ஆனந்தவல்லியின் காதல்



எந்தப் பேரரசுக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக மன்னர் விஜயநந்தன் நல்லாட்சி புரியும் அழகான கடற்கரை நாடு சுந்தரபுரம். காண்போர் வியக்கும் பிரமாண்டமான, மான் கொடி பறக்கும் அரண்மனையின் உப்பரிகையில் கவலை தடவிய முகத்துடன் நின்று கொண்டிருந்த மன்னரின் பார்வை, கடலில் நிறுத்தி வைக்கப்பட்ட போர்க் கப்பல்கள் மேல் நிலைகொண்டு இருந்தது. இதமான காலைத் தென்றலை ரசிக்கும் மன நிலையில் அவர் இல்லை.
கவலைக்குக் காரணம், அரகதத்தின் அரசன் அநிருத்தன் அனுப்பிவைத்திருந்த ஓலை. சுந்தரபுரத்தை அரகத்தின் அடிமை நாடாக அறிவித்து அவனுக்குக் கப்பம் கட்ட வேண்டும் அல்லது போரைச் சந்திக்க வேண்டும். கப்பமாயுத்தமா?
அநிருத்தனின் சேனை பெரியது. பலமானது. விஜயநந்தனின் சேனையும் பெரியதுதான். ஆனால், பலமானது அல்ல. யுத்தத்தைச் சந்தித்துப் பல ஆண்டுகள் ஆனதால் பயிற்சி போதாது. அநிருத்தனோ எல்லாத் திசைகளிலும் ராஜ்யத்தின் எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டே இருப்பவன். அவனுடைய வலுவான சேனையில் பாதியை அனுப்பினாலே போதும், சுந்தரபுரம் படிந்துவிடும். அடிமை நாடாகவும் போய்விடக் கூடாது. யுத்தத்தையும் தவிர்க்க வேண்டும். கௌரவம் கலையாமல் காரியம் நிகழ நல்லதோர் உபாயம் தேவை. ஆடைகளின் சரசரப்பொலியில் கவனம் கலைந்து திரும்பினார் விஜயநந்தன்.
மன்னர் பெருமானே, தங்கள் கவலையைப் போக்க அநிருத்தனிடம் இருந்து இரண்டாவது ஓலை வந்திருக்கிறது. தூதுவனை விருந்தினர் மாளிகையில் தங்கவைத்துவிட்டு ஓடோடி வந்திருக்கிறேன். படித்துப் பாருங்கள்என்று ஓலையை நீட்டினார் அமைச்சர் தானாதிசேகரன்.
விஜயநந்தன் ஆர்வமாக வாங்கிப் படித்தார். அவர் முகம் பிரகாசமானது.
பரிபூரண சம்மதம் என்று மறு ஓலை உடனே எழுதுங்கள். தூதுவனுக்கு நல்லதொரு விருந்து கொடுத்துஆடை, அணிகலன்கள் என்று அநிருத்தனே வியக்கும் அளவுக்குப் பரிசுப் பொருட்களுக்கும் ஏற்பாடு செய்யுங்கள்.
அதெல்லாம் செய்துவிடலாம் மன்னாஇளவரசியிடம் ஒரு வார்த்தை!
இதில் மறுப்பு சொல்ல என்ன இருக்கிறது? அநிருத்தனை மணந்தால், அவள் ஒரு சக்ரவர்த்தியின் மனைவி. அரகத சாம்ராஜ்யத்தின் மகாராணி. அநிருத்தன் என் மருமகனானால், சுந்தரபுரத்தின் பெருமையும் உயரும். போர் அபாயமும் நீங்கும். இளவரசிக்கு நாட்டியம் கற்பித்ததற்கும் சீவக நாட்டில் விஜயாலயன் திருமணத்தில் நாட்டியமாட அனுமதித்ததற்கும் இப்போதுதான் அகமகிழ்கிறேன் அமைச்சரே. போய் நான் சொன்னதைச் செய்யுங்கள்என்ற விஜயநந்தன் பெருமையுடன் தனது அடர்த்தியான மீசையைத் தடவிக்கொண்டார்.
கதிரவனின் வீரியம் குறைந்த கதிர்க் கரங்கள் சுந்தரபுரத்தின் மாட மாளிகைகளில் படிந்த இருளைத் துடைக்கும் ஆயத்தத்தில் இருந்த அதிகாலையில், குளிர்த் தென்றல் செடிகளில் தலை நீட்டிய அரும்புகளைத் தொட்டுத் தடவி விளையாடிப் பூக்களாகும் ரகசியத்தைச் சொல்லித் தரத் துவங்கிய நேரத்தில்அழகிய அரண்மனை யின் பின்புறத்தில் நந்தவனத்துக்குச் செல்லும் வாசலில் நின்றிருந்த காவலாளி உள்ளே செல்ல கூடையுடன் அனுமதிக்குக் காத்திருந்த முக்காடு இட்ட அந்தப் பெண்ணிடம், ”என்ன, உன் சகோதரி பொன்னிக்கு உடல் சுகமில்லையா?” என்றான்.
இல்லையென்றால் நான் எதற்கு வரப்போகிறேன்?” என்றாள் அவள்.
நந்தவனத்துக்குள் செல்லவும் பூக்களைக் கொய்யவும் பொன்னிக்குத்தான் அனுமதி இருக் கிறது. தெரியும் அல்லவா?”
அவளுக்கு உடல் நலம் இல்லாதபோது இரண்டு முறை நான் வந்திருக்கிறேன். நீயும் அனுமதித்துஇருக்கிறாய். இன்றைக்கென்ன புதிதாகக் கேள்வி கேட்கிறாய்?”
