சூரியன்
ஒன்பதாவது மாடியிலிருந்த தன் அலுவலகத்திலிருந்து மூன்றாம் மாடிக்கு வந்த ஆத்மா, தன் மனைவியைப் பார்த்து வழக்கம் போல் சிரித்துவிட்டு, வழக்கம் போல் தன் அறைக்குச் சென்றான். அங்கிருந்தே ”என்ன எழுதுகிறாய்?” என்றான்.
அங்கிருந்தே சிலேட்டைக் காட்டினாள். நெருக்கமாக அதில் ‘நித்யா நித்யா நித்யா நித்யா…’
”என்ன இது உன் பெயரையே எழுதிக்கொண்டு இருக்கிறாய்?”
”பொழுதுபோக வேண்டும். அழித்து அழித்து ஆயிரம் தடவை எழுதிவிட்டேன்.”
”புத்தகம் ஏதாவது படியேன்.”
”நூலகத்தில் இருக்கும் முப்பது புத்தகங்களையும் நான்கு தடவை படித்தாகிவிட்டது.”
ஆத்மா சிரித்தான். சிரிப்பில் கொஞ்சம் அவநம்பிக்கை, கவலை… ”இன்னும் கொஞ்ச நாட்கள்தானே?” என்றான்.
”எத்தனை நாள்?”
ஆத்மா இதற்குப் பதில் சொல்லாமல்,
”ரவி எங்கே?” என்றான்.
”கிழவரிடம் கதை கேட்கப் போயிருக்கிறான். உங்கள் பையனைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும்.”
”என்ன செய்தான்?”
”கவிதை எழுதுகிறான்.”
”என்னது!” ஆத்மாவின் முகம் திடீர் என்று விகாரமாயிற்று.
”கவிதையா?”
”ஆம்!”
”காகிதத்திலா?”
”ஆம்.”
”சர்க்கார் காகிதத்திலா?”
”ஆம்.”
”யாராவது பார்த்தார்களா?”
”என்ன தெரியும்? அவன் அறையைச் சுத்தம் செய்யப் போயிருந்தேன். விளையாட்டுச் சாமான்களுக்கு இடையில் இது கிடந்தது.”
நித்யா உள்ளே வந்து அந்தக் காகிதத்தைக் கொடுத்தாள்.
சர்க்கார் காகிதம்தான். எண்ணி, கணக்குப் பார்த்து ஆத்மாவுக்கு அளிக்கப்பட்டு இருந்த அரிய காகிதங்களில் ஒன்று. அதன் ஓரத்தில் சிறியதாக தெளிவாக ‘சர்க். காகி. எண் 32637. அனுமதிக்கப்பட்ட உபயோகத்துக்கு மட்டுமே. மீறினவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.’ அதன் மத்தியில் மிகப் பெரிய எழுத்துக்களில்:
சூரியனே நீ யார்?
ஆரியனோ
வேறெவனோ
யாருன்னைப்
பார்த்திருந்தார்?
இப்படி எழுதியிருந்தது. ரவியின் கையெழுத்துதான். ”சூரியன்… ஆரியன்! எதுகை… கவிதைதான்… எங்கே இந்த ஆரியன் என்ற வார்த்தையைப் பிடித்தான்?”
”தாத்தா சொல்லியிருக்கும்! யாருக்காவது தெரிந்தால் ஏதாவது ஆகுமா ஆத்மா?”
”தண்டனை கிடைக்கும். ரேஷனைக் குறைத்துவிடுவார்கள். இது என்ன மசி? தண்ணீரில் நனைத்துப் பார்க்கலாம்.”
ஆத்மா சமையல் அறைக்குச் சென்று தண்ணீரில் நனைப்பதற்கு முன் தயங்கினான். குழாய் அருகில் ‘தண்ணீரைச் சேதம் செய்யாதே. உனக்கு அளிக்கப்பட்ட மாதாந்திரத் தண்ணீர் கணக்கு 200 லிட்டர்‘ என்று எழுதியிருந்தது. நனைத்துத்தான் ஆக வேண்டும். மாத இறுதியில் காகிதக் கணக்கு வரும்போது மாட்டிக்கொண்டுவிடுவேன். மூன்று நாட்கள் குளிக் காமல் இருந்தால் போகிறது.
