வீணா



வீணா பிறந்தது 1946-ல். 1956-லிருந்து 1960 வரை அவள் பெற்றோர் டில்லியில் இருந்தபோது சாப்பிட்ட கோதுமையினாலும், அவள் அம்மாவிடமிருந்து பெற்ற நேர்த்தியான மூக்கினாலும், மிக ஒழுங்கான அதரங்களாலும், உயரத்தினாலும், எல்லா அளவுகளும் ஓர் அரை இன்ச் குறைந்து சட்டையை மீறும் உடம்பு வளப்பத்தினாலும் அவள் எதிரே செல்பவரைப் பிரமிக்கவைக்கும் அழகு பெற்றிருந்தாள். எப்படிப்பட்ட பிரமிப்பு? பெட்ரூமில் புலியைப் பார்க்கும் பிரமிப்பு. ஆதாரமான சில உணர்ச்சிகளை வயிற்றில் ஏற்படுத்தும் பிரமிப்பு!
அன்று மாலை, வீணா தன் ஆபீசிலிருந்து திரும்பியதும் கையிலி ருந்த புத்தகத்தையும் பையையும் தூக்கியெறிந்துவிட்டு, ”அம்மா! அம்மா! அப்பா எங்கே?” என்றாள்.
இதோ எதிரிலேயே இருக்கி றேன்என்றார் மதுசூதன்.
ஸாரிப்பா..! நான் கவனிக்க வில்லை. ஸோ டயர்ட்! இந்தக் கடுதாசியைப் படியுங்கள், அப்பா!
என்ன கடுதாசி?”
காதல் கடுதாசி.
என்ன?”
ஆமாம். ஆபீஸ் விலாசத்துக்கு வந்தது. படியுங்கள். உரக்கப் படியுங்கள்.
யார் எழுதியது..?”
சொல்கிறேன். படியுங்களேன்சிரிப்பாய் இருக்கும்!
என் அருமைக் காதலிக்கு, அன்று நான் உங்களுடன் பேசியதிலிருந்து என் மனம் என் வசம் இல்லை. என் மனம் பரிபோய்விட்டது..
பரி! சின்ன ரி!என்றாள் வீணா, அப்பாவின் தோள் அருகே இருந்து.
ம்மேலே..!
ம்பரிபோய்விட்டது! எனக்கு உணவு இல்லை. உறக்கம் இல்லை. எப்பொழுது உங்களுடன் மறுபடி அளவ ளாவச் சந்தர்ப்பம் கிட்டும் அப்பொழுதுக்காகவே உயிர் வாழும் சுந்தர்! யார் இந்தச் சுந்தர்?”
எல்லாம் பக்கத்து வீட்டு சுந்தரராஜன்ப்பா! மேரியைத் தொடரும் ஆட்டுக்குட்டி போல என்னைத் தொடர்கி றான். கம்பளிப்பூச்சி மாதிரி ஒட்டிக் கொள்கிறான். நான் பஸ்ஸில் போனால், அதே பஸ் ஸில் ஆபீஸ் வரை கொண்டு வந்து விட்டுவிட்டு அப்புறம் அவன் ஆபீஸ் போகிறான். சாயங்காலமும் இதே கதி. அவனுடன் ஒரே ஒரு வார்த் தைதான் இதுவரை பேசி யிருக்கிறதாக ஞாபகம். மணி என்னஎன்று ஒருநாள் கேட் டேன். அவஸ்தைப்பா!
அம்மா இதுவரை மௌன மாக இருந்தவள், ”அக்கிரமம். காலிப் பசங்க ஆறு பேர் இருக்கிறாங்க அந்த வீட்டில். ராத்திரி பூராவும் மூணு சீட்டு ஆடிக் கொண்டு…”
அப்பா, ”பப்புஎன்று கூப் பிட்டார். பப்பு என்கிற பத்மன், வீணாவின் தம்பி வந்தான்.
பக்கத்து வீட்டுக்குப் போய் அங்கே சுந்தர் என்று ஒரு பையன் இருக்கிறான். அவ னைக் கையோடு கூட்டிக் கொண்டு, வா!
அவன் போனதும், அப்பா வீணாவைப் பார்த்தார். அவள் சிரித்துக்கொண்டாள்.என் பெண் எத்தனை அழகாக இருக்கிறாள்!என்று கவலைப் பட்டார் மதுசூதன்.
அப்பா! உங்களிடம் வந்து இந்த மாதிரி கம்ப்ளெய்ண்ட் செய்வது எனக்கு வெட்கமா கத்தான் இருக்கிறது. நான் ஒன்றும் பயந்த பெண்ணில்லை. ஆனால், இவன் செய்வது அருவருப்பாக இருக்கிறது. எனக்குக் கட்டோடு பிடிக்கவில்லை…”
இரு, இருஅவன் வரட் டும்!
அப்பா! அநாவசியமாக ரகளை பண்ணாதீர்கள். அவ னைக் கூப்பிட்டு, ‘இந்த மாதிரி செய்வது நன்றாக இல்லை. இனிமேல் செய்யாதே!என்று சொல்லுங்கள்போதும்!
ம்அவன் வரட்டும்!” – மதுசூதன் தான் சொல்லப் போவதை, செய்யப்போவதை யோசித்துக்கொண்டு இருந்தார்.
பெரிய நியூசென்ஸாகப் போய்விட்டான். எங்கே போனாலும் ஸ்பை பிக்சர் மாதிரி பின்னாலேயே மௌனமாகத் தொடர்கிறான். நம்பமாட்டீர்கள் அப்பாநேற்று சிநேகிதிகளுடன் படகில் தண்ணீரில் போகிறாற்போல் கனா. தண்ணீருக்குள்ளிருந்து தலையை எடுத்துச் சிலிர்த்துக்கொண்டு சிரிக்கிறான்யார்..? சுந்தர்!என்றாள் வீணா.
சுந்தர் வாசலில் செருப்பை உதறிவிட்டுத் தயங்கி உள்ளே வந்தான்