அரண்மனையில் நிறையக் கெடுபிடிகள். இளவரசிக்குத் திருமணம் நிச்சயமானதில் இருந்து அமைச்சர் பதற்றமாக இருக்கிறார். இந்தத் திருமணம் நிகழ்ந்தால், சுந்தரபுரமும் அரகதமும் இதுவரை பாராட்டி வந்த பகைமை ஒழிந்து நேச ராஜ்யங்களாகிவிடும்.
தெரிந்த கதைதானே?”
உனக்குத் தெரியாத கதை நிறைய இருக்கிறது. இரண்டு சேனைகளின் பலமும் கூடும்போது பல குறுநில மன்னர்களுக்குப் பயம் வருமே? அதனால், இந்தத் திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த சதி நடக்கிறதாம். அதனால் ஊருக்குள் புதியவர்கள் தென்பட்டால், நமது வீரர்கள் கண்காணித்துத் துருவித் துருவி விசாரிக்கிறார்கள். அதனால், நீ சீக்கிரம் போய் சீக்கிரம் வந்துவிடு. ஆமாம், உன் பெயர் என்ன சொன்னாய்?”
நான் எங்கே சொன்னேன்?”
இப்போது சொல்!
பவளமல்லி!என்று சொல்லிவிட்டு நந்தவனத்துக்குள் நுழைந்தாள் அவள்.
மொக்குகளையும் அரும்புகளையும் விடுத்து இதழ் மலர்ந்த மலர்களை மட்டும் கொய்தபடி நந்தவனத்தையட்டி இருந்த இளவரசியின் அந்தப்புரத் தடாகம் அருகில் வந்துவிட்டாள் அவள். உதடுகளைக் குவித்து குயில்போல மூன்று முறை கூவினாள். தொடர்ந்து மலர்களைக் கொய்தாள்.
இப்போது ஆடை களின் சரசரப்பும் வளையல்களின் சிணுங்கலும் கால் தண்டைகளின் ஒலியும் கேட்டு அவள் திரும்பஎதிரே வந்து நின்றாள் இளவரசி ஆனந்தவல்லி. இளவரசியை வர்ணிக்க ஒரே வார்த்தை போதும். பேரழகி!
நேற்றிரவு நாங்கள் உறங்கவில்லை என்று அறிவிப்பு தாங்கிய சிவந்த சோர்வுற்ற விழிகள். ஏதோ பேசத் துடிக்கும் ஈர மினுமினுப்புடன் இருந்த அதரங்கள்.
ஆனந்தி, பின்னிரவில் அழுதிருக்கிறாய். சரியா?” என்றான் பெண் வேடத்தில் இருந்த நந்தகுமாரன் தன் முக்காடை நீக்கியபடி.
அழுததும் உனக்குத் தெரியும். அதன் காரணமும் தெரியும். என் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கின்றன. இன்னும் ஏன் எந்த உபாயமும் செய்யாமல் இருக்கிறாய்?”
கடல் மார்க்கமாக நீயும் நானும் இலங்கை செல்லத் திட்டம் தயாரித்தேன். உதவ என் நண்பர்களும் இருக்கிறார்கள் என்றேன். உனக்கு அந்த யோசனை பிடிக்கவில்லையே!
உன் யோசனைப்படி நாம் இலங்கை சென்று அடையாளங்களை மாற்றிக்கொண்டு சாதாரணப் பிரஜைகளாக வாழ்கிறோம் என்றே வை. எத்தனை நாளைக்கு? என் தந்தை எல்லா தேசங்களுக்கும் படைகளை அனுப்பித் தேடச் சொல்ல மாட்டாரா? எப்போது சிக்குவோம் என்று பதைப்புடனேயே எப்படி நிம்மதியாக வாழ முடியும்? வேறு யோசனை சொல்லேன்.
அதே யோசனைதான். அதில் சின்ன திருத்தங்கள். உன் கேள்விகளுக்குச் சரியான சமாதானமும் இந்தத் திட்டத்தில் இருக்கிறது ஆனந்தி. திட்டத்துக்கான அனைத்து முன்னேற்பாடுகளை யும்கூட முடித்துவிட்டேன்!
நந்தகுமாரன் அக்கம்பக்கம் பார்த்துக்கொண்டு கம்மிய குரலில் தன் திட்டத்தைச் சொன்னதும் துள்ளிக் குதித்தாள் இளவரசி. மேலும், மனதில் எழுந்த சில சந்தேகங்களையும் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொண்டாள்.
அற்புதமான திட்டம். எல்லாம் சரியாக நடக்க வேண்டும்!
நடக்கும் என்று நம்ப வேண்டும்.
சரி, நம்புவோம்என்றாள் ஆனந்தி.
உற்சாகமாக, அவள் கரங்களைப் பற்றி தன்னை நோக்கி இழுத்து அணைத்த நந்தகுமாரன், ”இளவரசியின் அதரங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை. இன்றைக்கு என்ன சுவைஎன்று அறிந்து சொல்லட்டுமா?” என்றான்.
அவனைப் பிடித்துத் தள்ளி விலக்கி, ”விடியல் துவங்கிவிட்டது. என் தோழிகள் வரும் நேரம். நீ புறப்படு. சொன்னபடி முதலில் செயல்களைத் துவக்கு. திட்டம் வெற்றி பெறட்டும். அப்போது நீயாகக் கேட்கும் வரை நான் காத்திருக்க மாட்டேன். போ! இப்போது போய்விடுஎன்றாள் ஆனந்தி.
