பல் இல்லாத பக்தர்கள்...!
ஒரு பெரிய மனிதர். பக்தி மான். அவருக்குப் பல் வலி. வேலைக்காரனைக் கூப்பிட்டார்.
‘‘நீ உடனே போய் பல் வைத்தியர் ஒருவரை அழைத்து வா!’’ என்றார். பல் வைத்தியர் வந்து சேர்ந்தார். இவர் பல்லைக் காட்டினார். சோதித்துப் பார்த்து விட்டு அவர் சொன்னார்: ‘‘இந்தப் பல்லை எடுத்துடறதுதான் நல்லது!’’ ‘‘சரி... எடுத்துடுங்க!’’ என்றார் இவர். இந்த நேரத்தில் வாசல் பக்கம் யாரோ வருவது தெரிந்தது. பார்த்தார். அவர் அடுத்த ஊரைச் சேர்ந்த இன்னொரு பெரிய மனிதர். வேறொரு கடவுளின் பக்தர் அவர். உடனே இவர், ஒரு ‘ஐடியா’ பண்ணினார். ‘‘வைத்தியரே... நீங்க கொஞ்ச நேரம் அடுத்த அறையில் போய் இருந்துக்கோங்க. நான் கூப்பிடும் போது வரலாம். எடுக்க வேண்டிய பல் இதுதான்... பார்த்துக்கோங்க!’’ அவரும் ‘‘சரி’’ என்று சொல்லிவிட்டு, அடுத்த அறைக்குள் சென்று விட்டார். அடுத்த ஊர் பெரிய மனிதர் உள்ளே வந்தார். இருவரும் பேச ஆரம்பித்தார்கள். ‘‘உங்கள் கடவுளிடம், நீங்க வெச்சிருக்கிற பக்தியை விட, எங்கள் கடவுள் மேலே நான் வெச்சிருக்கிற பக்தி அதிகம்!’’ என்றார் இவர். ‘‘எப்படி சொல்றீங்க...?’’ என்றார் அவர். ‘‘நீங்க, உங்க கடவுளுக்கு என்ன காணிக்கை செலுத்தறீங்க?’’ ‘‘முடி காணிக்கை செலுத்துவோம்!’’ ‘‘நான் எங்க கடவுளுக்கு என் பல்லையே காணிக்கையா இப்ப செலுத்தப் போறேன்.’’ ‘‘என்ன சொல்றீங்க?’’ ‘‘கொஞ்சம் பொறுங்க!’’ என்று சொல்லிவிட்டு வேலைக்காரனைக் கூப்பிட்டு, ‘‘அவரை அழைத்துக் கொண்டு வா!’’ என்றார். பல் வைத்தியர் வந்தார். ‘‘இதோ பாருங்க... என் கடவுளுக்கு என் பல்லையே காணிக்கையா செலுத்த விரும்பறேன். அதனால ஒரு பல்லைப் பிடுங்கி எடுத்துடுங்க!’’ பல் வைத்தியர் புரிந்து கொண்டார். அந்தச் சொத்தைப் பல்லைச் சரியாகப் பிடுங்கி எடுத்து விட்டார். இதைப் பார்த்த அடுத்த ஊர்ப் பிரமுகருக்கு ஆவேசம் வந்து விட்டது. ‘‘நானும் பக்தியில் உங்களைவிட குறைந்தவன் இல்லை!’’ என்று சொல்லிவிட்டு, ‘‘ஐயா வைத்தியரே... அவரு ஒரு பல்லைத்தானே தியாகம் பண்ணினார். நான் என் கடவுளுக்காக இரண்டு பற்களைத் தியாகம் பண்றேன். வாங்க... என்கிட்டே இருந்து இரண்டு பற்களைப் பிடுங்கி எடுத்துடுங்க!’’ என்றார். வைத்தியர் பார்த்தார். அவருக்கா வலிக்கப் போகிறது? நல்ல பல்லாகப் பார்த்து இரண்டைப் பிடுங்கிப் போட்டு விட்டார். இப்போது பல் இல்லாத அந்த இரண்டு பக்தர்களும் ஓருவரைப் பார்த்து ஒருவர் பெருமையாகச் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் பற்றி நான் என்ன சொல்வது? கடவுளே இவர்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறார்! |
||
|
Comments
Post a Comment