சுவாரசியமான உண்மை சம்பவங்கள் ......ராஜதந்திர விளையாட்டு---1

                   பாகம் --1


உளவுத்துறை சூப்பர் ‘SPY MASTER’ ஒருவர் விளையாடிய ராஜதந்திர விளையாட்டு


வழமையாக உளவுத்துறைகள் தனி ட்ராக்கில் ஓடுவார்கள். மிக சில சந்தர்ப்பங்களில், ராஜதந்திர நடவடிக்கைகளிலும், உளவுத்துறையினர் இறக்கி விடப்படுவார்கள்.
தற்போது எழுதப்போகும் சம்பவம், அப்படியான ஒன்று.
இதில் கூறப்படும் விஷயம், உங்களுக்கு ஆச்சரியத்தையோ, திகைப்பையோ ஏற்படுத்தலாம். காரணம், இது வெளி பார்வைக்கு எதிரிகளாக தென்படும் நாடுகள், திரை மறைவில் வைத்துக்கொண்ட ராஜதந்திர டீல்கள் தொடர்பானவை. அத்துடன் எதிரி நாட்டுக்கே ரகசிய ஆயுத சப்ளை செய்த விவகாரம்.

  இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்துக்கு டேவிட் கிம்சீ திட்டமிட்டு கொடுத்த சம்பவம் ஒன்று நடந்தது .அதன் பிறகு மொசாத்திலிருந்து சிறிதுகாலம் விலகியிருக்கத் தீர்மானித்தார் டேவிட் கிம்சீ

 

மொசாத்தில் ஏற்பட்ட தலைமை மாற்றம்தான் அவரது முடிவுக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.

சிறிது காலம் ஒதுங்கியிருக்க விரும்புவதாக இஸ்ரேலிய அரசிடம் தெரிவித்த அவரை, வெளியே விட்டுவிட அரசு விரும்பவில்லை. “வேறு இலாகா எதிலாவது வேலை செய்யுங்கள். நீங்கள், மீண்டும் மொசாத்துக்கு எப்போது திரும்ப விரும்புகிறீர்களோ அப்போது திரும்பலாம்” என்று கூறி அவர் விரும்பும் இலாகாவைத் தேர்த்தெடுக்கும் பொறுப்பையும் அவரிடமே விட்டுவிட்டது இஸ்ரேலிய அரசு.

டேவிட் கிம்சீ யோசித்து விட்டுத் தேர்ந்தெடுத்த இலாகா – வெளியுறவு அமைச்சு. இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சின் டைரக்டர் ஜெனரல் என்ற பதவிக்கு மாற்றப்பட்டார் அவர்.

அங்கே அவர் செய்த வேலைகளும் கிட்டத்தட்ட மொசாத் ஸ்டைலிலான வேலைகளாகப் போய்விட்டதுதான், இதிலுள்ள சுவாரசியம். அதேநேரத்தில் டேவிட்டின் திறமைகளை இஸ்ரேலுக்கு வெளியே சர்வதேச அளவில் கொண்டு சென்றதும், இந்தப் பதவிதான்.

1980-ம் ஆண்டு கிம்சீ இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகத்துக்குள் செல்ல, 1981 ஜனவரியில்  அமெரிக்க ஜனாதிபதிப் பதவிக்கு வந்தார் ரீகன்.

(திருத்தம்: கிம்சீ புதிய பதவியை ஏற்றபின் வாட்டர்கேட் ஊழல் நடந்ததாக ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தோம். அது தவறு. தற்போது திருத்தப்பட்டுள்ளது. தவறு எம்முடையதுதான். மன்னிக்கவும்)

பதவிக்கு வந்த ரீகன் அமெரிக்க உளவுத்துறையை ஆரம்ப நாட்களில் சிறிது தள்ளியே வைத்திருந்தார். நிச்ஸனும் சி.ஐ.ஏ.வும் சேர்ந்து செய்த வாட்டர்கேட் லீலைகள்தான் நிக்ஸனின் ஜனாதிபதிப் பதவியைப் பறித்து விட்டதாக ரிகனின் மனதில் பதிந்துவிட்டதே அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால், அமெரிக்க ஜனாதிபதி ஒருவரால் உளவுத்துறை சி.ஐ.ஏ.வை தள்ளி வைத்துவிட்டு தாக்குப்பிடிக்க முடியுமா? அதுவும் முக்கியமாக வெளிநாடுகளில் செய்யப்படும் ஆபரேஷன்களில் சி.ஐ.ஏ. உதவி இல்லாமல் காரியங்களை செய்ய முடியுமா?

இந்தக் கேள்விக்கான பதில்தான், நாம் இப்போது கூறப்போகும் விவகாரம்.

மிக முக்கியமான ஒரு விவகாரத்தில் – அதுவும் மிடில்-ஈஸ்ட் சம்மந்தப்பட்ட ஒரு விவகாரத்தில் – சி.ஐ.ஏ.வின் துணை இல்லாமல் ரீகன் நுழைப்போய் அது அவரின் கையைச் சுடப்போகும் நிலை ஏற்பட்டது. அப்போது அமெரிக்க ஜனாதிபதியை காப்பாற்ற இஸ்ரேலிய வெளியுறவுத்துறையை சேர்ந்த டேவிட் கிம்சீ காட்சிக்குள் நுழைந்த சம்பவம்தான் இது.

இது நடந்த நாட்களில் மற்றொரு தமாஷூம் நடந்தது

 

புதிதாக அமெரிக்க ஜனாதிபதியான ரீகனால் சி.ஐ.ஏ.வுக்கு புதிய தலைவராக கொண்டுவரப்பட்டவர் வில்லியம் கேசி. இவர் இஸ்ரேலுக்கு நெருக்கமானவர் அல்ல. இதனால், இவரை கார்னர் செய்வதற்காக இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தில் ஒரு ரகசிய இலாகா அமைக்கப்பட்டது.

அந்த இலாகா செய்ததெல்லாம், சி.ஐ.ஏ. என்ன செய்கின்றது என்பதை உளவு பார்ப்பதுதான்! சுருக்கமாகச் சொன்னால், உளவாளிக்கு உளவாளி.

சி.ஐ.ஏ. ஆப்கானிஸ்தானிலும், மத்திய அமெரிக்காவிலுள்ள சில நாடுகளிலும் தீவிரமாள சில ஆபரேஷன்களை செய்து கொண்டிருந்த நாட்கள் அவை. அந்த ஆபரேஷன்களில் சி.ஐ.ஏ. ரகசியமான சில அரசியல் கொலைகளையும் செய்தது.

மொசாத் இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தது.

