அதிசிய சக்திகள்
டென்ஷொ வம்சத்தின் ஆதிக்கத்தின்போது, கியாட்டோ என்ற வடக்குப் பிராந்தியத்தில் குவான்ஷின் கோஜி என்ற வயோதிகன் வாழ்த்து வந்தான். நீண்டு நெஞ்சை மறைக்கும் வெள்ளைத் தாடியுடன், ஷிண்டோ குருக்கள்மார் போல உடையணிந்து பௌத்த சித்திரங்களைக் காட்டியும் தர்மத்தை ஜனங்களிடை உபதேசித்தும் பிழைத்து வந்தான். தினம் தினம் அவன் கியோன் ஆலயத்தின் பிரகாரத்தில் உள்ள பெரிய மரத்தில் ஒரு பெரிய படச் சீலையைத் தொங்க விடுவான். அதிலே யமலோக சிட்சைகள், தண்டனைகள் எல்லாம் தீட்டப்பட்டிருந்தன. எத்தனை நரகங்கள்; எத்தனை வித வாதனைகள். படத்தைப் பார்த்தால் நிஜம் போலத் தோன்றும். அதைப் பார்க்கக் கூடும் ஜனத்திரளுக்கு, இந்தக் கிழவன் தன் கையிலுள்ள நியோயி தண்டை நீட்டி படத்துச் சிட்சைகள் ஒவ்வொன்றையும் சுட்டிக் காட்டி காரண காரிய நியதியையும் விளக்குவான். பிறகு புத்த பகவான் உபதேசங்களைக் கடைப்பிடிக்கும்படி வற்புறுத்துவான். படத்தைப் பார்க்கவும் அவனது பேச்சைக் கேட்கவும் ஜனங்கள் ஏராளமாகக் கூடுவார்கள். சில சமயங்களில் கிழவன் தனக்கு முன்னால் பிச்சைக்காக ஒரு பாயை விரித்திருப்பான்; அதில் வந்து விழுகிற காசு பாயையே மறைத்துவிடும்.
அந்தக் காலத்தில் ஓடா நோபு நாகன் என்பவன் கியாட்டோ வையும் அடுத்துள்ள பிராந்தியங்களையும் ஆண்டு வந்தான். அவனுடைய பரிவாரத்தில் ஆரகாவா என்று ஒருவன் உண்டு. அவன் ஒருநாள் கியோன் ஆலயத்துக்கு வந்தபோது படத்தைப் பார்த்தான். பிறகு ராஜ சன்னிதானத்திலே அதைப் பற்றி விஸ்தரித்தான். ஆரகாவனுடைய பேச்சை நோபு நாகன் சுவாரசியமாகக் கேட்டான். உடனே படத்தை எடுத்துக்கொண்டு அரண்மனைக்கு வரவேண்டும் என்று குவான்ஷின் கோஜிக்கு உத்தரவிட்டான்.
சித்திரச் சீலையைப் பார்த்தவுடன் நோபு நாகன் ஆச்சரியத்தால் பிரமித்துப் போனான். படம் நிஜம் போல கண்ணுக்கு முன்னால் நின்றது. யமகிங்கரர்களும் தண்டனை அனுபவித்து தவிக்கும் ஜீவன்களும் தனக்கு முன்னால் நடமாடுவது போல் தெரிந்தது. ஜீவன்கள் வாதனை பொறுக்க முடியாமல் ஓலமிடுவதும் கேட்டது. படத்தில் தீட்டியிருந்த ரத்தம் பிரவாகமெடுப்பது போலவே தோன்றியது; தன்னையறியாமலே படத்தில் ஈரக்கசிவு இருக்கிறதோ என படத்தை விரல் கொண்டு தொட்டுப் பார்த்தான். படச் சீலை காய்ந்துதான் கிடந்தது. ஆச்சரியம் மேலிட்டவனாய், நோபு நாகன், “இந்தப் படத்தை எழுதியவன் யார்?” என்று கேட்டான். புகழ்பெற்ற ஒகூரி ஸோட்டான் என்ற சித்திரக்காரன் இந்தப் படத்தைத் தீட்டினான் என்று குவான்ஷின் கோஜி அறிவித்தான். நூறு தினங்கள் தவமிருந்த பிற்பாடு கியோமிட்ஸு ஆலயத்து குவானான் என்ற தெய்வத்தை வணங்கிய பின் சித்திரக்காரன் இந்தப் படத்தை வரைந்தானாம்.
