ஓநாய்கள்
சுலோசனா சின்ன வயசில் அடிக்கடி ஓநாய்கள் அவளைத்துரத்துவதாகக் கனவு கண்டாள். ஒவ்வொரு முறையும் தலை தெறிக்க ஓடுவாள். அவை நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு எச்சில் வழிய துரத்தும். அவை, அவளைப் பிடிப்பதற்குள் கண்விழித்து விடுவாள். வியர்வை வெள்ளத்தில் எழுந்து தண்ணீர் குடிப்பாள். ஆனால், அவள் எந்த இரவும் ஓநாய்களிடம் மாட்டிக் கொண்டதில்லை.
வளர்ந்து பெரியவளாகி அவளுக்கு கல்யாணம் நடந்து முடிந்த பிறகு கனவுகள் நின்றுவிட்டன. ஒருமுறை தன் கணவனுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவனை உற்றுப்பார்த்தாள்.
“என்ன பார்க்கறே சுலோசனா?”
“உங்களை நான் கல்யாணத்துக்கு முந்தியே எங்கயோ பாத்திருக்கேன்.எங்க பாத்திருக்கேன்?”
“கல்யாணத்துக்கு முன்னாடி நாம சந்திச்சதே இல்லையே”
“எனக்கென்னவோ கனவிலேயோ எங்கயோ உங்களைப் பார்த்தா மாதிரி இருக்கு.”
“என்ன கனா சொல்லு?”
“ஓநாய்களா வந்து துரத்தும். திடீர்னு முழிச்சிண்டுடுவேன்…”
“என்னை அப்டின்னா ஓநாய்ங்கறயா?”
“இல்லை இல்லை நீங்க ஓநாய் கூட்டத்தில் இல்லை. நான் சொல்ல வந்தது என்னன்னா”
“சரித்தான் வந்து படுடி!”
‘இன்னிக்கு வேணாமே…”
“நான் வேணுங்கங்கறப்ப வரணும். அப்பதான் பொண்டாட்டி.”
அன்று அவள் மீண்டும் கனவு காண ஆரம்பித்தாள்.அதே ஓநாய்கள் அதே நாக்கைத் தொங்கப் போட்டு எச்சில் வழிய…ஒரே ஒரு வித்தியாசம்… அவளை ஓநாய்கள் துரத்தவில்லை. அவள் ஓநாய்களுடன் ஓடிக் கொண்டிருந்தாள்
Comments
Post a Comment