டேவிட் கிம்சி உளவுத்துறை மொசாத்தில் இருந்து வெளியே வந்து வெளியுறவு அமைச்சில் இணைந்து விட்டிருந்தாலும், மொசாத்தில் அவருக்கு தொடர்புகள் இருந்தன. அந்த விதத்தில், உளவுத்துறைக்குள் நடப்பவை எல்லாமே, டேவிட்டின் மேஜைவரை வந்து கொண்டிருந்தன.
இப்படியான சூழ்நிலையில்தான், இஸ்ரேலிய வெளியுறவுத்துறை நடத்திய ரகசிய ஆபரேஷன் காட்சிக்குள் ஈரான் நுழைந்தது.
டேவிட் வெளியுறவு அமைச்சுப் பணிக்கு வந்து சில மாதங்களில், இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு மிக முக்கியமான முடிவு ஒன்றை எடுத்து, இஸ்ரேலியப் பிரதமரிடமும் அதற்கான அனுமதியை பெற்றது. இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு செய்ய முயன்ற காரியம் என்ன என்று வெளியே தெரிந்தால், இஸ்ரேலிய மக்களே அதிர்ச்சி அடைவார்கள்! அது என்ன தெரியுமா?
இஸ்ரேல், ஈரானுக்கு ரகசியமாக ஆயுதம் சப்ளை செய்வது.
இது கொஞ்சம் ரிஸ்க்கான காரியம் என்பது மட்டுமல்ல, நம்ப முடியாத காரியமும்கூட. காரணம் ஈரான், இஸ்ரேலுக்கு எதிரி நாடு. அப்படியிருந்தும், ஈரானுக்கு ரகசியமாக ஆயுத சப்ளை செய்ய இஸ்ரேல் முடிவு செய்தது.
காரணம், அன்றைய ஈரானுக்கு இஸ்ரேல் எதிரிதான் என்றாலும், இஸ்ரேலைவிட ஈரானின் மிக வெறுப்புக்குரிய எதிரியாக ஈராக் இருந்தது. அதே ஈராக், இஸ்ரேலுக்கு ‘பலமுள்ள எதிரி’யாகவும் இருந்தது.
இதுதான் அன்றும் சரி, இன்றும் சரி, இஸ்லாமிய நாடுகளிடம் உள்ள மெகா பிரச்னை. இவர்கள் தமக்கிடையே அடிபட்டுக் கொள்வார்கள். இவர்களுக்கு இடையே உள்ள சண்டையை, வெளியாட்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்வார்கள். முக்கியமாக இஸ்ரேலியர்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்வார்கள்.
அதைத்தான் அப்போது செய்தது இஸ்ரேல்.
ஈராக்கை பலமிழக்க வைக்க வேண்டும் என்றால், ஈரானை ஆயுத ரீதியில் பலப்படுத்த வேண்டும். அந்த அடிப்படையில் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு சிந்தித்தது. ஈரானுக்கு ஆயுதம் வழங்க முடிவு செய்தது. அந்த விஷயம் வெளியே தெரியவந்தால், உள்நாட்டிலேயே எதிர்ப்பு வரும் என்பதால், ரகசிய ஆபரேஷனாக செய்ய முடிவாகியது.
இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அதிகாரிகள் சுவிட்சலாந்தில் கலந்துகொண்ட மாநாடு ஒன்றில், ஈரானிய வெளியுறவு அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். அங்கே இரு தரப்பும் நெருக்கமாகின. அதை தொடர்ந்து, ரகசிய சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இவர்களுக்கு இடையிலான ரகசிய சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இடம், பிரான்ஸ் தலைநகர் பாரிஸ். அதிலிருந்துதான் தொடங்கியது விறுவிறுப்பு திருவிழா

ஈரானின் வெளியுறவு அமைச்சைச் சேர்ந்த இரு உயரதிகாரிகளை இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சின் இரு உயரதிகாரிகள் பாரிஸில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்துச் சந்தித்தனர். இஸ்ரேலிய அதிகாரிகள், ஈரான் ஈராக்மீது தாக்குதல் நடத்த விரும்பினால், இஸ்ரேல் ரகசியமாக ஆயுத சப்ளை செய்ய ரெடியாக இருப்பதாக தெரிவித்தனர்.
ஈரானிய அதிகாரிகளுக்கு இந்த ஏற்பாடு ஆச்சரியமாக இருந்தாலும், ஆனந்தத்தை ஏற்படுத்தியது. அவர்கள் இரவோடு இரவாக தமது நாட்டு தலைமையுடன் தொடர்பு கொண்டு பேசினர். டெஹ்ரானில் இருந்தும் கிரீன் சிக்னல் கிடைத்தது.
இஸ்ரேல், என்ன ரகத்திலான ஆயுதங்களை ஈரானுக்கு கொடுக்கும், அதை ரகசியமாக எந்தப் பாதை ஊடாக ஒப்படைக்கும் என்பதெல்லாம் அந்த பாரிஸ் ஹோட்டலில் வைத்துத்தான் முடிவு செய்யப்பட்டன.
சாதாரணமாக இஸ்ரேலிய உளவுத்துறையால் செய்யப்படும் ஆபரேஷன் இது. ஆனால், இதை வெளியுறவுத்துறை செய்தது. இதனால், இந்த திட்டமே, உளவுத்துறை பின்னணியுடன் வெளியுறவுத்துறை பணிக்கு வந்த டேவிட் கிம்சீயின் ஏற்பாடு என்றே பின்னாட்களில் உளவுத்துறை வட்டாரங்களில் ஊகிக்கப்பட்டது.
ஏனென்றால் டேவிட் கிம்சீ அடிக்கடி கூறும் ஒரு வாக்கியம் “Playing the game at both ends”
திட்டமிட்டபடி, இஸ்ரேலிய ஆயுதங்கள் ஓசைப்படாமல் ஈரானுக்கு போய் சேர்ந்தன.
இந்த ஆயுத உதவி செய்யப்பட்டு சில வாரங்களின் பின்னர், மில் ஈஸ்டில் சில அசம்பாவிதமான சம்பவங்கள் நடைபெற்றன. முதலாவது, லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய வெடிகுண்டு ஒன்று வெடித்தது. அதில் 241 அமெரிக்க கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டார்கள்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ஈரானின் உளவுத்துறை இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டது.
அப்படியொரு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், ஈரானும், ஈரானுக்கு ரகசியமாக ஆயுத சப்ளை செய்த இஸ்ரேலும் அமெரிக்க அரசின் கண்களை உறுத்தினார்கள்.

அதே நேரத்தில் அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ., அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையில் மற்றொரு புகாரை தெரிவித்திருந்தது.  தமது வெளிநாட்டு ஆபரேஷன்களில் எல்லாம் இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தின் ஏஜன்ட்கள் கண்களில் தட்டுப்படுவதாக அமெரிக்க அரசிடம் முறையிட்டிருந்தார்கள் அவர்கள்.
இதையடுத்து, சி.ஐ.ஏ.வை மொசாத் உளவு பார்க்கிறது என்பதை உறுதி செய்துகொண்ட அமெரிக்க அரசு, இந்த விவகாரத்தை ராஜதந்திர ரீதியில் அணுக தீர்மானித்தது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சு, இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சுக்கு அழுத்தம் திருத்தமாக ஒரு செய்தியை அனுப்பியது. “இஸ்ரேல் ஈரானுக்கு செய்துவரும் ரகசிய ஆயுத சப்ளைபற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும்”
“உங்களுடைய நாட்டின் நலனுக்காக நீங்கள் ஈரானுக்கு ரகசிய ஆயுத சப்ளை செய்கின்றீர்கள் என்பதால் நாங்கள் இதுவரை அதில் தலையிடாமல் இருந்தோம். ஆனால் அதே ஆயுதங்கள் மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்கர்கள் மீது ஈரானியர்களால் திருப்பப்படலாம் என்ற சந்தேகம் இருப்பதால், இனிமேலும் ஈரானுக்கு ரகசிய ஆயுத விநியோகம் செய்வதை நிறுத்திவிடுங்கள்” என்றது அமெரிக்க வெளியுறவு அமைச்சு.
பெய்ரூட்டில் கார் வெடிகுண்டு வெடித்து இரண்டு நாட்களிலேயே இந்தச் செய்தி இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சிடம் வந்து சேர்ந்தது. அதற்கு அவர்கள் பதில் தருவதற்கு முன்னரே, அடுத்தடுத்து சம்பவங்கள் வேகமாகவும், பரபரப்பாகவும் லெபனானில் நடக்க தொடங்கின.
லெபனானில் வைத்து அமெரிக்கர்கள் கடத்தப்பட்டார்கள். அவர்களில் சிலர் அப்படியே காணாமல் போனார்கள். வேறு சிலர் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
சில நாட்களுக்கு தினமும் ஒரு அமெரிக்கராவது லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வைத்து கடத்தப்படுவது பத்திரிகைச் செய்திகளில் இடம்பெறும் வழக்கமான ஒன்றாக விட்டிருந்தது.
எப்போதும் பரபரப்பாக ஏதாவது நடந்து கொண்டிருக்கும் லெபனானில் நடைபெறும் சம்பவங்கள் மிடில் ஈஸ்ட்டில் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், உலகிலுள்ள சகல பெரிய நாடுகளின் உளவுத் துறைகளும் அங்கே பெரிய நெட்வேர்க்குகளை வைத்திருந்தன. சி.ஐ.ஏ., எம்.ஐ.-6, மொசாத் தொடக்கம் ஜோர்தான் நாட்டு உளவுத்துறை வரை அங்கு தமது உளவாளிகளை ஏராளமாக நடமாட விட்டிருந்தன. (இப்போதும் அதே நிலைதான்)