தண்ணீரில் அந்த வரிகள் அழிய மறுத்தன. மருந்து அலமாரியில் தேடினான். அரசாங்கம் சுகாதாரப் பிரிவு (ஒரு டாக்டர். இரண்டு நர்ஸ்) அளித்த ஆறு மாத்திரைகள், அரை பாட்டில் டானிக், ஒரே ஒரு தூக்க மாத்திரை… ம்ஹூம்!
”எலுமிச்சம் பழம் தேய்த்தால் போய்விடும்!” என்றான்.
”எலுமிச்சையைப் பார்த்து இருபது வருஷங்கள் ஆகின்றன” என்றாள்.
”உன் பையனால் எத்தனைத் தொந்தரவு பார்! யார் என் அலமாரியைத் திறந்தது?”
”அவன்தான் என்ன செய்வான்? எத்தனை நேரம்தான் இப்படி முடங்கிக் கிடப்பான்? அவனுக்கு அலுத்துவிட்டது. நீண்ட நேரம் பேசாமல் இருக்கிறான். வெற்றுப் பார்வை பார்க்கிறான். கவிதை எழுதுகிறான்…”
”உடம்பு சரியில்லையா? தொட்டுப் பார்த்தாயா?”
”உடம்புக்கு ஒன்றும் இல்லை. பத்து வயசுப் பையனை இப்படிக் கட்டிப்போட்டால்? விளையாட, திரிய, நடக்க, ஓட, ஆரவாரம் செய்ய இடமில்லாத இந்தப் பள்ளத்தில் எப்படி இருப்பான்? அவனுக்கு எத்தனை ஆசை இருக்கும்… எத்தனைக் கேள்விகள் கேட்கிறான் என்னை… கணக்குப் பார்த்து கணக்குப் பார்த்து, நாள் நாளாகத் தள்ளுவது எத்தனை கஷ்டம். நீங்களாவது மாடிக்கு மாடி போய்வருகிறீர்கள். நான் இந்த அறையில் உட்கார்ந்து ரவிக்கு எல்லாக் கதையும் சொல்லியாகிவிட்டது. எல்லா விளையாட்டுகளும் விளையாடியாகிவிட்டது.”
”இன்னும் கொஞ்ச நாட்கள்தான் நித்யா.”
”எத்தனை நாள்? எத்தனை நாட்கள் சொல்லுங்களேன்?”
”நான்கு வருஷமோ ஐந்து வருஷமோ! அவ்வளவுதான் இப்போதே மேலே கதிர்களின் சுரத்துக் குறைந்திருக்கிறது. அப்புறம் நம்மைக் கட்டுப்படுத்த யார்? கால் போனவரை நடக்கலாம். நதிக் கரையில் வீடு கட்டிக்கொள்ளலாம். பன்னிரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம். இன்னும் கொஞ்ச நாள்!”
”ஒவ்வொரு நாளும் ஒரு வருஷம் போல் இருக்கிறது.”
”ஷர்ர்” என்று கத்திக்கொண்டு விரல் துப்பாக்கியைக் காட்டியபடி ரவி வந்தான்.
”அப்பா! நீ திரும்புவதற்குள் உன்னைச் சுட்டுவிட்டேன். நீ செத்துப்போ!” என்றான்.
ஆத்மா ‘ஹா’ என்று பொய்யாக மயங்கி நாற்காலியில் சாய்ந்தான். ரவி அவன் நாடித் துடிப்பைப் பரிசோதித்தான். ரவிக்கு வெளிறிப் போயிருந்த தேகம்! எல்லாமே வெளுப்பு, வெயில் படாத வெளுப்பு. புரோட்டீன் குறைவினால் உடலில் ஒரு சோனித்தனம். அடுத்த வாரம் இவனுக்கு ஒரு புரோட்டீன் பிஸ்கட் கிடைக்கும். ஒன்றே ஒன்று.
”காகிதத்தில் எழுதக் கூடாது என்று எத்தனை தரம் சொல்லியிருக்கிறேன்…”
”சேச்சே! யார் எழுதினார்கள்? நான் உன் காகிதத்தைத் தொடவில்லை.”
”இப்போது பொய் வேறு சொல்கிறாய்.” காகிதத்தைக் காட்டினான். ‘சூரியனே! நீ யார்?’
ரவி குற்ற உணர்வுடன் கீழே பார்த்தான்.
”ஒரே ஒரு காகிதம்தானே அப்பா!”
”சிலேட்டில் எழுதக் கூடாதா? உனக்குப் பாட்டு எழுத வேண்டும் போலிருந்தால் நாடாவில் பதித்துக்கொள்ளக் கூடாதா?”
