வழி தெரியவில்லை!
ஒரு சினிமா பார்ப்பதற்காக சபர்பன் ரயில் மார்க்கத்தில், பெயர் தெரிவிக்க முடியாத அந்த ஸ்டேஷனில் நான் இறங்கினேன். படம், நான் சென்னையில் தப்பவிட்ட படம். ஊரெல்லாம் சளைக்காமல் ஓடி ஓய்ந்துவிட்டு மொபஸலில் ஓடிக்கொண்டு இருந்தது. நல்ல படம் என்று நண்பர்கள் வற்புறுத்திப் பார்க்கச் சொன்னார்கள்.
அதைத் துரத்திக்கொண்டு அந்த ரயில் நிலையத்தில் மாலை இறங்கினேன். பெயர் சொல்ல மாட்டேன். நண்பர்கள் வழி சொல்லியிருந்தார்கள். ‘லைனோடு நட, லெவல் கிராஸிங்கில் சாக்கடையைத் தாண்டு, பஞ்சாயத்து அலுவலகத்தில் திரும்பி நேராக நட, கடைத் தெருவெல்லாம் தாண்டினால் ஒரு சென்ட் கம்பெனி வரும். வாசனை அடிக்கும். அங்கே இடது பக்கம் திரும்பி, கல்லெறிகிற தூரம் நடந்தால் நெல் வயல் வரும். அதற்கு முன் கொட்டகை தென்பட்டுவிடும்’ என்று.
தென்பட்டது.
தென்னங்கீற்று சிங்கிள் ப்ரொஜக்டர் சோடா கலர் கை முறுக்(கு) கொட்டகை. டிக்கெட் வாங்கி உள்ளே போய் உட்கார்ந்தேன். ஒரு நாய், காலடியில் ஓடியது. கொசு, காதடியில் பாடியது. காஞ்சனா ஈஸ்ட்மென் கலரில் சிரித்…
ஆனால், இந்தக் கதை அந்த சினிமாவைப் பற்றியது அல்லவே. சினிமா பார்த்துவிட்டு நான் ஸ்டேஷனுக்குத் திரும்பியபோது, எனக்கு ஏற்பட்ட விநோத அனுபவத்தைப் பற்றியது. படம் சற்று நீளமான படம். முடிந்து திரும்பும்போது, எனக்கு நல்ல பசி. கடைசி ரயிலைத் தவறிவிடப் போகிறேனே என்கிற கவலை. மாம்பலத்துக்குப் போய்ச் சப்பாத்தி சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று வேகமாக நடந்தேன்.
வந்த வழி ஞாபகம் இருந்தது. அப்படித்தான் நினைத்துக்கொண்டு இருந்தேன். இரவின் இருள் காரணமோ, அந்தத் தெருக்களின் பின்னல் காரணமோ, வழி தவறிவிட்டேன். போகிறேன்… போகிறேன்… ஸ்டேஷனையே காணோம்.
நான் கவலைப்பட ஆரம்பித்தேன். ஏதோ ஒரு கடைத் தெருவுக்கு வந்துவிட்டேன். அது நான் மாலையில் நடந்த கடைத் தெரு போல இல்லை. அப்போதுதான் நான் தனியாக இலக்கில்லாமல் நடந்துகொண்டு இருப்பதை உணர்ந்தேன். கடைகள் மூடியிருந்தன. ஓட்டல்களில் நாற்காலி கள் மேஜை மேல் கவிழ்ந்திருந்தன. வெளியே பலர் தூங்கிக்கொண்டு இருந்தனர்.
வழி கேட்பதற்கு எங்கும் தென்படவில்லை. தனியாக வந்தது தப்பு. என் நடை தயங்கியது. சற்று வியர்த்தது.
நல்லவேளை, எதிரில் ஒரு சைக்கிள் ரிக் ஷாகாரன் தென்பட்டான். அவன் தூரத்திலிருந்து சாலையின் சரிவில் இயல்பாகப் பெடல் செய்யாமல் ஒரு சினிமா பாட்டுப் பாடிக்கொண்டு வருவது தெரிந்தது. அவனை நிறுத்தி ஸ்டேஷனுக்கு வழி கேட்டேன். ரிக் ஷாவையும் பாட்டையும் நிறுத்தினான்.
”ஸ்டேஷனுக்கா?” என்றான் ஆச்சர்யத்துடன். தெரு விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் என் னைப் பூராவும் பார்த்தான். அவன் பார்த்த பார்வையை என்னால் இனம் கண்டுகொள்ள முடியவில்லை.
”ஸ்டேஷனுக்குப் போகறதுக்கு இங்கே வந்தியா?” என்றான்.
”ஏன்?”
”வழி தப்பு.”
”வழி எது?” என்றேன்.
”நேராப் போ. லெஃப்ட்ல ஒடி. ஆனா, உனக்கு ஜாஸ்தி டயமில்லையே… மணி என்ன இப்ப?”
சொன்னேன்.
”கடைசி வண்டி போய்டுமே? உன்னால நடந்து போக முடியாது. வா, நான் குறுக்கு வழில போறேன், ஏறு. 12 அணா கொடு. ஒரே மிதியா மிதிக்கிறேன்.”