தினமும் அமெரிக்கர்கள் பெய்ரூட்டில் வைத்து கடத்தப்பட்டு கொண்டிருந்ததை கவனித்து கொண்டிருந்தன இந்த வெளிநாட்டு உளவுத் துறைகள். ஆனால், சி.ஐ.ஏ. தவிர வேறு எந்த நாட்டு உளவுத்துறையும் இதனால் பரபரப்பு அடையவில்லை. அமெரிக்கர்களை கடத்துவது யார் என்பது குறித்து அறிந்துகொள்ள மற்றைய நாட்டு உளவுத்துறைகள் அவுட்-ஆஃப்-தி-வே முயற்சிகள் எதையும் செய்யவில்லை.
“அமெரிக்கர்களை யார் கடத்தினாலும், அது சி.ஐ.ஏ.வின் தலையிடி. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்ற மென்டாலிடியில் இருந்தன மற்றைய நாட்டு உளவுத்துறைகள்.
இப்படி இருக்கையில் ஒருநாள், வழமைபோல பெய்ரூட் பத்திரிகைகளில், “அமெரிக்கர் ஒருவர் கடத்தப்பட்டார்” என்ற செய்தியும், கடத்தப்பட்ட நபர் பற்றிய விபரங்களும் வெளியாகின. அதுவரை பரபரப்படையாத வெளிநாட்டு உளவுத்துறைகள், குறிப்பிட்ட இந்த செய்தி வந்தவுடன் பரபரப்படைந்தன.
குறிப்பிட்ட அந்த அமெரிக்கரைக் கடத்தியவர்கள் யார்? இந்தக் கடத்தலின் பின்னணியில் வேறு யாராவது இருக்கிறார்களா? இந்தக் கேள்விகளுடன் பெய்ரூட் நகரம் முழுவதும் அமெரிக்க, பிரிட்டிஷ், பிரென்ச், ரஷ்ய, இஸ்ரேலிய உளவாளிகள் ஓடியோடி தகவல் சேகரிக்க தொடங்கினார்கள்.
அதுவரை சுமார் 30 அமெரிக்கர்களாவது பெய்ரூட்டில் வைத்துக் கடத்தப்பட்டிருந்தார்கள். அப்போதெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாத வெளிநாட்டு உளவுத்துறைகள், குறிப்பிட்ட இந்த ஒரேயொரு அமெரிக்கர் கடத்தப்பட்டவுடன், அவரை கடத்தியது எந்த குரூப் என்பது பற்றி தகவல் கொடுக்கும் இன்போர்மருக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து விஷயத்தை தெரிந்துகொள்ள தயாராக இருந்தன.
பெய்ரூட்டில் தினமும் அமெரிக்கர்கள் கடத்தப்பட்டுக் கொண்டிருக்க, அப்போதெல்லாம் அதை சர்வசாதாரணமாக பார்த்துக் கொண்டிருந்த வெளிநாட்டு உளவுத் துறைகள், இந்த ஒற்றை அமெரிக்கர் கடத்தப்பட்டபோது மாத்திரம் ஏன் இவ்வளவு பரபரப்படைய வேண்டும்?
william-buckly-20131121-2
பணயக் கைதியாக வில்லியம் பக்ளி
காரணம், கடத்தப்பட்டவரின் பெயர் வில்லியம் பக்ளி.
அவர் யாரென்று பொதுமக்களுக்குத தெரிந்திருக்க நியாயமில்லை. “அமெரிக்க உல்லாச பயணி ஒருவர் கடத்தப்பட்டார்” என்பது போலத்தான் பெய்ரூட்டின் காலை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனால், வில்லியம் பக்ளி யார் என்பது மற்றயை உளவுத்துறைகளுக்கு நன்றாகவேதெரியும். ஏனென்றால், அவர்தான் பெய்ரூட்டில் இயங்கும் சி.ஐ.ஏ. யின் தளத்தலைவர் -  CIA station chief.
இவரது கடத்தல் அமெரிக்க அரசு மட்டத்திலும், சி.ஐ.ஏ.விலும் அதிர்ச்சி அலைகளைக் கிளப்பிவிட்டது. அவரைக் கடத்தியவர்களுடன் பேரம்பேச அமெரிக்க அரசு தயாராக இருக்க, அடுத்த அதிர்ச்சி.
கடத்தப்பட்ட வில்லியம் கொல்லப்பட்டார்.
இதற்கு என்ன செய்யலாம் என்று அமெரிக்கா யோசிக்கத் தொடங்க, அதற்குக்கூட அவகாசம் கொடுக்காமல் உடனே அடுத்த அதிர்ச்சி வைத்தியம் பெய்ரூட்டில் வைத்து அமெரிக்காவுக்குக் கொடுக்கப்பட்டது.

இதற்கு என்ன செய்யலாம் என்று அமெரிக்கா யோசிக்கத் தொடங்க, அதற்குக்கூட அவகாசம் கொடுக்காமல் உடனே அடுத்த அதிர்ச்சி வைத்தியம் பெய்ரூட்டில் வைத்து அமெரிக்காவுக்குக் கொடுக்கப்பட்டது.