”பாட்டு இல்லை அது. கவிதை! நூறு வரிகள் இன்னும் மனசிலேயே இருக்கிறது.”
”கவிதை எழுதுவதற்கெல்லாம் காகிதத்தை உபயோகப்படுத்தலாமா? ‘ஆரியன்‘ என்றால் என்ன அர்த்தம்?”
”தெரியாது. சும்மா ஓசைக்காக எழுதினேன்.”
”ரவி, மொத்தமே நம்மிடம் காகிதம் கொஞ்சம்தான் இருக்கிறது. முக்கியமான அரசாங்க உபயோகத்துக்குத் தேவை. ஒவ்வொரு காகிதமும் முக்கியம்.”
”உனக்கு அந்தக் காகிதம் எதற்கு?”
”அதில் நான் முக்கியமான படம் வரைய வேண்டும். அதை ஆதாரமாகக்கொண்டு ஒரு இயந்திரம் செய்யப் போகிறோம்.”
”அந்த இயந்திரம் என்ன செய்யும்?”
”நம் எதிர்காலத்துக்குப் பயன்படும்.”
”எப்படி?”
”சூரிய ஒளியை ஏமாற்றிச் சிறு தானியங்கள் வளரச் செய்யப் போகிறோம். செயற்கையான போட்டோஸின்தஸிஸ். நீ பெரியவன் ஆனதும் புரியும்!”
”ஏன், சூரிய ஒளியிலேயே காட்டலாமே! அது மேலே நிறைய இருக்கிறதே. நீ கூடச் சொன்னாயே! தகடுபோல் ஜொலித்துக்கொண்டு வட்டமா…”
”மேலே நாம் சுதந்திரமாகப் போக முடியாது ரவி!”
”ஏன் அப்பா?”
”அங்கே காற்று விஷக் காற்று. அங்கே போனால் செத்துப் போய்விடுவோம்.”
”காற்று ஏன் விஷமாயிற்று?”
”நீ போ! வேறு ஏதாவது செய்.” ஆத்மா அலுத்துக்கொண்டான். ”உனக்கு இப்போது சொன்னால் புரியாது. நீ அதற்கு இன்னும் தயாராகவில்லை மகனே!”
ஏன் விஷமாயிற்று? நம் முன்னோர்கள் செய்த பாவங்களால்! அவர்கள் செய்த மெஷின்களால்… ராட்சத குண்டுகளால்! ஒருவருடன் ஒருவர் நேசமாக இருக்க முடியாத தேசிய அகங்காரங்களால்… எதிர்காலத்தைப் பற்றிய கவலையே இன்றி நூற்றாண்டின் இறுதியில் நேர்ந்த மகா மகா யுத்தத்தினால்… அதனால் விளைந்த தர்மோ நியூக்ளியர் தாண்டவத்தினால். பூமி எங்கும் மெதுவாகப் பரவிய கொல்லும் கதிர்கள் காற்றில் கலந்து… ஐரோப்பா, அரேபியா, இந்தியா, ஆஸ்திரேலியா என்று அந்தப் போர்வை ஒவ்வொரு தேசத்தையும் அரவணைத்துக்கொள்ள… பள்ளம் தோண்டி, கான்கிரீட் சுவர் அமைத்து, ஈயத்தில் உறவாடி… மறந்து… எலிகள் போல், முயல்கள் போல்… கீழே! கீழே! மேலே இரவு முழுதும் நெற்கதிர்கள் ரேடியேஷனில் ஜொலிக்கின்றன. ஏக்கர் ஏக்கராக மாம்பழம்… தென்னை, பலா… சீஸனுக்குச் சீஸன் பூத்துப் பழுத்து, முதிர்ந்து, உதிர்ந்து… மறுபடியும் பூத்துப் பழுத்து… ஒன்றையும் தொட முடியாது. ரேடியேஷன்!
”அப்பா…” என்று அங்கிருந்தே கூப்பிட்டான் ரவி.
”என்ன?”
”இன்னொரு காகிதத்திலும் கவிதை எழுதியிருக்கிறேன்.”
”என்னடா இது! நித்யா, எங்கே அந்தக் காகிதம்!” இப்போது நிஜமாகவே கோபம் வந்தது ஆத்மாவுக்கு.
ஆத்மாவும் நித்யாவும் வீடு முழுவதும் அந்த மற்றொரு காகிதத்தைத் தேடினார்கள். கிடைக்கவில்லை.
