தொடர்ச்சி -இரண்டு


Posted Image
செழித்து வளர்ந்த ஒரு வயல்வெளியைக் கற்பனை செய்து பாருங்கள். அதன் நடுவே நீங்கள் நிற்கும்போது, எங்கும் பசுமையாகப் பரவியிருக்கும் பயிர்களையே காண்பீர்கள். இடுப்பளவு பயிர் வளர்ந்திருக்கையில் சில மீட்டர் தூரத்திற்கு அப்பால், தரையில் இருக்கும் எதுவுமே உங்கள் கண்ணுக்குப் படமுடியாதவாறு எங்கும் வளர்ந்திருக்கும் பயிர். அந்த வயலில், ஒரு உதைபந்தாட்ட மைதானம் அளவுக்கு மிகப்பெரிய வட்ட வடிவச் சித்திரம் வரையப்பட்டிருப்பதாக நினைத்துப் பாருங்கள். உங்கள் கண்ணுக்கு அந்தச் சித்திரத்தின் முழுமை தெரிய வாய்ப்பே இல்லை என்பது புரியும். அப்படி அந்தச் சித்திரத்தின் முழுமையைப் பார்க்க வேண்டுமென்றால், குறைந்தபட்சம் நூறு மீட்டர்கள் உயரத்தில் இருந்து பார்த்தால்தான் தெரியும். நூறு மீட்டர் மேலே பறந்து சென்று பார்த்தால் தெரியக் கூடிய நிலையில், கண்களின் மதிப்பீடுகளை மட்டும் வைத்து, பிரமாண்டமான சித்திரங்கள் வயல்களில் உருவாக்கப்பட்டிருக்கிறது.  இதன் சாத்தியக்கூறுகளை யோசித்துப் பாருங்கள். பார்க்கவே முடியாத ஒன்றைத் தெளிவாக வரைவது என்பது சாத்தியம்தானா? ஆனால், உலகம் முழுவதும் 'க்ராப் சர்க்கிள்' (Crop Circle) என்ற பெயருடன், பயிர்களால் இப்படிப்பட்ட சித்திரங்கள் உருவாக்கப்பட்டுத்தான் இருக்கின்றன. வார்த்தைகளால் இதை நான் சொல்லும் போது, உங்களுக்குப் புரிவதற்குச் சற்றுச் சிரமமாக இருக்கிறதல்லவா? ஒரு பயிர் வட்டத்தை நிலத்திலிருந்து இரண்டு மீட்டர் உயரத்திலும், பத்து மீட்டர் உயரத்திலும் இருந்து பார்த்தால் நமக்கு அந்தச் சித்திரங்கள் எப்படித் தெரிகிறது என்று பாருங்கள். இதையே நிலத்தின் மட்டத்தில் இருந்து பார்த்தால் எந்த அளவுக்குத் தெரியும் என்பதையும் யோசியுங்கள். அப்படிப்பட்ட பெரிய சித்திரங்களை எப்படி நிலத்தில் இருந்தபடி உருவாக்கியிருக்க முடியும்?

Posted Image
Posted Image
உருவாக்கப்பட்ட சித்திரங்கள் மிகச் சாதாரணமான சித்திரங்கள் என்றால் கூடக் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், அவை அனைத்தும் கணித மேதைகளால் வரையப்படும் மிகச் சிக்கலான கேத்திர கணித வரைவுகளுக்கு ஒப்பான சித்திரங்கள். ஒரு காகிதத்தில் அப்படி ஒரு சித்திரத்தை நாம் வரைய வேண்டுமென்றால், பல கணிப்பீடுகள் செய்து மட்டுமே வரைய முடியும். ஆனால் இவையெல்லாம் வயல் வெளிகளில், எந்த வித கணிப்புகளும் இல்லாமல் உருவாக்கப்பட்டிருக்கின்றன. வாய் வார்த்தைகளால் சொல்லிப் புரிய வைக்க முடியாத கணித வரைவுகள் அவை. இதைச் சுலபமாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இந்தச் சித்திரங்களைப் பாருங்கள்.