வீணா சில பத்திரிகைகளைச் சேகரித்துக்கொண்டு நிதானமாக மாடிக்குச் சென்றாள்.
சுந்தர் ஒரு சாதாரணன். அவன் உலகம், நீங்கள் கேட்டவை, தீபாவளி மலர், எம்.ஜி.ஆர்., சிவாஜி படங் களின் உலகம்; செய்தித்தாள்களை நம்பும் உலகம். உங் களுக்குச் சோர்வாக இருக்கிறதா?’ என்று விளம்பரத்தில் கேட்டால், உடனே சோர்வாக உணரும் ஹிப்னோபீடியா சுபாவம். அவன் வாழ்க்கையில் நிகழ்ந்த மகத்தான சலனம், வீணாவுடன் ஒரு தடவை பேசியது. மகத்தான தீரச் செயல், அந்தக் கடிதத்தை எழுதியது.
சுந்தர் சுற்றுமுற்றும் பார்த்தான். மதுசூதன் நிற்கிறார். அம்மா, கையில் கரண்டியை வைத்துக்கொண்டு நிற்கிறாள். பப்பு நகத்தைக் கடித்துக்கொண்டு நிற்கிறான். அசிங்கமான மௌனம். அவன் கைவிரல்கள் மெதுவாக நடுங்க ஆரம்பித்தன.குட் ஈவி(னிங் ஸார்)!என்றான்.
நீதான் சுந்தரா?”
ஆமாம், சார்!
உனக்கு மூளை இருக்கா?”
சுந்தர் பின்னால் திரும்பினான்.
ஏன், யாரையாவது வக்காலத்திற்குக் கூட்டி வந்திருக்கிறாயா?” என்றவர், மேலும் கேட்டார்… ”இந்த லெட்டரை நீதானே எழுதினே?”
லெட்எந்தலெ…” என்று ஒற்றை எழுத்துகளுக்கு நழுவினான்.
பார்பார்த்துச் சொல்! உன் கையெழுத்துதானே? பார்பார்…” என்று அவன் முகத்தின் முன் அந்தக் கடிதத்தை ஆட்டினார்.
நீதானே..?”
”……………”
நீதானே?”
மீண்டும் புள்ளி புள்ளி புள்ளி. பதில்தான் வரவில்லை.
உங்க மாமாகிட்டே சொல்லட் டுமா?”
வேண்டாம் சார்என்றான் உடனே ஸ்பஷ்டமாக..
பின் ஏன் எழுதினாய்?”
முழிக்கிறதைப் பார்! ஏண்டா காலிப் பசங்களா, உங்களுக்கு வேறே வேலை…” என்று ஆரம்பித்த அம் மாவை அவர் தடுத்து நிறுத்தினார். நீ சும்மா இரு! டேய், நீ பால் பிரதர்ஸில்தானே உத்தியோகம் பார்க்கிறே?”
ஆமாம், சார்!
எனக்குப் பால் பிரதர்ஸ் ரெண்டு பேரையும் தெரியும். இப்ப ஒரு போன் கால் போட்டால், நாளைக் காலை உன்னைச் சீட்டுக் கிழித்து விடுவார்கள், தெரியுமா?”
ஃபாக்டரி ஆக்டின்படி அது சாத் தியம் இல்லை என்று சொல்லவேண் டும் போல் இருந்தது சுந்தருக்கு. சொல்லவில்லை.
மதுசூதன் மேலும் விரட்டினார்… ”உங்க வீட்டுக்காரங்கிட்டே சொன் னால், நாளைக்கே பெட்டி படுக்கை யைத் தெருவில் தூக்கி எறிந்துவிடு வான், தெரியுமா?”
இதற்கும் அவன் சொல்ல நினைத்த பதிலைச் சொல்லவில்லை. நாம் முன் சொன்னபடி சுந்தர் சாது. கால் கட்டைவிரலால் வட்டங்கள் வரைந்து கொண்டு, ”ஸாரி சார்!என்றான்.