ஆத்மா தன் சப்ளை ஆபீசுக்குச் சென்றபோது ‘பெரியவர் கூப்பிடுகிறார்‘ என்ற செய்தி அவன் மேஜையின் மேல் இருந்தது.
பெரியவரின் அறை வாசலில் அந்தப் பெண் சிரித்தாள். வெளிறிப் போயிருந்த உதடுகள். கல்யாணத்துக்கு இருக்கிறாள்… கட்டடத்திலேயே அவளைச் சமாளிப்பதற்கு ஆள் இல்லை. பயப்படுகிறார்கள்… எனினும்…. எனினும் ஒரு பெண்! ஒரு பிரஜாவிருத்தி இயந்திரம். மிகத் தேவையான இயந்திரம்!
பெண்ணே உனக்குத் தெரியுமா? தெரிந்தால் சிரிப்பாயா?
”கொஞ்சம் இருங்கள். டைரக்டர் உள்ளே போயிருக்கிறார்.”
எதிரே சுவர் முழுதும் கரும்பலகைகளில், புள்ளி விவரங்கள் வியாபித்தன. மொத்தம் 350 பேர். சுத்தமான தானிய இருப்பு விவரம், செத்தவர் விவரம், இருப்பவர் விவரம், எதிர்பார்த்த பிடிப்புகள்… ஓர் ஆளுக்கு ஒரு நாளைக்கு 200 கிராம் அரிசி, 5 கிராம் பருப்பு, இரண்டு தேக்கரண்டி பவுடர் பால்! இந்த ரீதியில் எத்தனை தினம் தாங்கும்? தினமா? பகலில்லை இரவில்லை. விளக்கிருந்தால் பகல், விளக்கணைத்தால் இரவு. மூன்று வருஷம், நான்கு வருஷம். அதற்குள் கண்டுபிடித்தாக வேண்டும். செயற்கை முறை! செயற்கைத் தானியம், செயற்கைச் சூரியன். அல்ட்ரா வயலெட் கொஞ்சம், இன்ஃப்ராரெட் கொஞ்சம், வண்ணங்கள் அத்தனையும் கலந்த வெண்மை கொஞ்சம்…
சூரியனே நீ யார்?
”ஆத்மா, உள்ளே வா!” என்றார் பெரியவர். பெரியவரின் அறையில் உலகப் படத்தில் அத்தனை கண்டங்களிலும் சிவப்புப் பூசியிருந்தது. அங்கங்கே வட்டங்கள்! மனிதர்கள்! சில நூறு அல்லது ஆயிரம் பேர் பூமிக்குள் பதுங்கியிருக்கும் வட்டங்கள்! அவர்களுடன் ரேடியோ தொடர்பு இருக்கிறது. மடகாஸ்கரில் ஒரு வட்டம். அரிஸோனாவில் ஒன்று. ஐஸ்லாந்தில் ஒன்று… இந்தியாவில் ஒன்றே ஒன்று! எங்கள் வட்டம்! மின் நிலையத்துக்கு அடியில்!
”ஆத்மா, உட்கார். நீ கொடுத்த திட்டக் காகிதங்களைப் பார்த்தேன்.”
ஆத்மா உட்கார்ந்தான்.
”இன்னும் எத்தனை மாதங்கள் ஆகும், முதல் மாடல் தயாரிக்க?”
”இரண்டு வருஷம்.”
”இரண்டு வருஷம்? ம்ஹூம்! மிக அதிகம்!”
”தேவையான சாதனங்கள் நம்மிடம் இல்லையே!”
”என்ன வேண்டும்?”
”ஸ்பெக்ட்ராஸ்கோப் இல்லாமல் வேலை நடக்காது. ஸ்பெக்ட்ராஸ்கோப் மேலே இருக்கிறது. அருகிலேயே ஐந்து மைலில் ஒரு கட்டடத்தின் ஓர் அறையில் இருக்கிறது.”
”அதை உடை அணிந்துகொண்டு எடுத்து வர முடியுமா? ஆபத்தான விஷயம் நீ தயாரித்த உடை. ஐந்து நிமிஷத்துக்கு மேல் தாங்குவதில்லை. கெய்கர் அலறுகிறது. ஐந்து நிமிஷத்தில் பத்து மைலா? முடியாது.”
”இன்னும் அதிக நேரம் தாங்கக்கூடிய உடை தயாரிக்க முயற்சி செய்ய வேண்டும்.”