Posted Image
Posted Image
ஒரு வட்டத்தின் நடுவே சிலந்திக் கூடு போன்ற அமைப்பில் பயிர்களால் வரையப்பட்ட ஒரு சித்திரம் இது. இந்தப் பயிர் வட்டத்தை வரைந்த விதமும், அதற்கான கணித விளக்கமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு ஐந்து கோணங்களையுடைய நட்சத்திரங்கள் வரைந்து, அவற்றிற்கிடையே வட்டங்கள் அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்க வேண்டிய சித்திரம் இது. ஆனால் அப்படி நட்சத்திரங்களோ, வட்டங்களோ வரையப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பயிர் வட்டம் உருவாக்கப்பட்ட காலம் 1994ம் ஆண்டு.
சாதாரணமாகக் காகிதத்தில் வரைவதற்கே பல மணி நேரங்கள் எடுக்கக் கூடிய இந்தச் சித்திரம், வயல் வெளிகளில் உருவாக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். உருவாக்கப்பட்டிருக்கின்றது என்றால் எப்படி உருவாக்கப்பட்டிருக்கின்றது தெரியுமா? பயிர்களை நிலத்தோடு மடித்தும், அழுத்தியும் எந்த ஒரு பயிரும் சேதப்படுத்தப்படாமல் உருவாக்கப்பட்டிருகின்றது. கணித அடிப்படையில் மிகவும் சிக்கல் வாய்ந்ததாக, இது போலப் பல சித்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு உதாரணமாக இன்னுமொரு சித்திரத்தை விளக்கிவிட்டு, நான் மேலே சென்றால்தான், இந்த பயிர் வட்டங்களின் உண்மையான பரிமாணத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியும். 
தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள வைல்ட்ஷையரில், வூட்பெர்க் ஹில் என்னுமிடத்தில் (Woodberg Hill-Wildshire) 2000 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பயிர்வட்டம் ஒன்றின் பெயர் சூரியகாந்தி (Sunflower). இந்தச் சூரியகாந்திப் பயிர் வட்டத்தில் 308 முக்கோணங்கள் உள்ளன. இவை 44 வளைவுக் கோடுகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது. மிகவும் சிக்கலான அமைப்பையுடைய இந்தச் சித்திரத்தைக் கணித முறையில் எப்படி வரைவது என்பதைப் பாருங்கள். அதுவே பயிர்களினால் உருவாக்கப்பட்டிருக்கும் விதத்தையும் பாருங்கள். நம்பவே முடியாத ஆச்சரியமாக, நிஜத்தில் எம் கண்முன்னே பரந்து விரிந்து காணப்படுகிறது. இப்படிப்பட்ட சித்திரங்களைப் பயிர்களினால் எப்படி வரைய முடியும்? எத்தனை நபர்கள் இதை உருவாக்கத் தேவைப்பட்டிருக்க வேண்டும்? எத்தனை நாட்கள் இவற்றிற்குத் தேவைப்பட்டிருக்க வேண்டும்? அனைத்துக் கேள்விகளையும் தன்னுள்ளே அடக்கி அமைதியாய் வயல்வெளியில் படுத்திருக்கிறது இது. 

Posted Image
Posted Image
ஒரு அளவுக்குப் பயிர் வட்டங்களின் பிரமாண்டங்களையும், பரிமாணங்களையும் நீங்கள் இப்போது புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனவே, பயிர் வட்டங்கள் பற்றி விரிவாகச் சொல்ல வேண்டிய இடத்திற்கு இப்போது வந்திருக்கிறேன். பயிர் வட்டங்களின் வரலாறு முதன் முதலாக 1678 ம் ஆண்டு தென்கிழக்கு இங்கிலாந்தில் அமைந்த ஹார்ட்ஃபோட்ஷையர் (Hartfordshire) என்னுமிடத்தில் பிசாசு ஒன்றினால், ஒரு விவசாயிக்கு அமைத்துக் கொடுக்கப்பட்டது என்ற புராதனக் கதையுடன் ஆரம்பமாகிறது.