என்ன ஸாரி! எப்பொழுதாவது யோசித்துப் பார்த்திருக்கிறாயாஇந்த மாதிரி கடிதம் எழுதுவது தப்பு; அந்தப் பெண்ணுக்கு இதெல்லாம் விருப்பமில்லாமல் இருக்கலாம்; இந்த மாதிரி எழுதுவது எவ்வளவு ஸில்லி, முட்டாள்தனம், அறியாமை என்று? பையா, நீ என்ன படித்திருக்கிறாய்?”
பி.ஏ.
கோல்ட்-ஸ்மித் படித்திருக்கி றாயா?”
”………”
படித்திருக்க மாட்டாய். போய் உட்கார்ந்து சிடிஸன் ஆஃப் தி வேர்ல்ட்படி. புத்தி வரும். சரியான லூஸாக இருக்கிறாய். சில மரைகள் டைட் ஆகும். ஞானம் ஏற்படும்.
”………”
பேசுகிறானா பாரு!” – அம்மா.
நீ இரு..! பையா, உனக்கு இது முதல் வார்னிங்! மறுபடி இந்த மாதிரி காதல் கடுதாசி எழுதினால், உன் வீட் டுக்கு வந்து, உன் மாமாவிடம் அனுமதி வாங்கி உன்னைச் செருப்பால் அடிப்பேன். ஜாக்கிரதை! உனக்கு மதுசூதனைத் தெரியாது. உனக்குக் கடுதாசி அனுப்பவேண்டும் என்று ஆவலாயிருந்தால் வெறும் காகிதம் அனுப்பு; ஷேவிங்குக்கு உபயோகமாக இருக்கும். அதிலே ஒன்றும் எழுதக் கூடாது. எழுதினால் ஷேவிங்குக்குக் கூட லாயக்கில்லாமல் போய்விடும். என் வீட்டில் சின்னக் குழந்தைகளும் இல்லை…” சுந்தருக்கு இது புரிய வில்லை. ஸாரி ஸார்..!
யங் மேன்! உனக்கு லட்சியம் இல்லை. லட்சியம் இல்லாத மனது சஞ்சலப்படும். ஏதாவது ஹாபிவைத்துக்கொள்பெண்களைத் துரத் துவதைக் தவிர! விறகு வெட்டு, காலி சிகரெட் பெட்டி சேர், ஸ்டாம்பு சேர்எங்களை விட்டுவிடு. என்ன? சொல்வது புரிகிறதா? அநாவசியமாக எங்களுடன் குறுக்கிட்டு, உன் வாழ்க் கையை நாசம் பண்ணிக்கொள்ளாதே!
வரேன் சார்!
வராதே, போ!
சுந்தர் செருப்பை மாற்றிப் போட் டுக்கொண்டு ஆவேசமாக வெளியேறி னான். அந்த ஆவேசத்தில் அவன் என்ன செய்யப்போகிறான் என்பது நமக்குத் தெரியாது. பெண் என்னும் மாயப்பிசாசுஎன்று கவிதை எழுதச் சென்றிருக்கலாம்; ரயிலில் விழுந்து தற்கொலை செய்யப் புறப்பட்டிருக்க லாம்; அல்லது, ஒரு தமிழ்ப்படத்துக்குப் புறப்பட்டிருக்கலாம். நம் கவனம் இங்கே, மதுசூதன் வீட்டில்தான்!
அப்பாவுக்கு ஒரு பாட்டம் திட்டி னதில் மனதில் நிறைவு இருந்தது.அம்மா, ”இவனைச் சும்மா விடப் போவதில்லை. நான் போய் அந்த அம்மாவிடம் கேட்கப்போகிறேன்.என்ன ரௌடிப் பசங்கள்காலிப் பசங்கள்..! வயசு வந்த பெண்ணை நெருப்பைப் போல் வீட்டில் வைத்துக் காவல் காக்க வேண்டியிருக்கிறது. படுகாலி…” என்று அந்த வயசும், அந்தக் குடும்ப நிலையும் அனுமதிக்காத மற்றொரு சொல்லையும் பிரயோகித்தாள்.