”பொருள்? பொருள் எங்கே இருக்கிறது? எனக்கு என்னமோ இது விரயமான முயற்சியாகத் தோன்றுகிறது.”
”எது, உடை தயாரிப்பதா?”
”ஆம்.”
”வேறு வழி ஒன்றும் புலப்படவில்லை!”
”புலப்பட்டுத்தான் ஆக வேண்டும்.”
பெரியவருக்கு அறுபது வயதிருக்கும். இவரைச் செலுத்துவது எந்த நம்பிக்கை..?
ப்ராஜெக்ட் சர்வைவல்! தொடர்ந்து உயிர் வாழ ஒரு திட்டம். இவர் வாழ்நாளிலா..?
பெரியவர், பெருமூச்சுடன், ”கயவாளிப் பயல்கள். எல்லாவற்றையும் வெடித்துவிட்டுச் செத்து ஒழிந்தனர். எவனோ சண்டை போட்டுவிட, நாம் எலி மாதிரி வாழ்கிறோம், ரேட்கௌண்டர் அலறுகிறது” என்றார்.
ஆத்மா எழுந்திருந்ததும், ”மற்றொரு விஷயம்” என்றார்.
”காகிதங்களை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று உனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.”
”ஏன்?”
”உன் இயந்திரப் படங்களின் நடுவே இதுவும் கிடைத்தது.”
ரவியின் மற்றொரு கவிதை!
”மன்னிக்க வேண்டும். இது என் மகனின் விஷமம்.”
”உன் மகனுக்குச் சூரியனைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறாய்! கவிதை எழுதுகிற ஆசாமிகள் நமக்கு வேண்டாம். நமக்குத் தேவையானவர்கள் வெறும் ஆண்கள்! அவனை டாக்டரிடம் காட்டு. இது உதவாத சரக்கு. கவிதையெல்லாம் பிழைத்து எழுந்ததும் எழுதலாம்! நம் காகிதங்கள் இயந்திர பாஷை பேசட்டும். உன் மகனைக் கொஞ்சம் அதட்டி வை. எத்தனை வயசு?”
”பத்து முடிந்துவிட்டது.”
”கவனிக்க வேண்டிய வயசு! இந்தத் தடவை தண்டனை வேண்டாம். அடுத்த தடவை இது நிகழக் கூடாது! போ.”
கதவருகில் மறுபடியும் கூப்பிட்டார்.
”ஒன்று செய். உன் மகனுக்கு சூரியனைப் பார்க்க ஆவல் இருக்கிறது எனத் தோன்றுகிறது. ஒரு தடவை மின் நிலையத்தில் பழுது பார்க்க மேலே செல்லும்போது அவனையும் இழுத்துச் செல். ஜன்னல் வழியாக ஒரு தடவை காட்டிவிடு. அப்புறம் கவிதை எழுத மாட்டான். மனைவியையும் அழைத்துப் போ!”
”சரி, வந்தனம்” என்றான்.
ரவி குதூகலத்தில் இருந்தான். மிகச் சீக்கிரமாகவே எழுந்து ஆத்மாவையும் நித்யாவையும் சீண்டிக்கொண்டே இருந்தான்.
”மகனே, இன்னும் மூன்று மணி நேரம் இருக்கிறது… மேலே இன்னும் சூரியன் வந்திருக்காது…”
”அப்புறம் லிஃப்ட்டில் இடம் கிடைக்காது அப்பா. சீக்கிரம் போய் நின்றுகொள்ளலாம்.”
”பயப்படாதே, நமக்காகக் காத்திருப்பார்கள். இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு!”
”தடுப்பு உடை அணிந்திருக்கிறீர்களா?” என்று லிஃப்ட்டில் எழுதியிருந்தது. மெதுவாக அது மேலே செல்லச் செல்ல… ரவி தன்னை முழுவதும் மூடிய வெண்மையான உடையில் குதித்தான். கண்களுக்கான சிறிய கண்ணாடி. ஜன்னலின் ஊடே அவன் கரிய விழிகள் ஜொலித்தன.
”ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ரவி. சொன்ன பேச்சை மீறக் கூடாது.”
”சரி அம்மா!”