Posted Image
இந்தப் பிசாசுக் கதையில் எந்த அளவுக்கு உண்மை இருந்தது அல்லது இல்லை என்ற நிலையில், 1920ம் ஆண்டளவில் மீண்டும் பயிர் வட்டங்கள் தோன்ற ஆரம்பித்தன. ஆனால் 1980 களிலும் 90 களிலும்தான் சிக்கலான வடிவங்களுடன் இவை அதிகமாக காணப்படத் தொடங்கின. இந்தக் கால கட்டங்களிலிருந்து தொடர்ச்சியாய் ஒவ்வொருவருடமும் 300 பயிர் வட்டங்கள் உலகம் முழுவதும் தோன்ற ஆரம்பித்தன. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜெர்மன், போலந்து, பெல்ஜியம், இத்தாலி, சுவீடன், நார்வே, ஆஸ்திரேலியா என உலகம் முழுவதும் இந்தப் பயிர் வட்டங்கள் காணப்படுகின்றன. ஆனால், குறிப்பாக தெற்கு இங்கிலாந்தில் மட்டுமே ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கு அதிகமான பயிர் வட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இதுவரை உலகம் முழுவதுமாக பத்தாயிரத்துக்கும் அதிகமானவை உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை உருவாவதில் ஒரு ஆச்சரியமான விசயம் ஒன்று உண்டு. எவ்வளவு சிக்கலான பயிர் வட்டங்களாக இருந்தாலும் கூட, நான்கு மணி நேரங்களுக்குள் உருவாக்கப்பட்டுவிடுகின்றன. சில நிமிடங்களில் உருவாக்கப்பட்ட வட்டங்களும் உண்டு. 80 வீதத்திற்கு அதிகமானவை இரவிலேயே உருவாக்கப்படுகின்றன என்றாலும், பகலிலும் பல உருவாக்கப்பட்டிருக்கின்றன. 
இந்த இடத்தில் நமக்கு ஒரு கேள்வி எழுவதை நாம் தடுக்க முடியாது. "உண்மையில் இந்தப் பயிர் வட்டங்கள் யாரால் உருவாக்கப்படுகின்றன?" என்பதே அந்தக் கேள்வி. அதாவது, இவை மனிதர்களால் உருவாக்கப்படுகின்றனவா? இல்லை, மனிதன் தாண்டிய வேறு ஒரு சக்தியினால் உருவாக்கப்படுகின்றதா? என்ற சந்தேகமே இந்தக் கேள்வியில் உள்ளடங்கியிருக்கிறது. மனிதனால்தான் மட்டும் இவை உருவாக்கப்படுகின்றன என்று இருக்கும் பட்சத்தில் நான் இந்தத் தொடரை எழுத வேண்டிய அவசியமே இருந்திருக்கப் போவதில்லை. மனிதன் தாண்டி வேறு ஒரு சக்தி இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்னும் சந்தேகம்தான், இவை இவ்வளவு பரவலாக, உலகப் பிரசித்தி பெறுவதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றது. இந்தப் பயிர் வட்டங்களை ஆரய்வதற்கென்றே உலகம் முழுவதும் பல ஆராய்ச்சியாளர்கள் இருக்கின்றனர். அவர்களைப் பயிர் வட்ட ஆராய்ச்சியாளர்கள் (Crop Circle Researchers) என்று அழைக்கிறார்கள். அவர்களிடம் "இந்த வட்டங்கள் மனிதர்களால் உருவாக்கப்படுகின்றனவா?" என்று கேளிவியைக் கேட்டால், "ஆம்" என்றே பதிலளிக்கின்றார்கள். நமது அடுத்த கேள்வியாக, "இவை மனிதர்களால் மட்டும் உருவாக்கப்படுகின்றனவா?" என்று கேட்டால், "இல்லை" என்று பதிலளிக்கிறார்கள். என்ன குழப்பமாக இருக்கிறதா? நிபுணர்கள் சொல்வது என்னவென்றால், "இந்த வட்டங்களில் பலவற்றை மனிதர்கள் செய்திருப்பது என்னவோ உண்மை. ஆனால் இவற்றில் பல, மனிதர்களால் செய்யப்படாதவை" என்பதே.

மனிதர்களால் உருவாக்கப்படாத பட்சத்தில், இவற்றை யார் செய்திருக்க முடியும்? என்ற கேள்விக்கு யாரும் இதுவரை தெளிவான பதிலைச் சொல்லி விடவில்லை. ஆனால், யார் செய்திருக்கக் கூடும் என்பதை நம்மால் இலகுவாகக் கண்டுபிடிக்கக் கூடிய வகையில், ஆதாரங்களை அள்ளித் தருகிறார்கள் அவர்கள். நேரடியாகப் பதிலைத் தருவதால்  உருவாக்கியவர்களைக் காட்டியே தீர வேண்டிய நிலை அறிவியலில் இருப்பதால். யாரும் வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறார்கள். இந்த நிலையில்தான் துணிச்சலாக, இதை மையமாக வைத்து ஹாலிவுட்டில் படம் ஒன்றை எடுத்து ஒருவர் வெளியிட்டார். அவர் படம் வெளியிட்டது என்பது பெரிய விசயமாக இருந்தாலும், அவரை இங்கு நான் குறிப்பிட விரும்புவதற்கு இன்னுமொரு முக்கிய காரணமும் உண்டு. அந்தக் காரணம் என்ன தெரியுமா? அந்தப் படத்தை எடுத்தவர் ஒரு தென்னிந்தியர். படத்தை எடுத்தது மட்டுமில்லாமல், அதை இயக்கி நடித்தும் இருக்கிறார். அவர் பெயர் 'நைட் சியாமளன்' (M. Knight Shyamalan). ஆனால் மனோஜ் சியாமளன் என்றே பலரால் அழைக்கப்படுகிறார். அருமை நண்பர் மனோஜை ஞாபகப்படுத்துவதால்  நானும் அவரை மனோஜ் சியாமளன் என்றே அழைக்க விரும்புகிறேன். மனோஜ் சியாமளனின் அப்பா ஒரு மலையாளி, அம்மா பாண்டிச்சேரியைச் சேர்ந்த பெண்
 