மீண்டும் ஏழு அமெரிக்கர்கள் கடத்தப்பட்டார்கள்.
அவர்கள் அனைவரும் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டார்கள். “ஏழு அமெரிக்கர்களை கடத்தியது நாங்கள்தான்” என்று உரிமை கோரியது ஒரு தீவிரவாத இயக்கம்.
அந்தத் தீவிரவாத இயக்கத்துக்கு ஈரானின் ஆதரவு இருக்கும் விஷயம் சி.ஐ.ஏ.வுக்கும் தெரியும். மொசாத்துக்கும் தெரியும்.
இந்தக் கடத்தலை அடுத்து, அமெரிக்க அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டது.
ஜனாதிபதி தேர்தலில் பயங்கரவாதத்தை ஒழிப்பதாக பிரசாரம் செய்துதான், ரீகன் ஜனாதிபதி பதவிக்கு வந்திருந்தார். அதன் பின்னர் அமெரிக்க பிரஜைகள் பெய்ரூட்டில் வைத்துக் கடத்தப்பட்டனர். அவற்றைக் கண்காணிக்க வேண்டிய உளவுத் துறையின் தலைவரே கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். அடுத்த கட்டமாக, மேலும் ஏழு அமெரிக்கர்கள் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டார்கள்.
ரீகனின் பெயர், அமெரிக்காவிலேயே ரிப்பேர் ஆனது. ஏதாவது செய்தேயாக வேண்டும் என்ற நிலை அமெரிக்க அரசுக்கு ஏற்பட்டது.
பின்னாட்களில் வெளிவந்த தகவல்களின்படி, இந்த நெருக்கடி தோன்றியவுடன் ரொனால்ட் ரீகன் எடுத்திருந்த முதல் முடிவு – “ஈரான் மீது தாக்குதல் நடாத்துவது.”
அவசரகதியில் அதற்கு திட்டமும் ரெடியாகியது. அந்த திட்டப்படி, முதலில் தலைநகர் தெஹ்ரான் மீது இரண்டொரு குண்டுகளை போடுவது. அத்துடன், ஈரானுக்கு எச்சரிக்கை ஒன்றைக் கொடுப்பது.
கடத்திய தீவிரவாத இயக்கம்க்கு சகல உதவிகளையும் செய்வது ஈரான் என்பதால், தொடர்ந்து அமெரிக்கத் தாக்குதல் நடக்காமலிருக்க வேண்டும் என்றால், ஈரான், தமக்கு நெருக்கமான தீவிரவாத இயக்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும். அதன் மூலம், அவர்களிடம் இருந்த அமெரிக்க பணயக் கைதிகள் உடனே விடுவிக்கப்பட்டு விடுவார்கள்.
இதுதான் ரீகன் முதலில் எடுத்திருந்த முடிவு.
ஆனால், இந்த முடிவுக்கு அவரது அரசியல் ஆலோசகர்களே எதிராக இருந்தார்கள். ஈரான் மீது சில குண்டுகள் வீசப்பட்ட பின்னரும், ஈரான் தனக்கும் லெபனானில் நடைபெறும் கடத்தலுக்கும் தொடர்பே இல்லை என்று சாதித்து விட்டால், அமெரிக்காவால் தொடர்பை நிரூபிக்க முடியாது.
அமெரிக்கர்களை கடத்திய தீவிரவாத இயக்கத்துக்கு, ஈரானிய அரசு வெளிப்படையாக உதவி செய்யவில்லை. அந்த இயக்கத்துக்கும் ஈரானின் உளவுத்துறைக்கும்தான் லிங்க் இருந்தது. ஈரானிய உளவுத்துறை ஊடாகத்தான் ஆயுதங்களும், பயிற்சியும், பணமும் தீவிரவாத இயக்கத்துக்கு சென்று கொண்டிருந்தது.
அதை நிரூபிப்பது கஷ்டம்.
எனவே, ரீகனின் முதலாவது முடிவு கைவிடப்பட்டது. இரண்டாவதாக அவர்கள் யோசித்தது, அமெரிக்காவின் அதிரடிப் படைப்பிரிவான டெல்ட்டா ஃபோர்ஸை (Special Forces Operational Detachment-Delta) பயன்படுத்தி அதிரடி மீட்பு நடவடிக்கை ஒன்றின் மூலம் பணயக் கைதிகளை மீட்பது.
ஆனால், அதிரடி மீட்பு நடவடிக்கை ஒன்றை லெபனானில் வைத்து செய்தால், பணயக்கைதிகள் கொல்லப்படுவதற்கு ஐம்பதுக்கு ஐம்பது சான்ஸ் இருப்பதாக டெல்ட்டா ஃபோர்ஸ் கூறியது.
அமெரிக்க அரசு அந்த ரிஸ்க்கை எடுக்கத் தயாராக இல்லை.
எனவே மூன்றாவது முடிவு எடுக்கப்பட்டது. அது ஒரு வில்லங்கமான முடிவு.
அமெரிக்க ஜனாதிபதி ரீகன் எடுத்த வில்லங்கமான முடிவு ஜனாதிபதியும், அவருடைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் மக்பார்லேனும் (மேலே போட்டோவில் உள்ளவர்) பேசிக்கொண்டு இருந்தபோதுதான் தோன்றியது.
ஏழு அமெரிக்கர்களையும் எப்படியாவது விடுவிக்க வேண்டும் என்ற அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை சி.ஐ.ஏ. தலைவருடன் முடித்துவிட்டு அப்போதுதான் திரும்பியிருந்தார் ரீகன். சி.ஐ.ஏ.வின் தளத்தலைவரே பெய்ரூட்டில் வைத்து கொல்லப்பட்டபின், அவர்களால் அங்கு அதிரடியாக எதுவும் செய்யமுடியாத நிலையை ரீகன் புரிந்து கொண்டிருந்தார்.
எனவே இதை வேறு விதமாகத்தான் அணுகவேண்டும் என்று தீர்மானித்து, ராபர்ட் மக்பார்லேனுடன் ஆலோசிக்க தொடங்கினார்.

மக்பார்லேன் ரீகனுக்கு ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டினார். “மிஸ்டர் பிரசிடென்ட்.. லெபனானில் வைத்து இந்த ஏழு அமெரிக்கர்கள் கடத்தப்பட்டாலும், கடத்தியது ஒரு தீவிரவாத இயக்கம் என்றிருந்தாலும், இந்தக் கடத்தலின் ஆணி வேர் லெபனானில் இல்லை”
“தெரியும். தீவிரவாத இயக்கத்துக்கு சகல உதவிகளும் ஈரானில் இருந்துதான் வருகின்றன”
“அது மாத்திரமல்ல. ஈரான் உத்தரவிட்டால், அந்த தீவிரவாத இயக்கம் எதையும் செய்யும். செய்தேயாக வேண்டும். இல்லாவிட்டால் அந்த தீவிரவாத இயக்கத்தால் மிடில் ஈஸ்ட்டில் இயங்கவே முடியாது”
“உண்மை”
“நாங்கள் தீவிரவாத அமைப்பை விட்டுவிடுவோம். ஈரானை பிடித்துக் கொள்வோம். ஈரானுக்கு அழுத்தம் கொடுத்தால் ஏழு அமெரிக்கர்களையும் விடுவித்துவிட முடியும்.”
“அழுத்தம் கொடுக்கலாம். அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுப்பதற்கு நீண்ட நாட்களாகும். பணயக் கைதிகள் தீவிரவாத இயக்கத்தினரின் கைகளில் இருக்கும்போது அது மிகவும் ரிஸ்க்கானது”
“ஈரான் மீது தாக்குதல் நடத்துவது போன்ற ராணுவ ரீதியாக அழுத்தம் கொடுப்பது, அதைவிட ரிஸ்க்”
“சரி. இதை வேறு விதமாக டீல் பண்ணலாம்” என்று கூறிய ரீகன், “ஈரானியர்களுக்கு இன்றைய தேதியில் மிக மிக அவசியமாகத் தேவைப்படுவது என்ன?” என்று கேட்டார்.
“ஆயுதங்கள். ஈராக்கைத் தாக்குவதற்கு”
ரீகன் சில விநாடிகள் மௌனமாக இருந்தார். பின்னர் சொன்னார்-
“அவர்களுக்குத் தேவையான ஆயுதங்களை நாமே ரகசியமாக கொடுத்துவிடலாம். ஆயுதங்களுக்கு பிரதிபலனாக, ஏழு அமெரிக்கப் பணயக் கைதிகளையும் தீவிரவாத அமைப்பினர் விட்டுவிட வேண்டும் என்று ஈரானுக்கு நிபந்தனை விதிக்கலாம்.”
இதைக்கேட்டு மக்பார்லேன் திகைத்துப் போய்விட்டார்.
ரீகன் கூறுவது ஒரு அதிரடியான முடிவு மாத்திரமல்ல, ஆபத்தான முடிவும் கூட. அத்துடன் அரசு உயர்மட்டத்திலேயே பலரும் எதிர்க்கக்கூடிய முடிவு.
ஆனால் இதைவிட வேறு வழியில்லை என்பதில் ரீகன் பிடிவாதமாக இருந்தார்.
அன்று மாலையே ரீகனும் மற்றய அரசு உயர்மட்ட அதிகாரிகளும் கலந்துகொண்ட அவசரக் கூட்டமொன்றில் இந்த விஷயம் பிரஸ்தாபிக்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே எதிர்ப்பு அதிகமாக இருந்தது. சி.ஐ.ஏ.வின் தலைவராக ரிகனால் நியமிக்கப்பட்டிருந்த வில்லியம் கேசிகூட இதை எதிர்த்தார். அமெரிக்க ராணுவத் தளபதிகளும், ஈரானுக்கு ஆயுதம் கொடுப்பதை விரும்பவில்லை.
அன்றைய அவசரக் கூட்டத்தில் ரீகன் கேட்டார், “ஈரானுக்கு ஆயுதங்கள் கொடுப்பதால் ஆபத்து யாருக்கு?”
“உடனடியான ஆபத்து ஈராக்குக்கு. ஆனால் நாளைக்கே அந்த ஆயுதங்கள் அமெரிக்காவுக்கு எதிராகவும் திரும்பலாம்.”
“நாளைக்கு திரும்பலாம் என்ற ஊகத்தில், இன்றைக்கு ஆபத்திலிருக்கும் ஏழு பணயக் கைதிகளையும் கைவிட்டுவிட முடியுமா”
அமெரிக்கப் பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு ஈரானுக்கு ஆயுதம் கொடுப்பதுதான் ஒரே வழி என்பதில் ரீகன் பிடிவாதமாக இருந்தார். அத்துடன் அந்த ஆலோசனை முடிந்தது. ஈரானுக்கு, ரகசியமாக ஆயுதம் கொடுப்பது என்று அமெரிக்க ஜனாதிபதி தீர்மானித்துவிட்டார்.
ஆனால், ஆயுதங்களை எப்படி ஈரானுக்கு அனுப்ப போகின்றார்கள் என்ற விபரம் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் சொல்லப்பட்டிருக்கவில்லை.
அமெரிக்காவின் ரகசிய ஆயுத சப்ளைகளை வழமையாக சி.ஐ.ஏ.தான் செய்வது வழக்கம். காரணம் ரகசியமாக, வெளியே யாருக்கும் தெரியாதபடி செய்யப்பட வேண்டிய திரைமறைவு வேலை இது. அதற்கு அவர்கள்தான் சரியான ஆட்கள்.
ஆனால் ஈரானுக்கு ரகசியமாக ஆயுதம் சப்ளை விஷயத்தில், சி.ஐ.ஏ.வின் தலைவர் வில்லியம் கேசியிடம், ஆயுதங்களை ரகசியமாக எப்படி ஈரான்வரை அனுப்புவது என்று ரீகன் ஆலோசிக்கவில்லை.
ரகசிய ஆயுத சப்ளை செய்வது என்று ஜனாதிபதி முடிவு செய்த பின்னரும், அதுபற்றி தம்முடன் ஆலோசிக்கவில்லை என்ற நடைமுறை, வில்லியம் கேசிக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால் அவர் எதுவும் பேசவில்லை. சி.ஐ.ஏ.வுக்கே தெரியாமல் வேறு வழியில் ஆயுத சப்ளை நடத்த ரீகன் திட்டமிட்டு இருக்கிறார் என சி.ஐ.ஏ.வின் தலைவர் நினைத்திருக்கலாம்.
உண்மையில், அப்படி ஒரு ரிஸ்கியான திட்டத்தைதான் ரீகன் போட்டிருந்தார். சி.ஐ.ஏ.வை அண்டர்-கட் பண்ணிவிட்டு, ஆயுதங்களை ரகசியமாக ஈரானுக்கு அனுப்பி வைக்கும் ரீகனின் திட்டம் என்ன? அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