பெருமூச்சுடன் மலர்கள் நிறைந்த கூடையை எடுத்துக்கொண்டு, முக்காடைச் சரிசெய்துகொண்டு நந்தவனத்தின் வாசலை நோக்கி நடந்தான் நந்தகுமாரன்.
தலையில் வைத்த பூக்கூடையுடன் வேகமாக நடந்த நந்தகுமாரனுக்குக் குறுக்கே கை நீட்டித் தடுத்தான் காவலாளி.
இரு. சோதனையிட வேண்டாமா? நீ பாட்டுக் குப் போகிறாய்?”
நந்தவனத்தில் இருந்து திருடிச் செல்ல மலர்களைத் தவிர வேறென்ன இருக்க முடியும்? சரிபார்த்துக்கொள்!
பூக்கூடையைக் கீழே இறக்கி வைத்தபோது தலையில் முக்காடாகப் போட்டிருந்த முந்தானையும் சேர்ந்து வந்துவிடஅவன் தலையைக் கவனித்துவிட்ட காவலாளி, ”ஏய்உன் கூந்தல் எங்கே? ஆண் பிள்ளை போன்ற சிகை எப்படி உனக்கு?” என்று அதட்டலாகக் கேட்டான்.
அதுஅதுசிவபெருமானிடம் ஒரு வேண்டுதல் வைத்தேன். அது நிறைவேறிவிட்டதால் கூந்தலைக் காணிக்கையாக்கினேன். அதைப் பற்றி உனக்கு என்ன? கூடையைச் சோதனை செய்துவிட்டு என்னைப் போகவிடு.
அட! இதென்னஉன் குரலும் ஆண் குரலாகிவிட்டது?”
நந்தகுமாரன் அவசரமாக நாக்கைக் கடித்துக்கொண்டு பெண் குரலில் இல்லை. வம்பு செய்கிறாய் நீ!என்றான்.
காவலாளி சட்டென்று அவன் கையைப் பிடித்து, ”நீ பெண் வேடத்தில் இருக்கும் ஆண் என்று தெரிந்துவிட்டது. விடியாத பொழுதுகளில் முக்காடிட்டுப் பெண் குரலில் பேசி பல முறை என்னை ஏமாற்றி இருக்கிறாய். சொல்! யார் நீ? ஏன் இப்படிச் செய்கிறாய்?”- கையை முறுக்கிய படியே கேட்க
சுதந்திரமாக இருந்த மற்றொரு கையால் காவலாளியின் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிடஅவன் கைப்பிடி தளர்ந்ததும் நந்தகுமாரன் ஓடத் துவங்கினான். சுதாரித்துக்கொண்ட காவலாளி, ”ஏய்ஓடாதேநில்!என்று கத்தியபடியே அவனைத் துரத்தத் தொடங்கினான்.
மன்னர் விஜயநந்தன் பாதாளச் சிறையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு நின்றிருந்த நந்தகுமாரனை நோக்கி ஒரு பசித்த புலியின் ஆவேசத்துடன் நெருங்கினார். முகத்திலும் உடம்பிலும் பல இடங்களில் காயமாகி சில இடங்களில் ரத்தம் உறைந்திருக்கதலை ஒரு பக்கமாகச் சாய்ந்து கவிந்திருக்கசோர்விலும் அரை மயக்கத்திலும் இருந்த நந்தகுமாரன் மன்னரின் காலடி ஓசை கேட்டு விழிகளின் இமைகளை மிகுந்த பிரயத்தனத்தின் பேரில் பிரித்துப் பார்த்தான். அவன் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து உலுக்கினார் விஜயநந்தன்.
அற்பப் பதரே! அரண்மனையில் கட்டியக்காரனாக இருந்தவன்தானே நீ? இளவரசியை மனதில் நினைத்துப் பார்க்கக்கூட அருகதை இல்லாத உனக்கு இப்படி ஒரு ஆசையா? அமைச்சரிடம் நீ சொன்ன காதல் கதையில் எனக்கு நம்பிக்கை இல்லை. தண்டிக்கும் முன் எதற்கும் உறுதிப்படுத்திக்கொள்வதற்காக என் மகளை விசாரித்தேன். அரகத நாட்டின் மகாராணிஆகிற கனவில் மிதக்கும் தனக்கு இப்படி ஒரு தரமற்ற காதல் இருக்க முடியும் என்று சந்தேகித்துக் கேள்வி கேட்டதே அவமானமாக இருப்பதாகச் சொல்லி வருந்தினாள் தெரியுமா?”
பேசும் திராணி இல்லாமல் அமைதியாகப் பார்த் தான் நந்தகுமாரன்.
அரசே, நந்தவனத்தில் உள்ள தடாகத்தில் நீந்த இளவரசி வருவார் என்று தன் சகோதரி மூலம் அறிந்த இவன், தன் காதலைத் தெரியப்படுத்த முயன்றிருக்க வேண்டும். இது ஒருதலைக் காதல். ஆனால், மாட்டிக்கொண்டதும் இளவரசி யும் தன்னை நேசிப்பதாகப் பிதற்றிவிட்டான். இளவரசியாரின் வருத்தம் நியாயமானதே. அவர் மனதில் காதல் என்று ஒன்று இருந்திருந்தால், அரகத மன்னன் அநிருத்தனுடன் திருமணம் என்று நீங்கள் செய்தி சொன்னபோதே மறுத்திருப்பாரே? இவனுக்கான தண்டனையை அளித்துவிடலாம். இதில் யோசிக்க எதுவும் இல்லை!என்றார் அமைச்சர்.