நோபு நாகனுக்குப் படத்தில் நாட்டமிருப்பது கண்டு ஆரகாவன், மன்னனுக்குக் காணிக்கையாகப் படத்தைக் கொடுத்துவிட சம்மதமா என்று குவான்ஷின் கோஜியைக் கேட்டான். கிழவன் அதற்குப் பதில் சொன்னான்.
“இந்தப் படம் ஒன்றுதான் நான் மதிக்கும் சொத்தாக என்னிடம் இருந்து வருகிறது. அதை ஜனங்களிடம் காட்டி வயிறு பிழைக்கிறேன். இதை நான் மன்னனுக்குக் காணிக்கையாகச் செலுத்திவிட்டால், வேறு எனக்குப் பிழைப்புக்கு வழி ஏது? மகாராஜாவுக்குப் படத்திலே ரொம்பவும் ஆசை என்றால் நூறு பொற்காசுகள் எனக்குக் கொடுக்கட்டும். அந்தப் பணத்தைக் கொண்டு நான் ஜீவனம் செய்துகொள்வேன். இல்லாவிட்டால் படத்தைக் கொடுக்க முடியாது.”
நோபு நாகனுக்கு இந்த பேரம் பிடிக்கவில்லை. மவுனமாக இருந்துவிட்டான். ஆரகாவன் ரகசியமாக இவன் காதில் எதுவோ ஓதினான். அவனும் சம்மதித்துத் தலையை அசைத்தான். குவான்ஷின் கோஜிக்கு ஏதோ சொற்பத் தொகை பரிசில் வழங்கி அவனை அனுப்பி விட்டார்கள்.
கிழவன் மாளிகையை விட்டு வெளியேறியதும் ஆரகாவனும் ரகசியமாக அவனைத் தொடர்ந்தான். படத்தை எப்படியாவது மோசடியாக கிழவனிடமிருந்து பறித்து விட வேண்டும் என்பது அவன் நினைப்பு. சவுகரியமும் கிடைத்தது. நகரத்துக்கு வெளியே உள்ள மலையை நோக்கிச் செல்லும் பாதையை மேற்கொண்டான் குவான்ஷின் கோஜி. மலையடிவாரத்திலே பாதை திடீரென்று திரும்பும் தன்னந்தனிமையான இடத்தில் ஆரகாவனிடம் அவன் அகப்பட்டுக் கொண்டான். “படத்துக்கு நூறு பொன் கேட்க பேராசை பிடித்து ஆட்டுகிறதோ? அதற்குப் பதிலாக மூன்று முழ இரும்புத் துண்டு உனக்குப் பரிசாகக் கிடைக்கிறது பார்” என்று மிரட்டி வாளையுருவி கிழவனைக் குத்திவிட்டு படத்தை எடுத்துக்கொண்டு திரும்பினான்.
மறுநாள் சித்திரச் சீலையை நோபு நாகன் பாதத்தில் சமர்ப்பித்தான். குவான்ஷின் கோஜி முந்திய தினம் கடைசியாக அரச சன்னிதானத்தில் எப்படி படச்சீலையைச் சுருட்டிக் கட்டியிருந்தானோ அப்படியே இருந்தது. உடனே படத்தைத் தொங்கப் போடும்படி நோபு நாகன் உத்தரவிட்டான். படச் சீலையை விரித்துத் தொங்கப் போட்டபொழுது மன்னனும் ஆரகாவனும் அதிசயித்துப் போனார்கள். வெறும் சீலை மட்டுந்தான் தொங்கியது. அதில் படத்தைக் காணவில்லை. எப்படிப் படம் மறைந்தது என்பதை விளக்க முடியாமல் தவித்தான் ஆரகாவன். தெரிந்தோ தெரியாமலோ எஜமானனை ஏமாற்றிய குற்றத்துக்காக சிறைத் தண்டனை பெற்றான்.