அமெரிக்கப் பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு ஈரானுக்கு ரகசியமாக ஆயுதம் கொடுப்பதுதான் ஒரே வழி என்பதில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரீகன் பிடிவாதமாக இருந்தார்; ஆனால், வழமைபோல இந்த ரகசிய வேலையில் சி.ஐ.ஏ.வை ஈடுபடுத்தவில்லை என கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்


ரீகன், சி.ஐ.ஏ.வை அன்டர்-கட் பண்ணிவிட்டு இந்த ரகசிய காரியத்தை யாரிடம் ஒப்படைத்தார் தெரியுமா? அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த கர்னல் ஆலிவர் நார்த் என்ற தனி மனிதரிடம்!
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் மக்பார்லேனும், ஜனாதிபதி ரீகனும் இந்த ரகசிய ஆயுத சப்ளை விவகாரத்தில் சி.ஐ.ஏ.வை சேர்த்துக் கொள்வதில்லை என்று ஏற்கனவே முடிவு எடுத்திருந்தார்கள். அதனால்தான் சி.ஐ.ஏ.வின் தலைவர் கலந்து கொண்ட கூட்டத்தில் எப்படி ஆயுத சப்ளை நடைபெறப் போகின்றது என்பது பற்றி வாயே திறக்கவில்லை.
ஏன் அப்படி முடிவெடுத்தார்கள்? அது இன்றுவரை யாருக்கும் புரியவில்லை.
இந்தக் காரியத்துக்கு சரியான நபர் அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த கர்னல் ஆலிவர் நார்த் என ரீகனிடம் ரெக்கமென்ட் பண்ணியவரே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் மக்பார்லேன்தான்.
ஆலிவர் நார்த்தும் மக்பார்லேனும் வியட்னாம் யுத்த காலத்தில் ஒரே படைப்பிரிவில் ஒன்றாக யுத்தம் புரிந்த ஆட்கள். இரண்டு பேருக்கும் .டையே நல்ல அன்டர்ஸ்டான்டிங் உண்டு. வியட்னாம் போரில் இரண்டுபேருமே அதிரடியாக அலுவல் பார்க்கக்கூடிய ஆட்கள் என்று பெயரெடுத்தவர்கள்.
இந்த பழைய வியட்னாம் கனெக்ஷன் காரணமாகதான், இவ்வளவு பெரிய, அதி ரகசியமான காரியத்தை செய்ய ஆலிவர் நார்த் சரியான நபர் என தேர்ந்தெடுக்க வைத்தது.
நார்த்தும், மக்பார்லேனும் இதை எப்படி செய்யலாம் என ஆராய்ந்தார்கள். சி.ஐ.ஏ. இதை செய்திருந்தால், தமது அன்டர்-கவர் ஏஜென்ட்டுகளை வைத்து செய்திருப்பார்கள். ஆனால், ஆலிவர் நார்த் கடற்படையில் பணிபுரிந்தாலும், இந்த காரியத்தில் கடற்படையினரை ஈடுபடுத்த முடியாது. ரகசியம் அவுட் ஆகிவிடும். மூன்றாவது பார்ட்டி ஒன்றில் ஊடாக ஈரானுக்கு ஆயுதம் கொடுப்பதே சிறந்த வழி என இருவரும் முடிவெடுத்தார்கள்.
“இந்த ரகசிய ஆயுத சப்ளைக்குள் இஸ்ரேலைக் கொண்டு வரலாம். அவர்கள்தான் ஏற்கனவே ஈரானுக்கு ரகசியமாக ஆயுதம் கொடுத்துக் கொண்டிருந்த ஆட்கள்” என்றார் ஆலிவர் நார்த்.
இஸ்ரேலைக் காட்சிக்குள் கொண்டு வருவது என்று முடிவு எடுத்ததும், இஸ்ரேலிய அரசு உயர்மட்டத்தை தொடர்பு கொண்டது அமெரிக்க அரசு.
வாஷிங்டனில் இருந்து இப்படியான விசித்திர கோரிக்கை இஸ்ரேலுக்கு வந்தபோது, இஸ்ரேலிய பிரதமராக இருந்தவர் யிட்ஸாக் ஷாமீர். பிரதமர் பொறுப்புக்கு வருவதற்கு முன் வெவ்வேறு பதவிகளில் இருந்தாலும், இவரது ஆரம்பமும் உளவுத்துறைதான்.
1955-ம் ஆண்டு இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தில் இணைந்துகொண்டு, 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர். அந்த நாட்களில் இஸ்ரேலிய உளவுத்துறையில் சில அதிரடியான ஆபரேஷன்களை நடத்தியவர், இவர்தான்.
இஸ்ரேலிய உளவுத்துறை செய்த ‘ஆபரேஷன் டமோகிள்ஸ்’ பற்றி உங்களில் சிலர் கேள்விப்பட்டிருக்கலாம். எகிப்தின் ஏவுகணை புரோகிராம் ஒன்றை வடிவமைத்துக் கொடுத்த ஜெர்மன் ராக்கெட் விஞ்ஞானி ஒருவரை கொலை செய்த ஆபரேஷன் அது. மொசாத்தில் இருந்தபோது, அந்த ஆபரேஷனை செய்து முடித்தவர், இந்த யிட்ஸாக் ஷாமீர்தான்.
1965-ம் ஆண்டு உளவுத்துறையில் இருந்து விலகி, அரசியல்வாதியாகி, பிரதமர் பதவிக்கு வந்திருந்தார்.
ஈரானுக்கு ரகசியமாக ஆயுத சப்ளை செய்ய உதவ வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்காவிடம் இருந்து வந்தபோது, அது, பிரதமர் யிட்ஸாக் ஷாமீருக்கு மகா ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
அமெரிக்கா ஈரானுக்கு ரகசியமாக ஆயுதம் கொடுக்க விரும்புகின்றது என்பதே ஒரு ஆச்சரியமான விஷயம். அப்படிக் கொடுப்பதை தமது உளவுத்துறை சி.ஐ.ஏ. மூலம் கொடுக்காமல், இஸ்ரேல் மூலமாகக் கொடுக்கப் போகின்றது என்பதை அவரால் நம்பவே முடியவில்லை. காரணம், நாளைக்கே இஸ்ரேல் நினைத்தால், இந்த ரகசியத்தை வெளிப்படுத்தி, அமெரிக்காவை சிக்கலுக்குள் தள்ளிவிடலாம்.
இருப்பினும், கேட்பது அமெரிக்கா. சிக்கல் வந்தால், அவர்களுக்குதானே என்ற தைரியத்தில், ரகசிய ஆயுத சப்ளையை அமெரிக்காவுக்காக செய்து கொடுப்பது என்று தீர்மானித்தார் இஸ்ரேலியப் பிரதமர்.
தனது ஆலோசகர்களுடன் ஆலோசித்துவிட்டு, இந்த ரகசிய வேலைக்கு சரியான நபர் இவர்தான் என்று ஒருவரை நியமித்தார். அவர்தான், இந்த கட்டுரை தொடரின் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட டேவிட் கிம்சீ.
ஜூலை மாதம் 3-ம் திகதி 1983-ம் ஆண்டு, டேவிட் கிம்சீ வாஷிங்டனுக்கு விமானம் ஏறினார். மக்பார்லேனை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அமெரிக்கா என்ன காரணத்துக்காக ஈரானுக்கு ஆயுதம் வழங்க முற்படுகின்றது என்ற விஷயம் அவருக்கு முதலில் விளக்கப்பட்டது.
டேவிட் தமக்கு இருந்த கேள்விகளை கேட்கத் தொடங்கினார். “இந்த ஆயுத சப்ளையை ரகசியமாக செய்து கொடுக்க எங்களால் (இஸ்ரேலால்) முடியும். அதற்கு முதல் ஒரு விஷயம் தெரிந்தாக வேண்டும். இதில் சி.ஐ.ஏ. எங்கே வருகின்றது? அவர்கள் எந்தளவுக்கு இதில் சம்மந்தப்படப் போகின்றார்கள்