நந்தவனத்துக்குள் அத்துமீறி நுழைந்தது குற்றம்அரசகுமாரி மேல் ஆசைப்பட்டது அடுத்த குற்றம்இளவரசியாரும் தன்னை நேசிக்கிறார் என்று கூசாமல் பொய்யுரைத்தது எல்லாவற்றையும்விடப் பெருங்குற்றம். இந்த மாதிரியான குற்றத்துக்கு உயிருடன் சமாதி என்பதே நம் தண்டனை வழக்கம். இன்றிரவு இரண்டாம் ஜாமத்தில் நகரின் கல்லறைத் தோட்டத்தில் வைத்து இவனுக்கு உயிருடன் சமாதி கட்டிவிடுங்கள். தீர்ப்பை உடனே முரசறிவித்து மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!என்ற மன்னரை வாயில் இருந்து எச்சிலும் ரத்தமும் ஒழுகப் பரிதாபமாகப் பார்த்தபடி இருந்தான் நந்தகுமாரன்.
கல்லறைத் தோட்டம். கரிய இருட்டை விரட்டி வெளிச்சத்தில் நனைத்துக்கொண்டு இருந்தது பௌர்ணமி நிலா. கைகளைப் பின்புறம் வைத்து கயிற்றால் கட்டப்பட்டு அமரவைக்கப்பட்டு இருந்த நந்தகுமாரனைச் சுற்றிலும் கருங்கற்கள்கொண்டு சுண்ணாம்பு குழைத்து சமாதி எழுப்பிக்கொண்டு இருந்த கட்டடப் பணியாளர்களை, ”ம்சீக்கிரம்!என்று விரட்டிக்கொண்டு இருந்தனர் வீரர்கள்.
சற்றுத் தள்ளி தனது குதிரை மீது அமர்ந்தபடியே பார்வையிட்டார் அமைச்சர் தானாதிசேகரன். வாயில் கை பொத்தி அழுதுகொண்டு இருந்த பொன்னியைப் பார்த்த அவர் அருகில் வரச்சொல்லி சைகை செய்தார்.
இதோ பார் பெண்ணே! உன் சகோதர னின் அத்துமீறல்களுக்கு ஒருவகையில் உடந்தையாக இருந்ததற்காக உன்னையும் சிறையில் தள்ள மன்னர் நினைத்தார். அவரின் கடுங்கோபத்தை சாந்தப்படுத்தியவன் நான். அவன் கடைசி மூச்சு நிற்கும் வரை நீ இங்கே காத்திருப்பதில் எனக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால், பெண் பிள்ளை நீ. உன் வாழ்வில் மாறாத மனக் கவலையை விதைக்கும் நினைவுகள் பதிய வேண்டாம். போய்விடு இங்கிருந்து!
சமாதியின் மேற்கூரையின் பணி முடிந்து மூன்று பக்கச் சுவர்களும் முடிந்து, முன் புறத்தின் சுவர் மட்டும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்துகொண்டு இருந்தது.
ஐயா! என் தமையனிடம் கடைசி விருப்பம்கூடக் கேட்கப்போவது இல்லையா?”
கேட்டாகிவிட்டது. எதுவுமே பேசவில்லை அவன்.
உயிர் போகப்போகிற விரக்தி நிலையில் என்ன கேட்கத் தோன்றும்? பசியோடு இறக்க வேண்டுமா அவன்? இறுதியாக என் கையால் அவனுக்குச் சோறூட்ட விரும்புகிறேன் ஐயா. அதற்கு மட்டுமாவது அனுமதிப்பீர்களா?”
பொன்னி கொண்டுவந்திருந்த கலயத்தை வாங்கிச் சோதனை செய்த அமைச்சர், ”அவனோடு நரகம் செல்ல துணைக்கு ஒரு கோழியின் உயிரை எடுத்திருக்கிறாய். சரிசரிபோய்க் கொடு! சீக்கிரம் ஆகட்டும்என்றார்.
பொன்னி இடுப்பு வரை உயர்ந்திருந்த சமாதியின் முன்புறச் சுவர் தாண்டி உள்ளே சென்று கண்ணீருடன் நந்தகுமாரனுக்குச் சோறூட்டத் துவங்கினாள்.
வேண்டாம். இது நடக்காது. எட்டாக் கனி என்று எத்தனையோ சொன்னேன், கேட்டாயா நீ? உன் கூடாக் காதல் உன் உயிரையே விலையாக்கிவிட்டதே!
பொன்னி, என் விதி இதுவென்றால் அதை எவரால் மாற்ற முடியும்? காதலுக்காக என் உயிரையே தருவேன் என்று சொல்லும் காதலர்களில் எத்தனை பேர் அப்படி உயிரைத் தந்திருக்கிறார்கள்? நான் தருகிறேன். இந்த நிம்மதி என் இதயத்தில் இருக்கத்தான் செய்கிறது!என்றான் நந்தகுமாரன்.
பொன்னி சோறூட்டி முடித்து அவன் முன் நெற்றியில் முத்தமிட்டு பொங்கி வெடிக்கும் தன் கண்ணீருடன் வெளியேறியதும்கருங்கற்கள் அடுக்கப்பட்டு கட்டுமானம் மீண்டும் துவங்கியது.
அன்று சித்ரா பௌர்ணமி என்பதால் சுந்தரபுரத்தின் கடற்கரை முழுதும் மக்கள் அலைகளுக்கு நிகராகக் கூடியிருந்தனர். உறவினர்களும் நண்பர்களுமாக நிலவொளியில் சித்ரான்னங்கள் சமைத்து உண்டு, ஆடியும் பாடியும் உற்சாகமாகப் பொழுதைக் கழித்துக்கொண்டு இருக்க
சற்றே ஒதுக்குப்புறமான பகுதியில் நான்கு குதிரை வீரர்கள் கரையினில் காவலுக்கு இருக்ககடலில் இடுப்பளவு ஆழத்தில் நின்றபடி தன் தோழி மதுராவுடன் கைகோத்து வருகிற ஒவ்வோர் அலையிலும் குதித்து விளையாடிக்கொண்டு இருந்தாள் இளவரசி ஆனந்தி.