தண்டனைக் காலம் முடிவடைந்து வெளி வந்த க்ஷணத்திலேயே குவான்ஷின் கோஜி, கிட்டானோ ஆலயத்தில் படத்தைக் காட்டிக் கொண்டு பிழைப்பதாகக் கேள்விப்பட்டான். கேட்டதை நம்ப முடியவில்லை. ஆனால் இந்தச் சேதி அவனது நெஞ்சில் அற்ப நம்பிக்கையை விதைத்தது. எப்படியாவது கிழவனைச் சந்தித்து சித்திரச் சீலையைப் பெற்றுத் தனது குற்றத்துக்குப் பரிகாரம் தேடிக்கொள்ள முடியும் என நம்பினான். உடனே தனது பணியாட்களைத் திரட்டிக் கொண்டு கோயிலுக்குப் போனான். ஆனால் குவான்ஷின் கோஜி சென்றுவிட்டான் என்ற தகவல்தான் கிடைத்தது.
சில நாட்கள் கழித்து கியோமிட்ஸு ஆலயத்தில் கிழவன் படங்காட்டிக் கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. ஆரகாவன் கோயிலுக்கு ஓடினான்; கூட்டம் கலைவதைத்தான் கண்டான்; கிழவனைக் காணவில்லை.
கடைசியாக ஆரகாவன், கிழவனைத் திடீரென்று ஒரு மதுக்கடையில் கண்டுபிடித்துக் கொண்டான். தன்னைப் பிடித்துக் கட்டுவதைப் பார்த்து சிரித்துக் கொண்டே “கூப்பிட்டால் உம்முடன் வருவேனே; ஆனால் அவசரப்படவேண்டாம். சற்று மது அருந்திவிட்டு வருகிறேன்” என்று குவான்ஷின் கோஜி சொன்னார். ஆரகாவன் அதனை ஆட்சேபிக்கவில்லை. ஆனால் அங்கு கூடியிருந்தவர்கள் அதிசயிக்கும் படியாகப் பனிரெண்டு மதுக்குடங்களைத் தீர்த்து உருட்டிவிட்டான் கிழவன். பனிரெண்டாவது குடம் உருண்டது; தாக விடாய் தீர்ந்தது என்றான் கிழவன். அவனைக் கட்டி நோபு நாகன் மாளிகைக்கு இழுத்துச் செல்லும்படி உத்தரவு போட்டான் ஆரகாவன்.
குவான்ஷின் கோஜி மறுபடியும் ராஜ சபையிலே விசாரிக்கப்பட்டான். தலைமை அதிகாரி கடுமையாக, “நீ ஜனங்களிடை மந்திர வித்தைகளைக் காட்டி ஏமாற்றிப் பிழைத்து வருவதாகத் தெரிகிறது. அதற்கு கடுந்தண்டனை கிடைப்பது நிச்சயம்; இருந்தாலும் மரியாதையுடன் எங்கள் மன்னர் நோபு நாகரிடம் படத்தைக் கொடுத்து விட்டால் அந்தப் பிழையை மன்னித்து விடுகிறோம்; இல்லாவிட்டால் நீ நினைத்தும் அறியாத கடுந்தண்டனை கிடைப்பது நிச்சயம்” என்றான்.
