியாது. இஸ்ரேலிய விமானப்படை விமானங்களில் இருந்து குண்டு வீசப்பட்டு ஒரு மணி நேரத்துக்கு உள்ளேயே கதை வெளியே தெரியவந்து விடும். – இஸ்ரேல்தான் குண்டுவீச்சின் பின்னணியில் உள்ளது என்ற விபரமும் வெளியே வந்து விடும்.
அதன்பிறகு மேலை நாடுகளின் அரசியல் ரீதியான எதிர்ப்பை இஸ்ரேல் சமாளிக்க வேண்டியிருக்கும்

அதைவிட மற்றுமோர் அபாயமும் இதில் இருந்ததை மொசாத்தின் தலைவர் யிட்சாக் கோஃபி சுட்டிக் காட்டியிருந்தார். ஒரு வேளை இஸ்ரேலிய விமானங்கள் ஈராக்கின் அணு ஆயுத தொழிற்சாலை பில்டிங்கில் குண்டு வீசுகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் அதே பில்டிங்கில்ல் பிரான்ஸ் அரசால் அனுப்பிவைக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுனர்களும் இருந்தால்?
அவர்களும் கொல்லப்படுவார்கள்.
அப்படி நடந்து விட்டால், இஸ்ரேலுக்கும் பிரான்ஸூக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் பாதிக்கப்படும்.
அது மட்டுமல்ல, பிரான்ஸின் உளவுத்துறை அதுவரை காலமும் பாரிஸில் வைத்து நடைபெற்ற மொசாத்தின் ரகசிய நடவடிக்கைகள் எதிலும் தலையிட்டதில்லை. மொசாத்தும், தங்களது ஐரோப்பிய ரகசிய ஆபரேஷன்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள், (சில சந்தர்ப்பங்களில் ஆட்கடத்தல்கள் உட்பட) அனைத்தையும், பாரிஸில் வைத்துச் செய்வதையே வழக்கமாக கொண்டிருந்தார்கள்.
உளவுத்துறை மொசாத்துக்கு பாரிஸ் நகரில் சேஃப் ஹவுஸ் எனப்படும் பல பாதுகாப்பான வீடுகள் இருந்தன. ரகசிய சந்திப்புக்களை ஐரோப்பாவில் நடத்த வேண்டும் என்ற நிலை வரும்போது மொசாத்தின் முதல் தேர்வு, அந்த நாட்களில் பாரிஸ் நகரில் உள்ள அவர்களது பாதுகாப்பான வீடுகள்தான்.
இதெல்லாம் பிரெஞ்ச் உளவுத்துறைக்கும் தெரியும். ஆனால், அவர்கள் இவர்களது சோலியில் தலையிடுவதில்லை.
இப்போது ஈராக் மீது குண்டு வீசப்போய் பிரான்ஸ் அனுப்பிவைத்த ஆட்கள் கொல்லப்பட்டால், பிரெஞ்ச் உளவுத்துறை பாரிஸிலுள்ள மொசாத்தின் பாதுகாப்பான வீடுகளில் கை வைத்தாலும் வைக்கலாம். மொசாத்தின் ரகசிய தளம் ஒன்று ஐரோப்பாவில் இருப்பதில் சிக்கல் ஏற்படலாம்.
ஈராக்கில் இருந்து மொசாத் உளவாளிகள் அனுப்பியிருந்த தகவல்களின்படி, பிரான்ஸின் தொழில்நுட்ப வல்லுனர்கள் தினமும் ஈராக்கின் தொழிற்சாலை பில்டிங்குக்கு போகிறார்கள். அங்கே நேரடியாக நின்று தொழிற்சாலை அமைவதை மேற்பார்வை செய்கிறார்கள்.
எனவே இந்த பில்டிங் மீது விமானத்தில் இருந்து குண்டு வீசினால், பிரான்ஸின் தொழில்நுட்ப வல்லுனர்கள் கொல்லப்பட சான்ஸ் மிக அதிகம்.
மொசாத் தலைவர் இவ்வளவு காரணங்களை சொல்லி, இப்போது அவசரம் வேண்டாம். நாம் பார்த்துக் கொள்கிறோம்” என்று சொன்னாலும், இஸ்ரேலிய அரசு உயர்மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இதற்கு தலைகீழாக இருந்தது.
குண்டுவீச்சு தாக்குதல் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றே முடிவெடுத்திருந்தார்கள் அவர்கள். சதாம் ஹூசேனின் கைகளில் அணு ஆயுதம் ஒன்று கிடைத்துவிட்டால், அதை உடனடியாக அவர் தயங்காமல் இஸ்ரேலை நோக்கி உபயோகிப்பார் என்று இஸ்ரேலிய அரசு உறுதியாக நம்பியது.
எனவே, எப்படியாவது அந்த அணு ஆயுத உற்பத்தியை ஆரம்பத்திலேயே அழித்துவிட விரும்பியது.
“குண்டு வீச்சுத் தாக்குதலை கைவிட வேண்டும் என்ற நினைப்பையே விட்டுவிடுங்கள். தாக்குதல் நடைபெறத்தான் போகிறது. தாக்குதலை எப்படி நடத்தினால் நல்லது – அதற்கு மொசாத்தினால் எந்த வகையில் உதவ முடியும் என்பதைக் கூறுங்கள். அது போதும்” என்று இஸ்ரேலியப் பிரதமரின் அலுவலகத்தில் இருந்து, மொசாத்தின் தலைவருக்கு சொல்லப்பட்டது.
அதன்பின் மொசாத் சில முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கியது.
மொசாத்தின் உளவாளிகள் அதுவரை கொடுத்திருந்த தகவல்களின்படி, பிரான்ஸ் தயாரித்த ரியாக்டர் எந்திரம் ஈராக்வரை பத்திரமாகச் சென்றுவிட்டது என்று கூறினோமல்லவா. அந்த எந்திரம் ஒன்றை மட்டும் வைத்து அணு ஆயுதங்களை தயாரிக்க முடியாது.
யுரேனியம் ரொட்களை இந்த ரியாக்டரில் செலுத்துவதற்கு ஒரு இணைப்பு எந்திரம் தேவை. அதுவும் பிரத்தியேகமாக, பிரென்ச் ரியாக்டருக்கு பொருந்தும்படியான இணைப்பு எந்திரமாக இருக்க வேண்டும்.
எனவே, இந்த இணைப்பு எந்திரத்தையும் பிரான்ஸே உருவாக்கி கொடுக்க சான்ஸ் அதிகம் என்று யோசித்தார் கோஃபி.
இதையடுத்து மொசாத்தின் உளவாளிகள் பிரான்ஸின் சிறு நகரங்களில் எல்லாம் ஊடுருவ விடப்பட்டனர். ஓரிரு நாட்களில் மொசாத் எதிர்பார்த்த தகவல் கிடைத்தது.
பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியில் Toulonக்கு அருகே La Seyne-sur-Mer என்ற சிறிய நகரத்தில் (இந்த நகரத்தை La Seyne என்றும் அழைப்பார்கள்) உள்ள ஒரு தொழிற்சாலையில் இந்த இணைப்பு எந்திரத்தை பிரான்ஸ் ரகசியமாக உருவாக்கி வருவது தெரிந்தது.
இந்த தகவல் போதாதா மொசாத்துக்கு? கடகடவென காரியங்களில் குதித்தது மொசாத்