இளவரசி, போதும். வெகு நேரமாயிற்று. புறப்படலாம்என்றாள் மதுரா.
சித்ரா பௌர்ணமி ஆண்டுக்கு ஒரு முறைதான் மதுரா. அரகத நாட்டில் கடல் இல்லை. நான் மணமாகி அங்கு சென்ற பிறகு இந்தக் கடலாடும் அனுபவங்களை மனதில் நினைத்துதான் மகிழ முடியும். இருஎன்ன அவசரம்? அதோ பார்இரண்டு பெரிய அலைகள்!” – உற்சாகமாகக் குதித்தாள் ஆனந்தி.
நாகரிகத்துக்காகக் கரையில் முதுகு காட்டி குதிரைகளின் மேல் இருந்த காவல் வீரர்களை நோக்கிப் பெருங்குரல் எழுப்பினாள் மதுரா, ”வீரர்களேஓடி வாருங்கள்! இளவரசியார் ஒரு ராட்சத அலையில் சிக்கிவிட்டார்!
வீரர்கள் குதிரைகளில் இருந்து குதித்து ஓடிவந்து கடலில் குதித்தார்கள்.
சமாதியை முற்றிலும் மூடுவதற்கான கடைசிக் கருங்கல்லை வைத்து அதன் இணைப்புகளில் சுண்ணாம்பு தடவப்பட்டது. சமாதிக்குள் முற்றிலும் இருட்டு சூழ்ந்தது. மூச்சுக் காற்றுக்குத் தவிக்கத் துவங்கினான் நந்தகுமாரன்.
அங்கே கடற்கரைக்குத் தவிப்புடன் வந்து சேர்ந்தார் மன்னர் விஜயநந்தன்.
என்ன ஆயிற்று? ஆனந்தி எங்கே?”
சொட்டச் சொட்ட நனைந்திருந்த வீரர்கள் இருவர் தலை குனிந்து நின்றார்கள்.
அரசேதுணைக்கு வந்திருந்த நாங்கள் நான்கு பேர் கடலில் குதித்து இளவரசியாரைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றும் எங்கள் கண் எதிரிலேயே பெரிய அலை அவர்களைக் கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. கடலுக்கு அடியில் மூச்சைப் பிடித்துத் தேடிச் சென்றோம். எங்களில் இருவரையும்கூட சுழல் இழுத்துச் செருகிவிட்டது!என்றான் ஒருவன்.
கைப்பற்றிய இளவரசியின் மேலாடையை மடியில் போட்டுக்கொண்டு தலையில் அடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள் தோழி மதுரா.
ஆண்டவா!என்ற விஜயநந்தன் தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டார்.
இரவின் மூன்றாம் ஜாமம் துவங்கிய நிலையில் சுந்தரபுரத்தை விட்டு வெகுதூரத்தில்நடுக் கடலில் எந்தத் திசையிலும் நகராமல் ஒரே இடத்தில் தத்தளித்துக்கொண்டு இருந்தது அந்தப் பெரிய படகு.
படகின் சொந்தக்காரன் பொன்னன், ”இப்போது பாய்மரத்தை உயர்த்திக் கட்டட்டுமா இளவரசியாரே?” என்றான்.
நனைந்த ஆடைகள் உடலோடு ஒட்டியிருக்கஇன்னும் ஈரம் உலராத கூந்தலை விரித்துப் பிடித்து குளிர்ந்த தென்றலில் உலரவைத்துக் கொண்டிருந்த இளவரசி ஆனந்தி திரும்பி அவனைப் பார்த்தாள்.
பொன்னாசுந்தரபுரத்தின் கரையில் இருந்து பார்த்தால் பாய்மரம் கண்ணில் பட வாய்ப்பு இருக்கிறதா?”
இல்லை இளவரசியாரே. பல காத தூரம் கடந்து வந்துவிட்டோம். வாய்ப்பே இல்லை. மீன் பிடிக்க வருகிற படகுகள்கூட இத்தனைத் தொலைவு வருவது இல்லை. கவலை வேண்டாம். நீண்ட தூரம் நீந்தி வந்த களைப்பு நீங்க நீங்கள் சற்றுக் கண்ணயரலாம் தேவி!
களைப்பாஎனக்கா? காதல் துடிப்பில் செய்கிற எந்த ஒரு காரியத்திலும் களைப்பே தெரியாது பொன்னா. என் காதலனும் உன் நண்பனுமான நந்தகுமாரனைப் பார்க்கும் வரை என் கண்கள் நித்திரையை நாடுமா என்ன?”
பாய்மரத் தூணில் சாய்ந்து அமர்ந்த ஆனந்தி நந்தகுமாரன் தன்னிடம் சொன்ன செயல் திட்டத்தை நினைத்துப் பார்த்தாள்.