இதைக்கேட்டு மதிமருண்டவனைப்போலச் சிரித்து குவான்ஷின் கோஜி பின்வருமாறு சொல்லலானான்: “நான் ஜனங்களை ஏமாற்றவில்லை” என்று கூறி ஆரகாவனைத் திரும்பிப் பார்த்து “நீதான் ஏமாற்றுக்காரன்; படத்தை வாங்கி மன்னனைக் காக்கை பிடிக்க முயன்றாய்; அதைத் திருடுவதற்காக என்னைக் கொல்ல முயன்றாய்; குற்றம் என ஒன்று இருக்குமாகில் அதுதான் குற்றம்; ஆனால் அதிருஷ்டவசமாக என்னைக் கொல்ல முடியவில்லை. நீ அதில் ஜெயித்திருந்தால், நீ ஆசைப்பட்டது போல் நடந்திருந்தால், அந்தச் செயலுக்காக என்ன சொல்லி பரிந்து பேச முடியும் உனக்கு? எப்படியானாலும் நீ படத்தைத் திருடினாய். என் வசம் இருப்பது அதன் நகல்தான்; படத்தைத் திருடிய பின் மனம் மாறியது. மன்னனுக்கு ஏன் கொடுக்க வேண்டும். நாமே வைத்துக் கொண்டால் என்ன என்று நினைத்து அதற்குத் தந்திரம் செய்தாய். வெறும் படமில்லாச் சீலையை மட்டும் மன்னனிடம் கொடுத்தாய்; கடைசியில் நான் ஏமாற்றி விட்டதாகப் பழியும் போடுகிறாய்; நிஜப்படம் எங்கிருக்கிறது என்பது எனக்குத் தெரியாது; ஒருவேளை உனக்குத் தெரிந்திருக்கக் கூடும்” என்றான்.
இதைக் கேட்ட ஆரகாவனுக்கு ஆக்ரோஷம் வந்தது. கைதியை நோக்கி ஓடினான். காவலர்கள் தடுத்திராவிட்டால் அவனை அடித்துப் போட்டிருப்பான். இவனது சினம் தலைமை அதிகாரிக்கு அவன் மீது சந்தேகத்தைத் தூண்டியது. குவான்ஷின் கோஜியைச் சிறைச்சாலைக்குக் கொண்டு போகும்படி உத்தரவு போட்டுவிட்டு ஆரகாவனை நெருங்கிக் கேள்விகள் கேட்க ஆரம்பித்தான். ஆரகாவனுக்கு இயல்பாகவே தாராளமாகப் பேசத் தெரியாது. தயங்கித் தயங்கிப் பேசுவான். மனம் குழம்பிவிட்டதால் பேசவே முடியவில்லை. முன்னுக்குப்பின் முரணாக உளறிக் கொட்டி சந்தேகத்தை வலுக்க வைத்துக் கொண்டான். அவன் உண்மையைக் கக்கும் வரை தடிகொண்டு நையைப் புடைக்கும்படி பிரதம அதிகாரி உத்தரவிட்டான். ஆரகாவன் அடி வலி பொறுக்க முடியாமல் பிரக்ஞையை இழந்தான்.
சிறையில் கிடந்த குவான்ஷின் கோஜிக்கு ஆரகாவன் பட்ட அவஸ்தையை எல்லாம் சொன்னார்கள். கிழவன் சிரித்தான். சிரித்துவிட்டு சிந்தனை செய்தான்; சிறைக் காவலனிடம், “நான் சொல்லுவதைக் கவனமாகக் கேள். ஆரகாவன் வாஸ்தவத்தில் அயோக்கியன் தான். அவனைத் திருத்துவதற்காகவே அவனுக்குத் தண்டனை கிடைக்கும்படி செய்தேன். ஆரகாவனுக்கு உண்மை தெரியாது; என்னால் எல்லாவற்றையும் திருப்திகரமாக விளக்க முடியும் என்று தலைமை அதிகாரியிடம் போய்ச் சொல்லு” என்றான்.
மீண்டும் கிழவனை தலைமை அதிகாரியிடம் அழைத்து வந்து நிறுத்தினார்கள். குவான்ஷின் கோஜி அதிகாரியிடம் பின்வருமாறு அறிவித்தான்.