பலத்த கதவைத் திறந்து வெளியேறி, அதை மூடித் திருகிவிட்டு ஆர்க் வெளிச்சம் பரவிய அந்த இரும்புக் குகையில் நடந்து, மற்றொரு கதவைத் திறக்கு முன்…
”ரவி, நித்யா! கதவு திறந்ததும் தூரத்தில் ஒரு கதவு தெரியும். சிவப்புக் கதவு, அதை நோக்கி ஓட வேண்டும். ஒரே ஒரு நிமிஷம்தான் ஆகும். என் கூடவே என் கையைப் பிடித்துக்கொண்டு ஓட வேண்டும். இடது பக்கம், வலது பக்கம் பார்க்கக் கூடாது.”
கதவு திறந்தது. அதிகாலை. மரங்கள், இலை அசைவுகள், காற்றில் நடனங்கள், பூக்கள் வர்ணங்கள்… விநோத வர்ணங்கள்… எல்லாமே இளம் இருட்டில் ஜொலித்தன. அவர்கள் ஓடினார்கள். ரவி கும்மாளமாகச் சிரித்தான். ‘நான் உன்னைவிட வேகமாக ஓடுவேன்’ என்று ஆத்மாவை இழுத்துக்கொண்டு ஓடினான். எதிர்க் கதவை ஒரு நிமிடத்தில் அடைந்து, அதன் வாயிலில் இருந்த பட்டனை அழுத்த, அது திறந்துகொண்டு மெலிதாக இடம் விட்டு மற்றொரு ராட்சதக் கதவைக் காட்டியது. அது திறந்து அதனுள் ‘ம்ம்ம்’ என்று மின் இயந்திரங்களின் ஒலி கேட்டது. கீழே இருப்பவர்களுக்கு வாழ்வளிக்கும் ஒரே ஒரு அணுசக்தி மின்நிலையம்.
”சூரியன் எங்கே அப்பா?”
”இரு, காட்டுகிறேன்.”
ஆத்மா ஷிஃப்ட்டில் இருந்தவர்களுடன் பேசினான். இயந்திரம் பல வருஷங்களுக்குப் போதுமானது
ரவி அகலக் கண்களுடன் காத்திருந்தான். மெதுவாக ஆத்மா இரும்புப் படிகள் ஏறி, அந்த அறைக்கு அவர்களை அழைத்துச் சென்று, உள்ளே இருக்கும் கெய்கரைச் சரி பார்த்துக்கொண்டான். அந்தப் பட்டனை அழுத்த… மெதுவாக அந்தச் சுவரின் பகுதி நகர, எட்டுக்கு எட்டடி ஒரு கண்ணாடி ஜன்னல்… ஈயம் கலந்த கண்ணாடி கெய்கர் டிக் டிக் டிக் டிக் என்று சத்தமிட்டது. உள்ளே ரேடியேஷனின் அளவு அபாய அளவுக்கு அதிகமாவதற்குள் கதவு தானாக மூடிக்கொண்டுவிடும். ஆத்மா அமைத்த மெஷின்.
”சீக்கிரம் பார்!” என்றான்.
ரவி உயர உயரக் குதித்தான். நித்யா, ஆத்மாவின் கையை இறுகப் பற்றிக்கொண்டாள். எதிரே வானம்… கடல்… கடற்கரை…
அழகான கருநீல வானத்தில் தொடங்கி, அது மெள்ள மெள்ள அடிவானத்தில் ஆரஞ்சு நிறமாகியது. கடல் அலைகளைத் தங்கம் தொட்டது. அமோக ஒளி வெள்ளமாக நடுங்கும் பொன்னிறத்தில் சூரியன் மெதுவாக எழுந்துகொண்டு இருந்தான்.
மற்றொரு நாள்! மற்றொரு தினம்… ரவி தன் மகனுக்கு இதே காட்சியைக் காட்டப்போகிறான்…
”கடவுளே, என்ன அழகாக இருக்கிறது! எப்போது நாங்கள் வெளியேறப் போகிறோம்? இன்னும் கொஞ்ச நாட்கள்தான் என்ற பொய்யை எத்தனை நாட்கள் புகட்டப் போகிறோம்?”
‘பூமிக்கு அடியே இருக்கிற தானியத்தைப் பகிர்ந்துகொண்டு, இருக்கிற நம்பிக்கைகளைப் பகிர்ந்துகொண்டு, மெலிதாக வம்ச விருத்தி பண்ணிக்கொண்டு, தினம் தினமாக, தலைமுறை தலைமுறையாக… எப்படி நூற்றி எழுபது வருஷங்களைக் கழிக்கப் போகிறோம்?’ என்று எண்ணினான் ஆத்மா.
கதவு தானாக மூடிக்கொண்டது.
Comments
Post a Comment