என் திட்டம் இதுதான் இளவரசி. நந்தவனத்தின் காவலாளியிடம் நானாக சிக்கிக்கொள்வேன். அவன் அமைச்சர் முன் நிறுத்துவான். என்னை அடிப்பார்கள். உதைப்பார்கள். உன்னைக் காதலிப்பதாகச் சொல்வேன். என்னைச் சிறையில் அடைப்பார்கள். உன் தந்தை உன்னை விசாரிப்பார். என்னை நீ பார்த்ததுகூட இல்லைஎன்று மறுத்து விடு. எனக்கு இந்தக் குற்றத்துக்காக உயிருடன் சமாதி செய்யும் தண்டனை தருவார்கள். அரசின் கட்டடக்காரர்களில் ஒருவனாக எனது நண்பன் தீரனும் இருக்கிறான். தீரனிடம் பேசிவிட்டேன். கீழே இருந்து மேல் மூன்றாவது வரிசையில் நான்காவது கருங்கல்லை மட்டும் சுண்ணாம் புக்குப் பதிலாக வெறும் மணல் மட்டும் வைத்து அதைப் பொய்க் கல்லாகக் கட்டுவான். தவிர, மண்ணுக்குள் ஒரு சிறு கத்தியும் வைப்பான். சமாதி கட்டி முடித்து எல்லோரும் போனதும் நான் அந்தக் கத்தியால் கட்டுக்களை நீக்கி என்னை விடுவித் துக்கொள்வேன். பிறகு, பொய்க் கல்லைத் தள்ளுவேன். ஈரம் சரியாகக் காயாத மற்ற கற்களையும் தள்ளி வெளியே வருவேன். மீண்டும் கற்களை அதனிடத்தில் வைத்து சுண்ணாம்பு பூசிவிட்டு புறப்பட்டு குதிரையில் முல்லைத் தீவுக்கு வருவேன். அங்கே தயாராக இருக்கும் படகில் புறப்படுவேன்.
சரிநான்?’
சொல்கிறேன். நீ சித்ரா பௌர்ணமி என்பதால் கடலாட விரும்புவதாகத் தோழியுடன் கடற்கரைக்குப் போ! பெரிய அலை உன்னை இழுத்துச் செல்வதுபோல நடி. உன் நீச்சல் திறன் நானறிவேன். கடலுக்கடியிலேயே நீந்திச் செல். உனக்காக என் இன்னொரு நண்பன் பொன்னன் தன் படகுடன் சில காத தூரத்தில் காத்திருப்பான். அதில் ஏறிக்கொள். கரையைவிட்டு விலகி நடுக் கடலுக்கு வந்ததும் பாய்மரம் ஏற்றி இலங்கை நோக்கி மெதுவாகப் படகைச் செலுத்தியபடி இருங்கள். முல்லைத் தீவில் இருந்து புறப்படும் நான் உங்கள் படகுக்கு வந்துசேர்ந்துவிடுவேன்!
திட்டம் சரியாகத்தான் இருக்கிறது. திருமணம் நிகழாத கோபத்தில் அநிருத்தன் சுந்தரபுரத்தின் மேல் படையெடுக்க மாட்டானா? போர் நிகழாதா?’
அநிருத்தனை நான் அறிவேன். தர்மவான். நியாயம் உணர்ந்தவன். உன் தந்தை உன்னை மணமுடித்துத் தர மறுப்பேதும் சொல்லவில்லையே? திருமணத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் நடப்பதும் நிஜம்தானே? இந்தச் சூழ்நிலையில் இளவரசி கடல் அலையில் சிக்கி இறந்துபோனால் அதற்கு மன்னர் என்ன செய்வார்? சுந்தரபுரமே சோகத்தில் ஆழ்ந்திருக்கும் நிலையில் பகைமை பாராட்டி போர் தொடுக்க அநிருத்தன் அத்தனை கல்நெஞ்சக்காரன் அல்ல. சுந்தரபுரத்தைப் பொறுத்தவரை நீ கடலுக்குள், நான் சமாதிக்குள். யாரும் எப்போதும் எங்கும் தேடப்போவது இல்லை!
ஆனந்தி பெருமூச்சை வெளியேற்றிவிட்டு, ”பொன்னா, படகை மெதுவாகவே செலுத்து. அவர் வந்து சேர வேண்டும் அல்லவா?” என்றாள்.
எதிர்க் காற்று வீசிக்கொண்டிருக்கிறது இளவரசி. நாமே விரும்பினாலும் இந்தப் படகின் ஓட்டத்தை விரைவுபடுத்த முடியாது. திட்டப்படி எல்லாம் நிகழும். நீங்கள் நிம்மதி யாக இருங்கள்என்றான் பொன்னன்.
கல்லறைத் தோட்டம். சமாதிக்கு உள்ளே கரிய இருட்டு. விழிகளை விரியத் திறந்து பார்த்தபோதும் அழுத்தமான துணி கொண்டு கட்டியதைப் போல உணர்ந்தான் நந்தகுமாரன். ஒரு சின்ன வெளிச்சக் கசிவுகூட இல்லை. வீரர்கள் கிளம்பிச் சென்ற குதிரைகளின் குளம்பொலிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து மறைந்ததும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டான். பின்புறத்தில் வைத்து தன் கைகள் கட்டப்பட்டிருக்கும் நிலையிலேயே தீரனிடம் பேசியபடி சமாதியின் முன் சுவரில் கீழிருந்து கற்களைத் தடவித் தடவி மூன்றாவது வரிசையைத் தீர்மானித்தான்.