“சி.ஐ.ஏ.வுக்கு இதில் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. அவர்களை இதில் நாங்கள் பயன்படுத்தவே போவதில்லை”
“அப்படியா”
“ஆம் இதை உங்களது உளவுத்துறை மொசாத்தால் எங்களுக்காகச் செய்து தரமுடியுமா”
“இந்த மாதிரியான நிழலான வேலைகளைச் செய்து தருவதில் திறமைசாலிகள் மொசாத்தில் நிறையவே இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால்….”
“ஆனால்….”
“யிட்சாக் ராபின் (இஸ்ரேலின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர்) இந்த விவகாரத்தில் மொசாத்தை தொடர்பு படுத்த விரும்பவில்லை. முற்று முழுதாக என்னையே டீல் பண்ணும்படி கூறியிருக்கின்றார்”
“நீங்கள் நிஜமாகவே இப்போது மொசாத்தில் இல்லையா”
“இல்லை. நான் இப்போது வெளியுறவு அமைச்சு. மொசாத்துடன் எந்த தொடர்பும் கிடையாது”
டேவிட் சிம்கீ இப்படிக் கூறியதற்கு வேறு ஒரு காரணம் இருந்தது. ஆனால் அதை அவர் வெள்ளை மாளிகையில் மக்பார்லேனை சந்தித்தபோது கூறவில்லை.
சி.ஐ.ஏ.வின் தலைவர் வில்லியம் கேசி ‘விளையாடிய’ சுவாரசியமான உள்-வெட்டு ஆட்டம் அது!
விஷயம் என்னவென்றால், சி.ஐ.ஏ.வின் தலைவர் வில்லியம் கேசி, தனது உளவாளிகள் மூலமாக ஆலிவர் நார்த்தான் இந்த ரகசிய ஆயுத சப்ளையை செய்து கொடுக்கப் போகின்றார் என்பதை தெரிந்து கொண்டார். அத்துடன் சி.ஐ.ஏ.வை இதில் சம்மந்தப்படுத்தாமல் நேரடியாக டீல்பண்ணப் போகின்றார்கள் என்பதையும் ஊகித்து விட்டிருந்தார்.
ஆலிவர் நார்த் இந்த ரகசிய வேலைக்கு சி.ஐ.ஏ.வை பயன்படுத்தா விட்டால், வேறு ஒரு நாட்டு உளவுத்துறையை நிச்சயம் தொடர்பு கொள்வார்கள் என்பதைப் புரிந்து கொண்டிருந்த வில்லியம் கேசி, இவர்கள் தொடர்பு கொள்ளப்போவது அநேகமாக மொசாத்தாகத்தான் இருக்கும் என்பதையும் ஊகித்திருந்தார்.
உடனே சி.ஐ.ஏ. தலைவர் கேசி என்ன செய்தாரென்றால், மொசாத்தின் அன்றைய தலைவர் நாகும் அட்மோனியைத் தொடர்பு கொண்டு விஷயத்தைக் கூறியிருக்கிறார்.
“இந்த ஆயுத சப்ளை ஒரு மிகவும் ரிஸ்க்கான விஷயம். இதில் ஆலிவர் நார்த் சி.ஐ.ஏ. சம்பந்தப்படுவதை விரும்பவில்லை. அநேகமாக உங்களிடம் (மொசாத்திடம்) வருவார்கள். செய்து கொடுப்பதும் கொடுக்காததும் உங்கள் இஷ்டம்”
“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்”
“மொசாத் செய்து கொடுத்தால், நாளைக்கே விஷயம் வெளியே வந்துவிட்டால், அது உங்களது பதவிக்கே ஆபத்தாக முடிந்து விடலாம்”
“அப்படியா நினைக்கிறீர்கள்”
“ஆம். ஏனென்றால் இது மிகவும் ரிஸ்க்கான விஷயம். முயற்சி தலைகீழாக மாறிவிட சந்தர்ப்பம் மிக மிக அதிகம். நாங்கள் (சி.ஐ.ஏ.) சம்மதிக்க மாட்டோம் என்பது ஆலிவருக்கு நன்றாகவே தெரியும். அதுதான் எங்களிடம் வராமல், நேரே உங்களிடம் (மொசாத்) வருகிறார்கள்”
“அப்படியானால் நாங்களும் இதில் சம்மந்தப்படப் போவதில்லை”
இந்த உரையாடலின்பின் மொசாத்தின் தலைவர், இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சரிடம், “இப்படி ஒரு வில்லங்கமான உதவியை அமெரிக்கா கேட்டால், அதில் மொசாத் சம்மந்தப்பட விரும்பவில்லை” என்று முன்கூட்டியே கூறிவிட்டார்.
இதுதான், வாஷிங்டனில் டேவிட் கிம்சீ, “மொசாத் இதில் இல்லை. நான்தான் முழுமையாக டீல் பண்ண போகிறேன்” என்று கூறியதன் பின்னணி காரணம்!
ரகசிய ஆயுத சப்ளை பற்றி வெள்ளை மாளிகையில் வைத்து பேசி முடித்துவிட்டு இஸ்ரேலுக்குச் சென்ற டேவிட் கிம்சீ இரண்டே இரண்டு தினங்களில் முழுமையான திட்டத்துடன் மீண்டும் வாஷிங்டன் திரும்பினார். வந்த உடனே மக்பார்லேனைச் சந்தித்தார்.
“திட்டம் ரெடி”
“சொல்லுங்கள்”
“முதலில் கெட்ட சேதியை சொல்வதா, நல்ல சேதியை சொல்வதா?”

