அமானுஷ்யப் பூனை

மரணம் ஏற்படுவதை யாராவது முன் கூட்டியே கணித்துக் கூற முடியுமா, அது சாத்தியம் தானா? நிச்சயமாக முடியாது என்பதுதான் நமது பதிலாக இருக்கும். சகலமும் அறிந்த ஜோதிடர்கள் கூட இந்த விஷயத்தில் சற்று தடுமாறத்தான் செய்வர். ஆனால் ஒருவரது மரணத்தை முன் கூட்டியே கணிப்பது மட்டுமல்ல; அவர் இறக்கும் வரை அவர் அருகிலேயே இருந்து அவரை வழியனுப்பி வைத்து விட்டு வருகிறது ஒரு பூனை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அந்த அமானுஷ்யப் பூனையின் பெயர் ‘ஆஸ்கர்’
அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியில் உள்ள ஒரு நகரம்தான் ரோடே ஐலண்ட். இங்கு ஸ்டீரே என்ற இடத்திலுள்ள முதிய நோயாளிகளுக்கான மருத்துவ மற்றும் உயர் சிகிச்சைப் பாதுகாப்பு மையம் மிகவும் புகழ் பெற்றது. அல்சீமர், பக்கவாதம், பர்கின்சன் போன்ற பல நோய்களால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்குதான் ஒரு சிறிய குட்டியாக வந்து சேர்ந்தது அமானுஷ்யப் பூனை ஆஸ்கர். முதலில் அதன் செயல்பாடுகளை யாரும் கவனிக்கவில்லை. அது ஒரு சாதாரணப் பூனை என்றே அனைவரும் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் ப்ரௌன் யுனிவர்சிடியைச் சார்ந்த ஆல்பர்ட் மருத்துவப் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றுபவரும், அந்த ரோலண்ட் மருத்துவமனையின் மருத்துவர்களில் ஒருவருமான டாக்டர் டேவிட் டோசா, இந்தப் பூனையேச் சற்றே அவதானித்து சில செய்திகளை வெளியிட்ட போதுதான் அனைவரது கவனமும் ஆஸ்கர் மீது திரும்பியது.
அப்படி என்னதான் செய்தது ஆஸ்கர்? வழக்கமாக மற்ற பூனைகளைப் போலவே வலம் வரும் ஆஸ்கர், யாராவது ஒருவர் மரணிக்கப் போகிறார் என்று தனது அமானுஷ்ய ஆற்றலால் உணர்ந்து கொண்டால் உடனே அந்த நபரின் படுக்கையறைக்குச் சென்று விடும். அங்கேயே பல மணி நேரம் அமர்ந்திருக்கும். அப்போது அதன் உடல், கண்கள் என அனைத்தும் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும். அந்த நபர் இறக்கும் வரை காத்திருந்து, அவர் உயிர் பிரிந்ததும் வித்தியாசமான ஒரு குரலை எழுப்பி விட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்து சென்று விடும்.
இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல. நூற்றுக்கணக்கான மரணங்களை முன் கூட்டியே கணித்திருக்கிறது ஆஸ்கர். அதனால் இங்கே தங்கியிருப்பவர்களுக்கு ’ஆஸ்கர் பூனை’ என்றால் ஒருவித அச்சம்.
ஒருவர் இறக்கப் போகிறார் என்பதை உணர்ந்து கொள்ளும் ஆஸ்கர் முதலில் அவரது படுக்கை அருகே சென்று வித்தியாசமான ஒரு ஓசையை எழுப்பும். பின்னர் அங்கேயே அமர்ந்து விடும். அதைக் கண்ட மருத்துவர்களும், செவிலிகளும் எச்சரிக்கை உணர்வை அடைந்து மேல் சிகிச்சைகளுக்கு உடனடியாகத் தயாராகின்றனர். நோயாளின் உறவினர்களும் எச்சரிக்கை அடைந்து, முன்னேற்பாடாகச் செய்ய வேண்டிய செயல்களைச் செய்ய ஆரம்பிக்கின்றனர்.
இங்கு பணியாற்றும் மருத்துவர்களோ அதன் செயல்பாடுகளைக் கண்டு வியப்பதுடன், இது எப்படி சாத்தியம் என்றும் புரியாமல் விழிக்கின்றனர். ஆனால் டேவிட் டோஸா இதுபற்றிக் கூறும் போது, “ ஆஸ்கருக்கு கூடுதல் புலனறிவு மிக அதிகமாக உள்ளது. அதன் சக்தியால், இறப்பிற்கு முன் ஓர் உடலில் ஏற்படும் மிக நுணுக்கமான வேதியியல் மற்றும் உயிரியல் மாற்றங்களை அதனால் எளிதாக உணர்ந்து கொள்ள முடிகிறது. அதனால் இறக்கும் நபர் யார் என்பதை முன் கூட்டியே அதனால் கணிக்க முடிறது” என்கிறார்.
”சரி, ஆனால் இறக்கும் நபர் அருகே சென்று ஏன் ஆஸ்கர் அமர வேண்டும். எதற்கு அந்த இறப்பை உற்று கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்?” என்ற கேள்விக்கு விடையளிக்க அவரால் முடியவில்லை.

Comments

Popular posts from this blog

Working Torrent Trackers list updated Oct 2016...

142.Keith Hunter JESPERSON

How to Fix VLC does not support UNDF Format : Best Fix