அடுத்து ஒரு விளிம்பிலிருந்து ஒவ்வொரு கல்லாக நான்காவது கல் வரை மனதில் எண்ணியபடி கட்டப் பட்ட கைகளால் துழாவினான். அடுத்த கல்லுடன் இணைக்கும் இடைவெளியில் விரலை வைத்தான். மணல் தென்படவில்லை. இறுகத் துவங்கியிருக்கும் சுண்ணாம்புதான் தட்டுப்பட்டது. தனது கணக்குதான் தவறோ என்று மீண்டும் மீண்டும் இருட்டில் துழாவி அந்தப் பொய்க் கல்லைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் பதற்றத் துடன் ஈடுபட்டான் நந்தகுமாரன். என்னதான் மூச்சை அடக்கி ஆளும் பயிற்சி கற்றிருந்தாலும் எத்தனை நேரம்தான் அடக்கு வது? நந்தகுமாரனுக்கு நிஜ மாகவே மூச்சு முட்டத் துவங் கியது.
இளவரசியாரேஅதோஅதோ பாருங்கள்நந்தகுமாரன் வந்துவிட்டான்!என்று உற்சாகமாகக் குரல் எழுப்பினான் பொன்னன்.
அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் அசையும் அலைகள் பௌர்ணமி நிலவின் வெளிச்ச வீச்சினால் தங்கள் மேனிகளில் வெள்ளிச் சரிகையாடை போர்த்திக்கொண்டதைப் போன்ற அழகான தோற்றம் காட்டுவதை ரசித்துக்கொண்டிருந்த இளவரசி பொன்னன் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்தாள். பாய்மரம் கட்டப்பட்ட படகொன்று இவர்களின் படகைக் குறிவைத்து அசைந்தபடி வருவது தெரிந்தது.
ஆனந்தியின் முகம் பூத்தது. என்னதான் துல்லியமான திட்டம் என்றாலும் அத்தனை காரியங்களும் சரியாக நிகழ வேண்டுமே என்கிற
சஞ்சலத்தில் இருந்த அவளின் மனம் இப்போதுதான் சமனடைந்தது. பொன்ன னும் அந்தப் படகை நோக்கி இவர்களின் படகை திசை திருப்பியதால் அந்தப் படகு வேகமாகச் சமீபித்துக்கொண்டிருந்தது. படகில் துடுப்பு போடுபவன் நிழலுருவமாகத் தெரியகுதூகலித்தாள் ஆனந்தி. அந்தப் படகு இன்னும் நெருங்கியதும் நிழலுருவம் நிஜ உருவமாகத் தெரிந்தது.
அதுநந்தகுமாரன் அல்ல. தீரன் போல் இல்லை?” என்றாள் ஆனந்தி.
ஆமாம் இளவரசி. அது தீரன்தான். செய்தி என்னஎன்று புரியவில்லையே!
படகு மிகவும் நெருங்கி ஒன்றையன்று பக்கவாட்டில் உரசிக்கொள்ளஅந்தப் படகில் இருந்து தாவி இந்தப் படகுக்கு வந்தான் தீரன்.
தீரன்என் நந்தகுமாரன் எங்கே? சீக்கிரம் சொல்!
இளவரசிகொஞ்சம் அமைதியாக இருங்கள். நிதானமாகச் சொல்கிறேன். திட்டத்தில் திடீரென்று ஒரு மாற்றம் நிகழ்ந்துவிட்டது. அதனால், நந்தகுமாரன் தற்சமயம் சமாதிக்குள் சடலமாகிவிட்டான்என்றான் தீரன்.
என்ன சொல்கிறாய்? என் நந்தகுமாரன் இறந்துவிட்டானா?”
அரசின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டான் என்பதே சரி.
எப்படி? பேசிக்கொண்டபடி பொய்க் கல் அமைத்து சிறு கத்தி வைத்தாய் அல்லவா நீ?”
எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான் தீரன்.
சொல் தீரா! செய்தாயாஇல்லையா?”
இல்லைஎன்றான் தீரன்.
ஏன்?”
இத்தனை திட்டங்களுக்கும் ஆதாரக் காரணம் என்ன இளவரசி? காதல்தானே? அதே காதல்தான் என்னைப் பேசியபடி செய்யவிடாமல் தடுத்ததும்!
என்ன சொல்கிறாய்?”
இளவரசி, உங்கள் அந்தப்புர அரண்மனையில் மராமத்துப் பணிகளுக்காக உள்ளே வந்தவர்களில் நானும் ஒருவன். உங்கள் அழகைக் கண்டால் யார்தான் காதல்கொள்ள மாட்டார்கள்? காதல் வயப்பட்டது கட்டியக்காரன் மட்டுமல்ல, இந்தக் கட்டடக்காரனும்தான். அவன் முந்திக் கொண்டான். நீங்கள் அவன் காதலை ஏற்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. மனமொடிந்தேன். மனதில் பொறாமைத் தீ பற்றி எரிந்தது. காதல் நிறைவேற என்னிடமே உதவி கேட்டு வந்தான் அவன். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டேன். பொய்க் கல்லும் சிறு கத்தியும் வைப்பதாக நம்பிக்கையூட்டினேன். மாறாக, அதைச் செய்யவில்லை. காரணம், உங்கள் மேல் உள்ள அபரிமிதமான காதல்!
ச்சீவாயை மூடு. சதிகாராஇது துரோகம். உன் நண்பனை நீயே கொன்றுவிட்டாய். பொன்னாபடகை சுந்தரபுரத்துக்குத் திருப்பு. தந்தையிடம் சொல்லி இவனுக்கு…”
தன் இடையில் மறைத்து வைத்திருந்த சிறிய வாளை உருவி எடுத்துக்கொண்ட தீரன், ”பொன்னாஇனி என் பேச்சின்படிதான் எல்லாம் நிகழ வேண்டும். திட்டமிட்டபடி படகு இலங்கை செல்லட்டும். மீற நினைத்தால் மரணம்தான் பரிசுஎன்றவன் இளவரசியின் பக்கம் திரும்பி, ”யோசியுங்கள் இளவரசி. நீங்கள் கடலில் மூழ்கி இறந்துவிட்டதாகவே எல்லாரும் நினைக்கிறார்கள். அரகத மன்னனுக்கும் அப்படித்தான் செய்தி போயிருக்கிறது. உங்களை மனதில் ஒரு தெய்வமாக வைத்துப் பூஜித்து நேசிக்கும் என்னை மணந்துகொண்டு இலங்கையில் புதிய வாழ்வு வாழ்வதே சரி. எனக்கு என்ன குறை? நந்தகுமாரனை நீங்கள் சந்திக்காமல் இருந்தால், என்னைக் காதலித்திருக்க மாட்டீர்களா?” என்றான்.