உளவுத் தகவல் கிடைத்த சில தினங்களின் பின், பிரான்ஸில் இருந்து இயங்கும் பொதுநல அமைப்பு ஒன்றைச் சேர்ந்தவர்கள் சிலர், மேலே கூறப்பட்ட தொழிற்சாலைக்கு முன்னால் போய் நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். “இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் சுற்றுப்புற சூழலை மாசுபடச் செய்கின்றது” என்பது அவர்களது கோஷம்.
பிரான்ஸின் ஒரு மூலையிலுள்ள சிறிய நகரில் நடந்த இந்த போராட்டம் குறித்து பிரெஞ்ச் பத்திரிகைகளில் பெரிதாக கவர் செய்யப்பட்டது. இரண்டாவது நாள் போராட்டம் கொஞ்சம் தீவிரமாகி, போராட்டம் செய்தவர்கள் அதிரடியாக தொழிற்சாலைக்குள் நுழைந்து அங்கிருந்த எந்திரங்களை எல்லாம் அடித்து நொறுக்கினார்கள்.
இதில பெரிய வேடிக்கை என்னவென்றால் திடீரென்று கிளம்பி, பேராட்டம் நடத்திய இந்த பிரெஞ்ச் பொதுநல அமைப்பின் பெயரையே அதற்குமுன் யாரும் கேள்விப்பட்டிருக்கவே இல்லை.
அந்த அமைப்பின் பெயர் French Ecological Group.
இந்தப் பெயரை யாரும் அதுவரை கேள்விப்பட்டிருக்காத காரணம் என்ன? அந்த பொதுநல அமைப்பை அவசரகதியில் உருவாக்கியதே மொசாத்தான். அதுவும், மொசாத்தின் தலைவர் கோஃபி தாமே நேரடியாக French Ecological Group என்ற பெயரை அமைப்புக்கு சூட்டி, அதற்காக ரகசிய நிதியுதவி செய்திருந்தார்.
மொசாத்தின் உளவாளிகள் கட்டுக்கட்டாக பணத்துடன் பிரெஞ்ச் சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் சிலரிடையே ஊடுருவி, அவர்களைத் தூண்டி, இந்த காரியத்தை நிறைவேற்றியிருந்தார்கள்.
இந்த விவகாரம் ஒரு பக்கமாக நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், ஈராக்கிய அணுஆயுத தொழிற்சாலையின் இறுதிக்கட்ட வேலைகளைப் பற்றி ஆலோசனை பெற ஈராக்கிய அணுசக்தி துறையின் முக்கிய உறுப்பினர் யாய எல்-மஷாத் என்பவர் அவசரமாக பாரிஸ்வரை புறப்பட்டுச் செல்கிறார் என்ற தகவல் மொசாத்துக்கு கிடைத்தது.
மொசாத்தின் தலைவரிடம் இருந்து நேரடி உத்தரவு ஒன்று உடனே கொடுக்கப்பட்டது – “யாய எல்-மஷாத்தை பாரிஸில் வைத்து கொன்று விடுங்கள்”
இந்த அதிரடி உத்தரவை ஏன் பிறப்பித்தார் மொசாத் தலைவர்? அதன் பிளாஷ்பேக்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.
ஈரானின் அணுசக்தி துறையின் முக்கிய உறுப்பினர் ஒருவர் பாரிஸூக்கு ரகசிய விஜயம் ஒன்றை மேற்கொள்ள போகிறார் என்ற தகவல்தான் முதலில் மொசாத்துக்கு கிடைத்தது. ஆள் யாரென்று தெரியவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் ஈராக் செய்த சில ரகசிய முன்னேற்பாடுகள் மொசாத்தை நிமிர்ந்து உட்கார வைத்தன.
அது என்னவென்றால், பாரிஸில் இருந்த ஈராக்கிய தூதரகம், ஒரே தினத்தில் (ஜூன் 14-ம் தேதி), பாரிஸ் நகரில் இருந்த நான்கு வெவ்வேறு ஹோட்டல்களில் ரூம் புக் பண்ணியிருந்தது.