நீங்கள் கடந்த பாகங்களில் வாசித்த இந்த ரகசிய ஆயுத சப்ளை விவகாரம், அமெரிக்க அரசினால் எவ்வாறு தலைகீழாக கையாளப்பட்டிருக்கிறது பாருங்கள்.
1) அமெரிக்க ஜனாதிபதி ஒரு முடிவை எடுக்கிறார். அதை அவரது அரசிலுள்ள உயர்மட்ட அதிகாரிகளே விரும்பவில்லை.
2) முடிவை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஒரு தனிப்பட்ட நபரிடம் கொடுக்கப்படுகின்றது. அவரோ, அமெரிக்க உளவுத்துறையையே நம்பாமல், வேறு ஒரு நாட்டின் உளவுத்துறையின் உதவியை நாடுகிறார்.
3) இதற்குள் அமெரிக்க உளவுத்துறையின் தலைவர், இஸ்ரேலிய உளவுத்துறையின் தலைவரைத் தொடர்பு கொண்டு தங்களது அரசு கேட்கப்போகும் உதவியைச் செய்து கொடுக்க வேண்டாம் என்று போட்டு கொடுத்து விடுகிறார்.
தலை சுற்றுகிறதல்லவா? மேலே படியுங்கள்.
வெள்ளை மாளிகையில் மக்பார்லேனிடம் “இந்த ரகசிய வேலையை என்னால் செய்து தர முடியும்” என்று கூறிய டேவிட் கிம்சீ, இந்த ஆபரேஷனுக்கான ஏற்பாடுகளை கவனிக்க இஸ்ரேலுக்குக் கிளம்பிச் சென்றார்.
டேவிட் கிம்சீ புறப்பட்டு சென்றபின் பாதுகாப்பு செயலாளர் மக்பார்லேன், டேவிட் கிம்சீ சம்மதித்த தகவலை அமெரிக்க ஜனாதிபதி ரீகனிடம் தெரிவிக்க பெதஸ்டா கடற்படை மருத்துவமனைக்குச் சென்றார். அங்கேதான் ரீகன் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மக்பார்லேன் கூறியவற்றை முழுமையாக கேட்ட ஜனாதிபதி ரீகன் ஒரேயொரு சந்தேகத்தை மாத்திரம் கேட்டார்.
“இஸ்ரேலிய வெளியுறவுத் துறையைச் சேர்ந்த இந்த டேவிட் கிம்சீ, எந்தளவுக்கு ரகசியம் காக்கக் கூடியவர்? ஏனென்றால் அமெரிக்கா ஈரானுக்கு ரகசியமாக ஆயுதம் கொடுக்கும் விஷயம், எக்காரணம் கொண்டும் வெளியே தெரியவரக்கூடாது”
“டேவிட் கிம்சீயை எனக்கு நன்றாகவே தெரியும். அவர் வெளியே மூச்சுகூட விடமாட்டார். அத்துடன், இஸ்ரேலிய அரசே டேவிட் கிம்சீயை அனுப்பியிருப்பதால், நிச்சயம் ரகசியம் காக்கப்படும். வெளியே விஷயம் கசியாது”
“அப்படியானால் விஷயத்தை அவர் மூலமாகவே முடித்துவிடுங்கள்” என்றார் ரீகன்.
இஸ்ரேலுக்குச் சென்ற டேவிட் கிம்சீ இரண்டே இரண்டு தினங்களில் முழுமையான திட்டத்துடன் மீண்டும் வாஷிங்டன் திரும்பினார். வந்த உடனே மக்பார்லேனைச் சந்தித்தார்.
“திட்டம் ரெடி”
“சொல்லுங்கள்”
“முதலில் கெட்ட சேதியை சொல்வதா, நல்ல சேதியை சொல்வதா?”
“நல்ல சேதியைச் சொல்லுங்கள்”
“ஈரானுக்கு ரகசியமாக ஆயுதம் கொடுப்பதற்கு ஏற்பாடுகளை செய்து முடித்து விட்டேன். அமெரிக்காவின் பெயரே வெளியே தெரியவராதபடி திட்டம் தயார். இதுதான் நல்ல சேதி”
“சரி, கெட்டசேதி என்ன”
“உளவுத்துறை மொசாத்தில் நான் பணிபுரிந்த காலத்தில் ஈரானில் எனக்கு நிறைய தொடர்புகள் இருந்தன. அப்படியான தொடர்புகளின் மூலம் இப்போது சில விஷயங்களை அறிந்தேன். அந்த விஷயங்கள்தான் கெட்ட சேதி”
“என்ன அறிந்தீர்கள்”
“பணய கைதிகளைப் பிடித்து வைத்திருப்பது ஒரு தீவிரவாத இயக்கம். அவர்களுக்கும் ஈரானுக்கும் நேரடியாகவோ அதிகாரபூர்வமாகவோ எந்த உறவுமில்லை.”
“அதிகாரபூர்வமாக தொடர்பு இல்லை என்பது எங்களுக்கும் தெரியும். ஆனால் அந்தத் தீவிரவாத இயக்கத்துக்கு தேவையான சகல உதவிகளையும் மறைமுகமாகச் செய்து கொடுப்பது ஈரானிய உளவுத்துறை என்பது எங்களுக்கு அதைவிட நன்றாகவே தெரியும்”
இந்தப் பதிலை கேட்டவுடன் டேவிட் கிம்சீ இலேசாகச் சிரித்தார். மக்பார்லேன் தொடர்ந்தார்.
“ஈரானிய உளவுத்துறையின் உதவிகள் இல்லையென்றால் இந்த தீவிரவாத இயக்கம் இயங்கவே முடியாது. அவர்களுக்கு பணமும் போகாது. ஆயுதங்களும் கிடைக்காது. பயிற்சிக்கு இடமும் இல்லை. நான் சொல்வது உண்மையா இல்லையா”
“உண்மைதான்”
“ஈரான் நெருக்கடி கொடுத்தால், தீவிரவாத இயக்கம் பணய கைதிகளை விட்டுவிடுவார்கள். இல்லையா”
“தர்க்க ரீதியில் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் ஈரானில் இருக்கும் எனது தொடர்புகள் மூலம் விசாரித்துப் பார்த்ததில், ஈரானிய அரசு இந்த விஷயத்தில் நெருக்கடி கொடுத்தாலும், தீவிரவாத இயக்கம் மசியும் என்று தோன்றவில்லை”
“உங்களுடைய தொடர்புகள் எவ்வளவு பெரிய ஆட்கள்?”
“ஈரானிய அரசில் பெரிய கைகள். அவர்கள் சொல்வது கிட்டத்தட்ட ஈரானிய அரசின் வெளியுறவுக் கொள்கைபோல”
“அப்போ, இந்த ரகசிய ஆயுத சப்ளையால் பயனில்லை என்கிறீர்களா”