தீரா! இது நடக்கவே நடக்காது. எங்கள் காதலை அழித்துநட்புக் குத் துரோகம் செய்த உன்னை மாய்த்துவிட்டுக் கடலில் நிஜ மாகவே விழுந்து என் உயிரைப் போக்கிக்கொள்வேனே ஒழியஉன் ஆசை நிறைவேறாதுஎன்று ஆவேசமாகச் சொன்ன இளவரசி, தன் இடையில் மறைத்து வைத்திருந்த குறுவாளை மின்னல் வேகத்தில் எடுத்து தீரனின் நெஞ்சைக் குறி பார்த்தாள். தீரனின் நெஞ்சில் மிகச் சரியாக இறங்கியது அந்தக் குறுவாள்.
இளவரசி ஏதும் புரியாமல் இன்னும் வீசப்படாமல் தன் கரத்தில் இருக்கும் குறுவாளைப் பார்த்தாள். தனக்குப் பின்னால் திரும்பிப் பார்த்தாள். படகுக்குள் ஏறிக் குதித்து கம்பீரமாக நின்றான் நந்தகுமாரன்.
நெஞ்சிலிருந்து பொங்கி வழியும் குருதியைத் தடுக்க முனைந்தபடி தீரன் ஆச்சர்யம் மாறாமல், ”நீயாஎப்படி வந்தாய்?” என்றான்.
நீ வந்த அதே படகின் பின்புறம் வலைகளுக்குப் பின் ஒளிந்து வந்தேன். உன் மனதில் இருப்பது என்ன என்று அறிய வேண்டாமா? அதற்காக. இல்லையென்றால் முல்லைத் தீவில் நீ புறப்பட்ட தருணத்திலேயே உன்னைப் பழி தீர்த்திருப்பேன்!
நந்தகுமாரனை நெருங்கி, அவனை அணைத்து அவன் மார்பில் சாய்ந்துகொண்ட இளவரசி ஆனந்தக் கண்ணீர் பெருக்கி, ”நந்தாபொய்க் கல் வைக்காதபோதும் நீ எப்படிச் சமாதியில் இருந்து தப்பித்தாய்?” என்று கேட்டாள்.
தீரனுக்கு என் மீது பொறாமை இருக்கலாமோ என்று எனக்குச் சிறு சந்தேகம். திட்டம் சொன்ன போது அவன் கண்களில் ஒரு துரோகம் எட்டிப் பார்த்தது. ஒருவேளை இவன் எனக்கெதிராகச் சதி செய்தால் என்ன செய்வது என்று யோசித் தேன். ஒரு மாற்று உபாயம் செய்தேன். என் சகோதரி பொன்னியிடம் போட்ட திட்டம் அது. அதன்படி தன் கடைசி ஆசை என்று சொல்லி கோழிக் குழம்பும் சோறும் எனக்கு ஊட்டினாள் பொன்னி. அதில் ஒரு நிஜமான எலும்புக்குள் மஜ்ஜை நீக்கி அந்த இடத்தில் ஒரு சிறு கத்தி வைத்து ஊட்டினாள். வாய்க்குள் பதுக்கி வைத்திருந்தேன். அந்தக் கத்தியை. பொய்க் கல் இல்லையென்று உணர்ந்த பின்னர், அந்தக் கத்தி யால் கட்டுக்களை விடுவித்துக்கொண்டேன். உலர்ந்தும் உலராத கருங்கற்களை என் தோள்களால் மோதித் தள்ளி சமாதியை விட்டு வெளியே வந்தேன். மீண்டும் கற்களை வைத்துப் பூசிவிட்டு முல்லைத் தீவுக்கு வந்தால் நான் புறப்பட வேண்டிய படகில் இவன் புறப்பட்டுக் கொண்டு இருந்தான். அவனறியாமல் படகில் ஏறி மறைந்துகொண்டேன்!
தீரன் கடைசி மூச்சுக்குத் தவித்து, பின் மூச்சை நிறுத்திக்கொள்ள, ”நமது காதல் நிறைவேற கடல் மாதாவுக்கு ஒரு பலி தேவைப்பட்டது போல் இருக்கிறது. என்ன செய்வது?” என்று நந்தகுமாரன் தீரனின் உடலைக் கடலில் தள்ளினான்.
பொன்னன் உற்சாகமாகப் படகை இலங்கையை நோக்கிச் செலுத்தத் துவங்கநந்தகுமாரனை நெருங்கிய இளவரசி அவனை அணைத்து முத்தமிட, ”ஐயே! என் இளவரசியின் அதரம் இன்றென்ன இப்படி உப்புக் கரிக்கிறதே!என்றான் நந்தகுமாரன் சிரித்தபடி.

Comments

Popular posts from this blog

Working Torrent Trackers list updated Oct 2016...

142.Keith Hunter JESPERSON

How to Fix VLC does not support UNDF Format : Best Fix