இந்த தகவல் பிரான்சிலுள்ள மொசாத்தின் பீல்ட் அதிகாரியிடம் இருந்து டெல்-அவிவ் நகரிலுள்ள மொசாத் தலைமையகத்துக்கு வந்தது.
அந்த ரூம்கள் எந்தவொரு தனிநபரின் பெயரிலும் புக் பண்ணப்படாமல் பொதுப்படையாக ‘ஈராக்கிய தூதரக பாவனைக்காக’ என்றே புக் பண்ணப்பட்டிருந்தன. அந்த ரூம்களில் தங்கப்போகும் நபருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது பற்றியும், தனியார் பாதுகாப்பு ஏஜன்சி ஒன்றிடம் பேசியிருந்தார்கள் ஈராக்கிய தூதரக அதிகாரிகள்.
இந்த முன்னேற்பாடுகளில் இருந்து பாரிஸ் செல்லப்போகும் நபர் ஒரு முக்கிய நபராகத்தான் இருக்கவேண்டும் என்பதை மொசாத் புரிந்து கொண்டது. பாரிஸில் ஏதோ முக்கியமாக நடைபெற போகிறது என்பதை மொசாத்தின் தலைவர் யிட்சாக் கோஃபி ஊகித்து விட்டார்.
ஆனால் பாக்தாத்தில் இருந்து பாரிஸ் செல்லப்போகும் நபர் யார் என்பதுதான் கடைசி தினம்வரை ரகசியமாக இருந்தது.
பாரிஸில் ரூம்கள் புக் பண்ணப்பட்டிருந்த தினத்துக்கு முதல் நாளில் (ஜூன் 13-ம் தேதி) இருந்தே பாக்தாக் விமான நிலையத்தில் தமது உளவாளிகளையும், இன்பர்மர்களையும் நிறுத்தியிருந்தது மொசாத்.
இது நடந்த காலத்தில் (1980-ம் ஆண்டு) விமான சேவைகள் இப்போது உள்ளதுபோல ஏராளமாக இருந்ததில்லை. ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் இருந்து வாரத்துக்கு மூன்றே மூன்று விமானங்கள்தான் பிரான்ஸின் பாரிஸ் நகருக்கு சென்றன. அவைகூட பாரிஸின் பெரிய விமான நிலையமான சார்ள்ஸ் டி-காலுக்கு (Paris Charles de Gaulle Airport) செல்வதில்லை. பாரிஸின் புறநகரப் பகுதியில் இருந்த சிறிய ஓர்லி விமான நிலையத்துக்கு (Paris Orly Airport) செல்வதுதான் வழக்கம்.
அந்த விமானங்களில் யாராவது வி.ஐ.பி.கள் பயணம் செய்கிறார்களா என்பதை அறிய முயன்றது மொசாத். ஆனால், அவர்களால் எந்த தகவலையும் ஈராக்கி ஏர்வேஸிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியவில்லை.
கடைசியில் 1980-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி சனிக்கிழமை, ஈராக்கி ஏர்வேஸின் பாரிஸ் செல்லும் விமானம் கிளம்புவதற்கு சிறிது நேரத்தின் முன்பு பலத்த பாதுகாப்புடன் விமான நிலையம் வந்து சேர்ந்த ஒருவர்மீது மொசாத் உளவாளிகளின் கவனம் பதிந்தது.
அவர் யார் என்ற விஷயத்தை உடனடியாக தெரிந்து கொண்டார் பாக்தாத் விமான நிலையத்தில் பயணிபோல காத்திருந்த மொசாத் உளவாளி ஒருவர்

தொடரும் ...


நன்றி ---ரிஷி

Comments

Popular posts from this blog

Working Torrent Trackers list updated Oct 2016...

142.Keith Hunter JESPERSON

How to Fix VLC does not support UNDF Format : Best Fix