“வாஸ்தவத்திலேயே சிறப்பான சித்திரங்களுக்கு உயிர் உண்டு. அதற்கு மனம், புத்தி, சித்தம் ஆகிய எல்லாம் உண்டு. அதற்கு உயிர் வழங்கியவனிடமிருந்தோ அல்லது அதனுடைய நியாயமான சொந்தக்காரனிடமிருந்தோ பிரிக்கப்படுவதற்கு இணங்காது. சிறந்த படங்களுக்கு உயிர் உண்டு என்பதற்கு எத்தனையோ அத்தாட்சிகள் உண்டு. ஹோசல் என்ஜின் என்ற சித்திரக்காரன் புஸீமாத் தட்டியில் சிட்டுக் குருவிகளை வரைந்தான்; அவை உயிர் பெற்றுப் பறந்துவிட படத்தில் வரைந்த இடம் காலியாகி வெறிச்சோடிக் கிடந்தது. படச்சீலையில் வரைந்த குதிரை இரவில் புல் மேய்வதற்காக வெளியே போவதைக் கேட்டிருப்பதில்லையா. அதிருக்கட்டும்; இந்த வழக்கில் மன்னன் நோபு நாகனை எந்தவிதத்திலும் படத்துக்குச் சொந்தக்காரன் என்று சொல்ல முடியாது. நான் முதலில் கேட்ட விலையைக் கொடுத்தால் படம் மீண்டும் திரைச்சீலையில் தானாகவே தெரியும் என்று நினைக்கிறேன். வேண்டுமானாலும் சோதித்துப் பாருங்களேன். இதில் நஷ்டமென்ன இருக்கிறது. படம் தெரியாவிட்டால் பணத்தை உடனே திருப்பிக் கொடுக்கிறேன்” என்றான்.
இந்த அதிசயமான வார்த்தைகளைக் கேட்ட நோபு நாகன், தொகையைக் கொடுக்கும்படி உத்தரவு போட்டுவிட்டு விளைவைக் காண தானே நேரில் வந்தான். அவன் முன்பு சித்திரச் சீலையை விரித்தார்கள். அங்குள்ளோர் யாவரும் அதிசயிக்கும்படி படம் முன்போல் தென்பட்டது. ஆனால் வண்ணக் கலவைகள் முன்போல பளிச்சென்று தெரியவில்லை. சற்று மங்கிப் போயிருந்தது. ஜீவன்களும் கிங்கரர்களும் முன்போல ஜீவகளையுடன் தென்படவில்லை. இதைக் கவனித்த மன்னன் “ஏன்?” என்று கேட்டான். குவான்ஷின் கோஜி அதற்குப் பின் வருமாறு பதில் சொன்னான்.
“முதல் முதலில் படத்தை நீ பார்க்கும்போது அதற்குவிலை இல்லை. விலை மதிப்புக்குள் அடைபடாத சித்திரமாக இருந்தது. ஆனால் இப்பொழுது நீ பார்க்கும் படத்தின் மதிப்பு நீ கொடுத்த நூறு பொன் காசுகள்தான். அந்தத் தொகைக்கு ஈடான அழகுதான் இப்போது அதில் உமக்குத் தென்படுகிறது” என்றான். கிழவனை உடனே விடுதலை செய்தார்கள். ஆரகாவனையும் விடுவித்தார்கள். அவன் செய்த அக்கிரமத்திற்கு பட்டதே போதும்.