இவனைப் பார்த்தால் ரௌடியாகத் தோன்றவில்லை. இது ஓர் இடியட். அவ்வளவுதான்! வயசுக் கோளாறு. படிப்பு போதாது. புத்தகங்கள், சினிமா! இவன் வயதில் நான் சியாமளா தண்டகம் சொல்லிக்கொண்டிருந்தேன். இவன் காதல் கதை படிக்கிறான். அதான் வித்தியாசம்! பாடம் சொல்லிக்கொடுத்த வாத்தியார்கள் காரணம்; புத்தகங்கள் காரணம்; இந்த சோஷலிஸ்ட் சர்க்கார் காரணம். இடியட்இடியட்…”
எனக்கு என்னவோ வீணாவைப் பற்றிக் கவலையாக இருக்கிறது. தனியாக அனுப்புகிறோமே! இவள் உத்தியோகம் பண்ணி யாருக் குச் சோறு போட வேண்டும்? வீட்டிலேயே இருக்கட்டுமேஎன்றாள் அம்மா.
மதுசூதன் ஸ்பஷ்டமாகச் சொன்னார்… ”வீணாவைப் பற்றிக் கவலைப்படாதே! அவள் அப்பாவின் பெண். தைரியசாலி! அவளுக்குத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியும். சீரியஸான பெண். இந்தக் காதல், கீதல் என்கிற புத்தக உணர்ச்சிகள் எல்லாவற்றுக்கும் அப்பாற் பட்டவள். இதெல்லாம் மேம்போக்கானது என்று அறிந்துகொள்கிற பக்குவம் அவளுக்கு இருக்கிறது பார், அதுதான் முக்கியம்! நாம் வளர்த்த ரீதி. வேறு ஏதாவது பெண்ணாயிருந்தால் இந்த மாதிரி தத்துப்பித்து என்று கடுதாசி வந்தால், பதில் கடுதாசி எழுதி, விபரீதத்தை வளர்க்கும். வீணா அப்படி இல்லை! சென்ஸி பிள் கேர்ள்! வீணாஎன்று கூப்பிட்டார் மாடிப்பக்கம் பார்த்து.
வீணா மாடியிலிருந்து என்ன அப்பா?”
அந்தப் பையன் வந்துட்டுப் போனான்!
கேட்டுக்கொண்டிருந்தேன். அப்பா! யூவெர் க்ரேட்! இனி அவன் என்கிட்டே ஒரு பர்லாங் கூட வர மாட்டான்!
அப்பா சிரித்துக்கொண்டார்… ”ஹி வாஸ் வெல் மீனிங் இடியட்!
ஆமாம்ப்பா!
என்ன பண்ணிக் கொண்டிருக்கிறாய்?”
படித்துக்கொண்டிருக்கிறேன்ப்பா!
என்ன?”
ஷேக்ஸ்பியர்!
அப்பா, அம்மாவைப் பெருமையுடன் பார்த்துக்கொண்டார்.
வீணா மாடியில், ஷேக்ஸ்பியர் புத்தகத்திற்குள்ளிருந்த கடிதத்தை எடுத்தாள். அதை மறுபடி (நான்காவது தடவை) படித்தாள்.
வீஎன் ஆயிரம் தடவை அன்பே! சனிக்கிழமை சஃபையர் 6-30 கட்டாயம். என்ன? மிக அவசரமும் காதலும் சேர்ந்துசுந்தர்.
வீணா அந்தக் கடிதத்தை எட்டாக மடித்துத் தன் மார்பின் அந்தரங்கத்தில் செருகிக்கொண்டாள். இந்தக் கடிதத்தைப் பற்றி அப்பாவிடம் சொல்லவில்லை. ஏனெனில், இது வேறு சுந்தர்!
 

Comments

Popular posts from this blog

Working Torrent Trackers list updated Oct 2016...

142.Keith Hunter JESPERSON

How to Fix VLC does not support UNDF Format : Best Fix