“முழுமையாக அப்படிச் சொல்லிவிட முடியாது. ஆயுதம் கொடுத்தால் ஈரானிய அரசு தீவிரவாத இயக்கத்துக்கு நெருக்கடி கொடுக்கும். அதை என்னால் செய்து தர முடியும். ஆனால் இந்த பணயக்கைதிகள் விஷயத்தில், தீவிரவாத இயக்கத்துக்கு வேறு திட்டங்கள் இருப்பதாக தெரிகிறது. அவர்கள் பணயக் கைதிகளை வைத்து பெரிதாக ஏதோ சாதிக்க பிளான் பண்ணுகிறார்கள். எனவே இந்த விஷயத்தில், ஈரானின் நெருக்கடி பெரிதாக வேலை செய்யாது”
இந்த உரையாடல் நடந்து பல ஆண்டுகளின்பின் டைம் சஞ்சிகைக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் இதை நினைவுகூர்ந்த டேவிட் கிம்சீ, “நான் கூறியதை கேட்டவுடன் மக்பார்லேனின் முகத்திலிருந்து, அவர் ஏமாற்றமடைந்தாரா என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அந்தத் தகவல் எதிர்பார்த்ததைவிட கெட்ட சேதிதான் என்பதை அவர் மௌனமாக யோசித்துக் கொண்டிருந்ததிலிருந்து ஊகிக்கக் கூடியதாக இருந்தது” என்றார்.
“ஒரு நாள் அவகாசம் தாருங்கள். ஜனாதிபதியுடன் விவாதித்ததுவிட்டு, மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று கூறுகின்றேன்.”
“சரி”
மறுநாள் காலை வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்துக்கு ராஜாங்க செயலாளர் (U.S. Secretary of State) ஜார்ஜ் ஷூல்ட்ஸ் (George P. Shultz) அழைக்கப்பட்டார். அந்த சந்திப்பில், ஜனாதிபதி ரிகனுடன் மக்பார்லேனும் உடனிருந்தார். விஷயம் ஜார்ஜூக்கு விளக்கமாக தெரிவிக்கப்பட்டது.
“இதில் ரிஸ்க் மிக மிக அதிகம். நாங்கள் ரிஸ்க் எடுத்து ஆயுதம் கொடுத்து, ஆயுதங்கள் பத்திரமாக ஈரான்வரை போய்ச் சேர்ந்தாலும், பணய கைதிகளை விடுவிக்க முல்லாக்களால் (ஈரானிய தலைமை) முடியும் என்பது நிச்சயமில்லை” என்றார் ஜார்ஜ்.
“ஆனால், எங்களுக்கு வேறு வழியும் இல்லை” என்றார் ரீகன்.
“மற்றொரு விஷயம். ஈரான் நம்பிக்கைக்குரிய அரசும் இல்லை. ஆயுதங்கள் தங்களது கைகளுக்கு முழுமையாக வந்து சேர்ந்தவுடன், அமெரிக்கா தங்களுக்கு ஆயுதம் கொடுத்தது என்பதை பகிரங்கப்படுத்திவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா”
“என்ன நடக்கும்”
“தேவையில்லாமல், ஈரானின் எதிரி ஈராக்கை மேலும் ரஷ்யாவின் முகாமை நோக்கித் தள்ளிவிடும்”
“ஈராக் இப்போதும், ரஷ்யாவுடன் நெருக்கமாகத்தானே இருக்கிறது”
“அது உண்மைதான். ஆனால் ஈராக் முழுமையாக ரஷ்யாவின் முகாமில் இருப்பதாக சொல்ல முடியாது. இந்தியா இருப்பது போல (இது 1980களில் நடந்தது), ரஷ்யாவின் பக்கம் அதிகம் சார்கிறார்கள். அவ்வளவுதான். முற்று முழுதாக ரஷ்யாவின் பக்கம் இல்லை. நாம் ஈரானுக்கு ஆயுதம் கொடுத்தது தெரிந்தால், முழுமையாக பெட்டி படுக்கையுடன் ரஷ்யாவிடம் போய் விடுவார்கள்”
பகல் முழுவதும் விவாதம் தொடர்ந்தது.
மதிய நேரத்தில் ரீகன் மிகவும் களைத்துப் போய் சோர்வாகக் காணப்பட்டார். மற்றயவர்கள் என்ன தடைகளைச் சொன்னாலும், ரீகன், ரிஸ்க் எடுக்கத்தயார் என்பதாகத்தான் நிலைமை இருந்தது.
“அரசியலில் எல்லோருக்கும் ஒரு விலை உண்டு. ஈரானுக்கும் ஒரு விலை உண்டு. அது உச்சவிலையாக இருந்தாலும் பரவாயில்லை. அமெரிக்காவால் கொடுக்கமுடியும். சரியான விலை கொடுக்கப்பட்டால், காரியம் சரியாக நடந்தே தீரும்” என்பதுதான் ரீகனின் வாதம்.
மதிய உணவின் பின்னர் பல மாற்றங்களுடன் அமெரிக்கத் திட்டம் தயாரானது. மிகவும் நுணுக்கமாகவும் தந்திரமாகவும் மக்பார்லேன் வகுத்து கொடுத்த திட்டம் அது. (அப்போதுகூட அவர் சி.ஐ.ஏ.வை இந்த திட்டத்துக்குள் சம்மந்தப்படுத்தவில்லை என்பது ஆச்சரியமான உண்மை)
சரி. இவர்கள் போட்ட புதிய திட்டம் என்ன?
இதுவரை இந்த கட்டுரை தொடரை படித்துவந்த நீங்கள், சில நிமிடங்கள் யோசித்துப் பாருங்கள். எப்படியான திட்டத்தை உங்களால் வகுக்க முடியும்? எப்படி திட்டம் வகுத்தாலும் அமெரிக்கா, ‘பொறியில் சிக்கிய எலி’யின் நிலையில்தான் இருக்கும் அல்லவா? வேறு வழியே கிடையாது அல்லவா?
இங்கேதான் வருகிறது, மக்பார்லேனின் அட்டகாசமான ராஜதந்திர திட்டமிடல்.
மிகவும் நுணுக்கமாகவும் தந்திரமாகவும் மக்பார்லேன் வகுத்து கொடுத்த திட்டத்தில், தீவிரவாத இயக்கத்தை ஈரானிய அரசு ‘எப்படியாவது’ வழிக்கு கொண்டுவர வேண்டிய கட்டாயமும் இருந்தது. நாளைக்கே இந்த விஷயத்தை ஈரான் வெளிப்படுத்தி விட்டால், அமெரிக்கா தப்பித்துக்கொள்ள ஒரு வழியும் இருந்தது.
இந்த திட்டத்தை வகுத்து கொடுத்ததால்தான் ராபர்ட் மக்பார்லேன், அமெரிக்காவின் தலைசிறந்த ராஜதந்திர திட்டமிடலாளர்களில் ஒருவராக இன்றுவரை பிரமிப்புடன் பார்க்கப்படுகிறார்.
மக்பார்லேனின் ‘மிரள வைக்கும்’ திட்டத்தை அடுத்த பாகத்தில் தெளிவாக பார்க்கலாம்

தொடரும் ....

















Comments

Popular posts from this blog

Working Torrent Trackers list updated Oct 2016...

Language C++----Templates in C++----Part 3

Xender for PC Windows Download : Fast File Transfers