ஆரகாவனுக்கு பூயிச்சி என்று ஒரு தம்பியுண்டு. அண்ணனுக்கு அடியும் சிறையும் கிடைத்தது கண்டு மிக்க கோபம் கொண்டான். அந்தக் கொதிப்பிலே குவான்ஷின் கோஜியைக் கொன்றுவிடத் தீர்மானித்தான். கிழவன் விடுதலை கிடைத்ததும் நேராக மதுக் கடைக்குச் சென்றான். அவனைத் தொடர்ந்து கடைக்குள் சென்ற பூயிச்சி, அவனைக் கீழே தள்ளி தலையை வெட்டினான். கிழவனுக்குக் கிடைத்த நூறு பொற்காசுகளையும் எடுத்துக் கொண்டான். தலையையும் தொகையையும் மூட்டையாகக் கட்டிக்கொண்டு அண்ணனிடம் சென்று அவன் காலடியில் வைத்தான். மூட்டையை அவிழ்த்து விவரித்தான். உள்ளே மதுக் குடுக்கையும் மலமும்தான் இருந்தது! கடையில் கிடந்த தலையில்லா முண்டமும் மறைந்து போயிற்று என்பதையும் கேட்டு இன்னும் அதிகமாக திக்பிரமை பிடித்துப் போனார்கள் சகோதரர்கள் இருவரும்.
பிறகு ஒரு மாத காலம் வரை குவான்ஷின் கோஜியைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. ஒரு மாதம் கழித்து ஒரு நாள் நோபு நாகன் மாளிகை வாசலில் குவான்ஷின் கோஜியைப் போன்ற ஒருவன் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான்; குறட்டை, இடியின் கர்ஜனை போல் இருந்தது. மது மயக்கத்தில் கிடப்பவன் அவன் தான் என்று காவலன் ஒருவன் கண்டான். தூக்கிப் போய் சிறையில் போட்டு அடைத்தான். அங்கும் கிழவன் விழிக்கவில்லை. பத்து நாட்கள் இரவு பகல் ஓயாமல் தூங்கினான். அவனது குறட்டை தூரத்துப் போர் முரசு போல் ஒலித்துக் கொண்டிருந்தது.
இச்சமயத்தில் தான் நோபு நாகன் தன்னுடைய படைத் தலைவர்களுள் ஒருவனான அக்கெச்சி மிட்ஸு ஹீடே என்பவனுடைய சதிக்கத்திக்கு இலக்காகி மாண்டான். மிட்ஸு ஹீடே ஆதிக்கம் பனிரெண்டு நாட்கள் தான் நிலைத்தது.
மிட்ஸு ஹீடே, கியாட்டோ வுக்கு மன்னனானவுடன், குவான்ஷின் கோஜியின் வழக்கை, அவனிடம் அறிவித்தார்கள். கைதியைத் தன் முன்னால் அழைத்து வரும்படி உத்தரவிட்டான் மிட்ஸு ஹீடே. கிழவனைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். மிட்ஸு ஹீடே அவனைப் பரிவுடன் நடத்தினான். அவனுக்கு திருப்தியாக நல்ல நல்ல உணவு பரிமாறும்படி உத்தரவிட்டான். குவான்ஷின் கோஜி சாப்பிட்ட பிற்பாடு, தங்களுக்கு மதுவில் அத்தியந்த ப்ரீதி என்று சொல்லுகிறார்கள்; ஒரே தடவையில் நீங்கள் எவ்வளவுதான் சாப்பிடுவீர்கள்?” என்று கேட்டான் புதுமன்னன்.
“எவ்வளவு குடிப்பேன் என்று தெரியாது. மதி மயங்கும் சமயத்தில் நிறுத்தி விடுவேன்” என்றான் கிழவன்.
மதுக்குடத்தை குவான்ஷின் கோஜி முன் கொண்டு வந்து வைக்கும்படி கட்டளையிட்டான் அரசன். கிழவனுடைய கலசம் வற்ற வற்ற ஊற்ற வேண்டும் என்று கட்டளையிட்டான். கிழவன் சிரமமாகப் பத்துக் குடங்களைக் காலி செய்து விட்டான். “இன்னும் இருக்கிறதா?” என்று கேட்டான். பணியாள் மதுக்குடங்கள் யாவும் காலி என்று சொல்ல, கூடியிருந்தவர்கள் பிரமித்துப் போனார்கள்.