பன்னிரண்டு அணா என்ன, பன்னிரண்டு ரூபாய் கொடுக்கத் தயாராய் ஏறிக்கொண்டேன். அவன் மிதித்தான். சைக்கிள் ரிக் ஷாவை ஒடித்துத் திருப்பி நான் எந்த வழியாக வந்தேனோ, அந்த வழியாகச் செலுத்தினான். எனக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
”இப்படியா போகணும்?” என்றேன்.
”அஆ” என்றான். அவன் செய்த சப்தத்தை ஏறக்குறைய அப்படித்தான் எழுத முடியும்.
கடைத் தெருவிலிருந்து விலகி நேராக ஒரு சந்தில் சரிந்தான். சந்தில் இருட்டாக இருந்தது. தன் சினிமாப் பாட்டைத் தொடர்ந்தான். மெட்டு மட்டும்தான். வார்த்தைகளுக்குப் பதில், தந்தானே தானே… பாட்டை நிறுத்தி விட்டான். கேட்டான், ”அவசர மாப் போகணுமா?”
”ஆமாம்” என்றேன். ”ஏன்?”
”இல்லை, சும்மா கேட்டேன்” மறுபடி… ‘தந்தானே தானே.’
என் பயம் சற்று அதிகமாகியது.
ரிக் ஷா சென்றுகொண்டு இருந்தது. மறுபடி ஒரு சந்தில் ஒடித்தது.
ஏன் பயப்படுகிறேன் என்று யோசித்துப் பார்த்தேன். அடுத்து நடக்கப்போவது என்ன என்பது தெரியாததால், இருட்டால், அந்தப் பாழாய்ப் போகிற பாட்டால்.
என்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று யோசித்தேன். ரூபாய் முப்பதோ என்னவோ. ஆனால், ரிஸ்ட் வாட்ச்? மோதிரம்?
அவன் என்னை எங்கு அழைத்துச் செல்கிறான்?
சற்று நேரத்தில் எனக்குத் தெரிய வந்தது. ஒரு வீட்டின் எதிரே ரிக் ஷாவை நிறுத்தினான். இறங்கிவிட்டான். ரிக் ஷாவின் முன் பக்கத்தின் விளக்கை ஊதி அணைத்தான். ”இரு வரேன்” என்று சொல்லிவிட்டு, அந்த வீட்டின் கதவை மெதுவாகத் தட்டினான். தட்டின தினுசில் ஒரு சந்தேகம் இருப்பதாக எனக் குப் பட்டது.
அவன் மெதுவாக, ”சொர்ணம்” என்று கூப்பிட்டது கேட்டது.
உள்ளே இருந்து ”யாரு?” என்று கேட்டது.
பெண் குரல்.
”நான்தான் கோபாலு.”
சலங்கைச் சத்தம் கேட்டது. இல்லை, அது வளையல் சத்தம். கண்ணாடி வளையல்கள்.
கதவு திறந்தது. எண்ணெய் போடாத கதவு. கையில் அரிக் கேன் விளக்குடன் அந்தப் பெண் நின்றுகொண்டு இருந்தாள். சுமார் இருபது வயதிருக்கும். பெரிய வட்டமாகக் கறுப்பில் பொட்டு, தூக்கத்தில் கலைந்த உடை.
”வந்துட்டியா? நான் ரொம்ப….” என்னைப் பார்த்துவிட்டாள். அவள் குரலை உடனே தாழ்த்திக்கொண்டாள். என்னவோ அவனைக் கேட்டாள்.
கதவு பாதி திறந்திருந்தது. அவள் என்னிடம் ”வாங்க” என்றாள்.
”என்னப்பா?” என்றேன் சைக்கிள் ரிக் ஷாவில் உட்கார்ந்திருந்த நான். எனக்கு வேறு வார்த்தை கிடைக்கவில்லை. தொண்டை அடைத்திருந்தது.
”சும்மா போ! அட!” என்றான்.
அந்த ரிக் ஷாவில் நான் ஏறிக்கொண்டதிலிருந்து நடந்த சம்பவங்கள் எல்லாவற்றிலும் ஏன், அதற்கு முன் நான் சினிமா பார்க்கத் தனியாக வந்ததில்கூட ஏதோ ஒரு தவிர்க்க முடியாத தன்மை இருந்ததாக எனக்குப்பட்டது. என்னதான் நடக்கப்போகிறது, பார்த்துவிடலாமே என்று நான் துணிந்திருக்கலாம்….
நான் அவள் பின் அந்த வீட்டுக்குள் சென்றேன்.
அந்தப் பாதி திறந்த கதவைக் கடந்ததும் உள்ளே நீண்ட வழிநடை தென்பட்டது. அதன் இறுதியில் இருந்த கதவை நோக்கி அவள் சென்றாள்.
கதவை அடைந்து, அதைத் திறக்காமல் எனக்காகக் காத்திருந்தாள் அவள். நான் சற்று தூரத்தில் தயங்கினேன்.
”வாங்க” என்றாள் பொறுமை இல்லாமல்.
சென்றேன்.
நான் வரும் வரை காத்திருந்து, வந்ததும் சரேல் என்று அந்தக் கதவைத் திறந்தாள்.
என் மேல் குளிர்ந்த காற்று வீசியது.
”அதோ பார், அதான் ஸ்டேஷன். போ!” என்றாள்
Comments
Post a Comment