'சிக்ஸ்த் சென்ஸ்' (Sixth Sence), ‘அன்பிரேகபிள்' ( Unbreakable) என்று உலகம் முழுவதும் வசூலை அள்ளிக் குவித்த இரண்டு திரைப்படங்களை இயக்கியவர் மனோஜ் சியாமளன். இந்த இரண்டு படங்களுமே அமானுஷ்ய சக்திகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டன. சொல்லப் போனால் அவரின் அனைத்துப் படங்களும் அமானுஷ்ய சக்திகளையும், மிஸ்டரிகளையும் மையமாக வைத்தே எடுக்கப்பட்டிருக்கின்றன. அடுத்தடுத்த வெற்றிப் படங்களுக்குப் பின்னர் 2002 ம் ஆண்டு மனோஜ் சியாமளன் எடுத்த படம்தான் 'சைன்ஸ்' (Signs). இந்தப் படம் அமெரிக்காவில் உள்ள ஒரு கிராமத்தில், சோளப் பயிர்கள் வளர்ந்த பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட பயிர் வட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தில், இந்தப் பயிர் வட்டங்களை யார் உருவாக்குகிறார்கள் என்ற கேள்விக்கான விடையையும் சியாமளன் அளித்துள்ளார். அவர்கள் யார் தெரியுமா? ஏலியன்கள். விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வந்த வேற்றுக் கிரகவாசிகளே இந்தப் பயிர் வட்டங்களை உருவாக்குகிறார்கள் என்று கதை அமைத்திருந்தார் மனோஜ் சியாமளன். 
 
உண்மையில் பயிர் வட்டங்கள் உருவாவதில் என்னதான் நடக்கிறது? அதுவும் குறிப்பாக தெற்கு இங்கிலாந்தில் மட்டும் ஏன் 80 விதமான பயிர் வட்டங்கள் உருவாகின்றன? இவை மனிதனால்தான் உருவாக்கப்படுகின்றனவா? இல்லை ஏலியன்கள் அல்லது மனிதனல்லாத வேறு ஏதும் ஒரு சக்திதான் இதை உருவாக்குகின்றதா? இவையெல்லாம் நம்முன் எழும் கேள்விகளாக இப்போது இருக்கின்றன. இந்த உண்மைகளை ஒரு அரசு நினைத்தால், அடுத்த நிமிடம் கண்டு பிடித்து மக்களுக்கு அதன் உண்மையைத் தெளிவாகச் சொல்லிவிட முடியும். ஆனால் இந்த உண்மைகள் மக்களுக்குச் சொல்லப்படாமல் ஒரு பதட்டத்திலேயே மக்கள் ஏன் வைக்கப்பட்டிருக்கின்றனர்? சொல்லப் போனால், இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? இவை பற்றி விளக்கமாக இனி வரும் பகுதிகளில் நாம் தெளிவாகப் பார்க்கலாம். 
பிற்குறிப்பு: "கடவுளையே நம்ப வேண்டுமானால் ஆதாரங்கள் காட்டு. இல்லையென்றால் விலகிப் போ! நமக்கு வேலை நிறைய இருக்கிறது" என்று சொல்லக்கூடிய விஞ்ஞானம் வளர்ந்திருக்கும் இந்த வேளையில் ஏலியன் பூமிக்கு வந்திருக்கிறது என்று சொல்வதை எப்படி ஏற்பது ? இது எல்லாம் கொஞ்சம் ஓவர் என்றே நீங்கள் நினைக்கலாம் நானும் இங்கு ஏலியன்கள்தான் இவற்றை உருவாக்கின என்று சொல்லி உங்களை மர்மமான ஒரு நிலையில் வைத்திருக்க விரும்பவில்லைஇந்த Crop Circle பற்றி நீங்கள் இணையத்தில் பார்த்தால் இவை மனிதனாலேயே செய்யப்பட்டது என்று ஒரு பகுதியும்]இல்லை இது மனிதனால் செய்யப்படவில்லைஎன்று மற்றொரு பகுதியும் பிரிந்து விளக்கங்களைத் தமக்கு ஏற்றவாறு அளித்துக் கொண்டிருப்பார்கள் இதில் நீங்கள் எதை வாசிக்கிறீர்களோஅதுவே உண்மை என்றநிலைப்பாட்டையும் நீங்கள் எடுக்கும் சூழ்நிலை வரலாம் ஆனால் நிஜம் என்பது வேறாக இருக்கலாம் ஆகவே நிதானமாக இந்தப் பயிர் வட்டங்கள் பற்றிய அனைத்து உண்மைகளையும் எடுத்துச் சொல்ல முயற்சிக்கிறேன். இறுதியில் நாம் அனைவரும் சேர்ந்தே ஒரு முடிவுக்கும் வந்துவிடலாம்
 

Comments

Popular posts from this blog

Working Torrent Trackers list updated Oct 2016...

142.Keith Hunter JESPERSON

How to Fix VLC does not support UNDF Format : Best Fix