“இன்னும் உங்களுக்கு திருப்தி வரவில்லையா?” என்று கேட்டான் அரசன்.
“அரசே ஒருவாறு திருப்திதான்; உனது கருணைக்குப் பதிலாக எனக்குத் தெரிந்த சில வேடிக்கைகளைக் காண்பிக்கிறேன்” என்றான் குவான்ஷின் கோஜி.
“அரசே அந்தத் திரையில் தெரியும் படத்தைச் சற்று கவனியுங்கள்” என்றான் குவான்ஷின் கோஜி.
ஓமித்தடாகத்தின் எட்டு அழகுகளைக் காட்டும் சித்திரம் அது. அங்குள்ளவர்கள் யாவரும் படத்தையே பார்த்தார்கள். படத்திலே ஒரு மனிதன் ஒரு படகை ஓட்டிச் செல்லுவது போல வரைந்திருந்தான் சித்திரக்காரன். படத்திலே படகு ஒரு அங்குல நீளந்தானிருந்தது, குவான்ஷின் கோஜி படகை நோக்கிக் கையை நீட்டி அழைத்தான். படகு படத்தில் திரும்பியது. முன்னோக்கி வர ஆரம்பித்தது. நெருங்க நெருங்க படகு பெரிதாயிற்று. சிறிது நேரத்தில் படகோட்டியின் முக ஜாடையும் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. படகும் ரொம்ப அருகில் நெருங்கி விட்டது. திடீரென்று படத்திலிருந்த ஏரித் தண்ணீர் படத்தை விட்டு வழிந்து அறைக்குள் பெருக ஆரம்பித்தது. அறையில் கூடியிருந்தவர்கள் உடைகள் நனைந்து போகாமல் வரிந்து தூக்கிக் கொண்டனர். ஜலம் முழங்கால் அளவு வந்தது. மேலும் பெருக ஆரம்பித்தது. அதே சமயத்தில் படகும் திரையை விட்டு வெளி வந்தது. நிஜமான செம்படவன் படகு, அதன் துடுப்பு வலிப்பதும் கேட்டது. தண்ணீர் மேலே மேலும் பெருக ஆரம்பித்தது. அங்கு நின்றிருந்தவர்கள் இடுப்பளவு நனைந்தனர். படகு குவான்ஷின் கோஜியிடம் வந்தது. குவான்ஷின் கோஜி அதில் ஏறிக்கொண்டான். படகுக்காரன் படகைத் திருப்பி வெகு வேகமாக ஓட்டிச் சென்றான். படகு செல்லச் செல்ல ஜலமும் வடிய ஆரம்பித்தது. படகும் ஜலமும் படத்துக்குள்ளாகவே வடிந்து மறைய ஆரம்பித்தன. படகு படத்தின் முன்பக்கமிருந்து செல்ல ஆரம்பித்ததும் அறையில் ஒரு சொட்டு ஜலம் கூட இல்லை. முன் போல காய்ந்து ஈரக் கசிவு கூட இல்லாமல் போய்விட்டது. ஆனால் படத்துக்குள் சென்ற படகும் வேகமாகச் சென்று கொண்டே இருந்தது. அது தூரத்தில் செல்லச் செல்ல, சிறிதாகி வெறும் புள்ளி போலாயிற்று. பிறகு அந்தப் புள்ளியும் மறைந்தது. குவான்ஷின் கோஜியும் அதோடு மறைந்து போனான். அதன் பிறகு அவன் ஜப்பானில் தென்படவே இல்லை.
(டென்ஷோ வம்சத்தின் ஆதிக்கம் கி.பி.1573 முதல் 1594 வரை இருந்தது. நோபு நாகன் கி.பி. 1582-ம் வருஷத்தில் மாண்டு போனதாகத் தெரிகிறது.
யாஸோ – கிதான் என்ற அபூர்வமான புராதன ஜப்பானிய கிரந்தத்திலிருந்து எடுக்கப்பட்டது.)
Comments
Post a Comment